கேள்வி : எல்லா மதங்களின் மீதும் சமநிலையில் நம்பிக்கை கொள்வதே உண்மையான மதச் சார்பற்ற கொள்கைக்கு அடையாளம் என்ற சோனியா காந்தியின் புதுவிளக்கம் குறித்து? _சா.கோவிந்தசாமி, பெரம்பலூர்
பதில் : நீண்டகாலமாக தவறாகச் சொல்லப்படும் விளக்கம் இது! மதச்சார்பற்ற என்ற சொல் தெளிவான சொல் ஆகும்! ‘Secular’ என்பதற்கு ஆங்கில அகராதிப்பொருள் மதத்திற்குச் சம்பந்தமில்லாத என்பதேயாகும். இப்போது சொல்லப்படும் தவறான விளக்கம் சர்.இராதாகிருஷ்ணன் போன்ற பார்ப்பனர்கள் அளித்த வியாக்யானம் ஆகும்!
கேள்வி : அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதை எதிர்க்கும் பார்ப்பனியம், ஆகம விதிகளையும் மீறி சிதம்பரம் கோவிலுக்குள்ளேயே காரில் போன சங்கராச்சாரியாரை மட்டும் எதிர்க்காதது ஏன்?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்
பதில் : அவாள் என்றால் சட்டம் – நீதி வளைந்து கொடுக்காதா என்ன? மனுவாதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்பதுதானே!
கேள்வி : தமிழகம் கொண்டாட வேண்டியது தமிழ்ப் புத்தாண்டா? ஆங்கிலப் புத்தாண்டா? இதில் எது, அ(நா)வசியம்?? – தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி
பதில் : தமிழகம் கொண்டாட வேண்டியது தமிழ்ப் புத்தாண்டைத்தான்! தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் ஆகும்!
கேள்வி : ரிசர்வ் வங்கியின் 2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் முடிவினால் கள்ள நோட்டு மற்றும் கருப்புப் பணப் புழக்கத்தை முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவர இயலுமா? _கி. கண்ணம்மா, வியாசர்பாடி
பதில் : ஒட்டகத்தின் மீது கொஞ்சம் வைக்கோலை எடுத்த கதை போன்றதுதான் இது!
கேள்வி : நீதியில்தான் மனு புகுந்து ஆட்சி செய்கிறார் என்றால், இப்போது நீதிபதி நியமனத்திலும் புகுந்து குழப்பம் செய்கிறாரே… அவரை விரட்டியடிக்க என்ன வழி?
_ ச. திராவிட முரசு, காஞ்சி
விழிப்புணர்வு! விழிப்புணர்வுதான்.
கேள்வி : எல்லாமே மோடி என்ற பா.ஜ.க.வின் வெற்றுக் கூச்சல், அக்கட்சிக்கு குறிப்பிட்டுக் கூறும் அளவுக்கு மக்களுக்கான கொள்கைகள் ஏதும் இல்லை என்பதை எடுத்துக்காட்டுவதாகத் தோன்றுகிறதே…?
_ கி.காவேரி, திருச்சி
பதில் : மோடியை அதிகம் விமர்சிக்காமல் அவரை தாராளமாகப் பேச விட்டாலே மோடியின் சரக்கு புரிந்துவிடும்! மோடியின் தடித்த நாக்கு அவரை வீழ்த்துவது உறுதி!
கேள்வி : வரும் மக்களவைத் தேர்தல் கூட்டணிக் குழப்பங்கள் பற்றி….?
_ சி.சுவாமிநாதன், ஊற்றங்கரை
பதில் : இன்றைய கட்சி அரசியலில் இது தவிர்க்க முடியாது; வேடிக்கை பார்த்து இளைப்பாறுங்கள்…Relax
கேள்வி : அரசியல் கட்சியாக செயல்பட விரும்பும் சிறு கட்சிகள் திராவிடர் கழகம் போல தொண்டு நிறுவனமாக, அறக்கட்டளை நிறுவனமாக செயல்படலாம். ஆனால் அவர்கள் செயல்படவில்லையே? – அ.திலீபன், சென்னை
பதில் : யாரையோ பார்த்துக் கேட்க வேண்டிய இக்கேள்வியை எங்களிடம் கேட்கிறீர்களே!
கேள்வி : ஜனநாயக வழியில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, தான் வகுத்ததே சட்டம், தன்னால் எதையும் செய்ய முடியும், பிறர் கருத்துகளைக் கேட்கத் தேவையில்லை என்ற போக்கு ஜனநாயக நெறிமுறைகளைத் தகர்ப்பதாக இல்லையா? – க.குமரன், திருவப்பூர்
பதில் : ஹிட்லர்கூட ஜனநாயக வாசல் வழி நுழைந்துதான் சர்வாதிகாரியாகி, ஜனநாயகத்தை இடித்துத் தரைமட்டமாக்கினார்!
கேள்வி : டில்லி மாநில ஆட்சியையும் அதன் கடந்த ஒருமாத கால செயல்பாட்டையும் எப்படி மதிப்பிடுகிறீர்கள்? _ கோ.தயாளன், குயப்பேட்டை
பதில் : சுவையான, ரசிக்க வேண்டிய அரசியல் தெருக்கூத்து!