– ரொமீலா தாப்பர்
நிகழ்காலத்தை நெறிப்படுத்த கடந்த காலத்தை அழைத்தால், கடந்த காலத்தின் உண்மைத் தன்மை தொடர்ந்து மறுபரிசீலனைக்குள்ளாகும். தேசத்திற்கு புதிய அடையாளங்கள் தேவை. நம்பகத்தன்மையுள்ள வரலாறு என்பது இவ்விஷயத்தில் முக்கியமானது.
ஒரு மரபை நாம் மேற்கோள் காட்டுகிறோம் என்றால், எந்த மரபை நாம் உள்வாங்குகிறோம் எந்த ஜாதி, எந்த வர்க்கம், எந்த மதப்பிரிவு, எந்தப் பகுதி என்று கேட்டுக்கொள்ளவேண்டும். 82 வயதில் ரொமிலா தாபரின் பேனா எப்போதும் போலவே வலிமையுடன் உள்ளது. இந்தியாவின் முக்கியமான வரலாற்றாய்வாளர் தற்போது சமகாலத்தை படம் பிடிக்கும் நூலை எழுதியுள்ளார். நாம் ஒரு சமூகமாக வேண்டுமெனில், கடந்தகாலத்தை நிகழ்காலமாகவும், கிடைத்த ஞானத்தை கேள்வி கேட்கும் தன்மையுடனும், மரபுசாரா பார்வைகளை ஊடுருவிப் பார்ப்பதற்கும், வரலாற்றை கட்டுடைத்து விவாதிக்கவும் தலைப்படுகிறார். தி பாஸ்ட் பிஃபோர் அஸ் என்கிற தன்னுடைய சமீபத்திய நூல் குறித்து `இந்தியா டுடே இதழாளர் உரையாடியதிலிருந்து…
கல்வி என்பது ஒரு தகுதி அல்ல, அது ஒரு மனோநிலை. படித்தவர்களிடையே அது இல்லை என்றே நினைக்கிறேன். ஏற்கனவே கற்றவர்களுக்கும் இப்போது கற்றுக் கொள்பவர்களுக்கும் இது பொருந்தும். நாம் எத்தகைய மனோநிலையை படைக்க விரும்புகிறோம் என்பது குறித்து அழுத்தம் தரவேண்டும்.
***
அடையாளங்கள் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டவை. ஏனெனில் மக்கள் எப்போதும் கடந்ததைப் பேசுபவர்கள். அடையாளம் சமகாலப் பிரச்சினைகளையும் அடிப்படையாகக் கொண்டது. இப்படித்தான் சமகாலத்தில் ஒருவர் அடையாளத்துக்கு பங்களிக்கும் கடந்த காலத்தைப் பற்றி யோசிக்க முடியும். ஆனால் கடந்த காலத்தைப் பற்றி நீங்கள் யோசிக்கும் முறை இருக்கிறதே, ஒரு வேளை அது துயர வரலாறாக இருந்தால், அதனால் உருவாகும் அடையாளம் நிலைத்திருக்காது. ஆனால் ஒரு வரலாறு சர்ச்சைக்குரியதாகவும் அதே சமயம் விவாதிக்கப்பட்டும் இருந்தால், அந்த அடையாளம் நிலைத்திருக்கும். ஒரு சாதாரண வாசகர்கூட கருத்துகளின் பிறப்பிடம் எது என்றும் எப்படி கருத்துகள் திணிக்கப்படுகின்றன என்பதையும் அறிந்திருக்க வேண்டும். கருத்து என்பது தனியாக இருப்பதல்ல. அது சமூகத்தில் வேரூன்றியுள்ளது. ஆகவே கருத்தை உற்றுநோக்கி அது எங்கிருந்து யாரால் வந்தது, அதன் இயக்கம் என்ன, அது எப்படி பயன்படுகிறது, எப்படி அதை இன்னும் நன்றாக பயன்படுத்தலாம், அது நம்மை எங்கு சென்று சேர்க்கும் போன்றவற்றைப் பார்க்கவேண்டும்.
புராணங்கள் வரலாறு என்கிற பெயரில் நம்மிடம் கடத்தப்படுகிறது. குஜராத்தில் சர்தார் படேல் போன்ற ஒருவரை அடையாளமாக எடுக்கிறோமென்றால் முதலில் ஒன்றைப் பார்க்கவேண்டும். ஏன் அடையாளமாக இவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற கேள்வி முதலில் வரவேண்டும். தேர்வுக்கான வழிமுறை ஒன்று உள்ளது. ஏன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? எது அந்த நபரின் அரசியலோடு அவரை தொடர்புபடுத்துகிறது? அந்தத் தேர்வு அரசியல் கட்சி செய்ததா? என்று பார்க்க வேண்டும். அவர்கள் வாழும் காலத்தில் அவர்கள் யாரை, எதை பிரதிநிதித்துவப்படுத்தினார்கள் என்று பார்க்கவேண்டும்.
ஒன்று, வரலாறு இன்னமும் பள்ளி, கல்லூரி அளவில் வழக்கொழிந்த முறையில் சொல்லித் தரப்படுகிறது. அதனாலேயே அது தொடர்பில்லாத ஒன்றுபோல் தோன்றுகிறது. இரண்டாவது, வரலாறு அரசியல் கட்சிகளால் தவறாக பயன்படுத்தப்படுகிறது. சாதக பாதகங்களைக் கொண்ட அவுரங்கசீப் போன்ற சிக்கலான நபர்களை புரிந்துகொள்வதில் இயலாமை உள்ளது. அவரை கொடூரமானவர் என்றும் இந்துக்களுக்கு எதிரானவர் என்றும் பிரகடனப்படுத்துவதில் ஒரு அவசரம் இருக்கிறது. இருந்தும் அரசு, பேரரசு போன்றவற்றில் ஒருவரை நல்லவர் என்று கொண்டாடுவதோ அல்லது கெட்டவர் என்று நிராகரிப்பதோ அதிக சிக்கலானது. இது மோசமான வரலாறு. நல்ல வரலாறு என்பதை, இன்னும் கூடுதலாக வரலாற்று மாந்தர்கள் ஏன் அப்படியெல்லாம் நடந்துகொண்டார்கள் என்பதை ஆழமாக அலசவேண்டும்.
***
தீவிரமாக சிந்தித்து கல்விக் கொள்கை எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது? நாம் இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு வேலை செய்யவில்லை. இங்கு பிரச்சினை பல உண்டு. உதாரணமாக, கிராமப்புறங்களில் பள்ளிக்கூடங்கள் திறக்கும்போது அவை உயர் ஜாதியினர் வசிக்கும் பகுதியில் இருப்பதால் கீழ் ஜாதி குழந்தைகள் அங்கு சென்று படிக்கும்போது மட்டம் தட்டப்படுகிறார்கள். அதனால் பல குழந்தைகள் பாதியில் படிப்பை நிறுத்திவிடுகின்றனர். இன்னொரு பிரச்சினை என்னவென்றால், வானொலியும் தொலைக்காட்சியும் கல்விக்காக பயன்படுத்தப்படுவதில்லை. இதற்கு என்ன காரணமென்றால், கல்வியின் முக்கியத்துவம் அவர்களுக்கு அழுத்தமாக சொல்லித் தரப்படவில்லை. கல்வி மூலம் அல்ல, பணம் மூலமே ஒருவருடைய மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது.
***
இன்றைய அரசியல் தலைமைக்கு வரலாற்றில் மட்டும் அக்கறையின்மை என்று அல்ல. பொதுவில் நல்ல கல்வி வேண்டுமென்பதிலிருந்து உடனடி அரசியல் திட்டங்கள் தவிர அனைத்திலும் அலட்சியம்தான். அரசியலுக்குச் செல்லும் நபர்களின் தரம் கேள்விக்குறியாகிவிட்டது. எப்போதும் நாம் எவ்வளவு சகிப்புத்தன்மையுடனும் அகிம்சையுடனும் இருந்தோம் என்று பேச்சுக்கள் உண்டு. சுற்றிப் பாருங்கள். எங்கே சகிப்புத்தன்மை? எங்கே அகிம்சை?
***
இந்து தேசியவாதியாகவோ முஸ்லிம் தேசியவாதியாகவோ இருப்பது ஒரு முரண்பாடு. ஏனெனில் தேசியவாதியாக இருப்பது என்பதே மதம், சாதி, பகுதி தாண்டிய ஒரு பரந்த அடையாளத்தைத் தரக் கூடியது. இதை எப்படிப் பெறுவீர்கள்? சாவர்க்கர் போன்ற ஒரு இந்து அடையாளத்தை தேர்ந்தெடுத்தால் அது சிக்கலாகிவிடும். ஏனெனில் சாவர்க்கர் மிகத் தெளிவாக அடிப்படை இந்திய குடிமகள் இந்துவாக இருக்கவேண்டும் என்கிற பார்வை உடையவர்.
1999இல் இருந்ததுபோல கல்வியையும் வரலாற்றையும் வெட்டி ஒட்டும் நிலைமை வந்தால், அதை எதிர்கொள்ளும் அளவுக்கு நாம் இருக்கிறோமாஎன்று கேட்டால், இல்லை. நாம் அதற்கு பாதி தயாராக இல்லை. ஏனென்றால், நமக்கு அரசியல் அதிகாரத்துக்கு சிலவற்றை விட்டுக்கொடுப்பதற்கு பழகிவிட்டோம். எதிர்க்க முதுகெலும்பில்லாதவர்களாகவும், கல்வி முறையில் நமக்கு பகுத்தறிவு சிந்தனையின் அடிப்படையில் ஒரு சீரான நிலைப்பாட்டை எடுப்பதில்லை. பகுத்தறிவு சிந்தனையும் அக்கறையும் ஓர் இளம் நபரை கற்பிக்கும் வழிமுறையில் அவசியம், தேவை.
– நன்றி: இந்தியா டுடே, ஏப்ரல் 16, 2014
Leave a Reply