– க.அருள்மொழி
குழந்தைகளுக்குப் பணம் தரும் பழக்கம் என்பது அவர்கள் பள்ளிக்குப் போக ஆரம்பிக்கும்போது தொடங்குகிறது. பள்ளிக்கூடம் செல்லும் அனுபவம் என்பது யாருக்குமே இனிப்பாக இருப்பதில்லை.அதனால் குழந்தைகளிடம் மிட்டாய் வாங்கி சாப்பிடுவதற்காக அவர்களிடம் காசு கொடுக்கிறோம். கல்வி என்னும் கசப்பை இந்த இனிப்பைப் பூசித் தருகிறோம்.
நாளாக ஆக பணம் தந்தால்தான் பள்ளிக்குப் போகமுடியும் என்ற ஆக்க நிலையிருத்தலுக்கு (conditioning) ஆளாகிறார்கள். குழந்தைகளுக்குப் பணம் தருவது தவறா? சரியா? என்ற விவாதம் எல்லா பெற்றோருக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கிறது. முழுமையாகத் தவிர்க்கவும் முடியவில்லை.
குழந்தைகளுக்குத் தரக்கூடிய பணத்தின் அளவு என்ன என்பதைத் தீர்மானிப்பதும் கடினமாக இருக்கிறது. என்ன செய்வது?
பணம் என்பது என்ன? அதை எப்படி சம்பாதிக்கிறோம்; எதற்காக செலவு செய்கிறோம்; எவ்வளவு செலவிடலாம்; சில செலவுகளை ஏன் தவிர்க்கிறோம்; எந்த சூழ்நிலையில் கடன் வாங்குகிறோம்; அதன் விளைவு என்ன? என்பதைப் பற்றியெல்லாம் குழந்தைகளுக்குத் தெரியப்படுத்துவதும், பணத்தைப் பயன்படுத்தும் முறையைக் கற்றுக் கொடுப்பதும் அவசியமாகிறது. எட்டு வயதிலிருந்தே அதை ஆரம்பிப்பது நல்லதுதான். குழந்தைகளுக்குப் பணம் கொடுக்கலாமா வேண்டாமா? அவர்களுக்குப் பணத்தைப் பற்றி எப்போது எப்படித் தெரியப்படுத்துவது? என்பது பெற்றோர்களுக்கு குழப்பம் ஏற்படுவது எங்கும் நடப்பதுதான்.
குழந்தைகளுக்குத் தரும் கைக்காசு பணத்தின் அளவு என்பது குடும்ப வருமானத்தின் அளவைப் பொறுத்ததும் குழந்தைகளின் வயதைப் பொறுத்ததும் ஆகும். என்றாலும் ஒருநாளைக்கு எத்தனை ரூபாய்? ஒரு மாதத்திற்கு எத்தனை ரூபாய் என்பதை முடிவு செய்துவிடவேண்டும். அதை மீற அனுமதிக்கக் கூடாது.
அதுமட்டுமல்ல அதை அவர்கள் எப்படி செலவு செய்ய வேண்டும் என்பதை சொல்லிக் கொடுப்பதோடு அவர்களைக் கண்காணிக்கவும் வேண்டும். அது எப்படி?
வரவு செலவு திட்டமிட கற்றுக் கொடுங்கள்: உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் பணத்தை (pocket money) நாள் படி (daily allowance)அல்லது மாதப் படி (monthly allowance) என்று திட்டமிட்டுக் கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் அந்தத் தொகைக்கு மீறி கொடுக்க முடியாது என்று திட்ட வட்டமாகக் கூறி விடுங்கள். மாதாந்திர படி என்ற ஒப்பந்தம் நன்றாக வேலை செய்யக்கூடும். ஏனென்றால் ஒரு மாதத்திற்குள் அந்தப் பணத்தை எந்தெந்த செலவுகளுக்குப் பயன்படுத்துவது என்பதை அவர்களாகவே சிந்திக்கக் கூடும். ஒரு வேளை அந்தப் பணத்தை ஓரிரு நாட்களிலேயே செலவு செய்து விட்டால் அந்த மாதம் மீதியுள்ள நாட்கள் முழுவதும் வெறும் கையோடு காத்திருக்க வேண்டியிருக்கும். அடுத்த மாதத்திலிருந்து தேவையான செலவு எது? எவ்வளவு செலவு செய்யலாம் என்று அவர்களே திட்டமிட ஆரம்பிப்பார்கள். நம்முடைய பையிலிருந்து எடுத்து அவர்களுக்கு செலவு செய்யும்போது கவலைப் படாமல் காண்பதை எல்லாம் வாங்கித் தரச் சொல்வார்கள். அவர்களுடைய பையிலிருந்து செலவு செய்யும்போது பணம் குறைந்துகொண்டே போவதை கவனித்து செலவு செய்வார்கள்.
