கே.ஜி.இராதாமணாளன் திராவிட இயக்க முன்னணி எழுத்தாளர். பல சிறுகதைகளையும் ஏராளமான கட்டுரைகளையும் எழுதியவர். திராவிட இயக்க வரலாற்றை நூலாக எழுதியுள்ளார்.
– கே.ஜி.இராதாமணாளன்
கொந்தளித்து ஓடிக் கொண்டிருந்த பனாஸ் நதியில் ஒரு படகு ஆடி அசைந்து கொண்டு சென்றது. அந்தப் படகில் அரும்பு மீசைவிட்ட வாலிபன் ஒருவன் உட்கார்ந்திருந்தான். அவன் பக்கத்தில் பெரிய துணி மூட்டை ஒன்று இருந்தது. எதிர்க்கரையில் தெரிந்த சானா என்ற சிற்றூரையும், தன் அருகிலிருந்த மூட்டையையும் அவன் மாறி மாறிப் பார்த்து, தனக்குத் தானே சிரித்துக் கொண்டான்.
இன்று சானாவில் சந்தை கூடுகிறது அல்லவா? என்று அந்த வாலிபன், படகோட்டியைக் கேட்டான்.
ஆமாங்கோ! நீங்களும் சந்தைக்குத்தானே போறீங்கோ? என்ன வியாபாரங்கோ?
புடவை வியாபாரம்!
பார்த்ததும் நினைத்தேனுங்க _ நீங்க ஒரு புடவை வியாபாரியின்னு!
படகோட்டி இப்படிக் கூறியதைக் கேட்டதும், வாலிபனின் உதடுகளில் சிறுநகை தோன்றி மறைந்தது.
இராஜபுத்திரப் பேரரசின் ஒப்பற்ற மன்னரான கும்பமகா ராணாவின் மகன் – இளவரசன் உதயகரன் _ ஒரு புடவை வியாபாரி! என்று அந்த வாலிபன் தனக்குத் தானே முணுமுணுத்தான்!
ஆமாம், ஒரு மலைஜாதிப் பெண்ணிற்காக, அப்படி அவன் மாறுவேடத்தில் செல்ல வேண்டியிருந்தது!
உதயகரனின் மனக் கண்முன், அந்தப் பெண்ணின் அழகு முகம் தோன்றியது. அத்துடன் இருவாரங்களுக்கு முன்பு நடைபெற்ற அந்தச் சம்பவமும் நினைவிற்கு வந்தது.
சானா என்ற கிராமத்திற்கு அடுத்திருந்த குன்றின் மீது, திருமால் கோவில் ஒன்று இருந்தது. தலைநகரான சித்தூருக்கு அருகிலிருந்த காரணத்தால், அந்தத் திருமால் கோவிலுக்கு அடிக்கடி அரசர் வருவார். திருவிழாக் காலங்களில் வெகு தூரத்தில் இருந்தெல்லாம் மக்கள் வருவது வழக்கம்.
அவ்வூரில் வாழ்ந்த மலை ஜாதியார், அப்படி வரும் பக்தர்களின் மூட்டை முடிச்சுகளைச் சுமந்து சென்று, கூலி பெறுவார்கள். அந்த வேலையில் ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் ஈடுபடுவார்கள்.
அன்று மன்னர் கும்ப ராணாவும் இளவரசன் உதயகரனும் அவ்வூருக்குப் படகில் சென்று இறங்கியபோது, மலை ஜாதியார் அவர்களைச் சுற்றிக் கொண்டு மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்தார்கள். அரசனின் சாமான்களை ஆளுக்கொன்றாகத் தூக்கிக் கொண்டு குன்றின் மீது ஏறினார்கள். சுவாமி தரிசனத்திற்குப் பிறகு, அவர்கள் கீழே இறங்கியபோது, குன்றின் நடைபாதைக்குச் சிறிது தள்ளியிருந்த பாறைமீது, துடியிடையாள் ஒருத்தி நின்று பாடிக் கொண்டிருந்தாள்!
அந்த இனிய இசை உதயகரனின் மனதை அப்பக்கமாக இழுத்தது! கண்களைத் திருப்பினான். நீல வானத்தைப் பார்த்தபடி, காற்றில் மேலாடை படபடக்க ஒரு கட்டழகி நின்றிருப்பதைக் கண்டான்!
