1 கலவரம் 2 படங்கள் 12 ஆண்டுகள்

மார்ச் 16-31

கடந்த நூற்றாண்டின் உலக வரலாற்றில் எத்தனையோ முக்கிய நிகழ்வுகளுக்கு ஒருசில படங்களே அடையாளமாகத் திகழ்கின்றன. அந்தப் படங்கள் உலகம் முழுக்க அந்நிகழ்வின் தீவிரத்தை எடுத்துப் பேச வைத்தன.

வியட்நாம் போரில் நாபாம் குண்டுவீச்சின் கொடுமையை உணர்த்திய ஓடிவரும் ஒரு நிர்வாணச் சிறுமியின் படம், சூடான் பஞ்சத்தைப் புரியவைத்த செத்துக் கொண்டிருந்த குழந்தையைத் தின்னத் தயாராக இருந்த வல்லூறின் படம், ஆப்கன் மீதான போர்களினால் இடம் பெயர்ந்த ஒரு பெண்ணின் மிரட்சியைக் கண்கள் மூலமே பதிய வைத்த படம் என்று பெரிய பட்டியலே உண்டு.

 

அப்படியொரு முக்கிய நிகழ்வாக, இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், மதவெறியின் கோரத்தால் ஒரு கலவரம் அரங்கேற்றப்பட்டது. இந்தியாவின் மேற்குப் பகுதியான குஜராத்தில் 2002ஆம் ஆண்டு அன்றைய மாநில அரசின் ஒத்துழைப்போடு நிகழ்த்தப்பட்ட அந்த மாபெரும் வன்முறையில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாக்கப்பட்டன. லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாகத் துரத்தப்பட்டனர். உயிருடன் கொளுத்துங்கள்; கொல்லுங்கள்; வெறியாட்டம் நடத்துங்கள்; மூன்று நாள் காவல்துறை உங்களை ஒன்றும் செய்யாது என்று காவிகள் கொடுத்த சமிக்ஞை பல மிருகங்களுக்கு வாய்ப்பாக அமைந்தது. வாய்ப்புகளே மிருகங்களை வெளிப்பட வைக்கிறது என்ற வகையில் சில மனிதர்களிடமிருந்த மிருகமும் வெளிப்பட்டது. காவல்துறை கையைக் கட்டியபடி வேடிக்கை பார்த்தது.

எனினும், ஊடகங்களில் செய்திகளும் சில படங்களும் வெளியாயின. அவற்றில் இரண்டு படங்கள் குஜராத் வன்முறை வெறியாட்டத்தின் இரண்டு உச்சங்களைக் காட்டின. அவையிரண்டும் குஜராத் கலவரத்தின் அடையாளங்களாக ஆயின. இரண்டு படங்களில் இரண்டு முகங்கள்; இரண்டு முகங்களிலும் இருவேறு உணர்ச்சிகள்!

உச்சத்திலிருந்த கொலை வெறியுடன் ஒரு முகம். அச்சத்திலிருந்து கைகூப்பியபடி மற்றொரு முகம். ஒரு கலவரத்தின் இரு எல்லைகளையும் பதிவு செய்த இரண்டு முகங்களின் படங்கள். இருவேறு புகைப்படக்காரர்களால் எடுக்கப்பட்டவை.

கலவரத்தின் முதல் நாள்: பிப்ரவரி 28, 2002, ஷா நகர், அகமதாபாத்

நெற்றியில் கட்டிய காவி ரிப்பனுடன் இறுக்கி மூடிய இடது கையையும், இரும்புத் தடியேந்திய வலது கையையும் விரித்துத் தூக்கியபடி முன்னே வருகிறார் ஒருவர். மடித்து விடப்பட்ட முழுக்கை கருப்பு டிசர்ட்டு, அதை உள் அமுக்கி இன் செய்து பெல்டு கட்டி நிறுத்தப்பட்டுள்ள காக்கி கால்சட்டை. இவை எல்லாவற்றையும் தாண்டி, நம் கவனத்தை ஈர்ப்பது வாய்பிளந்து வெறிக் கூச்சலிடும் அந்த முகமும் அந்தக் கண்களும்!

