– கவிஞர் கலி.பூங்குன்றன்
1. பி.ஜே.பி.யின் நிலைப்பாடு என்ன? நடக்கவிருக்கும் தேர்தலில் மதச்சார்பின்மையில் அதன் தற்போதைய முடிவு யாது?
சில எடுத்துக்காட்டுகள் மூலம் இதற்குப் பதில் சொல்லிவிடலாம்.
RAM TEMPLE, UNIFORM CIVIL CODE NON NEGOTIABLE – B.J.P.
The BJP has made it known that its core issues —abrogation of Article 370, construction of a Ram temple and enforcement of a uniform civil code — will be non-negotiable in its manifesto for the general election.
இராமன் கோவில் கட்டுதல், நாடு முழுவதும் பொதுவான சிவில் சட்டம், ஜம்மு_காஷ்மீர் மாநிலத்திற்கென்றுள்ள பிரத்தியேக சலுகைகள் அளிக்கப்படும் 370ஆவது பிரிவு நீக்கம் இவற்றில் பி.ஜே.பி. உறுதியாக இருக்கும்; தேர்தல் அறிக்கையிலும் இடம் பெறும்; இவற்றில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பி.ஜே.பி.க்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறினார். (ஆதாரம்: தி. இந்து 19.10.2013)
முரளி மனோகர் ஜோஷி இப்படிக் கூறுகிறார் என்றால் பி.ஜே.பி.யின் மாநிலங்களவைத் தலைவரான அருண்ஜெட்லி என்ன கூறுகிறார்?
Question: There was no reference to the Ram temple in Modi’s speech. Have you kept Ram Mandir out of your agenda this time?
Answer: No, no. We will announce our manifesto. You will have to wait for it to find out what is in the agenda and what is not. Our commitment to our basic issues is always there. Whether each of them becomes an election issue or not is a separate subject. Mandir has always been in our agenda. Wait for our manifesto.
இதன் தமிழாக்கம் வருமாறு:
கேள்வி: மோடியின் உரைகளில் ராமன் கோவில்பற்றி எதுவும் இடம்பெறுவதில்லையே, ஏன்?
அருண்ஜெட்லி (மாநிலங்களவை பி.ஜே.பி. தலைவர்) பதில்: தேர்தல் அறிக்கையில், ராமன் கோவில் கட்டப்படுவது குறித்த அறிவிப்பு வெளிவரும். எங்கள் அஜண்டாவில் என்ன இருக்கிறது என்பதைத் தேர்தல் அறிக்கை வெளிவரும்வரை பொறுத்திருக்க வேண்டும்; எங்களுடைய அடிப்படை நோக்கம், குறிப்பாக ராமன் கோவில் கட்டுவது என்பதில் மாற்றம் இல்லை. எங்கள் தேர்தல் அறிக்கையில் காணப் போகிறீர்கள். (Economic Times, dated 22.1.2014)
பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளரான நரேந்திர மோடி என்ன சொல்லுகிறார்?
ராமர் கோவில் கட்டுவது குறித்து உறுதியளிக்கும் கட்சிக்கே விசுவ ஹிந்து பரிஷத் ஆதரவு அளிக்கும். ராமர் கோவில் கட்டுவது குறித்து பி.ஜே.பி. தேர்தல் அறிக்கையில் வெளியிட வேண்டும். எங்கள் ஆதரவை விரும்பினால் இந்த விஷயத்தில் மோடி தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும். தேர்தல் பிரச்சாரங்களில் ராமர் கோவில் குறித்த விவரங்களை மோடி பேசாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது –
பிரவீண் தொகாடியா, தலைவர், விசுவ ஹிந்து பரிஷத் செய்தியாளர்களிடம் பேட்டியில் (‘FREE PRESS JOURNAL’ 20.2.2014)
நரேந்திர மோடி வாய் திறந்தார்
இதற்குப் பதில் கூறும் வகையில் நரேந்திர மோடி வாரணாசியில் (21.2.2014) பேசினார்.
மத்தியில் சரியான அரசு அமையாததற்கு உத்தரப்பிரதேச மக்களின் பங்களிப்பில் ஏற்பட்ட குறைதான் காரணம். (உ.பி.யில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 80) நீங்கள் ஒருநாள் சரியான அரசைத் தேர்வு செய்வீர்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அப்படித் தேர்வு செய்வீர்கள் என்றால் அன்றுதான் ராமராஜ்யம் நடைமுறைக்கு வரும் என்றார் மோடி.
– (‘Economic Times’ 22.2.2014)
இதன்மூலம் பி.ஜே.பி. தன் ஹிந்துத்துவா வெறியில் திட்டவட்டமாக ஒளிவு மறைவின்றி இருக்கிறது என்பது வெளிப்படை.
(2) இந்த நிலையில் ம.தி.மு.க. எடுத்துள்ள நிலைப்பாடு சரியா?
ம.தி.மு.க. தனது 2014 _ மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் நான்காவது அம்சமாக பக்கம் 15இல் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்தியத் துணைக் கண்டத்தில் சிறுபான்மை மக்களின் நலன்கள் உரிமைகளைப் பாதுகாக்கவும். அனைத்துச் சமயங்களுக்கும் சம உரிமை வழங்கும் விதத்தில் மதச்சார்பின்மை நிலைநாட்டப்படவும், சமய நல்லிணக்கம் தழைக்கவும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா வகுத்த திராவிட இயக்க இலட்சியப் பாதையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியுடன் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையில் மட்டுமா? தோழர் வை.கோ. அவர்கள் போட்டியிடப்போகும் விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் சட்டப் பேரவைத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் என்ன பேசியுள்ளார்?
தற்போது பா.ஜ.க. கூட்டணி புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணம் தமிழ் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
நாட்டை வழிநடத்தும் சுயநலமற்ற, தொலைநோக்குச் சிந்தனை உள்ள தலைவராக நரேந்திர மோடி கருதப்படுகிறார்.
…… நரேந்திர மோடியும் மதச்சார்பற்ற கொள்கையுடன் மாநில சுயசார்பைக் காத்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைக் காப்பார்.
குஜராத் வதோரா நகரில் அமைதிப் பேரணி நிறைவில் எனது பேச்சை அப்போதும் முதல்வராக இருந்த மோடிதான் மொழிபெயர்த்தார். ஆகவே தமிழக, தமிழர்நலன் காக்கப்பட பா.ஜ.க. கூட்டணியை ஆதரிக்க வேண்டும்
(மாலை முரசு 20.3.2014 பக்கம் 3) என்று பேசியிருப்பவர் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ..
பி.ஜே.பி தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷியும், பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திர மோடியும் மிகவும் வெளிப்படையாக ராமன் கோவில் கட்டுதல், ராம ராஜ்ஜியம் உருவாக்குதல் உள்ளிட்ட ஹிந்துத்துவா கொள்கையில் மிகவும் வெளிப்படையாக இருக்கும் நிலையில் வைகோ அவர்கள் இப்படி எல்லாம் கூறுவது யாரை ஏமாற்ற? சிறுபான்மை மக்களும், வாக்காளர் பெருமக்களும், வைகோ அவர்கள் சுட்டிக் காட்டும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா இலட்சியத்தை ஏற்றவர்களும் பரம முட்டாள்கள் என்று வைகோ நினைக்கிறாரா?
இதே வைகோ பாபர் மசூதி இடிக்கப் பட்டபோது எப்படி முழங்கினார்?
பாபர் மசூதியை இடித்து, தகர்த்துத் தரை மட்டமாக்கிய செயல் இந்தியாவின் மதச்சார்பின்மையின் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலாகும். பாரதீய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். இயக்கம், விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் அமைப்பு இவை அனைத்தையும் பரிபாலனம் செய்யும் சங் பரிவார் எனும் மதவெறிக் கூடாரத்தின் உத்தரவுகளை அமல்படுத்தக் கூடிய குற்றவாளிகள் என்று எல்.கே.அத்வானியையும், முரளி மனோகர் ஜோஷியையும் குற்றம் சாட்டுகிறேன்.
பாபர் மசூதியின் மூன்று விதானங்களும் உடைக்கப்பட்டபோது எழுந்த சத்தம், காந்தியடிகளின் மெலிந்த தேகத்தில் பாய்ந்த மூன்று தோட்டாக்களின் ஓசையை நினைவூட்டியது (தினகரன் 25.12.1992) என்று எழுப்பிய வைகோவின் அந்த ஓசை வைகோவைப் பார்த்து இன்று கேலியாகச் சிரிக்காதா?
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது _ இப்போது வைகோ தூக்கிச் சுமக்கும் நல்லிணக்கக் கதாநாயகன் கூறியது என்ன?
இந்துக்கள் அலிகள் அல்ல; ஆண்மை உள்ளவர்கள் என்று நிரூபித்துவிட்டனர் என்று சொல்லவில்லையா?
காந்தியாரின் மரணவோலம் நரேந்திர மோடி மூலம் தென்றலிசையாகத் தித்திக்கிறதா?
மனிதனுக்கு எந்த நோயும் வந்தாலும் வரலாம் ஆனால் இந்தப் பதவி வெறி நோய் மட்டும் வரவே கூடாது. இந்த நோய்க்குப் பலியாகலாமா? இதில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா வகுத்த திராவிட இயக்க இலட்சியப் பாதையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியுடன் செல்லுவதாக தேர்தல் அறிக்கையில் வாசகங்கள் வேறு.
தயவுசெய்து மறைந்த தலைவர்களை அவமரியாதை செய்ய வேண்டாம் என்பதுதான் நமது அன்பான வேண்டுகோள்! தே.மு.தி.க.வானாலும் சரி, பா.ம.க.வானாலும் சரி… மோடி மதச்சார்பின்மையைக் காப்பார் என்று இவர்கள் நம்புவார்களேயானால் வைகோவுக்குச் சொன்ன பதில்தான் இவர்களுக்கும்.
இதே விஜயகாந்த் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது சொன்னது என்ன?
பாபர் மசூதியை இடித்தது காட்டுமிராண்டித்தனம், அநாகரிகச் செயல். கலைஞர் சொன்னது மாதிரி.. ஆதிகாலத்துக்குப் போய்விட்டது போல இருக்கு
(ஆதாரம்: சினிமா இதழ் ஹீரோ _ 1993 ஜனவரி இதழ்)
மீனவர் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை ஆகியவற்றிற்குத் தீர்வு காணவும் பா.ஜ.க. உறுதி அளித்துள்ளது என்கிறார் பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
(சென்னை, தினமணி, 21.3.2014 பக்கம் 5)
பி.ஜே.பி தலைமையகமான கமலாலயத்தில் மார்ச் 23ஆம் தேதி பி.ஜே.பி.யின் மூத்த தலைவர்களுள் ஒருவரான வெங்கையா நாயுடு இவர்களின் மூக்கை எல்லாம் நறுக்கென்றே வெட்டிவிட்டார். இலங்கையின் இறையாண்மைக்கு விரோதமாக தனி ஈழம் என்பதை பா.ஜ.க. ஏற்றுக் கொள்ளாது (தினத்தந்தி 24.3.2014 பக்கம் 8) என்று கூறிவிட்டாரே. என்ன முடிவு எடுக்கப் போவதாக உத்தேசம்.
வெகு நாட்களுக்கு முன்புகூடப் போகவேண்டாம். மத்தியப் பிரதேசம் சாஞ்சியில் புத்தப் பல்கலைக்கழகத் திறப்பு விழாவுக்கு ரத்தக்கறையோடு வந்த ராஜபக்சேவுக்குச் சிவப்புக் கம்பளம் கொடுத்து வரவேற்றது பி.ஜே.பி. ஆளும் மத்தியப் பிரதேச அரசுதான் என்பதை மறந்திட வேண்டாம்.
வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது இலங்கை அரசுக்கு இராணுவ உதவிகளைச் செய்யவில்லையா? இலங்கை இராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கவில்லையா?
2000ஆம் ஆண்டில் இலங்கைக்குச் சுகன்யா என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பலை வழங்கியது அன்றைய வாஜ்பேயி அரசு என்பதை வசதியாக மறந்துவிடலாமா? வெளிநாட்டுக் கொள்கையைப் பொறுத்தவரை காங்கிரசுக்கும் பி.ஜே.பி.க்கும் என்ன வேறுபாடு? விரல்நீட்டிச் சொல்ல முடியுமா?
(3) பி.ஜே.பி. தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்குவதற்காக வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கினாரே திருவாளர் தமிழருவி மணியன். அவரின் நிலைப்பாடு என்ன?