கடவுள் வணக்கம் முடிந்து மன்னர் கீழே இறங்குகிறார் என்பதை அறிந்ததும், அந்த மலைஜாதி மான்விழியாள் பாட்டை நிறுத்தி விட்டுப் பாறையை விட்டுக் கீழே குதித்துத் துள்ளியோடி வந்தாள்! வந்தவள் வழியிலிருந்த ஒரு சந்தன மரத்தின் அடியில் நின்று கொண்டு, எதிரில் நடந்து வந்த அரசரையும் இளவரசனையும், அகல விரித்த கண்களோடு பார்த்துக் கொண்டிருந்தாள். கள்ளங் கபடமில்லாத அந்த மான்விழிப் பார்வையையும், அழகின் அமுத வெள்ளத்தில் மிதந்த அவளது பொன்னுடலையும், உதயகரன் கண்டான்! வண்ண மலரைக் கண்ட தும்பியென, அவன் மனம் சிறகடித்தது! அந்தக் காட்டு மலரை, அவனால் கண்குளிர அதிகநேரம் பார்க்க முடியவில்லை! சில வினாடிகளில் அந்த வானவில் மறைந்துவிட்டது!
சித்தூரை அடைந்த இளவரசனுக்கு அன்றிரவெல்லாம் தூக்கம் வரவில்லை. விழி அள்ளும் அந்த ஒளி முகத்தாளை _ வானமழையென இசைபொழியும் அந்தக் கானக் குயிலாளை _ திரும்பவும் பார்க்கவேண்டும், பக்கத்தில் நின்று பேச வேண்டும் என்ற தாகம் அவனுக்கு உண்டாயிற்று. மன்னன் மகனாகவே சென்றால் அஞ்சுவாள் பேச என்றெண்ணி அவன் மாறு வேடத்தில் செல்லத் தீர்மானித்தான்.
ஆனால் மறுநாளே தந்தையோடு மார்வார் நகருக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டதை நினைத்து, அவன் தணல்பட்ட புழுவானான். ஒரு மாதம் அங்கே தங்கியிருந்து விட்டுச் சித்தூர் திரும்பிய மறுநாளே, அவன் புறப்பட்டான் சானா கிராமத்திற்கு, மாறுவேடத்தில் _ அந்தக் காட்டு மலரைக் காண்பதற்காக!
அவன் கரையை அடைந்ததும், பன்னிரண்டு வயதுப் பையன் ஒருவன் ஓடி வந்தான்.
அய்யா, சந்தைக்குத் தானே போக வேண்டும்? மூட்டையை நான் தூக்கி வருகிறேன்!
என்ன தம்பி, உன்னால் இதைத் தூக்க முடியுமா?
இதோ பக்கத்திலே எங்கள் குடிசை இருக்கிறது _ அது வரைக்கும் தூக்கிக் கொண்டு வருகிறேன்! அங்கிருந்து என் அப்பாவோ அக்காவோ இதை எடுத்துக் கொண்டு வருவார்கள்! என்று சொல்லிக் கொண்டே, அந்தப் பையன் மூட்டையின் அருகே சென்றான்.
கிழவன் ஒருவன் குடிசையின் முன்வந்து நின்று பானு! பானு! என்று அழைத்தான்.
என்னப்பா? என்று குயில் போலக் கேட்டுக் கொண்டே _ குடிசையை விட்டு ஓர் இளம் பெண் _ மயிலென வெளியே வந்தாள்.
தம்பி சாரு வந்தால் கிழங்கு தோண்டிக்கொண்டு வரச் சொல்! நான் சந்தைக்குப் போகிறேன்! என்று மத்னிமால் என்ற அந்தக் கிழவன் கூறிவிட்டுத் திரும்பிச் சென்றான்.
சாரு! சாரு! அடே சாரு! என்று உரத்த குரலில் அழைத்தபடிச் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, குடிசைக்கு முன்பு இருந்த மணல் மேட்டின் மீது அவள் அமர்ந்தாள்.
