கோவை சட்டக்கல்லூரி மாணவி அனிஸ் பாத்திமா, சொந்த ஊரிலிருந்து மீமிசலில்(புதுக்கோட்டை மாவட்டம்) பேருந்து ஏற தனது அண்ணன் வரமுடியாததால் அவரது நண்பர் முத்துக்கிருஷ்ணனுடன் சென்று டிராவல்ஸ் அலுவலகத்தில் அமர்ந்துள்ளார். முத்துக்கிருஷ்ணன் வெளியில் இருந்துள்ளார். அப்போது அனிஸ் பாத்திமாவிடம் வந்த மூன்று இளைஞர்கள், யார், எங்க போற என்று கேட்டதும், இதைக் கேட்க நீங்க யார் என கேட்டுள்ளார் பாத்திமா.
உடனே அவர்கள், இந்துப் பையன்கூட ஓடப் போறியா? உன்னை விடமாட்டோம் என்றதும் தேவையில்லாம பேசாதீங்க என்று சொல்லியுள்ளார் பாத்திமா. முத்துக்கிருஷ்ணன் உண்மையை எடுத்துக் கூறியும் அவர்கள் கேட்கத் தயாராக இல்லை.
பேருந்து கிளம்பி 5 நிமிடத்தில் 10, 15 இருசக்கர வாகனங்களில் வந்தோர் பேருந்தை மறித்து உள்ளே ஏறி, இஸ்லாம் மார்க்கத்தைக் கெடுக்குறயா? விபச்சாரம் செய்யப் போறயா என்று மிகவும் கேவலமாகப் பேசி அவரது உடைமைகளைத் தூக்கி வெளியே போட்டுள்ளனர்.
தன் அண்ணனுக்குத் தகவல் சொன்ன பாத்திமா, பேருந்தை விட்டு இறங்காதே என ஓட்டுநர் சொல்லியதைப் பொருட்படுத்தாமல், மற்ற பயணிகள் தன்னால் பாதிக்கப்படக் கூடாது என நினைத்து கீழே இறங்கிவிட்டார்.
சுற்றி நின்று தகாதபடி பேசிய 50 பேரைச் சமாளித்து, காவல் துறையினர் வரும்வரை எங்கேயும் போகாதே என்று செல்பேசியில் தனது அண்ணன் சொல்லியபடி அங்கேயே இருந்து சமாளித்துள்ளார்.
காவல்துறையினர் வந்ததும், கொஞ்சம் தள்ளியிருந்த மருந்துக் கடைக்குச் சென்று புகார் எழுத ஆரம்பித்தபோது முஸ்லிம் பிரமுகர்கள் சிலர் வந்து மருந்துக் கடைக்காரரை மிரட்ட, காவல் நிலையத்திற்கே சென்று புகார் எழுதிக் கொடுத்துள்ளார். அப்போது வந்த ஜமாத் தலைவர், ஒரு முஸ்லிம் பொண்ணு காவல் நிலையத்திற்கெல்லாம் வரக்கூடாது என்றதும் ஒரு முஸ்லிம் பெண்ணை விபச்சாரினு சொல்லலாமா? கைநீட்டி அடிக்க வரலாமா என்றதும், அவங்களை மன்னிப்புக் கேட்கச் சொல்றோம், புகார் வேண்டாம் என்று மிரட்டியுள்ளனர். அடுத்த நாள் தனது அண்ணனுடன் காவல் நிலையம் சென்றவரிடம் செருப்பால வேனும்னாலும் அடி, வழக்கு வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
எதற்கும் பிடி கொடுக்காத அனிஸ் பாத்திமா, அவர் சார்ந்துள்ள புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும் அதன் சார்பு இயக்கங்களும் தனக்கு ஆதரவாக இருந்ததாகவும், இந்து அமைப்புகள்அணி திரண்டதால், மதக்கலவரம் தன்னால் வந்துவிடக் கூடாது என்று நினைத்து, மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கினாலும், நடந்த நிகழ்வினைத் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார். மதத்தின் பெயரால் கொடுமை செய்தவர்களைத் தட்டிக்கேட்ட பாத்திமாவைப் போல் துணிந்து அனைவரும் வீறுகொண்டு எழவேண்டும்.
நன்றி: நக்கீரன், பிப்.19-21, 2014