Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வார சந்தா செலுத்துங்கள்..

குற்றவாளி இல்லையா மோடி?

– கவிஞர் கலி.பூங்குன்றன்

மோடி குற்றமற்றவர் – குஜராத் கலவரத்திற்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை என்கிறார்களே – இதைவிட பொறுப்பற்ற பேச்சு ஒன்று இருக்க முடியுமா?

அரியலூரில் ரயில் கவிழ்ந்தது என்றால் ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி ஏன் பதவி விலகினார்?

ஓ.வி.அளகேசன் ஏன் பதவி விலகினார்? அதைவிட மிகப்பெரிய இனப் படுகொலை (GENOCIDE) குஜராத்தில் நடந்திருக்கும்பொழுது அதற்குப் பொறுப்பேற்று முதல் அமைச்சர் மோடி பதவி விலக வேண்டாமா என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லையே.

 

கலவரத்துக்குப் பிறகும் மோடி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறாரே என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.

ஹிட்லர் கூடத்தான் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை நடத்தினார். அதற்காக ஹிட்லரை வரலாறு ஏற்குமா? வெகுதூரம் போக வேண்டாம். நரோடா பாட்டியா இனக் கலவரத்தை முன்னின்று நடத்திய மோடி அமைச்சரவை சகா மாயா கோட்னானி (28 ஆண்டுகள் சிறை) படுகொலைக்குப் பின் நடந்த சட்டமன்ற தேர்தலில் 1,85,000 வாக்குகள் அதிகம் பெற்று ஜெயித்துள்ளாரே. அதற்காக அவரை வெற்றி வீராங்கனை என்று வாழ்த்த முடியுமா?

பெரிய பெரிய ஆதாரங்களைத் தேடிக் கொண்டு ஓட வேண்டாம். கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு மூன்றாம் நாள் அகில இந்திய வானொலியில் முதல் அமைச்சர் பேச்சைவிட வேறு ஆதாரம் வேண்டுமா?

அச்சுறுத்தப்பட்டு அடங்கிக் கிடப்போர் நியாயம் கேட்க மாட்டோம் என்ற உறுதியை அளித்தால்தான் அமைதி திரும்பும் என்று பேசினாரே! (ஆதாரம்: இந்தியன் எக்ஸ்பிரஸ் 8.10.2003) இதற்கு என்ன பதில்? சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் மிகப் பெரிய பொறுப்பில் உள்ள முதல் அமைச்சர் இப்படிப் பேசினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பரிகாரம் எங்கிருந்து குதிக்கும்?

நான் ஏதாவது செய்திருந்தால்தானே  குற்றம் செய்ததாக நினைத்திருப்பேன். நாம் பிடிபட்டு விட்டோம். நாம் திருடிவிட்டதால் சிக்கிக் கொண்டுவிட்டோம் என்பதுபோல நினைக்கும் போதுதான் எரிச்சலும் விரக்தியும் ஏற்படும். ஆனால் எனது விஷயம் அப்படிப்பட்டதல்ல; நடந்த நடவடிக்கைகளுக்காக (குஜராத் கலவரம்) வருத்தப்படுகிறீர்களா என்று கேட்கிறீர்கள். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழு எனக்கு விரிவான நற்சான்றிதழை அளித்துள்ளது.

எனினும் ஒரு காரை நாமே ஓட்டிச் சென்றாலும் சரி, மற்றொருவர் ஓட்டும்போது பின் சீட்டில் அமர்ந்திருந்தாலும் சரி -_ ஒரு நாய்க்குட்டி காரின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டால் நமக்கு வேதனை ஏற்படுமா? ஏற்படாதா? என் நிலையும் அது போன்றதுதான் _ நரேந்திர மோடி பேச்சு.  – (தினமணி 13.7.2013 பக்கம் 1)

மோடி சொல்கிறார், நான் குற்றமற்றவன்; நான் குற்றவாளி என்று நிரூபிக்கப்படவில்லை. மாறாக உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவே எனக்கு நற்சான்று அளிக்கிறது என்று தன் முதுகைத் தானே தட்டிக்கொள்ளும் அதேவேளையில் அவர் மனம் என்பது எத்தகைய குரூரமானது என்பதையும் தன்னை அறியாமலேயே  இதன் மூலம் வெளிப்படுத்திக் கொண்டுவிட்டார்.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் _ குழந்தைகள் _ கர்ப்பிணிப் பெண்கள் உட்பட காட்டு விலங்காண்டித்தனமாக அரசுப் பயங்கரவாதமாக நடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். 1,70,000 வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன; 203 தர்க்காக்கள், 205 மசூதிகள், 3 கிறித்தவ வழிபாட்டுத்தலங்கள், 4000 கார்கள், 20 ஆயிரம் இரு சக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. காவல் துறையினரேகூட பெட்ரோல் கொடுத்து கொளுத்துவதற்கு உதவியுள்ளனர். இத்தகு கேவலமான _ அநாகரிகமான நடவடிக்கை மீது அவர் கொண்டிருந்த மனப்பான்மை எத்தகையது என்பது விளங்கிவிட்டது. காரில் செல்லும்போது ஒரு நாய் அடிபடுவதற்கு ஒப்பானதாக சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கருதுகிறார்.