அவளுக்குப் பதினைந்து அல்லது பதினாறு வயதுதான் இருக்கும். மலைஜாதிப் பெண்களுக்கேயுரிய இயற்கையாகிய கட்டான உடல், அவளுக்கும் இருந்தது. பூத்த தாமரையைப்போல, அவள் முகத்தில் புது மெருகு ஏறியிருந்தது! கீழே ஒரு கிழிந்த பாவாடை. மேலே ஒரு தாவணி _ அதிலும் இங்கும் அங்கும் கிழிசல். கழுத்திலே பாசிமணி மாலை. கையிலே சங்கு வளையல்கள். ஆமாம், பட்டுப் பீதாம்பரம் அணிந்து, தங்கமும் வைரமும் உடலில் தகதகவென ஒளி உமிழப் பட்டத்து இளவரசி அல்லவே அவள்! ஆனால் எந்த நாட்டு அரசன் மகளும் கண்டு பொறாமைப்படக்கூடிய அளவிற்கு அழகு அவளிடத்தில் மண்டிக் கிடந்தது. ஆனால் தானொரு அழகரசி என்ற உண்மை, அவளுக்குத் தெரியாது. மயில் அறியுமா, அதன் தோகையின் எழிலை? குயில் அறியுமா, அதன் குரலின் இனிமையை?
இரவு நேரங்களில் குன்றின் அடிவாரத்திலும், ஆற்றோரத்திலும், உலவுவதிலும், மலர்கள் பறிப்பதிலும், நட்சத்திரங்களைப் பார்த்துப் பாடுவதிலும் அவளுக்குப் பிரியம் அதிகம். மகளின் விருப்பத்திற்குத் தந்தை குறுக்கே நிற்பதில்லை! ஊர் தூங்கும் நேரத்தில், பருவ மங்கையான உனக்கு, பவனி என்ன வெளியில் என்று தந்தை அதட்டிக் கேட்க மாட்டான்! கதவை அடைத்துப் பூட்டவும் மாட்டான்! ஆகவே அந்த வானம்பாடி வானவெளியிலே பறந்து சுற்றும். பாடிக் களிக்கும்!
பெரிய மூட்டை ஒன்றைத் தலையில் சுமந்துகொண்டு சாரு சிறிது தூரத்தில் வருவதைக் கண்டதும், அவள் நடையும் ஓட்டமுமாக அவனை நோக்கிச் சென்றாள்.
அக்கா! வீட்டில் அப்பா இருக்கிறாரா? என்று கேட்டுக் கொண்டே, அவன் மூட்டையைக் கீழே இறக்கினான்.
இப்போதுதான் சந்தைக்குப் போனார்! சரி, நீ போய்க் கிழங்கு தோண்டிக் கொண்டு வா! நான் இந்த மூட்டையை எடுத்துச் செல்கிறேன்! என்று அவள் சொன்னதும், சாரு அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டான்.
உதயகரனின் கண்களை, அவனாலேயே நம்பமுடியவில்லை. எந்தப் பெண்ணைப் பார்க்க வேண்டுமென்று ஆசையோடும் ஆர்வத்தோடும் ஓடிவந்தானோ, அதே பெண் வரையாத வண்ண ஓவியம் போல, அவன் எதிரே நின்றிருந்தாள்!
தம்பி சென்றுவிட்ட பிறகு தான் எதிரில் நின்றிருந்த அந்த அழகிய வாலிபனின் முகத்தை, அவள் ஏறிட்டுப் பார்த்தாள். அவன் தன்னையே உற்றுப் பார்ப்பதைக் கண்டதும், அச்சமும் நாணமும் அவள் உள்ளத்தில் போட்டியிட்டு எழுந்தன! யாருக்குமே தலைகுனியாத அந்த மலைஜாதிப் பெண், அந்த வாலிபனின் எதிரே விழிதாழ்த்தி நின்றாள்! அந்தப் போக்கு, அவளுக்கே வினோதமாகவும் விசித்திரமாகவும் இருந்தது!
இவன் யாரோ! இவனைக் கண்டால், எனக்கேன் வெட்கம் பிறக்கிறது? _ இந்தப் புதிருக்கு, அவளால் விடை காண முடியவில்லை! அதெப்படிக் காண முடியும் _ கன்னிப் பெண்தானே அவள்!
சந்தைக்குத்தானே போக வேண்டும்? என்று வேல் விழிகளை நிமிர்த்தாமலே அவள் கேட்டாள்.
