சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்களின் மாபெரும் இரங்கற் கூட்ட உரைகளின் தொடர்ச்சி….
மேலவைத் துணைத் தலைவர் ம.பொ.சி.
தமிழரசுக் கழகத்தின் சார்பில் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த வாய்ப்பளித்த திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் நண்பர் கி.வீரமணி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் என்னை அழைத்தபோது, ஏதோ அழைக்கிறார்கள் போக வேண்டும் என்ற தாட்சண்யத்தோடு நான் ஒப்புக்கொள்ளவில்லை. கடமை இருக்கிறது போக வேண்டும் என்ற மன நிறைவோடு அதை ஒப்புக்கொண்டேன்.
ஒரே மேடையில் சேர்த்த பெருமை
அதையும்விட, நண்பர் வீரமணி அவர்களுக்கு நான் ஒரு பாராட்டைத் தெரிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் எல்லோரையும் கருத்து வேறுபாடு, கட்சி வேறுபாடு கனல் கக்கும் சூழ்நிலையில் அரசியல் போய்க் கொண்டிருக்கும் நிலையில், எல்லோரையும் ஒரே மேடையில் சேர்த்துவைத்தாரே, அதுவே ஒரு பெரிய காரியம். இந்தப் பண்பாடு தமிழ்நாட்டில் நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களிலே நான் முன்னணியில் இருக்கக்கூடியவன்.
இந்தக் கூட்டத்திலே அன்னை மணியம்மையார் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது கடமை மட்டுமல்ல; நன்றியுமாகும். பெரியார் அவர்கள் மறைந்த பிறகு மணியம்மையார் அவர்கள் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியவில்லை. காரணம், அவர்களுக்கு தமிழ்நாடு தமிழர் எல்லாம் பெரியாராக இருந்தது. வைதீகத்திலே ஈருடல் ஓருயிர் என்று மணமக்களைப் பற்றிச் சொல்வார்கள். அந்த வைதீகம் அம்மையாருக்கோ, அய்யாவுக்கோ உடன்பாடு இல்லை என்றாலும், அப்படி வாழ்த்துப் பெறுகிற வைதீக மணமக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து காட்டுவதைவிட இவர்கள் வாழ்ந்து காட்டினார்கள்.
மத நம்பிக்கை இல்லாமலே, தெய்வ நம்பிக்கை இல்லாமலே அந்த நம்பிக்கையாளர்கள் போதிக்கும் அளவுக்கு வாழ முடியும் என்று அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள். இதை இயக்கத்திற்கே ஒரு வலுவாக அமைத்திருக்கிறார்கள்.
பெரியார் அவர்கள் கொண்டிருந்த கொள்கையில் மணியம்மையாருக்கு இருந்த உறுதிப்பாடுதான் எல்லா வகையிலும் அவரைப் பின்பற்றச் செய்தது.
தலைமை ஏற்றார்
நான் அறிந்தவரை, தமிழ்நாட்டில் ஒரு இயக்கத்தின் தலைவர் மறைந்த பிறகு, அந்தத் தலைவரின் துணைவியார் தலைமை ஏற்று நடத்தியது என்பது மணியம்மையார் ஒருவர்தான் என்பது என் நினைப்பு.
பெரியார் அவர்கள் விடுதலைக்கு ஆசிரியராக இருந்தார். அம்மையார் அவர்களும் விடுதலைக்கு ஆசிரியையாக இருந்தார்கள். பெரியாரும் சிறைக்குச் சென்றார்கள். அம்மையார் அவர்களும் சிறைக்குச் சென்றார்கள். அம்மையார், பெரியாருக்குச் சமமாக, சதவீதத்திலே நூற்றுக்கு நூறாக இன்னும் சொல்லப்போனால் பெண் குலத்தின் சார்பாக இன்னும் அதிகமாகவே அந்த இயக்கத்தை வளர்த்தார்கள்.