பெரிய இலக்கிற்காக சேமிக்கக் கற்றுக் கொடுங்கள்:
உங்கள் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்குப் பத்து ரூபாய் என்ற வீதத்தில் மாதம் முன்னூறு ரூபாய் படியாகக் கொடுக்கிறீர்கள். இது தவிர பிறந்த நாளுக்காகவும் விழாக்காலங்களிலும் பணம் கொடுப்பது அல்லது பரிசுகள் கொடுப்பது வழக்கமாக இருக்கலாம். இது தவிர உறவினர்கள் வரும்போது குழந்தைகளுக்குப் பணமாகப் பரிசளிக்கலாம். குழந்தைகளின் அடிப்படை தேவைகளையெல்லாம் பெற்றோர்கள் பார்த்துக் கொள்ளும்போது அவர்களுடைய ஆபரணங்கள், கம்ப்யூட்டர் போன்ற விலை உயர்ந்த பொருட்களையெல்லாம் அவர்களுடைய பாக்கெட் மணி யிலிருந்து சேமித்து வாங்கச் சொல்லுங்கள். மூன்று மாதம் அவர்களுடைய படிப் பணத்தை சேமித்து வைத்தால் மேலும் மூன்று மாதப் பணத்தை நீங்கள் சேர்த்துப் போட்டு அவர்கள் விரும்பும் பொருளை வாங்கித் தருவதாகக் கூறுங்கள். மூன்று மாதப் படிப் பணத்தை ஒட்டு மொத்தமாக சேர்த்துப் பார்க்கும்போது அவர்கள் அடையும் மன நிறைவு சேமிப்பின் அவசியத்தை மனதில் பதியச் செய்யும்.
பொறுப்பைக் கற்றுக் கொடுங்கள்: ஒரு பொருளைப் பத்திரமாக வைத்திருக்க குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டுமானால் அந்தப் பொருளை அடைய (வாங்க) அவர்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும். முதல் முறை அவர்களுக்குத் தேவையான பொருளை பெற்றோர்களே வாங்கிக் கொடுத்து விடலாம். ஆனால் அதைத் தொலைத்து விட்டாலோ பொறுப்பற்ற முறையில் உடைத்து அல்லது வீணாக்கி விட்டாலோ அடுத்த முறை அவர்களுடைய பாக்கெட் மணியிலிருந்து வாங்க வேண்டும், அல்லது படிப்பணத்தில் தவணை முறையில் பிடித்தம் செய்யப்படும் என்று விதிமுறை வகுத்துக் கொடுங்கள். பின்னர் எந்தப் பொருளையும் அவர்கள் எளிதில் தொலைக்க மாட்டார்கள்.
குழந்தைகளுக்கு சுதந்திரம் கொடுங்கள்: குழந்தைகளுக்குக் கொடுக்கும் கைக் காசு (அல்லது பைக்காசு -(pocket money)) அவர்களுக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கிறது.அவர்கள் முடிவெடுக்கும் திறனை அதிகரிக்கிறது.அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட எல்லைக்குள் (பணத்திற்குள்) எதை வாங்க வேண்டும் எப்படி செலவு செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். எல்லைக்குள் சுதந்திரம் கொடுத்திருப்பதால், அதைத் தவறாகப் பயன்படுத்தத் தயங்குவார்கள். புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவார்கள்.
உங்கள் தொழிலைப் பற்றித் தெரியப் படுத்துங்கள்: நீங்கள் என்ன தொழில் அல்லது வேலை செய்கிறீர்கள் என்பதைப் பற்றி அவர்கள் புரிந்துகொள்ளும்படி செய்யுங்கள். நீங்கள் செய்யும் தொழிலில் எவ்வளவு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.பணம் வருவதற்குள் நாம் எவ்வளவு உழைப்பை கொடுக்கவேண்டியிருக்கிறது என்பதை அவர்களே நேரடியாக பார்த்து உணர வையுங்கள்.