சந்தைக்கா? இனி அங்கு என்ன வேலை? புடவைக் கடை வைத்தால், ஊரிலுள்ள பெண்கள் வாங்கினாலும் வாங்காவிட்டாலும் அப்பக்கமாக வந்து ஒரு பார்வை பார்த்துவிட்டுச் செல்வார்கள்! அப்படி வரும் அணங்குகளிலே ஒருத்தியாகத் தன் உள்ளங் கவர்ந்த அந்தக் கள்ளியும் இருப்பாள் என்ற எண்ணத்தோடு அல்லவா, அவன் அங்கு செல்ல நினைத்தான்? அந்தச் சந்தனக் கன்னத்தாள் எதிரில் நின்று பேசும்போது _ இனிச் சந்தைக்கு ஏன் அவன் செல்ல வேண்டும்?
என்ன கேட்டாய்? என்று தூக்கத்திலிருந்து எழுந்தவனைப் போல, அவன் கேட்டான்.
சந்தைக்குத்தானே?
இல்லை! குன்றின்மீது செல்ல வேண்டும் _ சுவாமி தரிசனத்திற்கு!
அந்தத் தையல் பதில் ஒன்றும் சொல்லாமல் மலர்க் கரத்தால் மூட்டையைத் தூக்கித் தலைமீது வைத்துக்கொண்டாள். நடக்கும் அந்தக் குளிர்ப் பூங்காவின் நடை அழகையும் கொடியிடையின் அசைவையும், கண்டு ரசித்தபடி அவன் பின் தொடர்ந்தான்.
குன்றின் மீது ஏறியபோது, அவளது சிறுத்த இடையின் நொடிப்புகளைக் கண்டு, பாவம், உனக்குக் கழுத்து வலிக்கும்! நான் கொஞ்ச தூரம் எடுத்து வருகிறேன்! என்று அவன் கூறினான். அவன் குரலில் குழைந்திருந்த அன்பை, அவள் கவனித்தாள்!
இந்த அளவு கருங்கல்லையே என்னால் தூக்கிவர முடியும்! இந்தத் துணி மூட்டையா ஒரு பாரம்! என்று புன்னகையோடு கூறிவிட்டு மேலே நடந்தாள்.
அப்பா! என்று அவன் கூறி அலறியதைக் கேட்டதும், அவளது முகம் திரும்பியது. என்ன? என்று துடிதுடிப்போடு வினவினாள்.
பெரியதாக ஒன்றுமில்லை! காலில் கல் இடித்துவிட்டது!
பார்த்து நடக்க வேண்டும்!
ஆமாம், பார்த்து நடந்ததனால்தான், கல்லுக்குக் கோபம் வந்துவிட்டது! கால் வலிக்கிறது! இந்த மர நிழலில் சிறிது உட்காரலாமா?
அவள் மூட்டையைக் கீழே வைத்தாள். மரத்தின் வேர் மீது அவன் உட்கார்ந்தான். சிறிது தள்ளி அந்தச் சிற்றிடையாளும் அமர்ந்தாள்.
இந்த விஷ்ணு மிகவும் சக்தி வாய்ந்தவராமே _ உண்மையா? என்று உதயகரன் மெல்லப் பேச்சை ஆரம்பித்தான்.
ஆமாம், நம்பினவர்களை இவர் என்றும் கைவிட்டதில்லை! என்று அவள் கூறினாள். பக்கத்திலிருந்த ஒரு கொடியின் இலையைக் கிள்ளியபடி!
நானும் இவரைத்தான் நம்பியிருக்கிறேன்! உன் பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா?
சந்திரபானு!
உன் அழகிற்கேற்ற பெயரை வைத்த, உன் அப்பாவை நான் வாழ்த்துகிறேன்!
என் அப்பா வைத்த பெயர் அல்ல இது! இந்த ஊருக்கு ஒரு செல்வந்தர் வந்திருந்தபோது, அவரது மூட்டைகளை என் அப்பா சுமந்து வந்தாராம்! அப்பொழுது ஒரு ஆள் ஓடிவந்து, பெண் குழந்தை பிறந்திருப்பதாகச் சொன்னானாம்! தமக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று கேட்டதும், அப்பா பூரிப்பால் சிரித்தாராம்! செய்தியை அறிந்த அந்தச் செல்வந்தர், குழந்தைக்குச் சந்திரபானு என்று பெயர் வை என்று என் தந்தையிடம் கூறினாராம்!
ஓகோ, உன் பெயருக்கே இவ்வளவு பெரிய வரலாறு இருக்கிறதா? என்று அவன் குறும்போடு கேட்டபோதுதான், அதிகமாகத் தான் பேசிவிட்டதை உணர்ந்து, அவள் வெட்கமடைந்தாள்.