குல்பர்க் சொசைட்டி என்னும் இடத்தில்  காங்கிரஸ் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இஹ்ஷான் ஜாஃப்ரி (73) உட்பட 69 பேர் கொல்லப்பட்ட வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் (FIR) என்ன கூறப்பட்டது தெரியுமா? கோத்ரா ரயில் எரிக்கப்பட்டது தொடர்பாக ஏற்பட்ட எதிர்விளைவு என்று படுகொலைக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் முதல் தகவல் அறிக்கையிலேயே கூறப்பட்டுவிட்டால், வழக்கு எத்திசையில் செல்லும் என்பது வெளிப்படை.

ஒவ்வொரு கிரியாவிற்கும் பிரிதி கிரியா உண்டு என்று நியூட்டன் தியேரியைப் பயன்படுத்தியவர் யார் என்றால் ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சர்; அவர்தான் மோடி!

முன்னாள் சி.பி.அய். இயக்குநர் ஆர்.கே. இராகவன் என்பார் தலைமையில் புலனாய்வு செய்ய உச்ச நீதிமன்றம் குழு ஒன்றை அமைத்தது. (29.4.2009) அந்த அதிகாரி குஜராத் மாநிலக் காவல் துறையில் பணியாற்றியவர்தான். அந்தக் குழுவின் அறிக்கை மோடிக்கும் குஜராத் கலவரத்துக்கும் தொடர்பில்லை என்று கூறிவிட்டது. இதை வைத்துக்கொண்டுதான் மோடி நான் குற்றம் ஏதும் செய்யவில்லை. உச்ச நீதிமன்றம் அமைத்த புலனாய்வுக்  குழுவே தெரிவித்துவிட்டது என்று மார்தட்டுகிறார்.

குஜராத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறைக் கட்டவிழ்த்து விடப்பட்டபோது அம்மாநிலத்தில் காவல்துறைக் கூடுதல் புலனாய்வுத் துறை அதிகாரியாக (ADGP)  இருந்தவர் ஆர்.பி.சிறீகுமார்.

இராகவன் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு(SIT)விடம் 35 பக்கங்களைக் கொண்ட அறிக்கையினை அளித்தார். காவல்துறை மாநிலத் தலைவராக இருந்தவர். ஓர் அறிக்கை கொடுக்கிறார் என்றால், அது எவ்வளவு முக்கியமானது! ஆனால் சிறப்புப் புலனாய்வுக் குழுவோ, அதனைக் குப்பைக் கூடையில் தூக்கிப் போட்டதுதான் மிச்சம்! சி.பி.அய். இயக்குநர் ராகவன் தலைமையிலான இந்தப் புலனாய்வுக்குழு குஜராத் மாநிலக் காவல்துறையின் இரண்டாவது அணியாகத்தான் செயல்பட்டது என்று காவல்துறை அதிகாரி சிறீகுமார் பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார். இந்த ராகவன் குழு அளித்த அறிக்கையைக் காட்டித்தான், தான் குற்றமற்றவன் என்று மோடி தம்பட்டம் அடிக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இதில் ஒரு வேடிக்கை. ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அளித்த அறிக்கை மோசடியானது, உண்மைக்கு விரோதமானது என்பதுபற்றி விளக்கி ஒரு நூலே வெளிவந்தது என்றால் ஆச்சரியமாகவே இருக்கும். மனோஜ் மிட்டா என்பவர் அப்படி ஒரு நூலையும் விரிவாகவே எழுதியுள்ளார். The fiction fact – finding Modi & Godhra’  – by Manoj Mitra, Happer Collins (259 பக்கங்கள், விலை ரூ.599)

மோடியைச் சிறப்பு விசாரணைக் குழு சார்பில் விசாரணை நடத்தியவர் முன்னாள் சி.பி.அய். அதிகாரி மல்ஹோத்திரா. குழு அமர்வுகளில் மொத்தம் 9 மணி நேரம் முதல் அமைச்சர் மோடி விசாரிக்கப்பட்டார். கோத்ரா சம்பவம் திட்டமிட்ட பயங்கரவாதச் செயல் என்று மோடி சொன்னாரே (எவ்வளவு பெரிய விபரீதம்!) அது குறித்து ஏன் வினா எழுப்பவில்லை என்பது முக்கிய வினாவாக எழுந்துள்ளது; எல்லாம் மோடியைக் காப்பாற்றும் நோக்கில்தான் நடந்துள்ளன.

மோடி யாரையும் விலைக்கு வாங்கக் கூடியவர்தான். ஆர்.கே.ராகவன் குழு அறிக்கையின்மீது சுதந்திரமான விசாரணை நடத்தி முடிவுகளை எடுக்குமாறு மூத்த வழக்குரைஞர் ராஜீ ராமச்சந்திரனை உச்ச நீதிமன்றம் நியமனம் செய்திருந்தது. (AMICUS CURIAE, நடுநிலை அறிவுரையாளர்.)

அவர் விசாரணை செய்து தனியே அறிக்கை ஒன்றினை உச்ச நீதிமன்றத்தில் அளித்தார்.

சிறப்புப் புலனாய்வுக் குழு நரேந்திர மோடிக்கு எதிராகக் குற்றச்சாட்டு ஏதும் இல்லை என்று கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கலவரத்தின்போது 2002 பிப்ரவரி 27ஆம் தேதி மாலை குஜராத் முதல்வர் வீட்டில் நடைபெற்ற உயர் போலீஸ் அதிகாரி சஞ்சீவி பட் கலந்து கொண்டாரா இல்லையா என்பதை மற்ற போலீஸ் அதிகாரிகளுடன் குறுக்கு விசாரணை செய்துதான் முடிவு செய்ய முடியும்.

சம்பவத்தன்று அகமதாபாத் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையில் இரு அமைச்சர்கள் அமர்ந்துகொண்டு உத்தரவுகளைப் பிறப்பித்தார்கள் என்ற போலீஸ் அதிகாரி சஞ்சய்பட்டின் கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கதாகவே உள்ளது. சஞ்சய் பட்டை விசாரணை நீதிமன்றம் குறுக்கு விசாரணை செய்திருக்க வேண்டும். இவையெல்லாம் நடப்பதற்கு முன்பு நரேந்திர மோடிக்கு எதிரான விசாரணையை மூடிவிடுவது என சிறப்புப் புலனாய்வுக் குழு அறிவித்திருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இவ்வாறு அமிக்கஸ் கூரி அறிக்கை கொடுத்துள்ளாரே…

இதனை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் இந்தியக் குற்றவியல் சட்டம் 153ஏ (சமூகங்களுக்கிடையே விரோதத்தை வளர்க்கும் வகையில் பேசுவது) 153பி (தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக வசைகளையும், சமிக்ஞைகளையும் வெளியிடுவது) 505 (பொதுமக்களிடையே துவேஷத்தை உண்டாக்கும் வகையில் பேசுவது) மற்றும் பிரிவு 166 (சட்டத்திற்கு முரணாக பிறருக்குக் காயம் ஏற்படுத்த அரசு ஊழியர்கள் நடந்து கொள்வது) முதலிய பிரிவுகளில் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடிக்கு எதிராகக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்பிருக்கிறதே!

இதையெல்லாம் துப்புரவாக மறைத்துவிட்டு என்னை நீதிமன்றம் விடுவித்துவிட்டது. நான் பரிசுத்த யோவான் என்று எல்லாம் மோடி பேசுவது யாரை ஏமாற்றிட? சோ ராமசாமிகள் இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாதது _ ஏன்?

குஜராத் கலவரங்களை முதல் அமைச்சர் மோடியே வெறிகொண்டு நடத்தினார் என்பதற்கு எத்தனை எத்தனையோ ஆதாரங்கள் உண்டு.

கோத்ராவில் ரயில்பெட்டியில் தீக்கு இரையானவர்களின் உடலை சம்பந்தப் பட்டவர்களின் ஊர்களுக்கு அனுப்பத்தான் முதலில் முடிவு செய்யப்பட்டது. முதல் அமைச்சர் மோடி கோத்ரா வந்து சடலங்களைப் பார்த்த பிறகு திட்டம் மாற்றப்பட்டது.

சடலங்கள் தலைநகரமான அகமதாபாத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு விசுவ ஹிந்து பரிஷத் செயலாளர் ஜெய்தீப் பட்டேலிடம் ஒப்படைக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அடுக்கப்பட்டன.

ஜெய்தீப் பட்டேல் (வி.எச்.பி.) வழிநடத்துகிறார். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. அந்தக் கொந்தளிப்பான சூழலில் கலவரங்கள் வெடித்தெழும் என்பது எல்லோருக்கும் எளிதாகத் தெரிந்த ஒன்றே! நோக்கம் வேறாக இருக்கும்போது அதைப்பற்றியெல்லாம் மோடி கவலைப்படுவாரா?

எதிர்பார்த்தபடி முஸ்லிம்களுக்கு எதிராக  வன்முறை வெடித்துக் கிளம்பின. அதிகாரிகளுக்குத்தான் முதல் அமைச்சர் ஏற்கனவே பச்சைக்கொடி காட்டிவிட்டாரே!  கேபினட் அமைச்சர் ஹரேன் பாண்டியாவும், காவல்துறை மாநிலப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய சஞ்சீவி பட்டும் உச்ச நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவிடமே கூறியுள்ளனர். (இதனைத் தொடர்ந்து மோடியின் அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக இருந்த அந்த ஹரேன் பாண்டியா மர்மமான முறையில் கொல்லப்பட்டதும் _ அந்தக் கொலைக்குக் காரணம் முதல் அமைச்சர் மோடிதான் என்றும் கொல்லப்பட்டவரின் தந்தையார் கூறியதும் கவனத்தில் கொள்ளத் தக்கவையாகும்.)

எடுத்த எடுப்பிலேயே மோடி சொன்னது என்ன?

கோத்ரா சம்பவத்துக்குப் பிறகுதான் இந்த எதிர்வினைகள். பிறகு தகுந்த சூழல் சங்பரிவாரால் உருவாக்கப்பட்டது. அதாவது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., பஜ்ரங்தள், துர்காவாசினி ஆகிய அமைப்புகளின் தலைவர்களால்; அதற்கு முதல் அமைச்சர் நரேந்திர மோடியின் முழு ஆதரவு கிடைத்தது. இந்துக்கள் இவ்வாறாகக் கொளுத்தப்படுவதை விரும்புவதாக யாராவது தைரியம் இருந்தால் வெளிப்படையாகச் சொல்லட்டும். அப்படி இந்துக்களுக்கு எதிராக சூழ்ச்சிகள் இருந்ததால்தான் முழு ரயிலையும் எரிக்க முயன்றார்கள்.

இதற்குப் பிறகு நாம் எதையும் செய்யவில்லையென்றால் மேலும் ஒரு ரயில் எரிக்கப்படும். இந்த யோசனைதான் முதல் அமைச்சர் மோடியிடமிருந்து வந்தது. நான் அந்த ஆட்டத்தில் கலந்துகொண்டேன் என்று பல்கலைக்கழகத் தலைமைத் தணிக்கையாளர் திமனிபட் கூறியதாக தெகல்கா புலனாய்வு நிறுவனம் பேட்டி கண்டு டேப்புகளை வெளியிட்டுள்ளதே.

முஸ்லிம் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி படுகொலை செய்த குற்றவாளியை மோடி பாராட்டியதுடன், உங்கள் செயலுக்காக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளீர்கள் என தெரிவித்துள்ளார்.

பஜ்ரங்தள் என்ற அமைப்பைச் சேர்ந்த ஹரேஷ் பட் என்பவர் தெகல்கா புலனாய்வு நிறுவனத்திடம் என்ன சொன்னார்?

மூன்று நாள்களில் அனைத்தையும் முடித்துவிடுங்கள். அதற்கு மேல் கால அவகாசத்தைக் கேட்காதீர்கள் என்று முதல் அமைச்சர் மோடி உத்தரவிட்டார் என்று கூறியுள்ளாரே! மோடி குற்றவாளி என்பதற்கு இந்தச் சங்பரிவார் சாட்சியம் ஒன்று போதாதா?

2002-இல் கலவரத்தின்போது நரேந்திரமோடி நடந்து கொண்ட விதம் குறித்து பல்வேறு மனித உரிமை அமைப்புகள் மட்டுமல்லாது தேசிய மனித உரிமை ஆணையம் (NHRC) போன்ற நிறுவனங்களும், உச்சநீதிமன்றமும் கடுமையாகக் கண்டித்துள்ளன.

கலவரம் நடந்தவுடன் உடனடியாக அய்ந்துக்கும் மேற்பட்ட உண்மை அறியும் குழுக்கள் நேரடியாகச் சென்று விசாரித்ததுடன் கலவரத்தில் அரசாங்கத்தின் பங்கேற்பை உறுதி செய்துள்ளன. குறிப்பாக நீதியரசர் கிருஷ்ண அய்யர் தலைமையிலான குழுவின் அறிக்கையில் மோடி அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து தேசிய மனித உரிமை ஆணையமும் கண்டித்துள்ளது.

2004இ-ல் உச்சநீதிமன்றத்தில் நீதியரசர்கள் அர்ஜூன் பசாயத் மற்றும் துரைசாமிராஜு ஆகியோர் அளித்த தீர்ப்பில் ரோம் எரிந்து கொண்டிருக்கும்போது பிடில் வாசித்த நீரோ மன்னனோடு மோடியை ஒப்பிட்டார்கள்.

கலவரம் நடந்தபோது தனியறையில் அமர்ந்து கொண்டு குற்றவாளிகளை எப்படி தப்ப வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார் போலும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டார்கள். அப்படி சொன்னது மட்டுமல்லாமல் அவ்வழக்கு குஜராத்தில் நடந்தால் நீதி கிடைக்காது எனக் கூறி மகாராஷ்டிர மாநிலத்துக்கு அந்த வழக்கை மாற்றவும் செய்தார்கள்.

மேலும் உண்டு. குற்றவாளிகளை விசாரிக்கும் அரசு வழக்கறிஞர்களை அந்த மாநில அரசுகளே நியமித்துக் கொள்ளும் வழக்கத்துக்கு மாறாக குஜராத் படுகொலையில் அரசாங்கமே ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டு இருப்பதால் மோடி அரசாங்கம் நியமிக்கும் அரசு வழக்கறிஞர் ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி. போன்ற சங்பரிவார் சிந்தனை உடையவராக இருக்க நேர்வதுடன் அவர்கள் குற்றவாளிகளை தண்டனையிலிருந்து தப்பவைக்க முயற்சித்தார்கள் என்பதுடன், சாட்சிகளை மிரட்டுவதற்கும் காரணமாக இருந்ததால் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றியதுடன், அரசு வழக்கறிஞரை பாதிக்கப்பட்டவர்களின் ஒப்புதலுடன்தான் நியமிக்க வேண்டும் என்ற புரட்சிகரமான தீர்ப்பையும் வழங்கியது. இந்நிகழ்ச்சி வேறு எந்த மாநிலத்திலும் இதற்கு முன்பு நடந்திராத ஒன்றாகும்.

