பேரழிவைத் தடுக்க முடியாத கடவுள்

பிப்ரவரி 16-28

– தமிழில் : த.க.பாலகிருட்டிணன்

மத, கடவுள் நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பற்றிய நமது விமர்சனங்கள் அவர்களை கேலியும் கிண்டலும் செய்வதாக இருக்கக் கூடாது என்பதையும் இந்த இடத்தில் கூறவேண்டியது அவசியமாகும். நமது விமர்சனங்கள் எவையேனும் நம்பிக்கையாளர்களைக் கேலியும் கிண்டலும் செய்வதாக எவர் ஒருவராவது  கூறினால், நமது கருத்துகளைத்தான் நாம் எடுத்துக் கூறுகிறோம், அவர்களைக் கேலியோ கிண்டலோ செய்ய முற்படவில்லை என்பதை  முதலிலும், நமது விமர்சனங்களை பயனற்றதாகச் செய்துவிடுவதற்கான முயற்சியாகத்தான் அவற்றை கேலி, கிண்டல் என்று அவர்கள் கூறுகின்றனர் என்பதை இரண்டாவதாகவும்  அவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.

நம்பிக்கையாளர்களுக்கு எதிரான வாதங்களை மிகவும் மென்மையாகவும் கடுமையின்றியும் நாத்திகர்கள் எடுத்து வைக்கவேண்டும் என்றே நம்பிக்கையாளர்கள் விரும்புவர். நாத்திகம் பற்றிய நமது வாதங்களை முன்வைப்பதில் தந்திரம் மிகுந்த ஒரு அணுகுமுறையை  நாம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறுவதை நம்ப முடியாது; நமது வாதங்களைத் தோற்கடிக்கும் ஒரு முயற்சியே அது. பாவத்தைத்தான் தாங்கள் வெறுப்பதாகவும், பாவம் செய்த மனிதரை வெறுப்பதில்லை என்று பல நம்பிக்கையாளர்களால் கூற முடியுமானால், நம்பிக்கையாளர்களின் மூடநம்பிக்கைகளை மட்டுமே நாம் வெறுக்கிறோம் என்றும், நம்பிக்கையாளர்களை நாம் சகோதர, சகோதரிகளாகவே கருதி அன்பு செலுத்துகிறோம் என்று நம்மாலும் கூறமுடியும். மதத்திற்கு எதிரானவர்களாக இருப்பதற்கு நாம் விரும்பவில்லை என்று உறுதியாகக் கூறச்செய்யும் ஒரு பொறியில் மாட்டிவிட மேற்கொள்ளப்படும் முயற்சியில் நாம் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 16 ஆம் பெனடிக்ட் போப்பை எடுத்துக் கொள்ளுங்கள் நம்பிக்கையற்றவர்களை அவர் மிகவும் கடுமையாகவும் தீவிரமாகவும் கண்டிப்பார். நாத்திகர்களுக்கு எதிரானவன் என்று தன்னைக் காட்டிக் கொள்ள விரும்பவில்லை என்பது போன்ற மென்மையான முறையில் எப்போதுமே அவர் பேசியதில்லை. நம்பிக்கையாளர்களின் சட்டப்படியான உரிமைகளை ஒழித்துவிட வேண்டும் என்று நாம் கேட்காதவரை, அவர்களின் நம்பிக்கை தவறானவை, தீங்கு நிறைந்தவை என்பதை விளக்கிக் கூற நமக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன;  அவ்வாறு கூறாமல் நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாது.

மதவாதிகள் மட்டும் எவ்வாறு மக்களின் மன்னிப்பைப் பெறுகின்றனர்?

கடவுள் வழிபாடு செய்யாத ஒருவரைத் தன்னால் நம்ப முடியாது என்றும், கடவுள் நம்பிக்கையற்ற ஒருவரால் நியாயமான, அறிவுப்பூர்வமான எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியாது என்றும் 2012 அதிபர் தேர்தலில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்களில் ஒருவரும், சட்டமன்ற முன்னாள் அவைத்தலைவருமான  நியூகிங்ரிச் ஒரு முறை சொன்னார். கற்பனையிலான ஒரு கடவுளை  வழிபடுவதில்லை என்று ஒப்புக் கொள்ளும் நாத்திகர்களாகிய நமது துணிவு நம்மைப் பொருத்தவரை ஓர் ஆக்கப்பூர்வமான பெருமையாகக் கருதத்தக்கதாகுமேயன்றி,  இழிவின் அடையாளமாகக் கருதத்தக்கதல்ல.