சந்திரபானு!
எல்லோரும் என்னைச் சுருக்கமாக பானு என்றுதான் அழைப்பார்கள்!
அப்படியா? என்று அவன் சிரித்ததும், அவளது வெட்கம் இன்னும் அதிகமாயிற்று.
பானு! உன் கன்னங்கள் சிவக்கின்றனவே, ஏன்?
அவனது கண்கள், தனது இதயக் கதவைத் தட்டுவதை அவள் உணர்ந்தாள்! நாணத்தால் அந்த இளங் குமரியின் விழிகள் பாதி மூட, அச்சத்தால் உடல் சிறிது நடுங்கியது.
ஏன் மௌனமாக இருக்கிறாய், பானு? நான் பேசுவது உனக்குப் பிடிக்கவில்லையா? என்று இரண்டடி முன்னுக்கு நகர்ந்தபடி, அவன் கேட்டான்!
இல்லை! என்பதற்கு அறிகுறியாக அவள் தலையை ஆட்டினாள்!
புகழ்ச்சிக்காகச் சொல்வதாக எண்ணிவிடாதே _ உன்னைப் போன்ற அழகியை, இராஜபுத்திர சாம்ராஜ்யத்திலேயே நான் கண்டதில்லை, பானு! என்று கூறியபோது, அவனது முகத்திலே அதிசயமானதோர் பொலிவு ஏற்பட்டதை, ஓர விழிகளால் அவள் பார்த்தாள்.
அந்தக் காளையின் கருத்தைச் சந்திரபானு புரிந்து கொண்டதைப் போல… சந்தையில் அவளது தகப்பன் மத்னிமாலும், சிரித்த நந்தகனின் எண்ணத்தைத் தெரிந்து கொண்டான்!
என்ன யோசிக்கிறாய், மத்னிமால்? என்று நந்தகன் கேட்டான்.
ஒன்றுமில்லை!
இப்படிப் பார், மத்னிமால்! இன்னும் எத்தனை ஆண்டுகள்தான், உன் மகளுக்காக நான் காத்திருப்பது! இந்தச் சந்தைக்கு நான் மாடுகள் விற்க வரவில்லை _ உன்னைக் கண்டு ஒரு முடிவைத் தெரிந்து கொண்டு போகவே வந்தேன்! கல்யாணத்தை அடுத்த மாதத்திலேயே முடித்தாக வேண்டும், என்ன?
சரி, உன் விருப்பம்போலவே ஆகட்டும்!
மகிழ்ச்சி, மத்னிமால்! இந்த மாடுகளை நான் உதயபூர் சந்தைக்கு ஓட்டிச் செல்கிறேன்! இவைகளை விற்றுவிட்டு, பௌர்ணமி அன்று தவறாமல் இங்கு வந்து விடுகிறேன்! சந்திரபானுவை அழைத்துக்கொண்டு என்னோடு நீ புறப்படத் தயாராக இருக்க வேண்டும்! கல்யாணத்தை எங்கள் ஊரிலேயே வைத்துக்கொள்ளலாம்!
அப்படியே செய்கிறேன்!
மகிழ்ச்சி! இந்தப் பசு, உனக்குப் பிடித்திருக்கிறதா?
உயர்ந்த ஜாதிப் பசுவாயிற்றே! _ விலை அதிகமாக இருக்குமே!
பெண் தரப்போகும் மாமனாரிடம் பொன்னுக்கா பசுவை விற்பேன்! இதை வீட்டிற்கு ஓட்டிக் கொண்டு போ, மத்னிமால்!
நந்தகன் தந்த அந்தப் பசுவை மத்னிமால் தடவிப் பார்த்த அதே நேரத்தில்… அவன் பெற்ற தங்கச் சிலையின் மாம்பழக் கன்னங்களை, உதயகரன் மகிழ்ச்சியோடு தடவிக் கொடுத்தான்!
நேரமாகிறது, நாம் திரும்பலாம்! என்று மயக்கும் விழிகளால் அவனைப் பார்த்தபடி, சந்திரபானு கூறினாள்.
ஆமாம் கண்ணே! சூரியனும் உச்சிக்கு வந்துவிட்டான் _ சூடும் அதிகமாகிவிட்டது! என்று குறும்போடு கூறிக்கொண்டே, அந்தக் கன்னிப் பெண்ணை மார்போடு அணைத்துக்கொண்டான்.