சிறுபான்மையோர் நம்பிக்கையை முழுமையாகப் பெறவேண்டும் என்றால் மோடியும், பா.ஜ.க.வும் தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். அயோத்தியைக் குறிவைத்து அரசியல் செய்யக் கூடாது. பாபர் மசூதியைப் பொறுத்தவரை உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட வேண்டும். அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் என்ற கோஷத்தைக் கைவிடச் செய்தும், காஷ்மீருக்கு விசேச சலுகைகளை அளிக்கும் அரசியல் சட்டம் 370 பிரிவின்மீது கை வைக்கக் கூடாது. இதுபோன்ற சிறுபான்மையோரின் உணர்வை மதித்து நடந்தால் காங்கிரசின் போலி மதச்சார்பின்மை கோஷம் எடுபடாது. ஆனால், இப்படி நடக்க ஆர்.எஸ்.எஸ். விட்டுவைக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. – தமிழருவி மணியன், கல்கி (29.9.2013 பக்கம் 6)
ராமர் கோவில் பிரச்சினை, அனைவருக்கும் பொதுவான சிவில் கோடு, காஷ்மீருக்கென உள்ள அரசியல் சட்டம் 370இன் மீது கை வைக்கக் கூடாது _ என்று (கல்கியில் 29.9.2013) வரிந்து வரிந்து எழுதிய திருவாளர் தமிழருவி மணியன் அதில் உறுதியாக நின்றால் அதற்குப் பெயர்தான் அறிவு நாணயம் என்பது.
இந்த மூன்றிலும் பி.ஜே.பி. உறுதியாக இருக்கும் _ தேர்தல் அறிக்கையிலும் இடம் பெறும் என்று தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷியும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜெட்லியும் கறாராகக் கூறிவிட்டார்கள். பெரும்பான்மையைத் தாருங்கள் _ ராமராஜ்ஜியத்தை உண்டாக்குகிறேன் என்று இவர்களின் அபிமான கதாநாயகர் நரேந்திர மோடியும் வாரணாசியில் (21.2.2014) மனந்திறந்துவிட்டார்.
இதற்குப் பிறகு இந்த வகையறாக்கள் வாயைத் திறக்கலாமா?
மதுரை மீனாட்சியிடம் நான் வைத்த பிரார்த்தனை வென்றுள்ளது என்று (மாலைமலர் 21.3.2014 பக்கம் 2) மறுபடியும் களத்தில் குதிக்கிறாரே, இது அநாகரிகம் அல்லவா?
மதுரை மீனாட்சி கிருபையால்தான் எதுவும் நடக்குமா? இதற்குப் பெயர்தான் அறிவார்ந்த அரசியலா? விமர்சனம் என்பது இதைச் சார்ந்ததா?
பாமரத்தனமான நம்பிக்கைவாதிகள் விமர்சனக் கர்த்தாக்கள், ஆனால் அதன் கதி இதுதான் என்பது தெரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்றே!
இப்படி இந்த மூன்று பிரச்சினைகளில் சமாதானத்துக்கே (NON-NEGOTIABLE) இடமில்லை என்று பி.ஜே.பி. தரப்பில் அறுதியிட்டுக் கறாராகச் சொன்ன பிறகு இவர் என்ன செய்ய வேண்டும்? எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டாமா?
களம் இறங்க வேண்டாமா? உண்மையாகவே இவர்களுக்கு மதச்சார்பின்மைக் கொள்கையில் நம்பிக்கை இருந்தால் அறிவு நாணயத்தோடு நடந்து கொள்ள வேண்டாமா? முன்பின் நடந்ததெல்லாம் மக்களுக்கு எங்கே தெரியப்போகிறது என்ற தப்புக் கணக்கா?
அப்படி அறிவு நாணயத்தோடு இவர்கள் நடந்துகொள்ளாத பட்சத்தில் இவர்கள் மீது விதவிதமான வண்ணத்தில் சந்தேகக் கறைகள் படியாதா? அது ஒருபுறம் இருக்கட்டும்!
வெளிப்படையாக தங்கள் ஹிந்துத்துவா உணர்வை வெளிப்படுத்திக் கொண்டவர்களுக்கு வெண்சாமரம் வீசுபவர்கள் _ அந்தக் கூட்டத்தை விட ஆபத்தானவர்கள் _ மாற்றுடையில் திரியும் மதவெறியர்கள் – சிறுபான்மையினரை நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் அரசியல்வாதிகள் என்று அடையாளம் காண வேண்டாமா?