Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தூங்கும் கடவுளுக்கு தங்கம் ஏன்?

– கவிஞர் கலி.பூங்குன்றன்

இந்த உலகத்தைப் படைத்தவன், சகலமும் அவனுக்கே உரியது என்று ஒரு பக்கத்தில் சொல்லிக்கொண்டு, இன்னொரு பக்கத்தில் கோவிலுக்குக் காணிக்கை கொடுப்பது _ உண்டியல் வைத்துப் பணம் வசூல் பண்ணுவது, பூஜை செய்வதற்கும், வழிபடுவதற்கும்கூட தட்சணை தண்டுவது என்பதெல்லாம் எதைக் காட்டுகிறது?

கோவில் என்ற ஒன்றை வைத்து பணம் பண்ணுவது, வியாபாரம் செய்வது அல்லாமல் வேறு என்னவாம்?

வசதிவாய்ப்புள்ளவர்கள், பதவியாளர்கள் என்றால் கோவிலில் கடவுளைத் தரிசிக்க முன்னுரிமை கொடுப்பது எல்லாம் எந்த வகையைச் சேர்ந்தது?

நான் இதைத் தருகிறேன் கடவுளே _ நீ இதைத் தா! என்று வேண்டுவது எல்லாம் கொடுக்கல் வாங்கல் பிசினஸ் அல்லாமல் வேறு என்னவாம்?

சிதம்பரம் நடராசன் கோவில் பிரச்சினைகூட என்ன? நடராசன்மீது கொண்ட அளவற்ற பக்தியினாலா தீட்சதர்கள் திருநடனம் புரிகிறார்கள்? கோவில் மூலம் கொள்ளை லாபம் குவித்து _ அது பறிபோகிறதே என்ற ஆத்திரமும், ஆற்றாமையும்தானே தீட்சதர்களின் கூக்குரலுக்கெல்லாம் காரணம்! மறுக்க முடியுமா?

நவீன காலத்திற்கேற்ப எந்த எந்த வகைகளில் எல்லாம் பணம் பண்ணுகிறார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது. ஏழுமலையானுக்கு செல்போனில் காணிக்கை என்ற ஒரு தகவல் வெளிவந்துள்ளது. (தி இந்து _ தமிழ் _ 19.1.2014 பக்கம் 16)

அந்தத் தகவல் வருமாறு:

திருப்பதி: உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையானுக்கு செல்போனில் காணிக்கை செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பதியில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், நகை உள்ளிட்டவற்றை உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். அதன்படி ஆண்டுக்கு காணிக்கை மூலம் மட்டும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.500 கோடி முதல் ரூ.600 கோடி வரை வருமானம் கிடைத்து வருகிறது. நேரடியாக வரும் பக்தர்கள் மட்டும் கோவில் பிரகாரத்தில் உள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி வந்தனர். ஆனால் நேரடியாக கோவிலுக்கு வரமுடியாத பக்தர்களும் காணிக்கை செலுத்தும் வகையில் தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பக்தர்கள் இ_உண்டி திட்டம் மூலம் தங்களது செல்போன் மூலமாக திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்தலாம். இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆந்திரா வங்கி இந்தச் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. மொபைல் பேங்கிங் மூலம் (அய்.எம்.பி.எஸ்) இந்தச் சேவையை பக்தர்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்
_ தி இந்து, 19.1.2014 (பக்கம் 16)

மேற்கண்ட தகவல் எதைக் காட்டுகிறது? திருப்பதி ஏழுமலையான் என்ற ஒரு உருவத்தை வைத்து புதுப்புது யுக்திகளைப் பயன்படுத்திப் பணம் திரட்டுவதுதானே இதன் பின்னணியில் இருக்கும் இரகசியம்?

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்றால் உச்ச நீதிமன்றம்வரை சென்று ஆகமங்களுக்கு விரோதம் என்று அரட்டை அடிக்கும் இந்த அய்யன்மார்கள் அய்யங்கார்மார்கள், இப்படி செல்போன் மூலம் காணிக்கை செலுத்துவதை எந்த ஆகமம் அனுமதிக்கிறது என்று சொல்லட்டுமே பார்க்கலாம்!

கோவில் என்பதெல்லாம் ஜாதியைக் காப்பாற்றுவதும், பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதும், அவற்றின் மூலம் மக்களின் பணத்தைச் சுரண்டுவதும்தான் நோக்கமே தவிர, பக்தியாவது மண்ணாங்கட்டியாவது?

திருப்பதி ஏழுமலையானைப் பொருத்தவரை, அதன் ஆண்டு வருமானம் 650 கோடி ரூபாய். நாட்டின் பல்வேறு வங்கிகளிலும் வைக்கப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சொந்தமான தங்கத்தின் அளவு 3 ஆயிரம் கிலோ! வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள வைப்புத் தொகை ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டுமாம்.

ஆண்டு ஒன்றுக்கு 300 முதல் 350 கிலோ தங்கம், 500 கிலோ வெள்ளி காணிக்கையாக வந்து சேர்கிறது.

பல்வேறு காலங்களில் மன்னர்களால் இந்தக் கோவிலுக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகளுக்குச் சரியான வகையில் கணக்குகள் கிடையாது.

குறிப்பாக கிருஷ்ணதேவராய மன்னன் இந்தக் கோவிலுக்கு அளித்த ஆபரணங்கள் அளவிட முடியாதது. இத்தனைக்கும் ஆபரணங்களைச் சோதனை செய்யும் பிரிவு ஒன்று தனியாக அக்கோவிலின் அறநிலையத்துறை சார்பில் இயங்கி வருகிறது.

என்றாலும், அவர்களின் கண்களிலேயே மண்ணைத் தூவி கொள்ளைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மன்னர்காலக் கல்வெட்டுகள், பல்வேறு நன்கொடைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், கிருஷ்ண தேவராயர் காலத்தில் அளிக்கப்பட்ட நன்கொடைகள் பற்றியெல்லாம் எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று அத்துறையினர் கையை விரிக்கிறார்கள்.

91 முத்துக்கள் அடங்கிய நெக்லஸ் ஒன்று மன்னர் கிருஷ்ண தேவராயரால் வழங்கப்பட்டுள்ளது.

முறையான சொத்துப்பட்டியல் தயாரிக்கப்படாதவரை மன்னரால் வழங்கப்பட்ட ஆபரணங்களை உறுதிப்படுத்த முடியாது என்று கூறியுள்ளார் வெங்கடேசுவரா பல்கலைக்கழகத்தின் தொல்பொருள்துறைப் பேராசிரியரான கிரண் கிராந்த்.

ஆயிரம் தங்கக் காசுகள், ஒரு முத்து நெக்லஸ், மரகதம் பதிக்கப்பட்ட வைரப் பதக்கம் என்று நீண்ட பட்டியலைப் படிக்கிறது தொல்பொருள்துறை.

ஒருவேளை நன்கொடைகளின் உண்மையான மதிப்பைக் கண்டுபிடித்து, மாயமானதோடு ஒப்பிட்டுப் பார்த்தால் உலகிலேயே பெரும் மோசடி வெளிப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று தொல்பொருள் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

ஒரு பக்கம் பகற்கொள்ளை _ இன்னொரு பக்கமோ செல்போனில் காணிக்கை என்கிற அளவுக்குச் சுரண்டல்.

இன்னொரு பக்கம் இந்தியாவில் 77 சதவீத மக்கள் நாள் ஒன்றுக்கு வருமானம் ரூ.20 என்கிற பரிதாப நிலை.

குழவிக் கல்லுக்காகக் கோடிக்கணக்கில் பணமும், தங்கமும் கோபுரமாகக் குவிந்து கிடக்கிறது!

உலகிலேயே தங்கம் இந்தியாவில்தான் அதிகம் குவிந்து கிடப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்தியாவில் கோவிலில் கொட்டிக் கிடக்கும் தங்கத்தை உலக மார்க்கெட்டுக்குக் கொண்டு வந்தால் தங்கத்தின் விலை படுபாதாளத்துக்குப் போகும்.
(தி இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி 5.4.1976)

பொருளாதார நிபுணர்தாம் நம் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங். மிகப்பெரிய பொருளாதார மேதைதான் மாண்டேக்சிங் அலுவாலியா. ஏன் இதுபற்றி சிந்திக்கக் கூடாது? கோவிலுக்குள் தூங்கும் தங்கம் மக்கள் நலனுக்குச் செலவிட்டால் என்ன? ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்ற ஒரு சொலவடையும் உண்டே!

 

 


ஏழுமலையானுக்கு! கோவிந்தா, கோவிந்தா!

 

ஏழுமலையானுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான நகைகள் மோசடி!

தங்கமுலாம் பூசப்பட்ட செப்பு நகைகளை வைத்துவிட்டு ஒரிஜினல் நகைகளைக் களவாடிவிட்டனர். (மாலைமுரசு 26.8.2009)

2009 ஆகஸ்ட் 5ஆம் தேதி தேவஸ்தான கமிட்டி கூடியது. அந்தக் கூட்டத்தில் விஜிலென்ஸ் அதிகாரி ரமணகுமார் அறிக்கை ஒன்றைக் கொடுத்தார். அதிரடியான தகவல்கள் அனைவரையும் வியர்த்துப் போகச் செய்தது.

ஒவ்வொரு வருஷமும் ஏழுமலையானுக்குக் காணிக்கையாக வந்து குவியும் தங்க நகைகளை  உருக்கி, இரண்டு, அய்ந்து, பத்துக் கிராமில் ஏழுமலையான் உருவம் பொறித்த தங்க டாலர்களாக விற்பனை செய்யப்படுகிறது. 2006ஆம் ஆண்டு அய்ந்து கிராம் கொண்ட முந்நூறு தங்க டாலர்களை உரிய ரசீது இல்லாமல் மோசடியாக விற்பனை செய்ததாக விற்பனைப் பிரிவில் கே.வெங்கடாசலபதி (இவர் பெயரும் வெங்கடாசலபதிதான் – கவனிக்கவும்.) என்பவர் மீது புகார் எழுந்தது. இந்த மோசடிபற்றி விசாரிக்க தேவஸ்தானம் உத்தரவிட்டது. அதன்பேரில் 2001லிருந்து 2006வரை இப்படி மோசடி நடந்திருப்பது தெரிய வந்திருக்கிறது என்று கூறினார்.

நெற்றியில் நெடுநாமம்! தொப்புள் வரை தொங்கும் டாலர் _- இவருக்குப் பெயர் டாலர் சேஷாத்திரியாம். ஆனால் இந்த மெகா திருடர் மீது ஒரு சிறு துரும்பும் பட்டுவிடவில்லை. (அவர் என்ன ஆ.இராசாவா?)

மேற்கண்ட தகவல்களை எல்லாம் விடுதலையில் வெளியிடவில்லை; சாட்சாத் ஆனந்த விகடன் குழுமத்தின் தொப்புட் கொடியிலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் (17.8.2009) வெளியிட்ட தகவல்கள்தான் இவை!

கீழ்த் திருப்பதி ஸ்ரீகோதண்டராமர் சுவாமி கோவிலின் பிரதான அர்ச்சகர் மூலவரின் நகைகளை அடகு வைத்த குட்டும்கூட உடைபட்டதே!

சினிமா நடிகரும் பிரஜாராஜ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான சிரஞ்சீவி சட்டமன்ற உறுப்பினர்கள் 17 பேர்களுடன் நடந்து சென்று கோவிந்தா கடவுளின் நகைகள் கோவிந்தா ஆகாமல் காப்பாற்றுங்கள் என்று கூக்குரல் போட்டாரே!

தெலுங்கு தேசக் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதல் அமைச்சருமான சந்திரபாபு நாயுடுவும் திருப்பதி கோவில் விசாரணையை சி.பி.அய்.யிடம் விடவேண்டும் என்று சொன்னாரே!

நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் பெஜரிவாட கோபால் ரெட்டி திருப்பதி கோவில் நகைக் கண்காட்சி ஒன்றை நடத்த வேண்டும் என்ற யோசனை ஒன்றைத் தெரிவித்தார். அதற்காக சோழர், பல்லவர், கிருஷ்ணதேவராயர், விஜய நகர மன்னர் போன்றவர்கள் திருப்பதி ஏழுமலையானுக்கு நன்கொடையாக அளித்த உபயங்களின் விவரத்தைத் தெரிவிக்குமாறு திருப்பதி தேவஸ்தானத்துக்கு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு போட்டார். அவற்றிற்குப் பதில் தர முடியாது என்று திருப்பதி தேவஸ்தானம் பதில் எழுதியது. மன்னர் தன் ஆட்சிக் காலத்தில் ஏழுமுறை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்துள்ளார்.

1513 பிப்ரவரி 10 அன்று இரு மனைவிகளுடன் (திருமலா தேவி, சின்னமா தேவி) வந்தவர் ஏழுமலையானுக்கு காணிக்கையாக அளித்தவை: நவரத்தின கிரீடம் ஒன்று, வெள்ளித் தட்டுகள் 25, தங்கக் கிண்ணங்கள் 2.

1513 மே 2 _ மற்றும் ஜூன் 13 அளித்த காணிக்கை:  உற்சவருக்கு மூன்று தங்க மணிமகுடம்.

1514 ஜூலை 6 _ அளித்த காணிக்கை: 30 ஆயிரம் வராகன்களில் கனகாபிஷேகம்!
1515: ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட 621 தோரணம் காணிக்கை.

1518 செப்டம்பர் 9: கோவில் கருவறை விமானக் கோபுரத்தில் 30 ஆயிரம் வராகனில் தகடு பதிப்பித்தார்.

1521 பிப்ரவரி 17: நவரத்தினக் கிரீடம் சூட்டப்பட்டது. விலை மதிப்பில்லா வைரப் பீதாம்பரம் பக்தியின் பரிசு.

கிருஷ்ணதேவராயர் முடிசூட்டிக்கொண்ட 500ஆவது ஆண்டினையொட்டி பெருவிழா எடுப்பது என்றும் அதுபொழுது மன்னன் கிருஷ்ணதேவராயன் ஏழுமலையானுக்கு அளித்த நகைகளைக் கண்காட்சியில் வைப்பது என்றும் தேவஸ்தானம் முடிவு செய்த நிலையில்தான் திடுக்கிட வைக்கும் கொள்ளைகள் அம்பலத்திற்கு வந்தன. அந்த நகைகளையெல்லாம் உருக்கி டாலர்களாக மாற்றி விற்றுவிட்டோம் என்று சொன்னார்களே பார்க்கலாம். (எல்லாம் டாலர் சேஷாத்திரிகளுக்குத்தான் வெளிச்சமோ வெளிச்சம்!)

இப்படி பக்தர்கள் காணிக்கையாகக் கொடுத்தவற்றை யாரோ சில பார்ப்பனர்கள் கொள்ளையடிப்பதற்குப் பதிலாக அவற்றை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தினால் என்ன? என்று கேள்வி கேட்டால் அடேயப்பா இந்தப் பார்ப்பனர்களும், அவர்களின் ஊடகங்களும் போடும் கூக்குரல் இருக்கிறதே _- அது என்ன சாதாரணமா?

 


 

திருப்பதி நாமக் கடவுளின் இருப்பு

நிலம்    :    ரூ.15,000 கோடி

கட்டடங்கள்    :    ரூ.1,500 கோடி

நகைகள்    :    ரூ.30,000 கோடி

நிதி    :    ரூ.20,000 கோடி

–  இந்தியா டுடே 4.10.2006

2006இல் இந்த மதிப்பு என்றால் 2014இல் எத்தனை மடங்கு? கணக்குப் போட்டுப் பாருங்கள்.