இப்படி பல்வேறு சந்தர்ப்பங்களில் உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல அமைப்புகளின் கண்டனத்துக்கு நரேந்திரமோடி ஆளாகியிருப்பதுடன், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையின்போது பல அடிப்படையான கேள்விகளுக்குக்கூட பதில் சொல்ல முடியாத நிலையில் உள்ளார்.

தெகல்கா பத்திரிகை வெளிப்படுத்திய உண்மைகள்!

தெகல்கா பத்திரிகை, குஜராத் கலவரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பேட்டி எடுத்து வெளியிட்டது. அதில் பல அதிர்ச்சியான உண்மைகள் வெளிப்பட்டன.

கலவரம் நடந்த பகுதிகள் சிலவற்றிற்கு நேரடியாகச் சென்று குற்றவாளிகளுக்கு ஊக்கம் கொடுத்துள்ளார். அந்தக் குற்றவாளிகளை தப்ப வைக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மூலமாக மேற்கொண்டார். குற்றவாளிகளைக் கண்டித்த நீதிபதிகளை இடம் மாற்றம் செய்தார். சுமார் 20-க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை ஒரு பள்ளத்தில் தள்ளிவிட்டு, எரித்து கொலை செய்த ஒரு குற்றவாளியை நீதிபதிகள், நீ செய்த இந்தச் செயலுக்கு, உன்னை பலமுறை தூக்கில் போட்டாலும் தகும் என தெரிவித்தனர். ஆனால், அந்த நீதிபதிகளெல்லாம் மோடியினால் மாற்றப்பட்டார்கள். அந்தக் குற்றவாளி விடுதலையடைந்து சுதந்திரமாக உள்ளான்.
2005 சனவரி 17ஆம் தேதியன்று கோத்ரா ரயில் எரிப்புத் தொடர்பான உமேஷ் சந்திரா பானர்ஜி ஆணையத்தின் இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டது. அடுத்த இரு நாட்களில் தினேஷ் மோகன் ஏ.கே. ராய், சுனில்காலே, எஸ்.என் சக்ரவர்த்தி முதலிய பேராசிரியர்கள் மற்றும் பொறியாளர்களின் கோத்ரா ரயில் எரிப்புத் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது. கோத்ரா ரயில் எரிப்பு என்பது முஸ்லிம்களின் திட்டமிட்ட சதி என்கிற மோடி கும்பலின் பொய்களுக்கு இவ்விரு அறிக்கைகளும் மறுப்புத் தெரிவித்துவிட்டன. கோத்ரா ரயில் எரிப்பின் இயற்கையான எதிர்வினையே குஜராத் பயங்கரங்கள் என்னும் அவர்களின் நியாயங்கள் அடிபட்டுப் போயின.

குஜராத் மதக் கலவரத்தின்போது 4252 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் மோடி அரசால் விலக்கிக் கொள்ளப்பட்டன. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ருமாபால், சின்கா மற்றும் கபாடியா அடங்கிய அமர்வு அத்தனை வழக்குகள் மீதும் விசாரணை நடத்துமாறு ஆணை பிறப்பித்தது. (17.8.2004)

குஜராத் கலவர வழக்கில் மோடியின் காவல்துறை எப்படியெல்லாம் செயல்பட்டது? இதோ ஓர் எடுத்துக்காட்டு!

கோத்ராவையடுத்த பம்ப்ரோலி என்னும் கிராமத்தில் ஸ்மஷான் சாலையில் வசித்த மாலாஜி சடாஜி என்பவர் (மார்வாடி) சாட்சியாக சேர்க்கப்பட்டு இருந்தார். இவரிடம் வாக்குமூலத்தை விசாரணை அதிகாரியான காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) கே.சி.பாலா பெற்றிருந்ததாகக் கூறப்பட்டது.

அவரை விசாரிக்க வேண்டும் என்று அழைப்பாணை (வாரண்ட்) விடப்பட்டது நீதி மன்றத்தால்; அவர் கிடைக்கப் பெறவில்லை. உண்மை என்ன தெரியுமா? கோத்ரா விபத்துக்கு முன்னதாகவே ஆறு ஆண்டுகளுக்கு முன்பே அவர் இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது! அடேயப்பா, எவ்வளவுப் பெரிய (அ) யோக்கிய சிகாமணிகள் இவர்கள். இவர்கள் எதைத்தான் செய்ய மாட்டார்கள்!

குஜராத்தில் பொடா பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அல்ல _- பயங்கரவாதிகளைத் தயார் செய்யும் சட்டம் (Production of Terrorist Act) என்று சொன்னார் குஜராத் மாநிலத்தில் மனித உரிமைகளுக்காகப் போராடி வரும் டாக்டர் முகில் சின்ஹா.

குஜராத்தில் பொடாவின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மொத்தம் 287. அதில் முஸ்லிம்கள் 286, சீக்கியர் ஒருவர்; மகாராட்டிராவில் மனித உரிமை ஆர்வலர் மேமோன் குஜராத் உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்தபோது இதைச் சுட்டிக்காட்டி நேருக்கு நேரே கேட்டார். பொடாவில் இந்துக்கள் கைது செய்யப்படக் கூடாது என்ற தனிப் பிரிவு ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்டார்.

2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கிற்குச் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக மோடி அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் எஸ்.பி. வகில் என்பவர் நீதிபதி நானாவதி விசாரணை ஆணையத்தின் முன் பகிரங்கமாக அறிவித்தார்.

கோத்ரா சம்பவம் நடந்த அன்று இரவு காவல்துறையின் உயர் அதிகாரிகளோடு முதல் அமைச்சர் நரேந்திர மோடி நடத்திய கூட்டத்தில் இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும்போது அதில் தலையிடாதீர்கள்! என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை அக்கூட்டத்தில் கலந்துகொண்ட காவல்துறை உளவுத்துறை உதவி ஆணையர் சஞ்சீவ்பட் அய்.பி.எஸ். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் வெளிப்படையாகத் தெரிவித்தார். அந்தக் கூட்டத்திலேயே அந்த அதிகாரி கலந்து கொள்ளவில்லை என்றது மோடி அரசு. அப்படியானால் தகவல் அறியும் சட்டத்தின்படி அந்தக் கூட்டத்தின் நடவடிக்கை ஆவணங்களை அளிக்குமாறு கோரினார்; இரகசியக் காப்புச் சட்டத்தின் கீழ் அளிக்க இயலாது என்று அப்பொழுது சொன்னவர்களே, பிற்காலத்தில் அந்த ஆவணங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு விட்டதாகச் சொன்னார்கள்.

போலி என் கவுண்டர்

2004 ஜூன் 15ஆம் தேதியன்று இஸ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக் அம்ஜத் அலி ராணா மற்றும் ஜீஷன் ஹோஹாய் ஆகிய நான்கு பேரைப் போலி என்கவுண்டரில் கொலை செய்த விவகாரத்தில் முறையான விசாரணையை குஜராத் காவல்துறை செய்யும் என்பதை நம்ப முடியாது என்று குஜராத் உயர்நீதிமன்றம்  கூறியது. இந்த வழக்கில் மேலும் விசாரணை செய்யுமாறு மத்தியப் புலனாய்வுக் குழுவை (சி.பி.அய்.) உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெயந்த் படேல் மற்றும் அபிலாஷ்குமாரி ஆகியோர் அடங்கிய அமர்வு ஆணை பிறப்பித்தது. படுகொலை செய்யப்பட்ட இந்த நால்வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் -_ இ-தொய்பா அமைப்புக்காக வேலை செய்தவர்கள் என்றும் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டினர் என்றும் குற்றஞ் சாட்டப்பட்டு இருந்தனர். குஜராத் உயர்நீதிமன்றம் ஆணைப்படி புலனாய்வு செய்த சி.பி.அய். நால்வரும் கொல்லப்பட்டது போலி என் கவுண்டர்தான் என்று உறுதி செய்தது.  இந்தப் போலி என்கவுண்டரில்  கொலை செய்த காவல்துறை அதிகாரி வன்சாரா, அந்தப் போலி என்கவுண்டர் முதல் அமைச்சர் மோடி உத்தரவுப்படியேதான் நடந்தது என்று சிறையிலிருந்தபடியே தெரிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி (சத்பாவனா) மோடி உண்ணாவிரதம் இருந்தது ஆச்சரியமே! மூன்று நாள் உண்ணாவிரதம் ஒன்றை குஜராத் பல்கலைக்கழக வளாகத்தில் குளிரூட்டப்பட்ட மண்டபத்தில் உண்ணாவிரதம் இருந்தவர்.

மத நல்லிணக்கம் அல்லவா! -சில முஸ்லீம்களும் வந்திருந்தனர். மதக் குரு (இமாம்) ஒருவர் மோடியைக் கட்டித் தழுவி, தான் அணிந்திருந்த குல்லாயை அணியுமாறு கொடுத்ததை அணிய மறுத்தார் மோடி (இதுதான் அவரின் மத நல்லிணக்கம்) அதனை சிவசேனா சுட்டிப் பாராட்டியது.
(தினமலர் 22.9.2011 பக்கம் 3)

குஜராத் படுகொலை நடைபெறுவதற்குப் பத்தாண்டுகளுக்குமுன் ஒரு நிகழ்வு: பிரபல சமூகவியல் சிந்தனையாளர் -_ எழுத்தாளர் ஆஷிஸ்நந்தி அன்றைய ஆர்.எஸ்.எஸின் பிரசாரகராக விருந்த நரேந்திரமோடியைப் பேட்டி கண்டவர்; அதுபற்றி ஆஷிஸ் நந்தி என்ன கூறினார்?

அனைத்துக் குணங்களும் கொண்ட ஒரு ஃபாசிஸ்டைத்தான் நான் சந்தித்தேன். ஃபாசிஸ்ட்டு என்று அழைப்பது ஆட்சேபகரமான வார்த்தையல்ல; எல்லா குணங்களும் நிறைந்த ஒரு ஃபாசிஸ்டாக அவர் விளங்கினார். சர்வாதிகாரத்தின் பரிபூரணமான மனநிலை கொண்டவராக அவர் விளங்கினார்; ஒரு கொலையாளியை சில வேளைகளில் ஒருகூட்டுக் கொலையாளியை நான் சந்தித்தேன். முற்றிலும் பீதியுடன் அல்லாமல், நாட்டின் எதிர்காலத்தை நோக்கி எனது பார்வையைச் செலுத்த முடியவில்லை என்று ஆஷிஷ் நந்தி குறிப்பிட்டார்.

குஜராத் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானியான வெங்கிட ராமகிருஷ்ணன். அவரைச் சந்திக்க பல வகைகளிலும் முதல் அமைச்சராக இருந்த நரேந்திர மோடி முயற்சி செய்து பார்த்தார்.

2002 மதக் கலவரத்தில் முதல் அமைச்சர் மோடி சம்பந்தப்பட்டு இருப்பதால் சந்திக்க இயலாது என்று அந்த விஞ்ஞானி மறத்துவிட்டார்!

நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த்தியா சென், பிரஸ் கவுன்சில் தலைவர், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, சாகித்ய அகாடமி விருதுபெற்ற கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஆனந்தமூர்த்தி ஆகியோர் கண்ணோட்டத்தில் மோடி யார் என்பது சிந்தனைக்குரியதாகும்.

பி.ஜே.பி.யைச் சேர்ந்த பெண் சட்டமன்ற உறுப்பினர் ரமிலாபென் தேசாய் ஆன் லுக் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் மனம் திறந்துள்ளார். ஹிட்லர் தன் சொந்த நாட்டு மக்களை ஒருபோதும் கொலை செய்யவில்லை. ஆனால் மோடியோ தன் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள சொந்த நாட்டு மக்களையே கொன்று குவித்தவர் என்ற கூறியுள்ளனர். குஜராத் இனப்படுகொலைக்கு மோடியே காரணம் என்பதை ஆளும் கட்சியைச் சேர்ந்தவரே கூறிவிட்டாரே!

வாஜ்பேயி வருந்தியது ஏன்?

அய்.நா.மன்றத்தின் உதவிக்குழுவில் இந்தியாஉறுப்பினராக இருப்பதையும், மனித உரிமைக்கான குழுவில் இருப்பதையும் சுட்டிக்காட்டி இந்தியாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை உலக நாடுகள் அவையில் இந்தியாவிற்கு அவப்பெயர் ஏற்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டி பிரதமர் வாஜ்பேயி வேதனை அடைந்தார்.

இவ்வாறு கூறுபவர் சாதாரணமானவர் அல்ல. தேசிய ஜனநாயகக் கூட்டணி (பி.ஜே.பி. அணி) ஆட்சியில் அட்டர்னி ஜெனரலாக இருந்த சோலி சொராப்ஜிதான். இன்னும் என்ன ஆதாரம் தேவை _ மோடிதான் குஜராத் கலவரத்திற்குப் பொறுப்பு என்பதற்கு?

குல்தீப் நய்யார் குமுறல்

நீ இந்து என்றால் எனக்கு வாக்களிக்கவும் என்பதுதான் நரேந்திர மோடியின் பிரச்சாரமாக இருந்தது. இந்துத்துவாவை குஜராத்தின் பெருமை என்று குஜராத்திகளிடம் மோடி விற்பனை செய்தார். குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதிதான் இந்தியா என்று குஜராத்திகளை மோடி நம்பவைத்து விட்டார். குஜராத்துதான் இந்தியா! என்ற கோஷத்தை நானும் எனது செவிகளில் கேட்டேன்.

– குல்தீப் நய்யார், பிரபல ஊடகவியலாளர்

அய்ரோப்பிய ஒன்றியம் கண்டனம்

15 நாடுகளை உள்ளடக்கிய அய்ரோப்பிய ஒன்றியம் ஓர் ஆவணத்தை வெளியிட்டது. குஜராத் வன்கொடுமை ஒரு வகையான இன ஒடுக்கம்; 1930களில் ஜெர்மனியில் நடந்தவற்றிற்கு இணையானது; கோத்ரா கொலைகள் ஒரு சாக்காகப் பயன்படுத்தப்பட்டவை! இந்துக்கள் வாழும் பகுதிகளிலிருந்து முஸ்லீம்களை விரட்டுவதை நோக்கமாகக் கொண்ட நிகழ்வுகள் அவை. கலவரத்தில் தலையிடக் கூடாதென முதல் அமைச்சர் நரேந்திர மோடி காவல்துறையின் மேல்மட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். மத்திய மாநில அரசுகள் மனிதநேய நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதற்குத் தவறிவிட்டன. விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பிற தீவிரவாத இந்துக் கூட்டத்தினர் வன்முறைக்குக் காரணம்; நட்ட ஈடு கொடுப்பதில் மாநில அரசு பாரபட்சமாக நடந்துகொண்டது. முழுமையாக வெளிப்படையான ஆய்வை மேற்கொண்டு குற்றவாளிகளைக் கண்டு பிடித்துத் தண்டிக்க வேண்டும் என்று அய்ரோப்பிய ஒன்றியம் அறிக்கை கொடுத்ததே. இதற்குப் பிறகும் குஜராத் கலவரத்துக்கும் மோடிக்கும் தொடர்பு இல்லை என்று நம்பச் சொல்கிறார்களா?

