பெண்கள் எப்படி இருக்க வேண்டும்? – தந்தை பெரியார்
தற்போதுதான் நம் மக்களிடத்தில் நல்ல மன மாற்றமும், துடிப்பும் வருகிறது. இதுவரை நம் நாட்டுப் பெண்கள் எப்படி இருந்தனர் என்றால், அவர்கள் ஒரு ஜடப் பொருள் என்கின்ற அளவிற்குத்தான் வைக்கப்பட்டிருந்தார்கள். பெண்கள் என்றால் அடிமை _- ஆண் சொல்கிறபடி கேட்க வேண்டியவள் – அப்படி நடந்து கொள்பவள்தான் உண்மையான பதிவிரதை என்று கூறப்பட்டார்கள்.
`பதிவிரதை என்ற சொல்லானது மிகவும் அயோக்கியத்தனத்தில் உருவான சொல்லாகும். ஓர் ஆண் ஒரு பெண்ணைப் பார்த்து எவருக்கும் விட்டுக் கொடுக்கலாம். அதற்கு அந்தப் பெண் சம்மதிக்க வேண்டும். இதுதான் தர்மம் என்று எழுத்தில் மட்டுமல்ல, நடப்பிலும் இருந்து வந்தது.
***
மேல்நாட்டில் ஒருவனைப் பார்த்து உன் மகளுக்கு எப்போது திருமணம் என்று கேட்டால், ஏன் என்னைக் கேட்கிறாய் _- என் மகளைக் கேள் என்பான். உன் மகனுக்கு எப்போது கல்யாணம் என்றால், அவனைக் கேள் என்பான்.
அதற்கு என்ன பொருள் என்றால், திருமணம் என்பது திருமணம் செய்து கொள்ளவேண்டிய ஓர் ஆணோ, ஒரு பெண்ணோ முடிவு செய்து கொள்ளவேண்டிய விஷயம். நம் நாட்டில் என்னவென்றால், திருமணம் என்பது பெற்றோர்கள் பார்த்துச் செய்யவேண்டிய சடங்காகி விட்டது. இது ஒழிந்தாக வேண்டும். `விடுதலை, 23.7.1971
நண்பர் தர்மலிங்கம் _- நிர்மலா ஆகியோர்களின் குழந்தைகளான அன்புமணி _- இராமச்சந்திரன் ஆகியோருக்குக் காதணி விழா. இவ்விழாவானது சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்காதணி விழாவானது ஏன் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. அழகு, அலங்காரம் என்கிற பெயரால் செய்யப்படுகிறது. இவ்விழாவானது மத சம்பந்தமானது. மத விழாவாகும்.
மற்றும் சொல்லவேண்டுமானால், ஜாதி சம்பந்த மானது. மத, ஜாதி சம்பந்தமுள்ளது. இது மதத்திற்கு ஒரு விதமாக, ஜாதிக்கு ஒருவிதமாக இருக்கிறது.
இது எதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட தென்றால், எனக்குத் தெரிந்தவரை, பெண்களை அடிமைப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதேயாகும். சாதாரணமாக எப்படி மாட்டிற்கு மூக்கணாங்கயிறு போட்டு அடக்குகின்றோமோ அதுபோன்று, பெண்களின் மூக்கிலே, காதிலே நகைகளைப் போட்டு அவற்றைப் பாதுகாப்பதற்காக ஆண்கள் அடிப்பதற்குக் கை தூக்கியதும், பெண்கள் கைகளைக் கொண்டு காதையும், மூக்கையும் மறைத்துக் கொண்டு முதுகைக் காட்டவேண்டும் என்பதற்காகவேயாகும். நகைகள் போடுவதும், அவர்களை அடிமையாக்குவதற்காகவேயாகும்.
நம் நாட்டைத் தவிர வெளிநாடுகளில் நகைகளே கிடையாது. மற்ற நாட்டுப் பெண்கள் மூக்கு, காதுகளில் ஓட்டை போட்டுக் கொள்வது கிடையாது.
நம் நாட்டில் சிலர் காதில் சிறிய ஓட்டை போட்டுக் கொள்வார்கள். அதில் வளையங்களைத் தொங்கவிட்டிருப்பார்கள். அந்த நகைகள் மார்பில் வந்து விழும். காது ஓட்டையையும், அணிகிற நகைகளையும் கொண்டு அவர்கள் ஜாதி என்ன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
இப்படி ஜாதி, மதத்திற்காகவும், பெண்களை அடிமையாக்கவும் ஏற்படுத்தப்பட்ட இம்முறை யானது பின், பெண்கள் அழகிற்காக தாங்களாகவே விரும்பிச் செய்து கொள்ளும்படியாக ஆயிற்று. அவர்களிடையே பகுத்தறிவை எடுத்துச் சொல்லி மற்ற நாட்டு மக்களைப் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். இம்முறையானது துலுக்கன் ஆட்சி இருந்தபோது மற்ற மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக ஏற்பாடு செய்தது என்று சொல்வார்கள்.
7-ஆம் தேதி நடைபெற்ற ஒரு மந்திரி வீட்டுத் திருமணத்தில் பெண்களின் அடிமைத்தனம் போவதற்காக நாம் இவ்வளவு தூரம் பாடுபட்டும் இன்னும் மந்திரிகளே திருத்தம் அடையவில்லை என்றும் குறிப்பிட்டேன். அந்த மந்திரி நமக்கு வேண்டியவர். பெண்களுக்குத் தாலி கட்டுவது, நாய்களுக்கு முனிசிபாலிட்டி லைசன்ஸ் கட்டுவது போன்றது. அவர்களது சிங்காரம், அலங்காரம் எல்லாம் அவர்கள் அடிமையை நிலைநிறுத்துவதற்காகவேயாகும்.
