கேள்வி: ஒரு பகுத்தறிவாளியாக, ஈழ ஆதரவாளராக உங்களை அடையாளப்படுத்திக்கொள்வது, திரைத்துறையில் என்னவிதமான சிரமம், சங்கடத்தை உங்களுக்கு ஏற்படுத்தியது, ஏற்படுத்துகிறது?
பதில்: நிறைய விஷயங்கள் இருக்கு. ஒன்னு ரெண்டை மட்டும் சொல்றேன். தேங்காய்ல சூடத்தை வெச்சுக் கொளுத்தி கேமராவுக்குச் சுத்தி எடுத்துட்டு வருவாங்க, நான் எடுத்துக்க மாட்டேன்னு சொல்வேன். அப்ப சிலர், எங்க மனசு புண்படுமேனு நினைச்சாவது இந்தக் கற்பூரத்தைத் தொட்டு கண்ல ஒத்திக்கலாம்லனு கேப்பாங்க. உடனே, என் மனசு புண்படும்கிறதுக்காக நீங்க தேங்காய் சுத்தாம இருக்கலாம்லனு திருப்பிக் கேட்டுடுவேன்.
இதேபோல சினிமாவுல இன்னொரு மிகப் பெரிய காமெடி இருக்குது. ஒரு காட்சியில செத்துப்போற மாதிரி நடிச்சா, அப்படி நடிச்சு முடிச்ச பிறகு கேமராவை ஒருமுறை பார்த்து சிரிக்கச் சொல்வாங்க. அதாவது, ஆள் சாகலை… திரும்ப எந்திரிச்சுச் சிரிச்சுட்டார்னு விதியை ஏமாத்துறோமாம். ஆனா, நான் சிரிக்க மாட்டேன்னு சொல்வேன். இல்ல சார் சிரிச்சிடுங்கனு விடாப் பிடியா நிப்பாங்க. சிரிக்காட்டி நான் நிஜமாவே செத்துடுவேன்னு பயப்படுறீங்களா?னு கேட்பேன். யார் என்ன சொன்னாலும் சிரிக்க மாட்டேன்னு உறுதியா இருப்பேன். எங்க போனாலும் எனக்கு இது பெரிய போராட்டமா இருக்கும். அதே மாதிரி ஈழப் பிரச்சினையில், மனசுல அவ்வளவு ஆதங்கம், கோபம், சோகம் இருக்கு. அதை எல்லாத்தையும் மேடையில் கொட்டித் தீர்த்தால் கண்டிப்பா எனக்கு ஜெயில்தான். அப்படி நான் ஜெயில், கோர்ட், கேஸ்னு அலைஞ்சேன்னா தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவாங்க. அதாவது மனசுல இருக்கிறதைக் கொட்டித் தீர்க்காமல் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டிய சூழல். அது என் மனச்சாட்சியை ரொம்ப உறுத்தும்!
கேள்வி: பெரியார் அணிந்த மோதிரம் உங்களிடம் எப்படி வந்தது?
பதில்: பெரியார் படத்தில் நடிச்சதுக்குச் சம்பளம் வேண்டாம்னு சொல்லிட்டேன். 60 நாட்கள் அந்தப் படத்துல நடிச்சேன். படத்தின் 100_ஆவது நாள் விழாவில், இந்த மோதிரம் பெரியார் தன் 19_ஆவது வயசுல விரல்ல போட்டுக்கிட்டது. இன்னைக்குக் கணக்குப் போட்டா மோதிரத்துக்கு சுமார் 110 வயசு. இதை சத்யராஜுக்குப் பரிசளிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்னு சொல்லி, கி.வீரமணி அய்யா கலைஞர் கையால் எனக்கு அணிவிச்சார். இந்த மோதிரத்தின் மீது பலருக்கும் கண் உண்டு. நானும்கூட ஒரு கண் வைத்திருந்தேன். ஆனாலும், இந்த மோதிரம் தம்பி சத்யராஜ் கைக்குப் போனதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சினு தலைவர் கலைஞரும் சொன்னார். அப்படிப் பார்த்தா ஹாலிவுட் நடிகர்கள் பிராட் பிட், டாம் குரூஸைவிட உலகத்திலயே அதிக சம்பளம் வாங்கிய நடிகன் நான்தான். ஏன்னா, பெரியாரின் மோதிரம் அந்த அளவுக்கு விலை மதிப்பில்லாதது!
– நன்றி: ஆனந்த விகடன், 15.1.2014