என் நாடும் என் வாழ்க்கையும் எனும் நூலில் எல்.கே.அத்வானி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

குஜராத்தில் நடைபெற்ற சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று பிரதமர் வாஜ்பேயி கூறினார். நடக்கவிருக்கும் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் (கோவாவில்) முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று நரேந்திர மோடி கூறியதாக எல்.கே.அத்வானி எழுதியுள்ளாரே _ தான் தவறு செய்யவில்லை என்றால் மோடி எதற்காக முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன்வரவேண்டும்? பிரதமர் வாஜ்பேயியும் பதவி விலக ஏன் சொல்ல வேண்டும்?

2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரச் சம்பவங்களுக்காக வருத்தப்படுகிறேன். ஆனால் அந்தச் சம்பவங்களுக்கு நான் பொறுப்பாளி அல்ல.
– நரேந்திர மோடி, (தினமணி 26.3.2014 – பக்கம் 11)

இது எப்படி இருக்கிறது? இத்தகைய பேரழிவு நடந்தபோது அங்கு அரசே இல்லையா? முதல் அமைச்சர் என்ற ஒருவர் இல்லவே இல்லையா? கேழ்வரகில் நெய் வடிகிறது என்கிறார்கள். நாம் நம்ப வேண்டுமாம்!

 


 

தண்டனைகள்

நரோடா பாட்டியா என்னும் இடத்தில் (28.2.2002) 97 முசுலிம்கள் கொன்று குவிக்கப்பட்ட வழக்கில் 61 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது; அதில் 32 பேர்கள் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. 7 பேர்களுக்கு 21 ஆண்டுகள் தண்டனை; இந்த வன்முறையை முன்னின்று நடத்தியவர் மோடி அமைச்சரவையில் ஒரு பெண் அமைச்சர் – அதுவும் மகப்பேறு மருத்துவர் என்றால் அதிர்ச்சியாகக்கூட  இருக்கலாம். சங் பரிவார் பயிற்சிகள் வெறித்தனத்தில் பெண்களைக் கூட கொலைகாரிகளாக்கி விட்டதே!

மாயா கோட்னானி (55) என்னும் அந்த அமைச்சருக்கு அளிக்கப்பட்ட தண்டனை 28 ஆண்டுகள். எஞ்சியவர்களுக்கு 14 ஆண்டுத் தண்டனை! இந்த வன்முறை வெறியாட்டத்தின் மற்றொரு கதாநாயகன் பஞ்ரங்தள் (குரங்குப் படை என்று பொருள்!) அமைப்பைச் சேர்ந்த பாபு பஞ்ரங்கிக்கு அளிக்கப்பட்ட தண்டனையோ இரட்டை ஆயுள் தண்டனை!

குஜராத்தில் சர்தார்புரா என்னும் இடத்தில் 33 அப்பாவி முஸ்லிம்கள் சங்பரிவார்க் கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். அப்பகுதியில் வாழும் பட்டேல்களுக்குத் திரிசூலங்களை வழங்கியவன் விசுவ ஹிந்து பரிஷத்துத் தலைவர் ஹரேஷ் பட்! இந்தப் படுகொலையின் மீது நடைபெற்ற வழக்கில் 31 பேர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.(11.11.2011)

இந்தத் தண்டனைகள் எல்லாம் எதைக் காட்டுகின்றன? மோடி அமைச்சரவையில் உள்ளவர்களும், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களும் தண்டனை பெற்றுள்ளனர் என்றால் – மோடிக்கு மட்டும் சம்பந்தம் இல்லையா?

 


 

சோவின் திருகுதாளங்கள்

துக்ளக் 44ஆம் ஆண்டு விழாவில் பேசிய திருவாளர் சோ கூறிய கருத்து:

குஜராத்தில் நடந்த கலவரங்களுக்கும், நரேந்திர மோடிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உச்ச நீதிமன்றம் நியமித்த கமிட்டியின் விசாரணை முடிவை ஏற்றுக் கொள்கிறோம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து  பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது. இது பாரதப் பிரதமருக்குத் தெரியாதா?

(துக்ளக் _ 19.2.2014 பக்கம் 20)

இதே துக்ளக் 32ஆம் ஆண்டு விழாவில் (14.1.2002) இதே சோ ராமசாமி என்ன பேசினார்?

இப்போது டான்சி உட்பட அய்ந்து வழக்குகளில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். விடுதலை என்று தீர்ப்பு வந்துவிட்டதாலேயே ஜெயலலிதா நிரபராதி என்று சொல்லமாட்டேன். 1991-1996 ஆண்டுகளில் பதவி வகித்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ஊழல் நடந்தது உண்மையே. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தொடர்ந்து வழக்குகளை பொய் வழக்கு என்றும் கூறமாட்டேன். அ.தி.மு.க. ஆட்சியில் அதிக அளவுக்கு ஊழல் நடந்தது என்பது மறுக்க முடியாது. அப்படி நான் குற்றம் சாட்டியதில் எந்த தவறும் இல்லை. குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் அவ்வளவுதான் என்று பேசினாரே – அது மோடியின் விஷயத்திலும் பொருந்தாதா?