பகுதி நேர வேலை: வெளிநாடுகளில் டீன் ஏஜ் எனப்படும் பதின் பருவத்தினர் தங்கள் செலவிற்காக வார விடுமுறையில் அக்கம் பக்கத்தில் உள்ளோரின் தோட்டத்தை சீர் செய்து தருவது, வீட்டில் ஒட்டடை அடித்துத் தருவது வண்ணம் பூசித் தருவது போன்ற வேலைகளைச் செய்வார்கள்.
ஆனால் நம் நாட்டில் அதெல்லாம் கவுரவக் குறைச்சலான வேலை. அதிக பட்சம் செய்தித் தாள் போடும் வேலை செய்கிறார்கள். தங்கள் பகுதியிலுள்ள ஏதேனும் ஒரு கைத் தொழிலைக் கற்றுக் கொண்டு தன் செலவிற்காக தானே வேலை செய்து சம்பாதிப்பது இளைஞர்களுக்கு மன நிறைவைத் தருவதோடு பெற்றோர்களுக்கும் பணச் சுமை குறையும்.
பணம் பற்றி குழந்தைகளுக்கான பாடங்கள்: எந்த வயதும் பணத்தைப் பற்றி படிப்பதற்குத் தகுதியானதுதான். பணத்தை எப்படிக் கையாள்வது? அதன் முக்கியத்துவம் எந்த இடத்தில் அதிகமாகிறது? எந்த இடத்தில் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்பதைப் பற்றி எந்த வயதிலும் தெரிந்து கொள்ளலாம்.
பணத்தை தொலைப்பது இயல்பே: பணம் என்றவுடன் மகிழ்ச்சி வரும் அதே வேளையில் அது தொலைந்து விடுமோ? என்ற அச்ச உணர்வும் கூடவே வரும்.அதனால் அதை ஜாக்கிரதையாக வைத்திருக்கவேண்டும் என்பதுதான் முதல் பாடமாக இருக்கும். நாம் ஒவ்வொருவருமே பணத்தைத் தொலைத்திருக்கிறோம். குழந்தைகள் கொஞ்சம் அதிக முறை தொலைக்கக் கூடும். பெரியவர்கள் பலர் மோசடி சீட்டுக் கம்பெனியில் திரும்பத் திரும்பத் தொலைப்பதை விடக் குழந்தைகள் குறைவாகத்தான் தொலைக்கிறார்கள்.
உங்கள் குழந்தைகளிடம் கடைக்குக் கொடுத்தனுப்பும் பணம் அல்லது அவர்களின் மதிய உணவுக்காகக் கொடுக்கும் பணம் பள்ளிக் கட்டணம் செலுத்தக் கொடுத்தப் பணத்தை அவர்கள் தொலைத்துவிட்டால் அந்த நேரத்தில் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள்! என்பதைப் பொறுத்து பணத்தைப் பற்றிய அவர்களின் பார்வை வாழ்க்கை முழுவதற்கும் பதிந்து விடும். பொறுப்பற்ற முறையில் அவர்கள் நடந்துகொண்டதால் பணத்தை இழந்திருந்தும் அதைப் பற்றி அலட்சியமாக இருந்தால் பணத்தைத் தொலைத்ததற்கு அவர்கள்தான் பொறுப்பு என்பதைப் புரிய வைக்க வேண்டும். பணத்தைத் தொலைத்ததற்கு தண்டனை என்பது கடுமையாக இருக்கக் கூடாது என்றாலும் தொலைத்தப் பணத்தை மீண்டும் சம்பாதிப்பதற்காக கூடுதல் பொறுப்பை அவர்களுக்குத் தர வேண்டும்.
பகுத்துண்டு வாழ்தல்: பணத்தைப் பற்றி ஒரு ஆரோக்கியமான பார்வை குழந்தைகளுக்கு வர வேண்டுமானால் பிறருக்குக் கொடுத்து மகிழும் பண்பைக் கற்றுக் கொடுப்பதுதான். தான் சேமித்ததில் அல்லது சம்பாதித்ததில் பத்தில் ஒரு பங்கு அல்லது பதினைந்தில் ஒருபங்கு என்ற முறைப்படுத்தப்பட்ட வகையிலோ அல்லது ஒருவருக்கு அவசர அவசியம் என்ற நேரத்தில் உதவுவது என்ற முறையிலோ பணம் என்பது தான் மட்டுமே வைத்திருக்க வேண்டியது என்பது அல்ல; மற்றவர்களுக்கு உதவவும்தான் என்பதை இள வயதிலேயே சொல்லிக் கொடுப்பது நல்லது.
செலவு செய்யக் கற்றுக் கொடுங்கள்: பணத்தைப் பற்றி குழந்தைகள் தெரிந்துகொள்ள ஆரம்பிக்கும்போது அவர்கள் தேவையும் நீண்ட பட்டியல் கொண்டதாக இருக்கும். அந்தப் பட்டியலை சரி செய்து அவர்களுக்கு முக்கியத் தேவை என்ன என்பதை அறிந்து அதை மட்டும் அனுமதியுங்கள். வழக்கமாக கேட்கும் ஐஸ் கிரிம், பொம்மை பற்றி கவலைப் படத் தேவையில்லை. கொஞ்சம் அதிகப் பணம் கொடுத்து வாங்கும் பொருட்கள் தரமானதாகவும் நீண்ட நாட்களுக்குத் தேவைப்படுவதாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதற்கேற்ப பட்டியலைச் சுருக்குங்கள்.
சேமிப்பு அவசியமானது: ஒவ்வொரு வருவாயிலிருந்தும் கொஞ்சமாவது சேமிக்கவேண்டும். தினசரி கைக்காசாக இருந்தாலும் அவ்வப்போது கிடைக்கும் பரிசுப் பணமாக இருந்தாலும், ஒரு பகுதி சேமிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கற்றுக் கொடுங்கள். .பெற்றோர் என்ற முறையில் குழந்தைகள் பணத்தை சரியாகக் கையாளச் சொல்லித் தருவது கடமையாகும். கல்லூரி செல்வதற்காக ஆரமப்பள்ளி படிக்கும்போதே சேமிப்பது என்பது கூட சரியானதுதான். சிறுதுளி பெரு (மகிழ்ச்சி) வெள்ளம்.
குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப்படும் தவறான எண்ணங்கள்: உங்களிடம் பணம் இருக்கிறதுதான். குழந்தை உங்களுக்குச் செல்லம்தான். அதற்காக அவர்கள் காண்பதையெல்லாம் கேட்கிறார்கள் என்றால் எல்லாவற்றையும் வாங்கித் தருவது என்பது கடையில் இருப்பதையெல்லாம் தேவையிருப்பினும் இல்லாவிட்டாலும் வாங்கி வைத்துக்கொள்ளலாம் என்று கற்பிப்பதாகும்.
அடுத்த வீட்டுக்காரர் கார் வாங்கியிருந்தால் நாமும் வாங்கவேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள் குழந்தைகள். சாதாரண டி.வி.யைத் தூக்கிப் போட்டுவிட்டு எல்.ஈ.டி. டி.வி. வாங்கச் சொல்லி கேட்கிறார்கள். அதற்காக தவணை முறைதான் இருக்கிறதே என்று வாங்கி விடுவது என்பது குழந்தைகளுக்குப் பணம் பற்றி நாம் சொல்லித்தரும் தவறான பாடமாகும். அதற்காக மேலும் உழைக்க வேண்டியிருக்கிறது என்பதையும் கொஞ்ச நாள் போன பின்னர்தான் வாங்க முடியும் என்பதையும் விளக்குங்கள்.
பணப் பிரச்சனை என்பதே தெரியாமல் குழந்தைகளை வளர்ப்பது என்பது, அவர்கள் பின்னாளில் ஏற்படக்கூடிய நிதி நெருக்கடியைப் பற்றி கவலைப் படாமல் அலட்சியமாக இருந்துவிட்டு நெருக்கடி வரும்போது கையைப் பிசையக்கூடிய நிலைமைக்கு ஆளாக்குவதாகும். நமக்கும் பணப் பற்றாக்குறை இருக்கிறது, என்பதையும் நம்முடைய தேவைக்கு மட்டுமல்லாமல் நம்மைவிட பணத்தேவை உள்ளவர்கள் அதிகம் இருக்கிறார்கள், அவர்களுக்கு உதவுவதும் நம்முடைய கடமை என்பதையும் உணர்த்தவேண்டும்.
உங்கள் குழந்தைகள் எப்போது எதைக் கேட்டாலும் உங்கள் ஏ.டி.எம். அட்டை அல்லது கடன் அட்டையைப் பயன்படுத்தி வாங்கி கொடுத்துவிடுவது என்பது பணத்தைப் பற்றி அவர்களுக்கு ஒரு அலட்சிய பார்வையை உண்டாக்குவதாகும்.
ஒவ்வொரு நாளும் காலையில் வேக வேகமாக வேலைக்குப் போவது மாலையில் சோர்ந்து வருவதும் பணத்திற்காகத்தான்.இல்லையென்றால் எந்த அட்டையைப் போட்டாலும் எதுவும் கிடைக்காது என்பதைக் கூறுங்கள்.
உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான மிகச் சிறந்த முதலீடு என்பது அவர்கள் மனதில் கற்றல் ஆர்வத்தை விதைப்பதுதான். குழந்தைகளிடம் பேசுங்கள்: இது மிகவும் சாதாரணமான விஷயமாகத் தெரியலாம்.
ஆனால் பெற்றோர்கள் அவர்களின் பேச்சில் அவர்களின் எதிர்காலத்தைப் பற்றிய தெளிவான முடிவோடு பேசுகிறார்கள் அல்லது எந்த நோக்கமும் இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கிடையே வேறுபாடு உள்ளது. நேர்மறையான தகவல் தொடர்பு என்பது குறிப்பிட்ட இலக்கைகொண்டிருக்க வேண்டும்.
அது அவர்களின் எதிர்காலத்திற்கான வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
முயற்சிகளை ஊக்கப்படுத்துங்கள்: ஒவ்வொரு வேலையையும் நீங்களே செய்து காட்டி ஒவ்வொன்றையும் சரியாகவே செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். முயன்று பிழை செய்து கற்றுக் கொள்ள விடுங்கள். பிழைகள் மூலம் அவர்களின் கற்றலைப் பற்றி மதிப்பீடு செய்து அடுத்த முயற்சியில் விரும்பத்தகுந்த விளைவைத் தருவார்கள்.
விளையாட்டில் கற்றல்: நண்பர்களுடன் வெளியிடத்தில் விளையாடும்போது குழந்தைகள் நாம் கற்பனை செய்து பார்க்காத அளவிற்கு கற்றுக் கொள்கிறார்கள். ஓடுதல், தாவுதல், மரக்கிளையில் தொங்குதல், குதித்தல் ஆகியவை வெறும் வேடிக்கை விளையாட்டு மட்டுமல்ல அவர்களின் மூளைத் திறன் வளர்வதற்கு அது மிகவும் உதவுகிறது. உங்கள் வீட்டுத் தோட்டம்,அருகிலுள்ள காடுகள், கடற்கரை, குளம், போன்ற இடங்கள் அவர்களின் மன வளத்தை அதிகரிக்க உதவுகிறது.
படிப்பில் ஏற்படும் பரவசம்: புத்தகங்கள் படிப்பது எவ்வளவு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உங்கள் குழந்தைகளுக்கு தெரியப் படுத்துங்கள். நூலகத்தைப் பயன்படுத்தும் முறையையும் இணையதளம் மற்றும் குறுந்தகடுகள் போன்றவற்றில் புதிய விஷயங்களை எப்படிச் செய்வது? பயனுள்ள தகவல்களைத தேடுவது எப்படி? என்று சொல்லிக் கொடுங்கள்.
கற்றல் மீதான ஆர்வம் உங்கள் குழந்தைகளுக்கு எண்ணற்ற கதவுகளைத் திறந்துவிடும். உங்கள் ஆற்றலையும் நேரத்தையும் குழந்தைகளின் மனதில் அறிவுச் செல்வம் என்னும் விதையை ஊன்றிவிட பயன்படுத்தினால் அது வாழ்க்கை முழுவதற்கும் பணம் அறுவடை செய்யக்கூடிய மரமாக வளரும்
Leave a Reply