அந்த இயக்கத்திலே, பெரியாருடைய நம்பிக்கைக்கு உரியவராக மணியம்மையார் அவர்களைத் தேர்ந்தெடுத்தாரே, அதிலேயே அம்மையார் வாழ்க்கையினுடைய மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார் எனக் கூறலாம்.
மற்றும் பெரியாரது சீர்திருத்த பகுத்தறிவுக் கொள்கைகளை பெரியார் இருந்த காலத்திலும் சரி, அவர் இல்லாத காலத்திலும் சரி, உறுதிப்பாட்டோடு கடைப்பிடித்து வந்தார் என்பதை அவர் விடுதலையில் வெளியிட்ட பல்வேறு அறிக்கைகள் மூலம் நான் அறிய முடிந்தது.
மணியம்மையார் அவர்கள் விடுதலையிலே எழுதியவைகளைப் பார்த்தபோது, பெரியார் தனக்குப் பிறகு சரியான வாரிசைத்தான் உருவாக்கியிருக்கிறார் என்பதை நான் உணர்ந்தேன். விடுதலையில் நான் அவற்றைப் படிக்கும்போது அதை எண்ணி மிகவும் ஆறுதலடைவேன்.
அம்மா அவர்களின் மறைவு திராவிடர் கழகத் தோழர்களுக்கு ஒரு பேரிழப்பாகும். அய்யா அவர்களின் மறைவுக்குப் பிறகு அம்மா அவர்களை ஏகமனதாக ஏற்றுக்கொண்டு, அந்த இயக்கத்தில் அவர்கள் சொன்னபடி பின்பற்றினார்கள். இங்கே வந்திருக்கிற திராவிடர் கழகப் பெருஞ்சேனையை நான் பார்க்கும்போது, அம்மையார் அவர்களை இழந்தது அவர்களுக்கு எவ்வளவு பெரிய துக்கம், எவ்வளவு பெரிய ஆற்றாமை, எவ்வளவு பெரிய துயரம் என்பதை உணருகிறேன்.
விடுதலை இயக்கம் தோன்றி அந்த விடுதலை இயக்கத்திலே இரண்டறக் கலந்திருந்தார் பெரியார். அவர் விடுதலை இயக்கத்துக்கு எதிராக இந்தச் சீர்திருத்த இயக்கத்தைத் தொடங்கினார் என்பதை நான் நம்பவில்லை. நாடு விடுதலை பெற்ற பிறகு, இந்த ஜாதி மூடநம்பிக்கைகள் இருக்குமானால் விடுதலையின் பலன் எல்லோருக்கும் போய்ச் சேர முடியாது. அந்தப் பலன் எல்லோருக்கும் சேர வேண்டுமானால் சமூக சீர்திருத்தப் புரட்சியும் சேர்ந்திருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அந்த நிலையில் விடுதலை புரட்சி நடத்தியவர்கள் விடுதலை புரட்சிதான் முக்கியம், சீர்திருத்தம் கருத்து என்று அதிலே பலர் எண்ணினார்கள். இந்த வேறுபாட்டைத் தவிர, அதிலே வேறு பல வேறுபாடுகள் இருந்ததாக நான் நினைக்கவில்லை.
விடுதலை இயக்கத்திலே சேர்ந்து இருந்தவன் என்ற முறையிலே நான் பெரியார் அவர்களை மதித்தவன், நேசித்தவன். இந்தக் கூட்டத்திலே ஜாதிக் கொடுமைக்கு ஆளாகாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஜாதிக் கொடுமைக்-கு ஆளான அத்தனை பேரும் பெரியார் அவர்களுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். தமிழும் தமிழ்நாடும் உள்ளவரை பெரியாரின் கருத்துகள் என்றும் நிலைத்திருக்கும் என்பதிலே யாருக்கும் அய்யம் இருக்க வேண்டாம்.
பெரியாருடைய நினைப்பு நிலைத்திருக்கும் வரை மணியம்மையாருடைய நினைப்பும் சேர்ந்தே நிலைத்திருக்கும். முதல்வர் அவர்கள், பெரியாருக்கும் மணியம்மையாருக்கும் நாட்டிலே நினைவுச்சின்னம் ஏற்படுத்தப்படும் என்று சொன்னார்கள். அது வரவேற்கத்தக்க தொண்டு; அதற்காக நாம் அவர்களைப் பாராட்ட வேண்டும். கலைஞர் அவர்கள் இங்கே சொல்லியபடி, 10 சதவீதமாவது பெரியாருடைய கருத்துகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்பது நூற்றுக்கு நூறு உண்மை. பத்துவீதம் மட்டுமல்ல, பல சதவீதம் சீர்திருத்தக் கொள்கைகளை நான் ஏற்றுக்கொள்ளக் கூடியவன் என்று பேரவைத் தலைவர் ம.பொ.சிவஞானம் குறிப்பிட்டார்.
முன்னாள் முதல்வர் பக்தவத்சலம்
அம்மையார் அவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க இங்கே எல்லா கட்சியினரும் கூடியிருக்கிறோம். கொள்கைகளில் வேற்றுமைகள் இருக்கலாம்; ஆனால் உயர்ந்த மாண்பு தேவை.
முதலில் நாம் ஏற்றுக்கொண்டிருக்கிற கொள்கையில் உறுதியான நம்பிக்கை வேண்டும். மணியம்மையாரிடம் பெரியார் கொள்கையில் நம்பிக்கையும், உறுதியான பிடிப்பும் இருந்தது. அதற்காக எந்தத் தியாகத்துக்கும் அவர்கள் தயாராக இருந்தார்கள்.
பெரியாருக்குப் பிறகு, முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வாரிசு என்கின்ற முறையிலே அவர்கள் விளங்கினார்கள். பெரும் தியாகங்களைச் செய்தவர். பெரியார் மறைந்த சில ஆண்டுகளுக்குள்ளே அம்மையாரும் மறைந்திருப்பது பேரிழப்பாகும். கழகத்திற்கும் பேரிழப்பாகும். சமுதாயத்துக்கும் பேரிழப்பு. பெரியார் கருத்தை அவர் ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல; உண்மையான நம்பிக்கை கொண்டு பாடுபட்டார் என்பதுதான் முக்கியம். மறைந்த அம்மையார் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பக்தவத்சலம் தனது உரையில் குறிப்பிட்டார்.
மார்க்சிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் வரதராஜன்
தமிழ்நாட்டில் மூடநம்பிக்கையை ஒழிக்க ஒரு மக்கள் இயக்கமே நடைபெற்று வருகிறது. இன்றைக்கு பீகாரில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கல்வி, உத்தியோகத்தில் இடஒதுக்கீடு செய்கிறார்கள் என்றவுடன், உயர் ஜாதியினர் அதை எதிர்த்து பெரும் கிளர்ச்சி நடத்தி வருகிறார்கள். ஆனால், இதே தமிழ் மண்ணில் 30 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தாழ்த்தப்பட்ட _ பிற்படுத்தப்பட்ட குடிமகன் சமுதாயத்தில் தனக்குரிய அந்தஸ்தை, உரிமையைப் பெறுவதற்காக பகுத்தறிவுப் பேரியக்கத்தைத் தோற்றுவித்தவர் தந்தை பெரியார். அதன் வழியில் அன்னையார் சீரிய தொண்டாற்றி வந்தார்கள். இன்று தமிழ்நாட்டில் மூடநம்பிக்கையை எதிர்த்து சர்வ வல்லமையோடு நாம் முழங்கும்போது, தாய்க்குலம் இன்றும் மூடநம்பிக்கையில் இருந்து கொண்டிருக்கிறது. மூடநம்பிக்கையை எதிர்த்து தாய்க்குலம் திரண்டு வர வேண்டும்.
அந்த வகையில் பெரியாரோடு ஈடுஜோடாக நின்று உறுதியாக ஊக்கமாக, திண்மையாகப் பாடுபட்டவர் அன்னை மணியம்மையார். தாழ்த்தப்பட்டவர்கள் தாக்கப்படுகிற வேதனையான செயல்கள் அன்றாடம் வந்து கொண்டிருக்கின்றன. சமுதாயத்தின் இந்தக் கேடுகெட்ட நிலையை பட்டு, பவுடர், சாயல்கள் மூலமாகச் சரிபடுத்திவிட முடியாது. இந்த சமுதாய ஜாதி அகம்பாவத்தை அகற்றுவதே, அன்னை மணியம்மையாருக்கு நாம் அமைக்கும் நினைவுச் சின்னம். தமிழ்நாட்டில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி தனது தலைதாழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது.
அரை நூற்றாண்டு காலமாக நிற்கும் இந்தப் பேரியக்கத்தின் சாயல்கள், தமிழ்நாட்டில் பதிந்து முன்னேற வேண்டும்.
கேடுகெட்ட ஜாதி அகம்பாவம், இன்று பகுத்தறிவு இயக்கத்துக்குப் பெரும் சவாலாக இருக்கிறது.
எல்லாக் கட்சிகளும், இதில் நூற்றுக்கு நூறு சதவீதம் இணைந்து, ஜாதி அகம்பாவத்தை எதிர்த்து மக்கள் இயக்கத்தை எதிர்காலத்தில் உருவாக்குவோம். அதுதான் மறைந்த மணியம்மையார் அவர்களுக்கு நாம் ஏற்படுத்தும் நினைவுச் சின்னம் என்று வரதராஜன் குறிப்பிட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அம்பிகாபதி
திராவிடர் கழகத்துக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர்கள் அம்மையார். இந்திய விடுதலைக்காகவும் நாட்டு மக்கள் சுயமரியாதைக்காகவும் போராடியவர் தந்தை பெரியார். அந்த வழி மிகவும் கடுமையான வழி; கசப்பான மருந்து, சமுதாயத்தில் பதிந்துள்ள கொடுமைகளை, அது ஜாதியானாலும், மத மவூடிகமானாலும், அதை எதிர்த்து மிகப் பெரிய தொடர்ந்த போராட்டத்தை நடத்தியவர் தந்தை பெரியார். அந்த வழியில், தந்தை பெரியாருக்குப் பிறகு, அவற்றைத் தொடர்ச்சியாகச் செய்து காட்டியவர் அன்னையார். இந்தச் சமூக அமைப்பை உடைத்தெறிந்து, புதிய சமுதாயத்தை உருவாக்கப் பட்டாளமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதுதான் கருஞ்சட்டைப் படை. தந்தை பெரியாரையும், அம்மையாரையும் பிரிவது திராவிடர் கழகத் தோழர்களுக்கு மிகுந்த துயரம்தான் என்றாலும், புரட்சிக் கவிஞர் கூறியதுபோல, ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர், உதையப்பராகி விட்டால், ஓடப்பர், உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆகிடுவார் உணரப்பா நீ என்பதுபோல, சமத்துவ சமுதாயத்தை உருவாக்க எல்லோரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம் என்று கூறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அஞ்சலியைச் செலுத்திக் கொள்கிறேன் என்றார் அம்பிகாபதி.
உழைப்பாளர் முன்னேற்றக் கட்சியின் சார்பில் ரா.மார்க்கபந்து எம்.எல்.ஏ.,
அன்னை மணியம்மையார் அவர்கள் இரங்கல் கூட்டத்தில் இன்று அனைத்துக் கட்சியைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டு பேசுகிறார்கள் என்றால், தமிழக அரசியலுக்கு வித்திட்ட முதல் இயக்கம் திராவிடர் கழகம். அந்த அரசியலில் பூத்த மலர்கள்தான் இன்று பல்வேறு கட்சிகளாக பல்வேறு கோணங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் 50 ஆண்டுக் காலத்துக்கு மேலாக தந்தை பெரியார் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சிகளை, உரிமைகளை 19 மாத காலத்தில் அழித்து ஒழிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த உரிமைகளை மீண்டும் பெற்றிட நாம் சபதமேற்க வேண்டும். தந்தை பெரியாரின் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு உற்ற துணைவராக மட்டுமல்ல, தொண்டராக இருந்து செயல்பட்டவர் அன்னை மணியம்மையார். அவர் தலைமையேற்று நடத்திய காலம் மிகவும் குறுகியது என்றாலும் சீரிய பணியாற்றினார் அன்னையார். மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மார்க்கபந்து தனது உரையில் குறிப்பிட்டார்.
முஸ்லீம் லீக் உறுப்பினர் ஜனாப் அப்துல் லத்தீப் எம்.எல்.ஏ.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களுடைய துணைவியார்; தமிழ்ச் சமுதாயம் முழுவதும் அம்மா என்று அன்போடும், மரியாதையோடும் அழைக்கப்பட்டு வந்த நம்முடைய அன்னை மணியம்மையார் அவர்கள் நம்மைவிட்டு இன்றைக்குப் பிரிந்து இருக்கின்றார்கள். அந்தத் துன்பத்தை நாம் பகிர்ந்து கொள்வதற்காக இங்கு கூடி இருக்கின்றோம். தமிழன் தன்னை மறந்து இருந்த காலத்தில் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் உதயமான மூத்த மொழியான தமிழ் மொழிக்குச் சொந்தக்காரனாகவும், தமிழ்ப் பண்பாட்டுக்குச் சொந்தக்காரனாகவும் உலகத்திலே தோன்றிய நாகரிகத்தினுடைய முதல் சின்னமாக விளங்கிய தமிழ்ச் சமுதாயம் -_ தன் நிலையை மறந்து, தன்மானத்தை மறந்து வாழ்ந்த ஒரு காலத்தில் இந்த தமிழ்ச் சமுதாயத்தினுடைய நீண்ட பெருமைமிக்க வரலாற்றை உலகில் மறைத்து அவர்களை அடக்கி ஆள நினைத்த ஒரு காலத்தில் _ சூரியனாக, சூரிய ஒளியைப் போல், தமிழ்நாட்டில் தோன்றி தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடாஎன்று நாமக்கல்லார் சொன்னதற்கு இலக்கணமாக அவர் பாடிய அந்தப் பாட்டிற்கு உயிர் கொடுக்கும் வகையில் தூங்கிக்கொண்டு இருந்த தமிழ்ச் சமுதாயத்தைத் தட்டி எழுப்பிய தன்மானத் தானைத் தலைவன் தந்தை பெரியார் அவர்களுக்கு ஆக்கத்தையும் ஊக்கத்தையும், அவர்தம் வாழ்வுக்கு உறுதுணையாகவும் வாழ்ந்த ஒரு பெருமாட்டி மாது சிரோன்மணி மணியம்மையார் அவர்கள் இன்று நம்மிடத்தில் இல்லை.
மணியம்மையார் அவர்கள் சிறு வயதிலேயே அவரது கொள்கையில் பற்றுக்கொண்டு பெரியாருடைய செயலாளராக, அவருடைய உற்ற துணைவியாக அவர்களுக்கு ஆலோசனை கூறக்கூடிய சிறந்த ஆலோசகராக, போராட்டங்கள் நடைபெற்ற காலங்களிலே எல்லாம் பெரியார் அவர்களின் பெரும்படையில் தானும் ஒரு போராட்ட வீராங்கனையாக அவர்கள் வாழ்ந்து, தமிழ்ச் சமுதாயம் வாழ்வதாக இருந்தால் தன்மானத்தோடுதான் வாழும் என்ற ஓர் இலக்கணத்தை வகுத்துவிட்டு, நம்மைவிட்டு அம்மையார் அவர்கள் பிரிந்து விட்டார்கள்.