மனிதன் தோன்றியபோதே விளையாட்டுகளும் தோன்றியிருக்க வேண்டும். இடப் பெயர்வு ஏற்படும்போது மனிதன் நிச்சயம் ஓடியிருப்பானே. உடலுக்கு வலு சேர்க்க உருவானவை விளையாட்டுகள். உலகின் ஒவ்வொரு பகுதி நிலப்பரப்புக்கும் அந்தந்தத் தட்பவெப்ப நிலைக்கேற்ற விளையாட்டுகள் உருவாயின. வெப்ப நாடுகளில் உள்ள விளையாட்டுகள் குளிர் நாடுகளில் இருந்திருக்காது. நிலங்களைக் கடந்து மனிதன் உலகை வலம் வந்தபோது தனது விளையாட்டை, தான் சென்ற இடத்திலும் விளையாடினான். அப்படி வந்ததுதான் கிரிக்கெட் என்னும் சோம்பேறி விளையாட்டு. (11 முட்டாள்கள் விளையாடுவதை 11 ஆயிரம் முட்டாள்கள் பார்க்கிறார்கள் என்றார் அறிஞர் பெர்னாட்ஷா)
வெள்ளைக்காரன் அவன் தனது குளிர் நாட்டின் மிகக் குறைந்த வெப்பக் காலத்தில் அதனை அனுபவிக்க கிரிக்கெட்டைக் கண்டுபிடித்தான். பல நாட்கள் வெயிலில் நின்று விளையாடும் வகையில் அதனை உருவாக்கினான். அவன் வணிகம் செய்ய இந்தியா வந்தான். வரும்போது கிரிக்கெட் மட்டையையும் கொண்டுவந்தான். விளைவு இந்தியர்களும் (அதாவது மேல்தட்டு இந்தியர்கள்) கிரிக்கெட்டைக் கற்றுக் கொண்டனர்.
இந்திய அணியும் உருவானது. ஆனால், அதில் உயர்ஜாதியினர் மட்டுமே இருப்பார்கள். விளையாட்டிலும் வர்ணாஸ்ரமத்தைக் கடைப்பிடித்தார்கள். இந்த மண்ணின் விளையாட்டுகளை மண்ணின் மைந்தர்களே விளையாடிக் கொண்டிருக்க, அயல் மண்ணின் விளையாட்டை உயர் தட்டினர் எடுத்துக் கொண்டனர். அதற்குக் காரணம் உண்டு. அதிகம் ஓடியாடிக் களைக்க வேண்டியதில்லை; நின்றுகொண்டே மட்டை-யால் ஓங்கி அடித்தால் போதும்.
அதே நேரம், அயல் மண்ணில் இருந்து வந்த மற்ற விளையாட்டுகளை இந்த மண்ணின் மைந்தர்கள் கற்றுக்கொண்டு விளையாடினர். அவையாவும் உடல் வலுவை உணர்த்து-வதாகவும், நன்கு ஓடியாடி வியர்க்க விறுவிறுக்க ஆடுவதாகவும் இருந்தன என்பதைக் கவனிக்கவேண்டும்.
கால்பந்து, வளைகோல் பந்து, கைப்பந்து, கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகள் குறிப்பிட்ட நேரம் முழுதும் ஓடிக்கொண்டே இருக்கவேண்டிய விளையாட்டுகள். இதன் மீது நாட்டம் மண்ணின் மைந்தர்களுக்கு வந்த்தில் ஆச்சரியம் இல்லை. காரணம் வேளாண்மை மரபில் வந்த உழைப்பாளிகள். அதனால் நமது சடுகுடு, சிலம்பம், ஓட்டப்பந்தயம் ஆகியவற்றோடு இவற்றையும் ஏற்றனர்.
கல்வியில் வேலைவாய்ப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்டது போல ஒடுக்கப்பட்டவர்கள் ஆடிய விளையாட்டுகளையும் இந்திய ஆளும் வர்க்கம் புறக்கணித்தது. இன்னும் புறக்கணித்து வருகிறது. விளையாட்டுத்துறையிலும் பார்ப்பன-பனியாக் கூட்டணி ஒடுக்கப்பட்டவர்களை நுழையவிடவில்லை. இந்த விளையாட்டுகளுக்கு போதிய கவனம் தரப்படவில்லை. மாறாக உயர்தட்டினரின் கிரிக்கெட்டுக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 1970 களில் கிரிக்கெட் விளையாட்டு இந்தியாவின் தேசிய விளையாட்டு போல முன்னிறுத்தப்பட்டது. (இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி) தொலைக்காட்சி வராத அந்த நாட்களில் வானொலியில் கிரிக்கெட் வர்ணனைகளைக் கேட்பது ஒரு ஃபேஷன் ஆனது. காதில் டிரான்சிஸ்டர் ரேடியோவை வைத்துக் கொண்டு ரன்னிங் கமெண்ட்ரி கேட்பார்கள். அந்தக் காட்சிகள் சினிமாக்களில் காட்டப்-பட்டன. கிரிக்கெட் வீரர்கள் சினிமா நட்சத்திர அந்தஸ்து பெற்றனர்.
வணிகப் பொருட்களுக்கு விளம்பரத் தூதுவர்களாக கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் நியமிக்கப்பட்டார்கள். 1980 களுக்குப் பின் தொலைக்காட்சியின் வருகைக்குப் பின் கிரிக்கெட் மோகம் உச்சத்திற்கு சென்றது. அதுவரை கிராமங்களில், நகரங்களில் இளைஞர்களால் விளையாடப்பட்டு வந்த சடுகுடு, கால்பந்து விளையாட்டுகள் மெல்ல மெல்ல விடைபெற்று அந்த இடத்தை கிரிக்கெட் பிடித்துக்கொண்டது. அதுவரை விளையாட்டுகளில் பங்கேற்பாளனாய் இருந்த இளைஞர்கள் பார்வையாளர்களாக மாறத் தொடங்கியது அப்போதுதான். கிரிக்கெட் வீரர்கள் கனவுக் கண்ணன்கள் ஆனதால் வந்த மாற்றம் இது. தமிழ்நாட்டின் பள்ளி, கல்லூரித் தேர்வுக்காலங்களில் பன்னாட்டுக் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன. நமது மாணவர்களில் தேர்வுகளை மறந்து கிரிக்கெட் பக்கம் கவனம் திரும்பியவர்களும் உண்டு.
1990 களில் தனியார் தொலைக்காட்சிகளின் வருகை முற்றுமுழுதாக கிரிக்கெட்டைத் தூக்கி வைத்துக் கொண்டாடும் நிலையை உருவாக்கி-விட்டது. இதன் உச்சகட்டம்தான் இன்றைய அய்.பி.எல்.கிரிக்கெட் சூதாட்டங்கள்.
உலக அளவில் நுகர்வோர்கள் அதிகம் உள்ள நாடுகளில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. பன்னாட்டுச் சந்தையாகிவிட்ட இந்தியாவில் வணிகம் செய்ய எல்லா உத்திகளையும் முதலாளித்துவம் கடைப்பிடிக்கும்தானே. அதில் ஒன்றுதான் இந்த கிரிக்கெட். உலக மயத்தின் பின்னால், பன்னாட்டுப் பொருள்களை விற்பனை செய்ய கிரிக்கெட் விளையாட்டை ஊக்கப்படுத்தும் வேலையை முதலாளிகள் செய்கிறார்கள். அதற்கு அரசுகளும் துணைபோகின்றன.
தமிழினம் போல தனித்த மொழி, வரலாறு, பண்பாடு கொண்ட பல்வேறு இனங்கள் வாழும் நாட்டில் அவர்கள் ஒடுக்கப்படும்போது எதிர்ப்புக்குரல்கள் எழுவது இயல்பு. அதுபோக வாழ்வாதாரப் பிரச்சினைகள், கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றிற்காக மக்கள் போராடும் நிலை உருவாகிவிடாமல் திசை திருப்ப இந்த கிரிக்கெட் பயன்படுத்தப்படுகிறது.
ஒருவகையில் மக்களின் எழுச்சியை அடக்கி அவர்களைக் கேளிக்கைகளின் பக்கம் திருப்பும் ஒரு கருவியாக கிரிக்கெட் இருக்கிறது என்பதை உணராத அளவுக்கு கிரிக்கெட் போதை தலைக்கேறியுள்ளது.
இது கல்வி வாய்ப்பு பெற்ற இரண்டாவது தலைமுறை உருவாகும் காலம்; சுயசார்பு வாழ்வை நோக்கி சமூகம் முன்னேறும் நேரம்; இச்சூழலில்தான் அவர்களின் உழைப்பை உறிஞ்சி நுகர்வுக் கலாச்சார அடிமைகளாக உருவாக்கும் பன்னாட்டு முதலாளிகளின் தற்போதைய வலிமையான ஆயுதமாக கிரிக்கெட் முன்னிறுத்தப்படுகிறது.
இந்தியாவின் பெயரில் அணி விளையாடியது போக, முற்றிலும் வணிகர்களின் அணிகள் விளையாடும் நிலையை அய்.பி.எல். கிரிக்கெட் உருவாக்கிவிட்டது. ஒரு கட்டத்தில் கிரிக்-கெட்டின் வழி தேசப்பற்றை (?) வளர்த்தார்கள். இப்போது அதற்கும் வழியில்லை. 10 முதலாளிகளின் கல்லாப்பெட்டி நிரம்ப பல கோடி மக்கள் தமது உழைப்பின் பயனைக் கொட்டுகிறார்கள். 5 நாள் போட்டி 3 நாளாகி, பின் ஒரு நாளாகி, இப்போது அரை நாளாகி விட்டது.
ரேஸ் குதிரையின் மீது பணம் கட்டுவது போல வீரர்கள் மீது பணம் கட்டப்படுகிறது.
உடல் உழைப்பில் வளர்ந்த சமூகம் இன்று, அன்றாட உடற்பயிற்சியைக் கூட விட்டுவிட்டு தொலைக்காட்சியின் முன் உட்காரும் நிலையை கிரிக்கெட் கவர்ச்சி கொண்டுவந்துவிட்டது. ஒரு சமூகம் வளர்வது உழைப்பால் மட்டும்தான். கேளிக்கைகள் தேவைதான். உடல் உழைப்பின் களைப்பு நீங்கவே கேளிக்கை தேவை. ஆனால் கேளிக்கைகளே வாழ்க்கையல்லவே.
மக்கள் தொகையில் உலகின் முதல் நாடான சீனாவில் கிரிக்கெட் இல்லை. அவர்களது பாரம்பரிய உடல் வலு விளையாட்டான குங்பூ கலை, சிறு வயதில் இருந்தே கற்றுத்தரப்-படுகின்றது. பள்ளிக்கூடங்களிலேயே விளை-யாட்டும் தற்காப்புக் கலையும் ஜிம்னாஸ்டிக் விளையாட்டும் அங்கே கட்டாயப் பயிற்சிகள். அதனால்தான் அங்கு நோயாளிகளும் குறைவு; இளவயது மரணங்களும் குறைவு. ஒலிம்பிக் போட்டிகளில் சீனர்கள் ஒவ்வொரு முறையும் முந்திக்கொண்டிருக்கிறார்கள். சோம்பேறிகளை உருவாக்கும் கிரிக்கெட்டை சீனா அனுமதிக்க-வில்லை.
இரண்டாம் உலகப்போரில் வீழ்ந்த ஜப்பான் உழைப்பால் உலகை வியக்கவைத்தது. அங்கும் கிரிக்கெட் கிடையாது. உலகின் பல பகுதிகளிலும் மூக்கை நுழைத்தும், திறமை-யாளர்களை வேலைக்குக் கவர்ந்து பொருளீட்டும் அமெரிக்காவிலும் கிரிக்கெட் இல்லை. இன்னும் செல்வத்தில், பொருளா-தாரத்தில் வளர்ந்து நிற்கும் ரஷ்யா, கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் கிரிக்கெட் கிடையாது. அந்நாடுகளின் மக்கள் கால்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி போன்ற குழு விளையாட்டுகளையும், பிற தனித்திறமை விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடுகின்றனர். இதனால் ஆரோக்கியமான வாழ்க்கை அவர்களுக்குக் கிடைத்துள்ளது.
ஆனால் இந்தியாவில்? இன்றைய நிலை என்னவாகி இருக்கிறது?
கிரிக்கெட் போதை தலைக்கேறிப் போயுள்ளது. எத்தரப்பினரையும் விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறது. மதுவை விட மோசமானது கிரிக்கெட் போதை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குறிப்பிட்டது முற்றிலும் உண்மையே என்பதை நிகழ்வுகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. கிரிக்கெட் பார்க்க முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளானோர், கிரிக்கெட்டில் விரும்பிய அணி தோல்வி அடைந்ததால் மரணம் அடைந்தோர், தற்கொலை செய்து-கொண்டோர் என்றெல்லாம் வரும் செய்திகள் இதன் தீவிரத் தன்மையை உணர்த்தும். ஏதோ, இது உச்சபட்சமான போதை! ஒன்றிரண்டு நடப்பதை வைத்து முடிவுக்கு வரக்கூடாது தான். ஆனால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் புகட்டப்-பட்ட போதையாக கிரிக்கெட் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. விளையாட்டு என்றாலே கிரிக்கெட் தான் என்ற எண்ணத்தை இளம் பிஞ்சுகள் மத்தியில் விதைத்திருக்கின்றன ஊடகங்கள். பணம் கொழிக்கும் விளை-யாட்டாக கிரிக்கெட்டைப் பார்க்கும் அவர்கள், உடலூக்கத்துக்கு அவசியமான விளை-யாட்டுகளை மறந்து கிரிக்கெட் விளையாடு-வதிலும், அதை விடக் கூடுதலாகப் பார்ப்-பதிலும் காலத்தை கழிக்கின்றனர். ஆனால் அதிலும் அவர்களால் பெரிய இடத்திற்கு வர முடியுமா? என்றால் வாய்ப்பேயில்லை என்பதைத் தான் கிரிக்கெட்டிற்காக தங்கள் காலத்தை, உழைப்பை, பணத்தைச் செலவிட்டு ஏமாந்தவர்கள் சொல்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை, தொடக்கம் முதலே கிரிக்கெட் என்பது பார்ப்பனர், உயர்ஜாதி பணக்காரர்-களின் விளை-யாட்டாகவே இருந்து வந்திருக்கிறது. அதற்கு மிக முக்கியமான காரணங்கள், அவ்விளை-யாட்டின் தன்மைகளே! அதிகமான உடல் உழைப்பு தேவைப்படாத விளையாட்டு என்பதால் தங்களுக்குரியது கிரிக்கெட்டே என்று அவர்களே இதனைச் சுவீகரித்துக் கொண்டார்கள். வேறு யார் உள்ளே நுழைவதையும் அவர்கள் அனுமதிப்-பதுமில்லை; ஊக்குவிப்பதுமில்லை. இந்தியா-வில் இது கூடுதல் சோம்பேறித்தன-மான விளையாட்டாக இருப்பதைக் கிரிக்கெட்டைப் பார்ப்பவர்கள் நன்கு உணரலாம். எதிரணி அடித்த பந்தை, கைக்குப் பக்கத்தில் வந்தால் மட்டுமே பிடிக்க முற்படுவதையும், ஓடுவதற்கு சோம்பேறித்தனப் பட்டுக் கொண்டு, அடுத்தவனுக்கு அடுத்தவனுக்குக் கை காட்டும் போக்கையும் கவனித்தாலே போதும். நல்ல பீல்டர்கள் என்று எடுத்துப் பார்த்தால், நிச்சயம் அதில் பார்ப்பனரல்லாத ஒருவர் தான் இருப்பார். ஏனெனில் உடல் வலிக்கும் எது ஒன்றையும் பார்ப்பனர்களால் செய்ய முடியாது. இசைக் கருவி என்றாலும் மிருதங்கம், கஞ்சிரா, தம்புரா தானே பார்ப்பனர் கருவிகள். பறையும், தவிலும், நாகசுரமும் சூத்திரக் கருவிகளாயிற்றே! ஏனெனில் இவற்றுக்கு எல்லாம் அதீத உடல் உழைப்பு தேவை.
ஆங்கிலேயர் காலத்து இந்திய அணியும் சரி, அவர்கள் இந்தியாவை விட்டுப் போன பிறகும் சரி, இந்தியர்கள் என்ற போர்வையில் விளையாடியதில் 70 விழுக்காட்டினர் பார்ப்-பனர்களே! இன்று வரை அந்த நிலை தான். ஓரிருவர் உயர்ஜாதியினராகவும், ஒரு சீக்கியர், ஓர் இஸ்லாமியர் கொண்ட அணியாகவும் தான் அது இருக்கும். இவையெல்லாம் ஒரு பொதுமைத் தன்மை இருப்பதைப் போல காட்டுவதற்கான ஏமாற்று வித்தைகள். இதைப் பல முறை பலரும் போட்டு உடைத்திருக்-கிறார்கள். 1980-ல் இந்திய கிரிக்கெட் பற்றி நூல் எழுதப் புகுந்த ரிச்சர்ட் கேஷ்மேன் என்பவர் அதில் உள்ள ஜாதி குறித்தும் கேள்வி-யெழுப்பியுள்ளார். 2008-ல் ஆஸ்திரேலி-யாவுடனான இந்தியாவின் போட்டிக் காலத்தில் இந்திய அணியில் இருக்கும் பார்ப்பன ஆதிக்கம் குறித்து, 11-ல் 7 பேர் பார்ப்பனர்களாக இருப்பதை உடைத்துக் காட்டி ஆஸ்திரேலி-யாவின் சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையில் கட்டுரை வெளிவந்தது.
1970 களுக்குப் பிறகு பரந்த அளவில் இவ்விளையாட்டு மக்களிடம் போய்ச் சேர்ந்ததற்கு இன்னொரு முக்கியக் காரணம். 1983-ல் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற நிகழ்வு! ஆனால், அதிலும் சரி, கடந்த 2011-ல் மீண்டும் வென்ற போதும் சரி, அதன் தலைமையில் இருந்த கபிலும், தோனியும் பார்ப்பனர்கள் அல்லர். இந்திய அணியின் வெற்றிப் பாதைக்கு வித்திட்டவர்கள் பார்ப்பனர்கள் அல்லர். டெண்டுல்கர் உள்ளிட்ட பார்ப்பனர்கள் எல்லாம் தங்களின் தனிப்பட்ட சாதனையை மட்டுமே இலக்காகக் கொண்டவர்களே!
சரி, இப்போதைய சூழல் என்ன?
இன்று மட்டும் ஏதோ புதிதாக கிரிக்கெட்டில் ஊழல், சூதாட்டம் நடப்பது போலவும், அய்.பி.எல்-லால் கிரிக்கெட்டின் புனிதத் தன்மை கெட்டுவிட்டது போலவும் பத்திரிகைகள் பதறுகின்றன. ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே கிரிக்கெட்டில் சூதாட்டம் கொடிகட்டிப் பறப்பதையும், இதில் எண்ணற்ற முக்கிய வீரர்கள்(!?) வீழ்ந்திருப்-பதையும், புக்கி, கேம்ப்லர், பிக்சர், ஸ்பை, என்கிற புத்தகம் புட்டுப் புட்டு வைக்கிறது. இப்படி ஏற்கெனவே மாட்டிக் கொண்டவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டதை எல்லாம் நாம் மீண்டும் மக்களின் நினைவில் கொணர வேண்டும். ஊழல், ஊழல் என்று எல்லா பிரச்சினைகளுக்கும் குதிக்கும் பார்ப்பனர்கள், கிரிக்கெட்டில் சூதாட்டம் ஊழல் ஒழுக்கக் கேடு என்றதும் இது எல்லாத்திலும் தான் இருக்கிறது என்கிறார்கள். நம்மைப் பொறுத்தவரை சூதாட்டத்தைத் தடை செய்யுங்கள்; அய்.பி.எல்.லைத் தடை செய்யுங்கள் என்று சொல்வதெல்லாம் பயனற்றது. ஒலிம்பிக்கில் வெல்லவில்லை; உண்மையான விளை-யாட்டுகளில் ஆர்வமில்லை என்பதற்கெல்லாம் அடிப்படை கிரிக்கெட் தான் என்பதை உணரவேண்டும்.
ஒழுக்கத்தைச் சிதைக்கும், ஊழலை வளர்க்கும், விளையாட்டு என்பதன் சிறப்பையே கெடுக்கும் கிரிக்கெட்டையே இளைஞர்கள், மாணவர்கள் புறக்கணிக்க வேண்டும்.
– அன்பன்
சமா.இளவரசன் உதவியுடன்
visit: viduthalai.in
மனித நேயத்தை சிதைக்கும் கிரிக்கெட்
கிரிக்கெட் போட்டிகளில் எப்போதெல்லாம் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடுகிறதோ அப்போதெல்லாம் இந்தியாவில் தேசபக்தி பீறிட்டு எழும்.இரண்டு நாடுகளும் போர் புரிவதுபோல ஊடகங்கள், பத்திரிகைகள் செய்திகளின் வழியாக உணர்ச்சியைக் கிளப்பும். `இந்தியாவுடன் பாகிஸ்தான் மோதல்` என ஏதோ போர் மூளுவது போல தலைப்புச் செய்தி போடும்.பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா என சரித்திர வெற்றி பெற்றது போல தலைப்புகள் போடப்படும்.நடந்தது ஒரு விளையாட்டு என்ற ஒரு சாதாரண நிகழ்வு பின் தள்ளப்பட்டு, எப்போதும் பாகிஸ்தானும்-இந்தியாவும் பகை நாடுகள் என்ற எண்ணம் ஊன்றி வளர்க்கப்பட்டு, மனித நேயத்துக்கு பகை உணர்ச்சி வளர ஒருவகையில் கிரிக்கெட்டும் காரணமாக இருக்கிறது என்பதை எவரால் மறுக்கமுடியும்? நாடுகளுக்கிடையேயான விளையாட்டு என்பது மத,இன,மொழி வேறுபாடுகள் கொண்ட உலகை இணைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி என்பதை ஒழித்துக்கட்டியதில் இந்தக் கிரிக்கெட்டுக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு என்பதை எவரால் மறுக்கமுடியும்?
சமூகப் பிரச்சினைகளில் அக்கறை கொண்டோர் என்று தங்களைக் காட்டிக் கொள்ளும் பலரும் கூட, கிரிக்கெட் என்றதும் போதைக்கு அடிமையானவர்களாகக் கருத்துச் சொல்-கிறார்கள். இதையெல்லாம் விடக் கொடுமை ஒன்று உண்டு. எப்போதும் இல்லாத தமிழ்-நாட்டு உணர்வெல்லாம் இதில் வருகிறது சிலருக்கு! இந்தியா சிமெண்ட்ஸ் உரிமை-யாளரும், பிசிசிஅய் தலைவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான சீனிவாசன் என்ற பார்ப்பனர் தலை உருளும் போது, வட இந்திய ஊடகங்களும், அதிகார வர்க்கமும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என்பதால் இவர் மீதும், தமிழ்நாட்டு அணி என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் மீதும் பழி போடுவதாகப் புலம்பியது தான் உச்சம்.
உண்மையில் சென்னை சூப்பர் கிங்ஸ் என்பது தமிழ்நாட்டு அணியே அல்ல; அதில் தமிழர்களும் இல்லை. அது தமிழ்நாட்டு பார்ப்பன முதலாளியான சீனிவாசன் ஏலம் எடுத்து வைத்திருக்கும் அடிமைகளின் அணி. திடீரென்று சிலருக்கு தமிழ்நாட்டுப் பற்று தோன்றியிருப்பது ஏனென்று இப்போது புரிந்திருக்குமே!
இதே நேரத்தில் இன்னொன்றையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய அணி என்பது இந்திய அரசின் அதிகாரப் பூர்வ அணி அல்ல; பி.சி.சி.அய். என்ற முதலாளிகளின் கிளப்புக்காக விளையாடும் அணியே ஆகும். இதன் மீது இந்தியாவின் விளையாட்டுத் துறை எந்தக் கட்டுப்பாட்டையும் செலுத்த முடியாது. அப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டபோது அதற்கு பெரும் தடைகளை அந்த முதலாளிகள் ஏற்படுத்திக் கொண்டிருக்-கிறார்கள். இந்த முதலாளிகளின் அணியைத் தான் இந்திய அணி என்றும், அதற்கும் வேறொரு நாட்டுக்கும் நடக்கும் போட்டியைப் போர் என்றும் வர்ணித்து தேசபக்தி லேகியம் விற்கின்றன ஊடகங்கள்.