அந்த வெறிக்கூச்சலில் அடங்கியிருப்பவை இஸ்லாமியருக்கெதிரான வெறுப்பு வாசகங்கள்! வாசகங்கள் மட்டுமல்ல, செயல்களும்! பின்னணியில் கொழுந்துவிட்டெரியும் நெருப்பு மட்டுமல்ல… எண்ணற்ற இஸ்லாமியர் கடைகளைக் கொளுத்திவிட்டு வந்த நெருப்பின் மீதம் இவரால் வழிநடத்தப்பட்ட கும்பலின் கைகளில் பந்தமாக இருக்கிறது. அகமதாபாத்தின் ஷாநகரில் வசிக்கும் இஸ்லாமியர் வீடுகளுக்குத் தீயிட்டவையும் அந்தப் பந்தங்கள்தான்.

அசோக் மோச்சி _ இதுதான் அந்த நபரின் பெயர். பஜ்ரங் தளத் தொண்டர். பா.ஜ.க., விஷ்வ ஹிந்துபரிசத் போன்ற அமைப்புகளில் உள்ளவர்களோடு நெருக்கம். குஜராத் கலவரத்தின் அடையாளங்களுள் ஒன்றாக அமைந்துவிட்ட இந்தப் படத்தை எடுத்தவர், அப்போது ஏ.எஃப்.பி என்ற பிரெஞ்சு செய்தி நிறுவனத்தில் பணியாற்றி தற்போது மும்பை மிர்ரரில் பணியாற்றும் செபாஸ்டின் டிசோசா.

2002 பிப்ரவரி 27 அன்று கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் தீ விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த கரசேவகர்கள் முஸ்லிம் களால் எரித்துக் கொல்லப் பட்டதாகத் தகவல் வந்தது. (பின்னாளில் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களும் அந்தப் பெட்டியின் உள்ளிருந்து  தான் தீ பரவியதற்கான வாய்ப்பிருப்பதாக அறிக்கைகள் மூலம் தெளிவுபடுத்தின.) தீவிரவாதிகள் இச்செயலைச் செய்திருப்பார்கள் என்றார் மோடி. மறுநாள் காலை முதல் களம் இறங்கினார்கள் காவிகள். அகமதாபாத்தில் கலவரம் தொடங்கியது. கார்களைக் கொளுத்திக் கொண்டும், எதிர்ப்பட்டோரைக் குத்திக் கொண்டும் ஒரு கும்பல் வந்து கொண்டிருந்தது. தொலைவில் வந்த அந்தக் கும்பலை ஒருவன் வழிநடத்திக் கொண்டு வந்தான். நான் வந்த வாகனத்தின் ஓட்டுநர் பயந்துவிட்டான். வழியில் இருந்த தடுப்புகளில் ஏறித் தாண்டி வந்த அந்த மனிதனைத் தொலைவில் நின்றபடி 300 மி.மீ. லென்சில் சில படங்கள் எடுத்தேன். அப்போது அவன் யாரென்று தெரியாது எனக்கு!

உங்களை நோக்கி வரும் அந்த நபர், உங்கள் கேமராவையும் உங்களையும் பார்த்து விட்டாரா? என்ற கேள்விக்கு, இல்லை நான் தொலைவில் நின்றபடி படம் எடுத்துக் கொண்டிருந்தேன். அவன் முழக்கமிட்டபடி முன்னேறிக் கொண்டிருந்தான் என்கிறார் டிசோசா.

யாரும் சாட்சி சொல்ல வராததால் 2002-இல் அசோக் மோச்சி மீது எந்த வழக்கும் தொடரப்படவில்லை. தொடர்ந்து பலரின் வற்புறுத்தலால், பிரிவு 435 மற்றும் 436-ன் படி 2007-_ல் தொடங்கிய வழக்கும் சாட்சி இல்லாததால் 2008-_ல் மூடப்பட்டு அவன் விடுதலை செய்யப்பட்டான். பாதிக்கப்பட்ட வீடுகளில் ஒன்றின் உரிமையாளரான பெட்டிக் கடைக்காரர் முகமது உசைன் என்பவர் சாட்சியளிக்க வந்தவர்களில் ஒருவர். அவர் சொல்லும்போது, ஒவ்வொரு முறையும் நான் நீதிமன்றத்திற்குச் சென்றேன். எல்லா நேரமும் அங்கே கூச்சலும் குழப்பமும் தான். சாட்சி சொல்வோர் வந்திருந்தாலும், வரவில்லை என்றே சொல்வார்கள்.

2002இ-ல் மோச்சி ஒரு லோக்கல் தண்டல்காரர் போல சிறு சிறு கடைகளிடமிருந்து மாமூல் வசூல் செய்வார். பி.ஜே.பி, வி.ஹெச்.பி, பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் மோச்சியின் வழக்கில் நிறைய உதவினார்கள் என்கிறார்.

எனினும், இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் மோச்சி மீதான வழக்கு மீண்டும் திறக்கப்பட்டு, உயர் நீதிமன்ற விசாரணையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கலவரத்தின் இரண்டாம் நாள்: மார்ச் 1, 2002, பாபு நகர், அகமதாபாத்

அதே கலவரத்தில் இன்னொரு ஒளிப்படச் செய்தியாளர். பெயர் அர்கோ டத்தா, ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பணியாற்றியவர். ராணுவ வாகனத்தில் இருந்தபடி நகரை வலம் வந்து கொண்டிருந்தார். நகர் முழுக்கவும் கலவரக் காடாகியிருந்த சூழலில், அதனைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக அந்த வாகனம் சுற்றிக் கொண்டிருந்தது. கேஸ் சிலிண்டர்கள் வெடிக்கும் சத்தமும், புகையும் சுற்றிச் சுற்றிக் கவனத்தை ஈர்க்கின்றன. இரைந்துகிடந்த கற்களுக்கு மத்தியில் சாலையில் பயணிக்கிறது அந்த வாகனம்.

கூட்டம் கூட்டமாக கையில் ஆயுதங்களுடனும் தீப்பந்தங்களுடனும் ஆங்காங்கே கும்பல்! கண்ணில் படும் இஸ்லாமியர் கடைகளையும், வீடுகளையும் தாக்கியபடியும் கொளுத்தியபடியும் நகர்கிறது. இவ்வளவுக்கும் அது எங்கிருந்தோ வந்த கும்பல் அல்ல. அந்தப் பகுதியைச் சார்ந்ததாகவே தோன்றுகிறது. பலர் தங்கள் வீடுகளிலிருந்து இந்தக் கோரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ராணுவ வாகனம் கடந்து சென்ற ஒரு வீட்டின் வாயிலில் எரிந்து கொண்டிருந்த தீயைச் சுற்றி நின்றுகொண்டிருந்த ஒரு கும்பல் அர்கோ டத்தாவின் கண்ணில் படுகிறது. முதல் மாடியின் பால்கனியில் நின்றபடி கையைக் கூப்பிக் கண்ணீர் வடிக்கும் ஒரு முகத்தைச் சட்சட்டென சில படங்கள் எடுக்கிறார் அவர்.

நீங்கள் அவரைச் சென்று காப்பாற்றுங்கள் என்று கத்துகிறார் அர்கோ. ராணுவத்தின் உதவி கேட்டுக் கைகூப்பிய அந்த நபர் குத்புதின் அன்சாரி. அன்று இராணுவம் அந்த வீட்டிலிருந்தோரைக் காக்கிறது, மறுநாள் அன்சாரியின் அந்தப் படம் பத்திரிகைகளில் வெளிவருகிறது. உலகம் முழுக்கப் பிரபலமாகிறது. குஜராத் கலவரத்தின் அடையாளமாகிறது.

ஆடி முடித்த காவிகள் அழித்து ஓய்ந்தபின் கலவரம் குறைகிறது. முதல்நாள்

கலவரத்திலும், இரண்டாம் நாள் வீடு தீவைப்பிலும் பாதிக்கப்பட்டு, பாதுகாப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்டு குடும்பத்துடன் நிவாரண முகாமில் இருந்த அன்சாரிக்கு இந்தப் படம் குறித்து தெரியாது. ஆனால், அடுத்த ஒரு வாரத்தில் ஒரு வெளிநாட்டுச் செய்தியாளர் அன்சாரியின் படம் வெளியாகியிருந்த ஒரு பத்திரிகையுடன் அன்சாரியைத் தேடிக் கொண்டிருக்கிறார். அன்சாரி யின் வாழ்க்கை மேலும் மாறத் தொடங்குகிறது. அடையாளமற்று இருந்த அன்சாரி இப்போது குஜராத் கலவரத்தின் அடையாளம். இதனால் பணியிடங்களிலிருந்து விலக்கப்படுவதும், தானாக விலகி ஓடுவதும், அடையாளம் காணும் பத்திரிகையாளர்களால் தொடர்ந்து தேடப்படுவதுமாக குஜராத்திலிருந்து மகாராஷ்டிராவின் மாலேகான், கொல்கத்தா, குஜராத்தின் பிற பகுதிகள் என அலைந்து திரிய வேண்டிய நிலைக்கு ஆளாகிறார் அன்சாரி.

இதற்கிடையில் குத்புதின் அன்சாரியைப் பிடித்துவந்து குஜராத் அரசுக்கு ஆதரவாகக் கருத்துச் சொல்லும் படியும், தற்போது தன் வாழ்க்கை சிறப்பாக இருப்பதாக பத்திரிகைகளில் தெரிவிக்கும்படியும் நெருக்கடிகள் வருகின்றன. அதற்கென உரிய கூலியைத் தரவும் தயாராக இருக்கிறார்கள். எனினும், அன்சாரி அவற்றை மறுக்கிறார். 29 வயதில் கண்ணீருடன் கைகூப்பி மன்றாடிய ஓர் எளிய தையல் கலைஞரான அன்சாரி, பிறகு குஜராத் திரும்பி அதே பழைய பகுதியில் குடியேறுகிறார். வெளியான அந்தப் படத்தால் பிரச்சினைகளைச் சந்தித்திருந்தார் அன்சாரி. எனினும், பத்து ஆண்டு களுக்குப் பிறகு அதை எடுத்த ஒளிப்படச் செய்தியாளர் அர்கோ டத்தா தன்னைச் சந்தித்தபோது அதற்காக அவர் கோபிக்கவில்லை. உங்கள் பணியை நீங்கள் செய்தீர்கள். உண்மையில் உங்களால்தான் பிழைத்தோம். அதன் பின் நடந்தவற்றில் சில மனிதநேயர்களையும் சந்தித்தேன். சில பிரச்சினையையும் எதிர்கொண்டேன் என்பது உண்மைதான் என்றார்.

ஏன் அப்பா அப்போது அழுதாய்? என்று இப்போது அந்தப் படத்தைப் பார்த்துக் கேட்கும் தன் குழந்தைகளிடம் இந்துக்கள் நம்மைத் தாக்க வந்தார்கள் என்று பதில் சொல்லவில்லை அன்சாரி. நாளை அவர்களுக்கே அது தெரியவரலாம். எனினும், அவர்களிடம் வெறுப்பை வளர்க்கத் தான் விரும்பவில்லை என்கிறார்.

காலம் உருண்டோடுகிறது. குஜராத் வன்முறை நடந்து 12 ஆண்டுகள் கழித்து, கேரளாவின் கண்ணூர் அருகில் ஒரு நிகழ்ச்சி. அதில் சிறப்பு விருந்தினர்கள் இருவர். ஒருவர் உருவிய ஆயுதத்தோடு காவியும், தாடியுமாக படங்களில் தோன்றிய அசோக் மோச்சி. இப்போது தாடி மீசை மழித்து, முழுக்கைச் சட்டையில் பாந்தமாகத் தோன்றுகிறார். மற்றொருவர் குத்புதின் அன்சாரி.

அசோக் மோச்சி தனது கையில் இருந்த பாட்டிலிலிருந்து சிறிது தண்ணீரை குத்புதீன் அன்சாரிக்கு வழங்குகிறார். தண்ணீரைக் குடிக்கும்போதே அன்சாரி தன் கையில் இருந்த பன்னீர்ப்பூவை மோச்சியிடம் கொடுக்கிறார். குஜராத்தில் இனப்படுகொலை அரங்கேறிய பூமியில் இருந்து வந்த இவர்கள் இருவரும் ஒரு தாய் மக்களாக -_- சகோதரர்களாக அன்பைப் பரிமாறிக் கொண்டபோது அரங்கில் கூடியிருந்தவர்கள் உணர்ச்சிப் பெருக்குடன் கரகோஷம் எழுப்பினர்.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளிப்பரம்பில் 18 கலை – இலக்கிய அமைப்புகள் கூட்டாக குஜராத் இனப்படுகொலையின் 12 ஆண்டு என்ற தலைப்பில் 2014 மார்ச் 3 அன்று கருத்தரங்கு ஒன்றை நடத்தின. இக்கருத்தரங்கில்தான் இவர்கள் இருவரும் சந்தித்த நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நான் வந்திருப்பதை அறிந்து ஏராளமானோர் என்னைப் பார்க்க வந்திருக்கிறீர்கள். யார் இந்து, யார் முஸ்லிம் என்று என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