அறிவியலையும், தத்துவஇயலையும் நன்கு கற்று ஆய்ந்தவர்கள், இந்தப் பிரபஞ்சம் இயற்கையாகத் தானாக உருவானதேயன்றி, எந்தக் கடவுளாலும் படைக்கப்பட்டதல்ல என்ற முடிவுக்கு வந்தது மிகச் சிறந்த, நியாயமான முடிவே அன்றி, மோசமான முடிவு அல்ல. அப்படியிருந்தும், நாத்திகர்களாகிய நம் மீது நியாயமற்ற, மோசமான, இழிவான பண்புகள் நியூகிங்ரிச் போன்ற ஒருவரால் சுமத்தப்படுகிறது. இத்தனைக்கும் நம்பிக்கையாளர்கள் கண்டிக்க வேண்டிய பிறன்மனை விழையும் குற்றத்தை அவர் இழைத்திருந்தார். நமக்கு ஏன் கடவுள் நம்பிக்கையில்லை என்பதற்காக நாம் கூறும் நியாயமான காரணங்களைக் கேட்கத் தயாராக இல்லாத இந்த மக்கள் அவருடைய குற்றங்களை எல்லாம் விரைவில் மறந்து போய்விடுவார்கள்.

முழு வேகத்துடனும், ஆற்றலுடனும் நமது வாதங்களை  முன் வைக்க நாம் எவ்வளவு நீண்ட காலம் எடுத்துக் கொள்கிறோமோ, அந்த நீண்ட காலம்வரை, பொதுமக்களிடையே நமது பரப்புரையின் மூலம் நம்மால் எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது;  நாத்திகம் மற்றும் நாத்திகர்கள் மீது பொதுமக்கள் கொண்டிருக்கும் பகை உணர்வையும், வெறுப்பையும் அவ்வளவு எளிதாகப் போக்கிவிட முடியாது. பிறன்மனை விழைந்த தனது கடந்த காலக் குற்றங்களுக்காக நியூகிங்ரிச் கோரியுள்ள மன்னிப்பு பெரும்பாலான மக்களிடையே அவர் மீது பரிவை ஏற்படுத்தியுள்ளது. தனது கடந்த காலப் பாவங்களுக்கான பாவ மன்னிப்பு பெற கத்தோலிக்க மதத்திற்கு அவர் மாறியதே இதன் காரணம். மிகமிக மோசமான முறையில் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமைகள் நடத்தப்பட்ட ஒரு மத அமைப்பில்,  மக்கள் பெருக்கம் அதிகரித்து வரும் இன்றைய உலகில் கருத்தடை முறைகளைப் பின்பற்ற கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் ஒரு மத அமைப்பில், கத்தோலிக்க கிறித்துவ மதத்தில், அம்மதத்தினைப் பின்பற்றுபவர்களின் கடந்த காலப் பாவச் செயல்களின் பாதிப்புகளைத் துடைத்துவிடும் புனிதத்தன்மை இன்னமும் இருக்கின்றது போலும் !

