Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : விடுதலைப் புலிகளின் பயிற்சியிடங்கள், நினைவிடங்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்படும் என கோத்தபய ராஜபக்ஷே அறிவித்துள்ளது பற்றி?
_ வெங்கட. இராசா, ம.பொடையூர்

பதில் : பலே! பலே! _ நாம் சொல்லிவந்த உண்மைக்கு இதுவும் ஆதாரமாகிறது; விடுதலைப் புலிகள் புதைக்கப்படவில்லை _ விதைக்கப்பட்டுள்ளார்கள் என்பதே அது!

விடுதலைப்புலிகளின் பயிற்சி இடங்கள், நினைவிடங்கள் அரசு உடைமையானால், ஏதோ ஒரு வகையில் இலங்கையில் விடுதலைப்புலிகள் ஆட்சி செய்கிறார்கள் என்றுதானே ஆகும்! அட, சிங்கள அறிவாளிகளே?

கேள்வி : காவியக் கவிஞர் – வாலிபர் வாலி அவர்களின் மறைவு…?
_ தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி

பதில் : கலை உலகிற்கும், தமிழ் இலக்கியத்திற்கும் பெரும் இழப்பு! எமக்கு ஒரு பண்பான நண்பரை இழந்த பேரிழப்பு!!

கேள்வி : நாள்தோறும் ரூ.28/- சம்பாதிப்பவர்கள் ஏழைகள் இல்லை என்ற திட்டக்குழுவின் கருத்துக் குறித்து? – வ.சிந்து, ஆவூர்

பதில் : மான்டேக்சிங் அலுவாலியாவைவிட அய்க்கிய முன்னணி அரசுக்குக் கடும் எதிரி வேறு யாரும் இல்லை என்பதை நிரூபணம் செய்யும் ஆதாரம் இது!

கேள்வி : தமிழில் படித்தால் சட்டி சுரண்டுகிற வேலைகூட கிடைக்காது என்கிறாரே சோ, அப்படியானால் துக்ளக் இதழைத் தமிழில் வெளியிட்டு, தமிழர்களின் சட்டியை இவர் சுரண்டுகிறாரா?

_ உ. கோ. சீனிவாசன், திருப்பயற்றங்குடி

பதில் : சமஸ்கிருதத்தில் துக்ளக் நடத்தினால் எதைச் சுரண்டுவார்? தமிழால் பிழைத்துக் கொண்டே தமிழைக் கேலி செய்கின்றாரே என்று துக்ளக் வாங்கிப் படிக்கும் தமிழர்களுக்குச்  சொரணை வரவேண்டும்.

கேள்வி : உலகில் வளர்ந்த நாடுகளெல்லாம் மொழி அடிப்படையிலேயே அமைந்ததால்தானே பெரிய வளர்ச்சி கண்டுள்ளன. (ஜெர்மன், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான், சீனா). ஆந்திரா போன்ற மாநிலங்களைப் பிரிப்பதால் மக்களுக்கு நன்மை விளையுமா? _ இல. சங்கத்தமிழன், செங்கை

பதில் : தெலுங்கானா பிரிவினை நீண்டநாள் கோரிக்கை _ ஏற்கெனவே தனியே இருந்த பகுதிதான்!

சிறிய மாநிலங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்! இது நாட்டுப் பிரிவினை அல்லவே! உட்கட்டமைப்பு மாற்ற ஏற்பாடுதானே! பின் ஏன் தேசியங்களும் சர்வதேசியங்களும் அலறுகின்றன என்று புரியவில்லை _ அரசியல் சட்டமே அதை அனுமதிக்கிறதே!

கேள்வி : உணவுப் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றுவதில் பா.ஜ.க.வின் நிலை முன்னுக்குப்பின் முரணாக உள்ளதே?
_ இரா. சரவணா, பாப்பையாபுரம்

பதில் : பல பிரச்சினைகளில் பா.ஜ.க. இப்போது முன்னே பார்த்தால் நாயக்கர் குதிரை -_ பின்னே பார்த்தால் ராவுத்தர் குதிரை என்று சாட்சியம் சொன்ன கதைதான்!

கேள்வி : தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை எழுப்புகிறார்களே? – ச. அன்பரசி, திருச்சி

பதில் : அப்படியாவது ஏதாவது பெரிய பதவி நாற்காலி தம் கட்சிக்குக் கிடைக்காதா என்ற நப்பாசை!

கேள்வி : தனி தெலுங்கானா அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கும் மத்திய அரசு, தமிழ்நாட்டின் நீண்ட நாளைய கோரிக்கையான மாநில சுயாட்சிக்கு ஒப்புதல் வழங்க காலதாமதம் செய்வது ஏன்?

_ நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

பதில் : தெலுங்கானா வெறும் மாநிலம்தான். அது ஒன்றும் மாநில சுயாட்சியின் மலர்ச்சி அல்ல! நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

கேள்வி : ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தடுக்க வழியே இல்லையா?
_ அ.காவேரி, சேலம்

பதில் : ஏன் வழி இல்லை _ உண்டு _ மனம் இல்லையே!

கேள்வி : நிரந்தரத் தீர்வு காணாமல், காவிரி மேலாண்மை வாரியம் தற்போது தேவையில்லை என்ற உச்ச நீதிமன்றத்தின் கூற்று எதனைக் காட்டுகிறது? _ த. நெடுஞ்செழியன், மதுரை

பதில் : உச்ச நீதிமன்றத்தின் குழப்பத்தின் வெளிப்பாடு இது! இறுதித் தீர்ப்பு வந்துவிட்டதன் பின்தான் இந்த நிரந்தர ஏற்பாடு தேவைப்படுகிறது! புரிந்து கொள்ளுங்கள்!