கேள்வி : கேரள ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள ஷீலா தீட்சித் பத்மநாபசுவாமி கோவிலுக்குள் காலில் சாக்சுடன் சென்றது விதிமீறல் இல்லையா? இதனை மட்டும் ஆகமவிதி ஏற்றுக் கொள்ளுமா? -_ செ. கோமதி, சூளைமேடு
பதில் : நமது அர்த்தமுள்ள ஹிந்துமதம் – ஆகமம் _ சடங்கு சம்பிரதாயம் எல்லாம் அவாள் இஷ்டப்படியே. கேரள கவர்னர் பத்மநாபசுவாமியிடம் செல்கிறார் என்பதுதான் அவாளுக்கு விளம்பர முக்கியத்துவம்; அதனால் சாக்ஸ் ஒரு பொருட்டல்ல.
வெள்ளைக்கார மவுண்ட்பேட்டனை ஒரிசா புவனேஸ்வரர் கிருஷ்ணன் கோவிலுள்ளே அனுமதித்தனர்; அம்பேத்கரை விட மறுத்தனர். காரணம், மவுண்ட்பேட்டன் கவர்னர் ஜெனரல் _ வைஸ்ராய். (ஆதாரம்: மண்டல் கமிஷன் அறிக்கை) எப்படியும் பூணூல் திருமேனிகள் வளைப்பார்களே!
கேள்வி : கிரீமியா பொதுவாக்கெடுப்பு நடத்தி ரஷ்யாவுடன் இணைந்துள்ளது. இதேபோல பொதுவாக்கெடுப்பு நடத்தி தனி ஈழத்தை உருவாக்க உலக நாடுகள் முன்வருமா? -க.ராதாகிருஷ்ணன், திருச்சி
பதில் : அதுவேறு; அதுபோல எளிதில் நடக்காது; நியாயங்கள் ஒன்றாக இருந்தபோதிலும்கூட.
கேள்வி : நாடாளுமன்றத்தில் நிறைவேற உள்ள 33 சதவிகித பெண்களுக்கான இடஒதுக்கீடு போதுமா? அல்லது உள்ஒதுக்கீட்டுடன் மசோதா நிறைவேற்றப்பட வேண்டுமா?- பா.ஆனந்தி, வியாசர்பாடி
பதில் : உள்ஒதுக்கீட்டுடன் நிறைவேற்றப்படுவதே சமூகநீதி + பாலியல் நீதி இணைந்த முழுமையான வரவேற்பினைப் பெற்று இடஒதுக்கீட்டின் மூலநோக்கம் நிறைவேறத் துணைநிற்கும்.
கேள்வி : உத்திரப்பிரதேசத்தில் ரூ.300 கோடி செலவில் கிருஷ்ணன் கோவில், குஜராத்தில் ரூ.2,500 கோடியில் படேல் சிலை, மீண்டும் பல நூறு கோடியில் ராமர் கோவில்… இப்படியே வடஇந்திய அரசியல்வாதிகள் செயல்படுவதைப் பார்த்தால் உலகம் இந்தியாவை ஏழை நாடு என நினைக்குமா? அல்லது பணக்கார நாடு என நினைக்குமா? – கோ.அசோகன், வேலூர்
பதில் : இது எப்போதுமே ஏழைகள் வசிக்கும் பணக்கார நாடுதானே!
கேள்வி : தேர்தலில் நோட்டா முறை ஜனநாயகப் பூர்வமானதா? மக்களாட்சிக்கு ஏற்புடையதா? – மு.வேல்விழி, மேலூர்
பதில் : விரலில் மை வைப்பது போன்றே இதுவும் ஒரு விசித்திரமே!
கேள்வி : ஜெயலலிதா தனது பிரச்சாரத்தில் மோடி பற்றிப் பேசுவதில்லையே _ ஏன்? – கி. மாசிலாமணி, செங்கை
பதில் : மோடியும் ஜெ. பற்றிப் பேசவே இல்லையே _ தமிழ்நாடு வந்தபோது. பா.ஜ.க. வெளிப்படை ஆதரவு. அ.தி.மு.க. மறைமுக ஆதரவு. அவ்வளவுதான் வேறுபாடு; பின் எப்படி இருவரும் பேசுவர்!
கேள்வி : உ.பி.யில் மாயாவதி வைத்த யானைச் சிலையினை மறைத்த தேர்தல் ஆணையம் சென்னை எம்.ஜி.ஆர். சமாதியில் உள்ள இரட்டை இலைச் சின்னத்தை மறைக்க இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? – நா.பார்த்திபன், நாகர்கோவில்
பதில் : அது அந்த அம்மா கட்சி, இது இந்த அம்மா கட்சி _ புரியறதோ!
கேள்வி : பல மாதங்களாக மௌனம் சாதித்த விஜயகாந்த் திடீரென்று பி.ஜே.பி.யுடன் சேர்ந்துவிட்டாரே. திடீரென்று எடுத்த முடிவா அல்லது ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தமா? – கு.பழனி, புதுவண்ணை
பதில் : அது அவருக்கே தெரியாதபோது நமக்கு எப்படித் தெரியும் அய்யா?
கேள்வி : தி.மு.க.வின் அடுத்த தலைவராக ஸ்டாலின் உருவாகிவிட்டார் என்று கூறலாமா? அவரது தேர்தல் பிரச்சாரம் குறித்த தங்கள் கருத்து? – ம.சுரேஷ்குமார், சைதாப்பேட்டை
பதில் : வாதத்திறமையும் முதிர்ச்சியும் நிறைந்த கடும் உழைப்பைக் கொண்ட தேர்தல் பிரச்சாரம் _ நிச்சயம் பலன் தரும்.
கேள்வி : தேசிய கட்சி, திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று சொன்ன ராமதாசும், தெய்வத்தையும் மக்களையும் தவிர கூட்டணி இல்லை என்று கூறிய விஜயகாந்தும் கூட்டணி சேர்ந்துள்ளது பற்றி? – டி.கார்வேந்தன், கும்பகோணம்
பதில் : யாருடைய பேச்சோ பொழுதுவிடிந்தால் போச்சு _ பழமொழி. அரசியல்வாதிகளின் பேச்சு தேர்தல் வந்தால் போச்சு _ புதுமொழி.
Leave a Reply