Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை

 

இந்தியாவில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை தீராத பிரச்சினையாகி அதிகரித்துக் கொண்டே செல்வதாக அய்.நா. பெண்கள் அமைப்பின் பிரதிநிதி ரெபக்கா ரிச்மென் தாவாரெஸ் கூறியுள்ளார்.

இந்தியாவில் ஆண், பெண் சமமாகக் கருதப்படுவதில்லை. பெண் சிசுக்களைக் கருவிலேயே அழிப்பது கடுமையான சட்டத்தின் மூலம் குறைக்கப்பட்டிருப்பினும் குழந்தைத் திருமணங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் சமூக அமைப்பானது ஆணைவிட பெண்ணைத் தாழ்ந்த நிலையிலேயே பார்க்கிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ளதால் பெண்கள் பிறரைச் சார்ந்து வாழவேண்டிய நிலையில் உள்ளனர்.

வரதட்சணைக் கொடுமையாலும், குடிப் பழக்கத்துக்கு ஆளான ஆண்களாலும் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது. கிராமப்புறப் பெண்களின் நிலையோ, வீட்டு வேலை, விவசாயம் போன்றவற்றில் ஆண்களுடன் பங்கெடுக்கும் நிலையில் உள்ளது.

வெளி உலகமே தெரியாமல் வாழும் கிராமப்புறப் பெண்களின் சுகாதார நிலையும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. போதுமான தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதி இன்மையால் பேறுகாலத்தின்போது பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், விதவைகள் மற்றும் நோயாளிகள் மற்றும் தனியாக இருக்கும் பெண்கள் வறுமையில் இருப்பதால் இவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. இப்பெண்களுக்குப் போதிய பாதுகாப்புக் கொடுக்கும் செயல்திட்டங்கள் அரசிடம் எதுவும் இல்லை. இதற்கான தனித் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். தேசிய அளவில் 10 சதவிகிதப் பெண்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். இந்நிலை மாறி சட்டமியற்றும் இடங்களில் பெண்கள் வரவேண்டும் என்று அய்.நா. பெண்கள் அமைப்பு கூறியுள்ளது.