– நீட்சே
மதநம்பிக்கைகள், சம்பிரதாயங்களைப் பின்பற்றாமல் இருந்த மேரி க்யூரி பெரும்பாலும் ஒரு நாத்திகராகவே கருதப் பட்டார். ஆனால் அவரது அறிவியல் கண்ணோட்டத்தைக் கொண்டு காணும்போது, கடவுள் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் அற்றவர் (ஹபடிளவஉ) என்றே கூறலாம்.
போலந்து நாட்டைச் சேர்ந்த வார்சா நகரில் 1867 நவம்பர் 7 ஆம் தேதி அன்று பிறந்த மேரி க்யூரியின் இயற்பெயர் மேரிப ஸ்லோடவுஸ்கா என்பதாகும். ரேடியக் கதிர்வீச்சுப் பொருள்களைக் கொண்டு இவர் தொடர்ந்து நீண்ட காலம் ஆராய்ச்சி செய்து வந்தமையால், லூகோடேமியா நோயால் பாதிக்கப்பட்ட அவர் கடுமையான ரத்தசோகையின் காரணமாக 1934 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி. உயிர்நீத்தார்.
போலந்தில் பிறந்த இவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை பிரான்ஸ் நாட்டில் கழித்தார். இந்த இரு நாடுகளிலுமே இவரைச் சுற்றி ரோமன் கத்தோலிக்க மதமக்கள் வாழ்ந்து வந்தனர். அவரது தாயும் ரோமன் கத்தோலிக்க மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றியவரே. வார்சாவில் இயல்பியல் பேராசிரியராக இருந்த அவரது தந்தை நாத்திகர் என்பதைக் குறிக்கும் சுயசிந்தனையாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.
க்யூரி அம்மையாரும் மதத்தைப் பின்பற்றியவர் அல்ல. மதத்தைப் பற்றி அவர் கூறுகிறார்:
வாழ்வில் எதனைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை; ஆனால் அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். இன்னமும் அதிகமாக அறிந்துகொள்வதற்கான நேரம் இதுவே என்பதால், எதிர்காலத்தில் நாம் அதிகமாக அஞ்சாமல் இருக்கக் கூடும்.
தங்களது திருமணம் மதம் சார்ந்த ஒரு விழாவாக இல்லாமல் ஒரு சமூக விழாவாக இருந்தது என்று எழுதியதன் மூலம் தனது மற்றும் தனது கணவரது மதம் சாராத தன்மையை அம்மையார் வெளிப்படுத்தியுள்ளார்.
மேடம் க்யூரி அம்மையார் எந்த மதத்தையும் சார்ந்தவராக இருக்கவில்லை. எந்த மதத்தையும் அவர் பின்பற்றவில்லை. 19 ஆம் நூற்றாண்டு காலத்தில் அய்ரோப்பாவில் ஓர் உயர்ந்த இடத்தை மதம் பெற்றிருந்த சூழலில், மதத்தைப் பற்றி கவலையே படாமல் அவர் இருந்தது அவரது காலத்தில் நிலவிய சமூக சம்பிரதாயங்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட ஒரு துணிவான அறிக்கையாகவே கொள்ளத் தக்கதாகும்.
போலந்து குடிமகளான இவர் பிரான்ஸ் நாட்டில் குடியேறி ரேடியோ கதிர்வீச்சு பற்றிய தொடக்கநிலை ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இயல்பியலாளரும், வேதியியலாளரும் ஆவார். அவரது சிறப்புகளாவன
* நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி இவர்தான்.
* இயல்பியல் மற்றும் வேதியியல் என்று இரு துறைகளிலும் நோபல் பெற்ற ஒரே பெண்மணி இவர்தான்.
* பாரிஸ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக ஆன முதல் பெண்மணியும் இவர்தான்.
* அய்ரோப்பாவில் அறிவியல் ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணியும் இவர்தான்.
* சோர்போன் பல்கலைக் கழகத்தில் முதல் பெண் பேராசிரியராக ஆனவரும் இவர்தான்.
* பாரிசின் புகழ்பெற்ற அறிவியலாளர்கள், அறிஞர்கள், கலைஞர்கள் ஆகியோர் அடங்கிய மிக உயர்ந்த அவையில் தனது தடனிப்பட்ட தகுதிகள், திறமை காரணமாக 1895இல் அரங்கேறிய முதல் பெண்மணியும் இவர்தான்.
வார்சாவில் ரகசியமாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் இயங்கி வந்த மிதக்கும் பல்கலைக் கழகத்தில் பயின்ற இவர் வார்சாவில் தனது செயல்முறை அறிவியல் பயிற்சியைத் தொடங்கினார். தனது 24 ஆவது வயதில் அதாவது 1891 இல், தனது அக்கா ப்ரோனிஸ்லாவாவைத் தொடர்ந்து கல்வி கற்க இவர் பாரிஸ் சென்றார். அங்கு தனது உயர்பட்டத்தைப் பெற்ற அவர் தனது பிந்தைய அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். க்யூரி அம்மையாருக்கும், அவரது கணவர் பியரி க்யூரிக்கும் இயல்பியலாளர் ஹென்றி பெக்குரெல் என்பவருக்கும் 1903ஆம் ஆண்டுக்கான இயல்பியல் நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டது.