சந்திரபானு தன் குடிசைக்குத் திரும்பியபோது, அங்கே ஒரு அழகான பசுவும் கன்றும் கட்டப்பட்டிருப்பதைக் கண்டு வியப்படைந்தாள்!
வேகமாக ஓடிச் சென்று, அந்தப் பசுவின் பட்டுப் போன்ற கழுத்தைத் தடவிக் கொடுத்தாள்! திண்ணைமீது மூங்கில் பிளந்து கொண்டிருந்த தன் தந்தையைப் பார்த்து, இந்தப் பசு நம்முடையதா? எங்கிருந்து வாங்கினாய்? என்ன விலை கொடுத்தாய்? எவ்வளவு பால் கறக்கும்? என்றெல்லாம் அடுக்கடுக்காகக் கேள்விகள் கேட்க ஆரம்பித்தாள்.
அந்தக் கிழவன் பதில் ஒன்றும் கூறாமல், அவளைப் பார்த்துச் சிரித்தான்!
அமைதியான இரவு! நட்சத்திரங்கள் நிறைந்த வானிலே, வெண்ணிலவின் ஆனந்த பவனி! பனாஸ் நதியில் வேகமாக வருகிறது, ஒரு படகு! அந்தப் படகில் தலைப்பாகையும் கருப்புப் போர்வையும் அணிந்த உதயகரன் மட்டுமே இருந்தான். அவனே துடுப்புகளால் படகைத் தள்ளிக் கொண்டு வந்தான். அந்தக் காளையின் முகத்தில் சிந்தனையின் வரிக்கோடுகள் பின்னலிட்டன.
தனது வாழ்க்கையின் மரக்கலம் இன்பக் கரைக்கு மிகவும் அ
ருகே வந்துவிட்டதாக, அவன் உணர்ந்தான். ஆற்றில் தலைதூக்கி நின்றிருந்த ஒரு பெரிய பாறை கண்ணில் பட்டதும், அவன் திடுக்கிட்டான்! படகு அப்பாறையில் மோதினால்… அவ்வளவுதான், எல்லாமே தூள் தூளாகிவிடும்! அந்தப் பாறையில் மோதாதபடி, அவன் எச்சரிக்கையோடே சென்றான்!
கரையைப் படகு தொட்டதும் அவன் கால்கள் தரையில் தாவின. அவளைச் சந்தித்து இன்பம் சுவைக்கும் அந்த வழக்கமான இடத்திற்கு, அவன் பறந்து சென்றான். பால் நிலவின் ஒளி வெள்ளத்தில், குன்றின் அடிவாரத்தில் இருந்த அகலமான ஒரு பாறைமீது, அந்தப் பசும்பொன் மேனியாள் உட்கார்ந்திருப்பதைக் கண்டான்.
பானு!
வந்துவிட்டீர்களா?
ஓடினான்! எழுந்தாள்! உயிர்கள் இரண்டும் ஓர் உயிராய் மோதிக் கலந்தன!
இதென்ன, தங்கள் முகத்திலே இன்று சோகம்? என்று சிறிது கலக்கத்தோடு, அந்தத் தேன்மொழியாள் கேட்டாள்.
சிந்திக்கக் சிந்திக்க, சோகம்தான் அதிகமாகிறது, கண்ணே!
எதைப் பற்றிய சிந்தனை?
கள்ளத்தனமாக நாம் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இப்படிச் சந்திப்பது? பானு, நம் காதல் நம்மை எங்கே இழுத்துச் செல்கிறது?
நீங்கள் ஏன் அதைப்பற்றியெல்லாம் சிந்திக்கிறீர்கள்? விஷ்ணு இருக்கிறார் _ எல்லாவற்றையும் அவர் கவனித்துக் கொள்கிறார்! அவரை மனமார நம்பும் நமக்கு, ஒரு குறையும் வராது! நம்பினவர்களை, அவர் என்றுமே கை விட்டதில்லை! அவரே கதியென்றிருக்கும் நம்மை, கணவனும் மனைவியுமாக இணைத்து வைப்பார்! இன்பமே அடைவோம் துன்பம் நம்மை அண்டாது! என்று உணர்ச்சியோடு பேசிய அந்த அழகரசியின் முகத்தை அவன் கனிவோடு பார்த்தான். அவன் மனத்தில் ஏதோ ஒருவிதமான அச்சம் மட்டும் தலைவிரித்தாடிக் கொண்டிருந்தது.