நம்பிக்கையாளர் சட்டப்படியான சம உரிமைகளுக்கு நாத்திகர்கள் அச்சுறுத்தல் அல்ல

கடவுளை வழிபடுவதற்கும், தங்கள் நம்பிக்கைகளைப் பரப்புரை செய்வதற்கும் நம்பிக்கையாளர் பெற்றுள்ள  சுதந்திரத்தை சட்டத்தினைப் பயன்படுத்திப் பறித்துக் கொள்ள நாத்திகர்களாகிய நாம் முயன்றோமேயானால்,  நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஓர் அச்சுறுத்தலாகவே தெரிவோம். இதனைச் செய்ய நாம் முற்படவில்லை.  நம்பிக்கையாளர், நம்பிக்கை அற்றவர் என அனைவருக்குமே சட்ட ரீதியான சமத்துவத்தைப் பெறுவதே நமது  நோக்கமாகும்.  நாம் பெற்று அனுபவிக்கும் பயன்களைவிட மிக அதிக அளவிலான பயன்களை அரசிடமிருந்து பெற்று மதநம்பிக்கையாளர்கள் அனுபவிப்பதை நாம் விரும்பவில்லை. தற்போது நம்பிக்கையாளர்கள் அனுபவித்து வரும் உரிமையான, தங்களது கருத்துகளைப் பொதுமக்களிடையே பரப்புரை செய்யும் அதே உரிமையைத்தான் நாமும் கேட்கிறோம். நம்பிக்கையாளர்களுக்கும், நம்பிக்கை அற்றவர்களுக்கும் சட்டப்படி சம உரிமை இருக்கவேண்டும் என்ற நிலையை நாம் மேற்கொள்ளும் வரை, மதச் சுதந்திரத்துக்கு நம்மால் எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது. பொதுமக்களிடையே நாம் பேசி, விவாதிப்பதுவே தங்களுக்கான அச்சுறுத்தலாக மதநம்பிக்கையாளர்கள் கருதினால்,  அது அவர்களது பிரச்சினை. மதக் கண்ணோட்டத்தில் நம்பிக்கையாளர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவதைத் தடுக்கும் உரிமை நமக்கு எவ்வாறு இல்லையோ, அவ்வாறே நமது நாத்திகக் கருத்துகளை வெளிப்படுத்துவதைத் தடுக்கும் உரிமையும் நம்பிக்கையாளர்களுக்குக் கிடையாது.

சுதந்திரமாக எவரும் பேசுவதை அனுமதித்திருப்பதை மிக முக்கியமான மதிப்பீடாகக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில்,  நமது நாத்திக வாதங்களை எதிர்கொள்வதற்கு நம்பிக்கையாளர்களுக்கு உள்ள வழியானது, தங்களின் வாதங்களை முன்வைத்து நமது வாதங்களுக்குப் பதில் அளிப்பதுதான். எதிரிகளின் வாயை அடைப்பதற்காக நாட்டின் காவல்துறை அதிகாரத்தை எவர் ஒருவரும் பயன்படுத்தக் கூடாது, முடியாது. -தங்களுக்குத் தவறாகத் தோன்றும் கருத்துகளைச் சந்திக்க தங்களது பிரதிவாதங்களை முன்வைக்க வேண்டும்-  என்ற நமது முதல் சட்டத் திருத்தத்தை நியாய மனமும், உணர்வும் கொண்ட ஒவ்வொரு மனிதரும் மகிழ்ந்து, போற்றி, வரவேற்க வேண்டும்.

சோதனை மூலம் மெய்ப்பிக்கப்படும் நடைமுறை அனைவருக்கும் ஒன்றுபோல் பின்பற்றப்பட வேண்டும்

மதச்சார்பற்ற ஒரு சூழ்நிலையில் பெரும்பாலான மக்கள் நம்பிக்கை வைக்காத ஒரு நிகழ்வுக்கு, பாரம்பரியமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மத நம்பிக்கையை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதற்காக, அதற்கு மதம் சார்ந்த அற்புதம் என்ற ஒரு சிறப்பான இடத்தைத் தருவதற்கு எந்த விதக் காரணமும் இருக்க முடியாது. மனிதர்கள் தற்போதுள்ள வடிவத்திலேயே ஓர் அற்புதத்தால் கடவுளால் படைக்கப்பட்டனர் என்பதையும், பைபிளில் விவரிக்கப்பட்டுள்ள அனைத்துப் பிற அற்புத நிகழ்வுகளும்  உண்மையிலேயே நடந்தவை என்பதையும் நம்புகிறவர்கள்,  இன்று மக்களால் தங்கள் எதிர்காலத்தை ஊகித்து அறியமுடியும் என்பதையோ, தங்கள் உடல்களுக்கு வெளியேயும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி,  அடுத்த அறையில் எழுதப்பட்டிருக்கும் எண்களை இங்கிருந்தே படிக்க  முடியும் என்பதையோ நம்பமாட்டார்கள். மேலும், மதத்தினால் கூறப்படும் அற்புதங்களைத் தர மதிப்பீடு செய்வதற்கு, அவை மதத்துடன் தொடர்புடையது என்ற ஒரே காரணத்துக்காக,  ஒரு மாறுபட்ட, அதிக கடுமை அற்ற அளவுகோல்களைப் பயன்படுத்தக்கூடாது.

