நூல்: அப்பனின் கைகளால் அடிப்பவன்
ஆசிரியர்: அதியன்
வெளியீடு: நறுமுகை,
29/35, தேசூர்பாட்டை,
செஞ்சி – 604 202
கைபேசி: 94861 50013
பக்கம்: 80, ரூ. 60
நூலிலிருந்து…
சாராயம்
கருவாடு
சுருட்டு
ஆடு
மாடு
பன்னி
கோழியென பலியிட்டு
இன்று
என்னைப் போலவே
நீயும் வணங்குகிறாய்
என் பாட்டன்களான
மதுரை வீரன்
இருச்சி
காத்தவராயன்
நந்தன் என
அன்று
உன் பாட்டனுக்கெதிராய்
அடங்க மறுத்து
அத்து மீறியதால்
பழி வாங்கப்பட்டவர்கள்
இன்று
சாமிகளானார்கள்
இன்று
கழுத்தறுந்தும்
மலம் தின்னும்
உன்னோடு
சண்டையிடும்
நாங்கள் யார் தெரியுமா?
உன்
பிள்ளைகளின் சாமிகள்.
***
சேரிக்கு வெளியே
கோணல்
கோணலாய்
சேரிக்குள் வரமறுத்த
கிராமத்துச் சாலைகள்.
***
வான் வழி
தரை வழி
நீர் வழி
சண்டையிடும் உலகில்
வழியில்லாமல் தவிக்கிறோம்
சுடுகாட்டிற்கு.
***
பெயரையும்
ஊரையும்
சொன்ன பிறகும்
நீ
துரைசாமி கவுண்டர்க்கு
என்ன வேண்டும்
வேலு முதலியார்க்கு
பக்கத்து வீடா
தேரடிக்கு எதிர்த் தெருவா
அல்லிக் குளத்திற்கு மேல் தெருவாயெனக்
கேட்ட
அனைத்துக் கேள்விகளுக்கும்
இல்லையென்றதும்
முகத்தைச் சுருக்கி
நீ அப்போ… என நீளும்
அவன் ஆய்விற்கு
முற்றுப் புள்ளியாய்
பறச்சேரி யென்றேன்.
***
முன்பு போல்
அடிக்கடி வரமுடியாமல் போன
பக்கத்து வீட்டுக்காரர்களைப்
பற்றி அறிய
காரணங்கள்
பல இருந்தும்
முதற் காரணம்
இப்படித்தான் தோன்றுகிறது
தெரிந்து இருக்குமோ
என் ஜாதி.
***
வீட்டை
அலங்கரித்தலென்பது
மறைத்ததை
இருப்பதோடு சேர்த்தல்
உனக்கு
இருப்பதை
மறைப்பது
எனக்கு.
***