அவள் சிரித்தாள்! அந்தச் செவ்விதழின் சிரிப்பைக் கண்டதும், அவனது அச்சம், அயர்வு எல்லாமே ஓடி மறைந்தன.
நீ என்னோடு சித்தூருக்கு வந்துவிடேன், பானு! என்றென்றும் அங்கே நாம் களிப்பில் விழுந்து கிடக்கலாம்! என்று காதல் சொட்டச் சொட்ட அவன் கூறி, அந்த மாணிக்க ஆரத்தை மார்பிலே அணிந்தான். இன்பம் ஊறிடும் நெஞ்சுடனே இருவரும் பாடினர், ஆடினர், உல்லாசத்தின் உச்சாணிக் கொம்பிலே ஏறினர்!
வெள்ளி முளைத்துவிட்டதே! என்று வேதனையோடு பெருமூச்சு விட்டபடி, அந்தக் காட்டு மலராள் _ கனி உடலாள் _ கற்கண்டு மொழியாள் _ முணுமுணுத்தாள்.
நம் காதல் வளர்பிறை! ஒரு நாளும் தேய்பிறையாகி விடாது, கண்ணே! அஞ்சாதே! நாம் நாளை சந்திப்போம்! என்று அவன் உள்ளம் நெகிழ உரைத்தான்.
இதயத்தில் குடிபுகுந்தவனின் இனிய வார்த்தைகளைக் கேட்டு, அந்த சோலைக் குயிலாளின் தோள்கள் பூரித்தன.
ஆற்றை நோக்கிச் சென்ற காதலனைப் பார்த்தபடியே, அவள் பாறை மீது நின்றிருந்தாள். அவன் உருவம் இருளோடு இருளாகக் கலந்துவிட்ட பிறகு, குடிசைக்குச் செல்ல அவள் அடியெடுத்து வைத்தாள். காலில் ஏதோ தட்டுப்படுவதை உணர்ந்ததும், பார்வையைக் கீழே செலுத்தினாள். பாறையின் மீது அன்பனின் தலைப்பாகையும், கருப்பு மேலங்கியும் இருப்பதைக் கண்டாள்.
மறந்துவிட்டாரே! என்று உதடுகள் முணுமுணுக்க, கையால், அவைகளைக் குனிந்து எடுத்தாள்.
வேகமாக அவள் நடந்தாள். குடிசைக்கு அருகே வந்ததும், யாரோ இருவர் உள்ளே பேசுவதைக் கேட்டுத் திடுக்கிட்டு நின்றாள். அடிமேல் அடிவைத்து, சுவற்றின் அருகே போய் நின்றாள். சுவற்றிலிருந்த ஒரு சிறிய சந்தில் கண் வைத்துப் பார்த்தாள். ஒரு மங்கலான விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதன் வெளிச்சத்தில் தந்தையும் நந்தகனும் உட்கார்ந்திருப்பதைக் கண்டதும் அந்தக் கன்னியின் மனம் பகீர் என்றது.
பல நாள் காத்திருந்தேன்! பசுவைத் தந்தேன்! எல்லாம் வீணாகி விட்டன! மத்னிமால், இப்போது உன் மகள் எங்கே இருக்கிறாள் தெரியுமா? என்று நந்தகன் ஆத்திரத்தோடு கேட்டான். தந்தை மௌனமாக இருந்தான்.
பாலைக் குடித்து விஷத்தைக் கக்கும் நல்ல பாம்பே, கேள்! குன்றின் அடியிலே எவனோ ஒருவனோடு பேசிக் கொண்டிருக்கிறாள்! அவன் அணைப்பிலே அவள் சொக்கியிருந்ததை நான் பார்த்தேன்!
என்ன? என்று கொதித்தெழுந்து கேட்டான், மத்னிமால்.
ஏன் நடிக்கிறாய்? உனக்குத் தெரியாமலா இது நடக்கிறது? அவன் எவ்வளவு கொடுத்தான், மத்னிமால் உனக்கு _ இரவை அந்தச் சரசக்காரியோடு கழிக்க? என்று குறும்போடு கேட்ட நந்தகனின் கன்னத்திலே, பளீர் என்று ஓர் அடி விழுந்தது!
கூரையிலே செருகி வைத்திருந்த கோடாரியை மத்னிமால் வேகமாக எடுத்தான்.
நீ சொல்வது உண்மையானால் அங்கேயே இந்தக் கோடாரிக்குப் பலியிடுகிறேன்! இல்லையேல், இந்தக் கோடாரி உன் மார்பிலே பாய்ந்து இதய இரத்தத்தைக் குடிக்கும் _ தெரியுமா?
மீசை உள்ளவனே, வாடா என்னோடு! காட்டுகிறேன், உன் மகளின் கள்ளக் காதலனை! என்று நந்தகன் துடை தட்டிக் கூறினான்.
குன்றின் அடியிலே தேடிவிட்டு இவர்கள் ஆற்றங்கரைக்கு ஓடினால் அவரைப் பார்த்து விடுவார்களே! படகில் செல்லும் அவரைத் துரத்திச் சென்று கொன்றுவிட்டால்… அவளது இதயச் சுவர்கள் கிடுகிடுவென்று ஆடின! அந்தப் பெண்ணின் உள்ளத்திலே, திடீரென்று ஒரு யோசனை எழுந்தது!
ஆமாம்! அதுதான் சரி! சிறிது நேரம் இவர்களை ஏமாற்றினால், அதற்குள் அவர் அக்கரையை அடைந்துவிடுவார்! என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு, மரங்களின் இருண்ட நிழலில் ஒளிந்து ஒளிந்து குன்றை நோக்கி ஓடினாள்.
அதோ பார்! தலைப் பாகையோடும் உடலில் கருப்புப் பேர்வையோடும் நிற்கிறானே, அவனோடுதான் உன் பத்தினி மகள் பேசிக் கொண்டிருந்தாள்! என்று நந்தகன், பாறை மீது நின்றிருந்த ஓர் உருவத்தைச் சுட்டிக் காட்டினான்.
மத்னிமாலின் உள்ளம் எரிமலையாயிற்று! இனி அவன் தப்ப முடியாது! என்று பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டே கோடாரியை ஓங்கியபடி, அந்த உருவத்தை நோக்கி ஓடினான்!
தந்தை நந்தகனும் ஓடி வருவதைக் கண்டதும், பானு பாறையை விட்டுக் கீழே குதித்து ஓடினாள். அவளைத் துரத்திக் கொண்டு, அவர்கள் சென்றார்கள்.
மகளையே எதிரி என்று எண்ணிக் கொண்டு, பின்னால் ஓடிவரும் தந்தையை நினைத்து அவள் சிரித்தாள்! அவளது கால்களின் வேகத்தைப் போலவே, நேரமும் ஓடிக்கொண்டு இருந்தது. இந்நேரம் அவர் அக்கரைக்குச் சென்று விட்டிருப்பாரா? என்று எண்ணிப் பார்த்தது, அவளது காதல் உள்ளம்.
மூன்று நிழல்கள் வேகவேகமாகக் குன்றைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்தன. சந்திரபானுவுக்குக் கால்கள் ஓய்ந்துவிட்டன! பார்வை மங்கியது! ஆனால் மனம் மட்டும்… விஷ்ணு! விஷ்ணு! மகா விஷ்ணு! என்று பஜித்துக் கொண்டே இருந்தது.
முதுகிலே கோடரியின் அடிபட்டதும், அய்யோ! என்று அலறிக் கொண்டே, தரையில் குப்புற விழுந்தாள். விழுந்தவளின் உடலில் நுழைந்த கோடரியை, மத்னிமால் வெளியே இழுத்தான். பாதகன் செத்துவிட்டான்! என்று உதடுகளைக் கடித்துக் கொண்டே அவன் கூறினான்.
யார் இவன்? என்று நந்தகன் கேட்டதும், மத்னிமால், செத்துக்கிடந்த உருவத்தின் முகத்தைத் திருப்பினான்.
அய்யோ! சந்திரபானு! என் மகளே! உன்னையா கொன்றுவிட்டேன்! சந்திரபானு! சந்திரபானு! என்று அக்கிழவன் கதறிக் கொண்டே தரையில் சாய்ந்தான். ஆனால் அவன் குரல் மட்டும் குன்றில் பட்டு, சந்திரபானு! சந்திரபானு! என்று எதிரொலித்துக் கொண்டிருந்தது!
நன்றி: முரசொலி பொங்கல் மலர் 1970