ரேடியோ ஆக்டிவிடி அய்சோடோப்புகளைத் (Radioactive Isotope) தனிமைப்படுத்துவதற்கான ரெடியோ ஏக்டிவிடி தியரியைக் கண்டுபிடித்ததும், இதற்குக் காரணமான இரண்டு மூலகங்களான போலோனியம் (Polonium) மற்றும் ரேடியம் (Radium) ஆகியவற்றைக் கண்டுபிடித்ததும்தான் க்யூரி அம்மையார் புரிந்த சாதனையாகும். ரேடியோ ஆக்டிவ் அய்சோடோப்புகளைப் பயன்படுத்தி, புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ரத்த பிளாஸ்மா நோயைக் குணப்படுத்துவதில் உலகின் முதன் முதலான ஆராய்ச்சிகள் க்யூரி அம்மையார் அவர்களின் தலைமயில் தொடங்கப்பட்டன. பாரிசிலும், வார்சாவிலும் இவர் தொடங்கிய க்யூரி இன்ஸ்டிடுட்டுகள் இன்று மருத்துவ ஆராயச்சியின் முக்கிய மையங்களாக விளங்குகின்றன. முதல் உலகப் போரின்போது இவர் முதன் முதலான ராணுவ கள ரேடியாலாடஜிகல் மையத்தை நிறுவினார்.
க்யூரி அம்மையார் சற்று புரட்சிகரமான சிந்தனை கொண்டவர். போலந்தை ரஷ்யா ஆக்ரமித்து இருந்ததை எதிர்த்து நடத்தப்பட்ட ஒரு மாணவர் தீவிர அமைப்பின் செயல்பாடுகளில் இவர் வார்சாவில் இருந்தபோது பங்கெடுத்துக் கொண்டுள்ளார். அதன் காரணமாக ரஷ்ய துருப்புகளின் தாக்குதல்களில் இருந்துரு தப்பிக்க அவர் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த கிராகோ நகருக்கு ஓடவேண்டியதாயிற்று.
தனது இறுதி காலத்திலும், முதல் உலகப் போரின்போதும் க்யூரி அம்மையார் பிரான்ஸ் நாட்டுக்கு விசுவாசம் மிகுந்தவரக இருந்தார். எக்ஸ்ரே எடுக்கும் உபகரணங்கள் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ் வண்டியை பிரான்ஸ் அரசுக்காக போர் முனைகளுக்கு அவர் ஓட்டிச் சென்றார். என்றாலும் பிரான்ஸ் நாடு எப்போதுமே அவரிடம் கருணையாக நடந்து கொண்டதில்லை. அங்கிருந்த ஆணாதிக்கம் நிறைந்த அறிவியலாளர் சமூகத்துடனான தனது போர்களில், பெண்ணியத்துக்காக முதல் முதலாகப் போராட்டத்தைத் தொடங்கி நடத்தியவராக இவர் விளங்கினார். பெரிய பெரிய ஆண் அறிவியலாளர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு பணியாற்றி வெற்றி பெறமுடியும் என்பதையும் க்யூரி அம்மையார் மெய்ப்பித்துக் காட்டினார். அவரது அத்தனை திறமைகளுக்குப் பிறகும் பிரெஞ்சு அறிவியல் அகாதமியில் அவருக்கு இடம் அளிக்க மறுக்கப்பட்டதன் ஒரே காரணம், பிரான்ஸ் அகாதமியில் பெண்கள் பங்கேற்க இயலாது என்பதுதான்.
தனது நேர்மைக்காகவும், எளிய வாழ்க்கைக்காகவும் பாராட்டப் பட்டவர் அவர். 1897 இல் தான் பொருள் ஈட்டத் தொடங்கியவுடன் 1893 இல் தான் படிப்புதவில் தொகையாக தான் பெற்றிந்த ஒரு சிறுதொகையை க்யூரி அம்மையார் திருப்பி அளித்தார். தான் முதன் முதலாகப் பெற்ற நோபல் பரிசு பணத்தை தனது நண்பர்கள், தனத குடும்பத்தினர், மாணவர்கள், சக ஆராய்ச்சியாளர்கள் என அனைவருக்கும் தாராளமாக அளித்தார். ரேடியத்தைப் பிரித்தெடுக்கும் நடைமுறையை அவர் வேண்டுமென்றே உரிமைக் காப்பீடு செய்யாமல் விட்டுவிட்டார். அறிவியல் சமூகம் எந்தவிதத் தடையும் இல்லாமல் மேற்கொண்டு ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும் என்பதே அதன் காரணம். பணத்தையும், விருதுகளையும் பரிசாகத் தனிப்பட்ட தனக்குத் தருவதற்கு பதிலாக தான் பணியாற்றும் நிறுவனத்துக்கு அளிக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். அவரும் அவரது கணவரும் பல முறை தங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளையும் பரிசுகளையும் பெற மறுத்துள்ளனர்.
புகழினால் அகந்தை கொண்டு கெட்டுப்போகாமல் இருந்தவர் மேரிக்யூரி அம்மையார் ஒருவராகத்தான் இருப்பார் என்று ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் குறிப்பிட்டதாகக் கூறப்படுவதுண்டு. பிரெஞ்சு குடிமகளாக இருந்தபோதிலும் தனது போலந்து நாட்டு அடையாளத்தைப் பற்றிய தனது உணர்வை அவர் எப்போதுமே இழந்ததில்லை. தனது மகள்களை போலந்து நாட்டுக்கு பல முறை அழைத்துச் சென்றுள்ள அம்மையார் அவர்களுக்கு போலந்து மொழியையும் கற்றுத் தந்தார். தான் முதன் முதலாக 1898 இல் கண்டுபிடித்த வேதியியல் மூலகத்திற்கு தனது தாய்நாட்டின் நினைவையொட்டி போலோனியம் என்று அவர் பெயரிட்டார்.
– தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
Leave a Reply