வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேர் (பிலேந்திரன், சைமன், மீசை மாதய்யா, ஞானப்பிரகாசம்) உள்பட, இந்தியா முழுவதிலும் உள்ள மரண தண்டனை பெற்ற குற்றவாளிகள் 13 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து 21.1.2014 உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு.ப.சதாசிவம் அவர்கள் தலைமையிலான மூன்று நீதிபதிகளின் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
இந்த மனிதாபிமானத் தீர்ப்பு, நீதி தவறாது குற்றவாளிகளுக்கு மறுக்கப்பட்ட நியாயம் – _ நீதி மீண்டும் மீட்டெடுக்கப்பட்ட வரலாற்றுப் பெருமைமிக்க தீர்ப்பு என்பதால், தலைமை நீதிபதி மனிதநேயர் ஜஸ்டீஸ் ப.சதாசிவம் அவர்களையும், அவரது அமர்வில் இடம்பெற்ற நீதிபதிகளையும் உளம் உவந்து பாராட்டி மகிழ்கிறோம்!
இந்த நாகரிக யுகத்தில் மரண தண்டனை நீடிப்பதே ஒரு காட்டுமிராண்டி கால சிந்தனையாகும். அது நீடிக்கக் கூடாது என்பதே உலகின் பெரும்பாலான மக்களின், நாடுகளின் மனிதப் பற்றாளர்களின் மகத்தான கருத்தாகும்.
ஏனோ, இதில் இந்திய அரசு பிடிவாதம் காட்டுகிறது? நமக்கே புரியவில்லை!
கைக்குக் கை, காலுக்குக் கால், உயிருக்கு உயிர் என்ற(Code of Hammurabi ) அமுராபி அரசரின் சட்டம் இன்றைய நிலையில், நயத்தக்க நாகரிகம் உடையவர்களால் ஏற்கப்படத்தக்கதல்ல.
தண்டனைகள், மனிதர்கள் மேலும் கொடூரமான குற்றவாளிகளாக சமூகத்தில் மாறும் வகையில் அமையாமல், திருந்தும் வகையிலேயே அமைய வேண்டும் என்பதே நமது கருத்தாகும். அது ஒருபுறமிருக்கட்டும்!
கருணை காட்ட மனு போடும் உரிமை _- சட்டப்படி தூக்குத்தண்டனை அளிக்கப்பட்ட கைதிகளின் உரிமையாகும்.
அதனை உண்டு, இல்லை என்று மத்திய அரசு பரிசீலித்து உடன் பதில் அளிக்காமல், 9 ஆண்டுகள் கிடப்பில் போட்டு, 2013 ஆம் ஆண்டிலா நிராகரிப்பது? மன இறுக்கம், மன உளைச்சல், மனச் சிதைவுக்கு இட்டுச் செல்லுகிறதே! கைதிகள் சிலரை மனநோயாளிகளாகவே ஆக்கிவிட்டதே! இதைவிட மனித உரிமைப் பறிப்பு வேறு உண்டா? மற்ற சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரும் போட்ட கருணை மனு 11 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு, 2011 ஆம் ஆண்டில் நிராகரிக்கப்பட்டது கொடுமையல்லவா?
மேலும் இரண்டாண்டுகள் என்றால், 13 ஆண்டுகளில் அவர்களது மனநிலை எப்படிப்பட்ட அவலம், வேதனை, உறுத்தல், விரக்தி இவைகளுக்கு ஆளாகியிருக்கக்கூடும்.
இதையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து, மிகுந்த மனித நேயத்துடன், தாமதிக்கப்பட்ட நீதி இறுதிவரை மறுக்கப்பட்ட நீதியாகவே அமைந்துவிடக்கூடாது என்ற நீதி பரிபாலனக் கண்ணோட்டத்தில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு.ப.சதாசிவம் அவர்களும், சக நீதிபதிகளும் சட்டத்தின் மரியாதையை, இதன்மூலம் காப்பாற்றியுள்ளார்கள்; இது ஏதோ மனிதாபிமானத்தை மட்டும் கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்பாக யாரும் விமர்சிக்க முடியாது.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
1. கருணை மனுவை நிராகரிக்க காலம் தாழ்த்துவது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைப்பதற்கு அடித்தளமாக அமையும்.
2. மரண தண்டனைக் கைதிகளுக்கு சட்ட உதவி கிடைக்க, சிறைத் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
3. ஒரு கைதியின் (மரண தண்டனை பெற்ற கைதி) கருணை மனு குடியரசுத் தலைவராலோ அல்லது ஆளுநராலோ நிராகரிக்கப்பட்டால், அந்தத் தகவல் அவரது குடும்பத்தினருக்குக் கண்டிப்பாக தெரிவிக்கப்படல் வேண்டும்.
4. தண்டனையை நிறைவேற்றும்முன் அந்தக் கைதி தனது குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும்.
5. மரண தண்டனைக் கைதி உள்பட யாராக இருந்தாலும், தனிச் சிறையில் அடைத்து வைப்பது சட்ட விரோதம். சிறைகளில் அந்த நடைமுறையைக் கடைப்பிடிப்பது கூடாது.
6. மனச் சிதைவால் பாதிக்கப்பட்டுள்ள கைதிகளானால் அவர்களுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது.
மிக வரலாற்றுப் பெருமையும், மிகச் சிறந்த மனித நேயமும் ஒளிரும் மிக எடுத்துக்காட்டான நெறிமுறைகளைக் கொண்ட இத்தீர்ப்பின் அடிப்படையில் உள்ள சிறை நடைமுறைகள் திருத்தப்படுதல் அவசியம், அவசரம்!
இதே அடிப்படையும், அதற்கு மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, தூக்குத் தண்டனை அளிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் போன்றவர்களின் விசாரணை அதிகாரிகளின் மனந்திறந்த பேட்டிகளுக்குப் பிறகு, மறுஆய்வுக்கு உரியவையே!
உச்ச நீதிமன்றத்தின் நெறிமுறைகள் அவர்களுக்கும் திறவுகோலாக அமையும் என்று நாடே எதிர்பார்க்கிறது!
ஏற்கெனவே அவர்கள் ஆயுள் தண்டனைக் குற்றவாளிகளின் வழமையான அத்தண்டனைக் காலத்திற்குமேல் சிறை வாழ்க்கையைக் கழித்துவிட்டவர்களானபடியால், அவர்களின் விடுதலை இன்றியமையாதது! இது சட்டப்படியும், மனிதாபிமானப்படியும் சரி என்பதால், இந்தப் புதிய வெளிச்சத்தின்மூலம், சட்ட இருட்டறையில் இருந்து அவர்கள் வெளியே வந்து வாழட்டும்!
பத்துக் குற்றவாளிகள் தப்பித்தாலும்கூட, ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுதான் நமது குற்றவியல் சட்டத்தின் அடிப்படை என்பதால், பேரறிவாளன் உள்பட மற்றவர்களும் வெளியே வருவது அவசியமாகும்.
– கி.வீரமணி,
ஆசிரியர்