அதற்கு மாறாக, அற்புதங்கள் பற்றிய  மதநம்பிக்கையாளர்களின் கூற்றுகளை மிகச் சிறந்த முறையில் பகுத்தாய்வு செய்து, பரிசீலனைக்கு உட்படுத்துவதை முழுமையாக நியாயப்படுத்தி நாம் காட்டியுள்ளோம்.  இயற்கையை மீறிய அற்புத நிகழ்வுகள் என்று தாங்கள் ஏன் கூறுகிறோம்  என்பதையும்,  அது போன்ற மற்ற வகையிலான அற்புத நிகழ்வுகளைவிட இவற்றிற்கு  ஏன் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதையும் கூறும் வாதங்களை முன்வைத்து பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பு அவர்களுக்கே உள்ளது; நமக்கு இல்லை. அமெரிக்காவின் ஓய்வு பெற்ற மூன்றாவது அதிபர் தாமஸ் ஜெஃபர்சன், ஓய்வு பெற்ற இரண்டாவது அதிபர் ஜான் ஆடம்ஸ்க்கு 1823ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எழுதிய ஒரு கடிதத்தில், கன்னித்தாயின் கருப்பையில், தனது தந்தையால் உடல் உறவு இன்றி கருவுறச் செய்யப்பட்ட யேசு என்னும் கடவுள் அற்புத முறையில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் கதையை ஜூபிடரின் மூளையில் இருந்து மினர்வா பிறந்த கதையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் ஒரு நாள் வரும் என்று எழுதினார்.

நாம் இப்போது கையாண்டு கொண்டிருக்கும் மய்யப் பிரச்சினை பற்றி ஜெஃபர்சன் இவ்வாறு எழுதி விடை அளித்துள்ளார். பண்டைய ரோமானிய கடவுள்களின் கதைகளை நம்பாமல் இருக்கும் நிலையில், கிறித்துவ மதக் கடவுளின் கதைகளை மட்டும் ஏன் நம்பவேண்டும்? நாத்திகர்களும், நம்பிக்கை அற்றவர்களும் தங்களைக் கடுமையாகத் தாக்குவதாக மதநம்பிக்கையாளர்கள் கூறுவது,  மற்ற மாயமந்திரக் கதைகளுக்கு இல்லாத ஒரு தனி பாதுகாப்பைத் தங்களின் புராண, இதிகாசக் கதைகளுக்குப் பெறுவதற்கு அவர்கள்  மேற்கொள்ளும் முயற்சி என்பதே உண்மையாகும். மற்ற நம்பிக்கைகள் மீது மேற்கொள்ளப்படும் நுண்ணிய ஆய்வு, பரிசீலனை,  எழுப்பப்படும் அய்யங்கள்,  செய்யப்படும் கேலி, கிண்டல்களை விட மிகக் குறைந்த அளவில் மட்டுமே மத நம்பிக்கைகள் மீது மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கண்ணோட்டத்தை இன்னமும் கொண்டிருக்கும், தங்களைத் தாங்களே வெறுத்துக் கொள்ளும் மனநோயினை நாத்திகர்களாகிய நாம் தவிர்க்க வேண்டும். பாவத்தைத்தான் வெறுக்கிறோம், பாவியை அல்ல என்று கூறி மதவாதி தப்பித்துக் கொள்ள முடியுமானால்,  மூட நம்பிக்கையைத்தான் நாங்கள் கேலி செய்கிறோம், மூடநம்பிக்கையாளரை அல்ல என்று நம்மாலும் மிகுந்த நம்பகத்தன்மையுடன் கூறிக் கொள்ள முடியும்.