கேரள மக்களிடம் கொண்டுள்ள அன்பினால்தான் இந்த மேடைக்கு வெள்ளை முண்டு உடுத்தி வந்திருக்கிறேன். குஜராத்திலிருந்து ஓடியபோது மேற்குவங்கத்திலும் என்மீது அன்பு காட்டப்பட்டது. கேரளத்தின் இந்தத் தொடக்கம் இந்தியாவில் மாற்றத்திற்கான கதவைத் திறக்கட்டும். குஜராத்தை இப்போது அடக்கிஒடுக்கி வைத்திருக்கிறார்கள். இப்படிச் செய்திருப்பது நரேந்திர மோடி டில்லி செல்வதற்காகத்தான். அன்று தெருவில் கொலைக் கூச்சலிட்ட அசோக் மோச்சி மீது எனக்கு இதயம் நிறைந்த அன்பு மட்டுமே உள்ளது.

அவர்கள் இவரைப் பயன்படுத்தினார்கள் என்று கூறிய அன்சாரி, முதலில், மனிதன் என்ற கடமையை நிறைவேற்றுங்கள். அதன்பின்னர் கீதையையும் குர்ஆனையும் திறங்கள் என்ற கவிதை வரிகளை உச்சரித்து தனது உருக்கமான பேச்சை முடித்தார்.

மோச்சி பேசத் தொடங்கியபோது, மோடியின் குஜராத்தில் இருந்து அல்ல, மகாத்மா காந்தியின் குஜராத்தில் இருந்துதான் நான் வருகிறேன். உங்களுடன் பேசுவதற்கு எனக்கு மொழி தெரியாது. ஆனால், மனிதநேயத்தின் மொழிக்கு சுருதி தேவையில்லை. குஜராத்தில் வளர்ச்சி, வளர்ச்சி என்று டமாரம் அடிக்கப்படுகிறது. ஆனால் அப்படிப்பட்ட வளர்ச்சி எதுவும் இல்லை என்பதற்கு நான் இப்போதும் தெருவில் செருப்புத் தைப்பவனாக வாழ்ந்து கொண்டிருப்பதே எடுத்துக்காட்டாகும். பணம் இல்லாததால் திருமணம் கூட செய்யவில்லை என்று மோச்சி கூறினார்.

நான் குத்புதின் அன்சாரி என்ற நூல் வெளியிடப்பட்டது. ஹை ப்ரீத் ஜஹான் கீ ரித் சதா என்ற பாடலை இருவரும் இணைந்து பாடினார்கள். அன்பே பண்பாடாக இருக்கும் இடத்தில் என்ற அந்தப் பாடலின் பொருள் அங்கு இருந்தவர்களுக்குப் புரியவில்லையென்றாலும், இவர்கள் இருவரின் இணைப்பும் பூங்கொத்தைப் பரிமாறிக்கொண்ட நிகழ்வும் நம்பிக்கை ஒளிக்கீற்றைக் காட்டின.

வெறியையும், அச்சத்தையும் வெளிப்படுத்திய இவ்விரு முகங்களும் அன்பை வெளிப்படுத்திய ஒரு படத்தைக் கண்டுவிட்டோம். ஆனால், இந்த இரு முகங்களையும் தாண்டி இன்னொரு முகம் இருக்கிறது. அது அந்தக் கலவரத்திற்குக் காரணமான முகம். அந்த முகத்தில் அமைதியையும், அன்பையும் நம்மால் ஒருபோதும் பார்க்கமுடியவில்லை. அது முகமூடி அணிந்துகொண்டு இந்தியாவின் ஒற்றை முகமாகத் துடித்துக் கொண்டு, துருத்திக் கொண்டு நிற்கிறது. அந்த முகம் இதே போன்ற வெறியும், அச்சமும் கொண்ட கோடிக்கணக்கான  முகங்களை உருவாக்கக் கூடியது என்ற எச்சரிக்கை தான் இப்போது அவசியம்!

– சமா. இளவரசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *