– டான் அசோக்
ஸ்ரீநிவாச வெங்கட்ராமனுக்கு ஒரு 30 வயது இருக்கும். எனக்கும் அவ்வளவுதான். அலுவலகத்தில் சேர்ந்த முதல் நாள், எங்கிருந்து வர்றேள்? என்று மரியாதையாகத்தான் கேட்டான்.
அடுத்து ஒன்றிரண்டு முறை பன்மையில் மரியாதையாகத்தான் அழைத்தான். திடீரென ஒருநாள், முகிலா… அந்தப் பாட்டிலை எடுத்துக்கொடு என்றான். என்னடா இது பார்த்த இரண்டே நாளில் ஒருமையில் அழைக்கிறானே என்று அதிர்ச்சி.
ஆனாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் பாட்டிலை எடுத்துக்கொடுத்தேன். அடுத்து சில நாட்கள் அவன் வந்தாலே நான் பேசுவதில்லை. ஒருநாள் அவனாகவே, டேய்… அந்த சேரை எடுத்துக்கோ. எனக்கு இது வேணும், என்றான். எனக்கு இப்போது இரட்டிப்பு அதிர்ச்சி என்றாலும் சென்றமுறையைப் போலவே இப்போதும் அமைதியாக சேரை எடுத்துக்கொண்டு நகர்ந்தேன். அடுத்தமுறை இதே போல் மரியாதையில்லாமல் பேசினால், இல்லடா சீனிவாசா என பதில் சொல்லவேண்டும் என முடிவு செய்திருந்தேன். ஆனால் அவன் அதற்குப் பிறகு பலமுறை என்னிடம் ஒருமையில் பேசியும் என்னால் அவனிடம் ஒருமையில் பேச முடியவில்லை. எனக்கும் அது காலப்போக்கில் பழகிவிட்டது. ஒருநாள் பைக் நிறுத்தும் இடத்தில் பயங்கர சண்டை. ஸ்ரீநிவாசன் ஒரு இளவயது காவலாளியிடம் செமத்தியாக அர்ச்சனை வாங்கிக் கொண்டிருந்தான். ஓடிச்சென்று அங்கு நின்று மனம் நிறைய மகிழ்ச்சியோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
திடீரென அந்தக் காவலாளி என் பக்கம் திரும்பி, நீங்களே சொல்லுங்க சார். நான் மரியாதையா சாரி சார்னு சொன்னேன். ஆனா இவன் எடுத்தவுடன, அவனே இவனேனு திட்றான். ஆஃபீஸ்ல வேலை பாத்தா நாங்கள்லாம் இவனுக்கு என்ன அடிமையா? என்றான். இல்லை, எனச் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டேன்.
Leave a Reply