பெண்கள் முடியை வளர்க்காமல் கழுத்தோடு கத்தரித்துக் கொள்ளவேண்டும். விலையுயர்ந்த சேலைகள் கட்டாமல் லுங்கி கட்டவேண்டும். ஆண்களுக்கும், அவர்களுக்கும் எந்த வித்தியாசமும் தெரியாத வகையில் உடைகளிருக்க வேண்டும்.
(10.5.1971 லால்குடி வட்டம் பாய்ச்சூர் கடுக்காத் துறையில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு) – விடுதலை, 30.7.1971
பெண்களை 20 வயதுவரை படிக்க வைக்கவேண்டும். பெண்கள் தாங்களாகவே தங்களுக்கேற்ற துணையைத் தேடிக் கொள்ளவேண்டும். உலகில் மனித சமுதாயத்தைப் பற்றி எவனுமே சிந்திக்கவில்லை. வந்த பெரியவர்கள், இலக்கியங்கள் எல்லாம் பெண்களை அடிமையாக இருக்கவேண்டும். ஆண்களுக்கு அடங்கி நடக்கவேண்டுமென்று தான் சொல்கின்றன. பொது இலக்கியம் என்று சொல்லப்படுகின்ற திருக்குறள் கூட, பெண்களை இழிவுபடுத்துவதாக, அடிமைப்படுத்துவதாகவே இருக்கின்றது. மனித சமுதாயம் முன்னேற்றமடைய வேண்டுமானால், பெண்கள் அறிவுபெற வேண்டும். மனிதன் சாஸ்திரங்களையும், சம்பிரதாயங்களையும் பார்த்து நடக்காமல் தங்களின் அறிவைப் பார்த்து அதன்படி நடக்கவேண்டும்.
ஆண்களும், பெண்களும் பள்ளிகளில், கல்லூரிகளில் சேர்ந்து படிக்கவேண்டும். அரசாங்கம் இதற்கு ஏற்பாடு செய்ய ஏனோ தயங்குகின்றது. ஆண்களும், பெண்களும் சேர்ந்து பழகினால்தான் அவர்கள் அனுபவம் பெற முடியும்.
வாழ்க்கையில் நாம் பிறருக்கு நம்மாலியன்ற உதவியைச் செய்யவேண்டும். வரவிற்கு அடங்கி வரவிற்குள் செலவிட்டுச் சிறிதாவது மிச்சம் செய்யவேண்டும். கடன் வாங்குவதால் மனிதன் தன்மானத்தையும், சுதந்திரத்தையும் இழக்க நேரிடுகிறது. பெண்கள் ஆடம்பரமாக வாழக் கூடாது. நிறைய நகை போட்டுக் கொள்வது உயர்ந்த விலையுள்ள உடைகள் அணிவது, சிங்காரம் செய்துகொள்வது கூடாது. சாதாரணமாக வாழவேண்டும்.
அரசாங்கத்திற்கு இன்னும் துணிவு வரவில்லை. துணிவு வந்தால் ஒரு பெண் மீது இத்தனை கிராம் தங்கத்திற்கு மேலிருக்கக் கூடாது என்று தடை செய்யவேண்டும். குழந்தை பெறுவதில் மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஒன்று, தப்பினால் இரண்டு அதோடு நிறுத்திக் கொள்ள
வேண்டும். அரசாங்கம் இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெறக் கூடாது என்று சட்டம் கொண்டுவர வேண்டும். இரண்டிற்கு மேல் பெறுபவர்களுக்கு அரசாங்க உத்தியோகங்களில் பிரமோசன் கொடுக்கக் கூடாது.
(22.8.1971 அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு) – `விடுதலை, 28.9.1971
பெண்கள் 20 வயதுவரைப் படிக்கவேண்டும். கோவில்களுக்குச் செல்லக் கூடாது. உத்தியோகங்களுக்குச் செல்ல வேண்டும் அல்லது ஏதாவது தொழில் செய்ய வேண்டும். மேல்நாட்டில் பெண்கள் சுதந்திரமாக வாழ்கின்றார்கள். உத்தியோகத்திற்குச் செல்பவர்களைத் தவிர மற்றப் பெண்கள் வீட்டில் சும்மா இருப்பதில்லை. ஏதாவது கைத்தொழில் செய்து அதன்மூலம் தங்கள் வாழ்விற்குரிய வருவாயைத் தேடிக் கொள்கிறார்கள்.
நான் பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அங்கு உள்ள பெண்கள் சிங்காரித்துக் கொள்வது கிடையாது. லுங்கி கட்டிக் கொள்கிறார்கள். மேலே சட்டை போட்டுக் கொள்கிறார்கள். மக்கள் யாவருடனும் கலந்து பழகுகிறார்கள். தன் கணவனைப் பிடிக்கவில்லையென்றால், வேறு பிடித்த ஆணோடு சென்று விடுவார்கள். அங்கு அது குற்றமாகக் கருதப்படுவது கிடையாது. இளம் வயதில் பெண்களுக்குத் திருமணம் செய்வதால் அவர்களுக்கு உலக அறிவு வளர முடியாமல் போய்விட்டது. – `விடுதலை, 10.6.1971