நாத்திக வாதங்களைப் பொதுமக்கள் முன் வைத்தல்

மனதத்துவ அளவிலான பட்டறிவு, நுட்பத்திறன், நாகரிகம் சமூகம் முழுவதிலும் மாறுபட்டிருப்பதாகும். எந்த ஒரு விவாதத்தின் போதும்,  ஒரு வாதத்தின் ஆழம் பார்வையாளர்களைப் பொருத்து மாறுபடுவதாகும். என்றாலும், எந்த அளவுக்கு ஒருவரது வாதம் நாகரிகமாக இருக்க வேண்டும் என்பது பார்வையாளர்கள் எத்தன்மையானவர்கள் என்பதைப் பொருத்தது. இப்படிக் கூறுவது,  எப்போதுமே அடிப்படைப் பண்புகளை நாம் புறக்கணித்துவிட வேண்டும் என்று கூறுவதாக ஆகாது. இயற்கையை மீறிய இதர நம்பிக்கைகளைவிட மதம்சார்ந்த நம்பிக்கைகளை அதிக அளவில் பரிசீலனை செய்வதோ, சோதனைக்கு உட்படுத்துவதோ கூடாது என்று சமூகம் மேற்கொண்டுள்ள தவறான நிலையை சிறிதும் சிந்தனையே இன்றி பெரும்பாலான மக்கள் நமது கலாச்சாரத்தில் ஏற்றுக் கொண்ட போதிலும்,  இந்த மனநிலையை, கண்ணோட்டத்தை உடைத்தெறிய நம்மால் முடியும். இதற்கான காரண காரியங்கள், ஆதாரங்கள் ஒன்று போலவே இருப்பதைப் பற்றி எவர் ஒருவருடன் வேண்டுமானாலும் நம்மால் பேசத் தொடங்க முடியும். ஜோதிடமாக இருக்கட்டும் அல்லது இறந்தவர் புத்துயிர் பெற்று எழுவதாக இருக்கட்டும்,  அதே அளவுக்கு கடுமையான சோதனைகளுக்கு அனைத்து அற்புத நிகழ்வுகளும் ஏன் உட்படுத்தப்பட வேண்டும் என்பதைப் பற்றி விளக்கிக் கூற நம்மால் முடியும். ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்துப் பேச நம்மால் முடியாமல் போகலாம். என்றாலும், எந்த அளவுக்கு அதிக எண்ணிக்கை கொண்ட மக்களை நாம் சந்தித்துப் பேசுகிறோமோ, அந்த அளவுக்கு மதஅற்புத நிகழ்வுகள் பற்றிய உண்மை நிலையைப் பற்றிய அய்யப்பாடு என்னும் விதைகளை நம்மால் விதைத்துவிட முடியும்.

இந்தக் காரணத்தினால்தான், கடவுள் இருக்கிறாரா என்பது பற்றி மாணவர்களின் மனதில் அய்யங்களை ஏற்படுத்தும் காரணத்தினால், பல்கலைக்கழகங்களில் நடைபெறும் விவாதங்கள்,  மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இது போன்ற விவாதங்களை மாணவர்கள், அதிக எடை கொண்ட நுண்ணறிவுச் சண்டை போன்று கவனத்தை ஈர்ப்பவையாகக் கருதுகின்றனர். அந்த ஒரு சில மணி நேரத்தில், விவாதங்களின் மீதே அவர்களது கவனம் முழுமையாக குவிக்கப்படுகிறது. விவாதங்கள் நடைபெறும்போது மாணவர்களின் கவனம் அதில் ஈடுபட்டிருப்பதால், ஒரு திறமையான நாத்திகப் பேச்சாளர் தனது வாதங்களால் மாணவர்களைப் பரிசீலனை செய்ய வைக்க முடியும்; வேறு சமயங்களில் இத்தகைய கருத்துகள் பற்றி அவர்கள் கவனம் செலுத்தமாட்டார்கள்.

மேலும், மதங்களால் மனித இனம்  இடைவெளியே இல்லாமல் அடையும் பெரும் துன்பங்கள்,  பெரும் கேடுகள், பேரழிவுகள்  பற்றி மதவாதிகளுக்கு நம்மால் சவால்விட முடியும். கடவுள் பல விசித்திரமான வழிகளில் செயல்படுகிறார் என்றும், இத்தகைய துன்பங்கள் ஏற்படுவதற்கு ஏதோ ஒரு பொருத்தமான காரணம் மனிதரைவிட உயர்ந்த கடவுளிடம் இருக்கக் கூடும் என்றும், அதனை நம்மால் எப்போதுமே அறிந்து கொள்ள முடியாது என்றும் மதவாதிகள் கூறும் புரட்டு வாதங்களை எதிர்த்து முறியடிப்பதற்கு நாம் சிறிதும் அச்சப்படவோ, பின்வாங்கவோ, தயங்கவோ கூடாது. தான் இருப்பதை மக்கள் நம்பவேண்டும் என்று கடவுள் விரும்பினாலும், நம்மிடம் இருந்து, நாம் காணாதவாறு ஒளிந்து கொண்டு இருப்பதால்,  இயற்கையை விஞ்சிய ஆற்றல் கொண்ட கடவுள் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லாதநிலையில், நடந்தேறும் பேரழிவு போன்ற சோக நிகழ்ச்சிகள், மக்களுடன் உறவு கொண்டிருக்கவேண்டும் என்று விரும்பும், எல்லாம் வல்ல இறைவன் ஒருவர் இருக்கிறார் என்ற கருத்துடன் முரண்பட்டு நிற்கின்றன. நாத்திகம்தான் உண்மையானது என்னும்போது இந்த தெய்வம் ஒளிந்து விளையாடும் விளையாட்டு அதிகமாகவும், ஆத்திகம் உண்மையானது என்னும்போது குறைவாகவும் இருக்கும். முதலாவதாக, அத்தகைய ஒரு கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையே இல்லாமல் நாம் இருப்பதை இவ்வாறு  ஆதாரப்பூர்வமாக நியாயப்படுத்தியிருக்கிறோம்.

மேலும், கடவுள் என்று ஒருவர் இருந்து, அவர் எல்லாம் வல்லவராக இருந்திருந்தால்,  தனக்கு எல்லையில்லாத ஆற்றல் இருந்தும், பெரும் பேரழிவு ஏற்படுவதைத் தன்னால் தடுக்க முடியவில்லை என்பதை அவர் ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். அல்லது அத்தகைய பேரழிவு, பெருந்துன்பத்தினை நியாயப்படுத்தும் அளவு என்ன பெரும் நன்மையைத் தன்னால் செய்ய இயன்றது என்பதைக் கடவுள் கூறியிருக்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும், இத்தகைய பேரழிவு, பெருந்துன்பத்தினைத் தடுக்க எதுவுமே செய்ய முடியாத கடவுள் எப்படி எல்லாம் வல்ல, கருணை நிறைந்த கடவுளாக இருக்க முடியும்? தெளிவான நாத்திக வாதங்களின் நியாயத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டது.

வேறுவகையிலான நடைமுறை கொண்ட நம்பிக்கையைப் பின்பற்றுபவர்களுக்குக் காட்டப்படாத சலுகை, மென்மை, தனிக் கவனம் ஆகியவற்றைப் பெறுவதற்கு  மதநம்பிக்கையாளர்கள் தகுதி பெற்றவர்கள் என்று வலியுறுத்துவது அரசியல் சந்தர்ப்பவாதத்தின் காரணமாக மேற்கொள்ளப்படும் முடிவே அன்றி, உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது அல்ல. கடவுள் என்று ஒருவர் இருக்கிறார்  என்பதற்கு எதிரான வாதங்களின் முழு ஆற்றலையும், பாதிப்பையும் அடக்கி ஒடுக்குவதற்கு எந்த ஒரு நியாயமான காரணமும் இல்லை; இருக்க முடியாது. தங்களைப் போல் கடவுளை நம்பாதவர்கள் எல்லாம் நரகத்துக்குப் போவார்கள் என்று வெளிப்படையாக மதவாதிகள் கூறும்போது, எவ்வாறு சொர்க்கம் என்ற ஒன்றோ அல்லது நரகம் என்ற ஒன்றோ இல்லை என்று காரண காரியங்களுடன் நாம் வெளிப்படையாக விளக்கி நியாயப்படுத்தி வருகிறோம்.  நம்பிக்கையாளர்கள் பெற்றிருப்பது போன்ற அதே உரிமையுடன்  நாமும் நமது வாதங்களை முன் வைக்கிறோம்  என்பதால்  கோபம்கொண்ட நாத்திகர்கள் என்று நம் மீது குற்றம் சுமத்தப்பட்டால், அவர்களைப் பார்த்து கோபம் கொண்ட ஆத்திகர்கள் என்று நம்மாலும் குற்றம் சுமத்தமுடியும். மூடநம்பிக்கைகளில் இருந்து விடுதலை பெற்று, நல்ல சுதந்திரமான வாழ்க்கை முறையை அனுபவித்து வாழ்ந்து வரும் மற்றவர்களைப் போன்ற மகிழ்வான வாழ்வை வாழமுடியாதவர்கள் இந்த நம்பிக்கையாளர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *