உற்சாக சுற்றுலாத் தொடர் – 12

ஜூலை 16-31

வரலாற்றின் சங்கமம்!

– மருத்துவர்கள் சோம&சரோஜா இளங்கோவன்

 

வடமேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள அருமை யான நாடு மொராக்கோ. அட்லான்டிக் கடலையும், மத்திய தரைக் கடலையும் தொட்டு நிற்கும் மூன்று நாடுகளில் ஒன்று .
80000 ஆண்டுகட்கு முன்னரே அங்கு மனிதர்கள் வாழ்ந்துள்ளனர். ஆப்பிரிக்க அய்ரோப்பியாவின் கலப்பு அங்கே உருவாகியுள்ளது. அந்த பர்பர் இனம் பல்வேறு வழிகளில் சிதைக்கப் பட்டு விட்டாலும் இன்னும் பர்பராகவே வாழ்கின்றனர்.அங்கு வாழ்ந்த பர்பர் மக்கள் வரலாற்றில் பலவாறு இடம் பெற்றுள்ளனர்.

 

ரோமானிய மன்னர்களாகவும், பல்துறை வல்லுநர்களாகவும், பின்னர் கிருத்துவ, இசுலாமிய மதத் தலைவர்களாகவும் இருந்துள்ளனர். பிரெஞ்சு ஆதிக்கத்தில் பிரெஞ்சு மட்டுமே பேச வேண்டும், படிக்க வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடு இருந்தும் இன்றும் பர்பர் மொழி வாழ்ந்து கொண்டுதான் உள்ளது. தமிழர்களாகிய நாம் அறிந்துகொள்ள வேண்டிய படிப்பினை  இந்த வரலாறு. இசுலாமிய மதத்துடன் அராபிக் மொழி வந்துவிட்டது. இருந்தாலும் இன்னும் பர்பர் விடாமல் பேசவும், படிக்கவும் வைத்துக்கொண்டு ஆட்சி மொழிகளில் ஒன்றாகவும் வைத்துள்ளனர்.

அந்த நாட்டின் ஒரு அற்புத நகரம் மராக்கீசு. அங்கே பழமையும், புதுமையும் கலந்து இன்றும் வாழும் நகரமாக உள்ளது. மிகவும் பழமையான கடைகள். பல விதப் பொருட்கள் அங்கேயே தயாரித்து அங்கேயே விற்கின்றனர். சிலப்பதிகாரத்திலே வரும் பூம்புகார் அங்காடி போல வரிசையாக துணிக்கடைகள், அதாவது நமது சமுக்காளம் போன்றதிலிருந்து நல்ல மெல்லிய துணிகள் வரை வேலைப்பாட்டுடன், தோல் பெட்டிகள் காலணிகள், இரும்பு பித்தளை வேலைப்பாட்டுடன் கூடிய பொருள்கள் என்று தெரு தெருவாக சுற்றிப் பார்த்து வியந்தோம். இது அய்க்கிய நாட்டு அமைப்பால் தொல்பொருள் காப்பகங்களில் ஒன்றாக அறிவிக்கப் பட்டுள்ளது. உள்ளூர் மக்களும் வெளிநாட்டுப் பயணிகளும் நிறைந்து கல கலவென வாழும் வணிக நகராக உள்ளது.

அடுத்து 1920இல் பிரெஞ்சு ஓவியர் ஜேக்குவெசு மேஜொரெல் என்பவர் ஆரம்பித்த அழகிய தோட்டம். அது சீரடைந்ததை உலகப் புகழ் பெற்ற யூவுஸ் செயின்ட் லாரண்ட் (சீஸ்மீ ஷிணீவீஸீ லிணீக்ஷீணீஸீ) (மொரொக்காவில் பிறந்து  பாரிசு நகரத்தில் புகழடைந்தவர்) வாங்கி சிறப்புற அமைத்துள்ளார். அவருக்குப் பின் அவரது ஆண் துணைவர் தற்போது  சிறப்பாகப் பராமரித்து வருகின்றார். அழகழகான கற்றாழைகள், மூங்கில் வகைகள், தென்னை இனம் என்று பளிங்குக் குளங்களுடன் அழகாக அமைத்துள்ளதைப் பார்த்து மகிழ்ந்தோம்.

முகம்மதுவின் பல உறவினர்கள் புதைக்கப் பட்டுள்ள கொடுபா மசூதி, மிகவும் சிறப்பான அராபிக் கலை உணர்வுடன் பளிங்குக் கற்கள் பொதிக்கப்பட்டுள்ள  பாகியா அரன்மனை பார்த்தோம்.

600 ஆண்டுகட்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு 1960 வரை நடந்த 130க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் படித்த  மிகவும் பழமையான இசுலாமிய பென் யூசுப் மதராசா பள்ளியைப் பார்த்தோம்.

நகரின் மய்யப் பகுதியில் மிகவும் பெரிய மார்க்கெட். செங்கல்  மற்ற கற்கள் பதிக்கப்பட்ட தரை. மெரினா கடற்கரை போன்று பெரிய இடம். ஒரு ஓரத்திலே அனைத்துப் பொருட்களும் கிடைக்குமான கடைகள். மூட்டைகளில் குவித்து வைக்கப் பட்டிருக்கும் பருப்பு வகைகள், மலை போன்ற பேரிச்சம்பழக் கடைகள், விலைக்குத் தகுதிந்தாற்போல வாங்கிச் செல்லுமாறு பெட்டிகளில் போட்டுத்தந்தார்கள்.  மாலை ஆனவுடன் அந்த இடம் பூராவும் பொங்கி வழிந்தது. மகுடி ஊதி ஆடவைக்கும் கருநாகப் பாம்பு நல்ல கூட்டத்தைப் பெற்றிருந்தது. அதுபோல பலவித ஆட்டபாட்டங்கள், இசை நிகழ்ச்சிகள், வேடிக்கைகள் என்று எங்கு பார்த்தாலும் ஏதாவது நடந்து கொண்டே இருந்தது. நறுமணங்கமழ  பலவித உணவுப் பொருட்களை அங்கேயே தயாரித்துக் கொடுக்கும் கூடாரக் கடைகள் பல. இது தினந்தோறும் நடக்கும் மாலைப் பொழுது போக்காகவும், வணிகமாகவும் பார்ப்பதற்கு வேடிக்கைகள் நிறைந்தும் பழைய காலத்தை நினைவுக்குக் கொண்டு வருகின்றது. பெரிய பெரிய மால்கள் எனும் கடைகளில் வாங்குவோருக்கு இது நல்ல அனுபவம். அவரவர் கை நிறையவும், பை நிறையவும் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர். நாங்களுந்தான்!

நகரின் நடுவே ஈச்ச மரங்கள் இருந்தன. ஒரு மரம் சிறிது வேறுபட்டு நின்றது. பார்த்தால் அது மரம் போன்றே தெரியும் உயர்ந்த கை பேசித் தொலைபேசிக் கோபுரம்!

தங்கியிருந்த விடுதி  லா மாமோனியா பழைய அரன்மனை. ஆனால் புதிய வசதிகளுடன் மிகவும் சிறப்பாக இருந்தது. அதிலிருந்த தோட்டம் நடப்பதற்கு மகிழ்ச்சி நிறைந்த சூழல். ஆங்காங்கே அமர்ந்துகொள்ள நாற்காலிகள் பலகைகள். பார்ப்பதற்கும் அழகு, நீந்துவதற்கும் அழகான நீச்சல் குளம்.

அன்று கடைசி நாள் பிரிவு விழா ! பலரும் அங்கே வாங்கிய அராபிக் புத்தாடைகளுடன் அனைவரும் அராபியர்களாகி விட்டோம். இரண்டு பயணிகள் ஷேக்குகளின் முழு உடுப்புடன் வந்து மகிழ்வித்தனர்.

அராபிக்  உணவு மிகவும் அருமை.

உண்டவுடன் ஒரு பெரிய கலகலப்பு! இசையுடன் அங்கே அற்புத அராபிய அழகிகளின் வயிற்று நடனம். அவர்கள் வயிற்றின் தசைகளை ஆடு ஆடு என்று ஆட்டும் அழகைப் பார்த்தால் எவ்வளவு பயிற்சி செய்திருப்பார்கள் என்று உணரலாம்!  நம்மையும் பிடித்து ஆடச்சொல்ல அழகிகளுடன் மருத்துவர் இளங்கோவன் மாட்டிக்கொண்டது கைதட்டி மற்றவர்களை மகிழ்வித்தது!

பயணத்தை மகிழ்வுடன் முடித்து, புதிய நண்பர்களிடம் விடை பெற்றோம். பல நாட்கள் ஆகிவிட்டதால் திரும்பியதும் பெயர்த்திகளிடம் கிடைத்த முத்தங்களும், வரவேற்பும் இதயத்தை மகிழ்ச்சியில் நிறைய வைத்தது. பயண மகிழ்ச்சியா, பெயர்த்திகளின் கொஞ்சல் மகிழ்ச்சியா? இளசுகளுக்கு தாத்தா  பாட்டி ஆனால்தான் தெரியும்!

பயணங்கள் முடிவதில்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *