Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பெரியாரில் “கருவாகி” உருவான பெருமகனே!

பெரியார்
இமயம் என்றால்
அதனைப் போர்த்தியிருக்கும்
வெண்பனி அழகு நீ!

பெரியார் புவியென்றால்
அதனை மாசுபடாமல்
காக்கும் ஓசோன் படலம் நீ!

பெரியார்
ஆழ்கடல் என்றால்
அதில் மூழ்கி முத்தெடுக்கும்
வித்தைக்கற்றவன் நீ!

பெரியார் ஆகாயமென்றால்
அதனினின்றும் வைரஇழைகளாய்
தரையிறங்கும் மாமழை நீ!

பெரியார் ஆதவனென்றால்
அதன் ஒளிக்கற்றைகளை உள்வாங்கி
குளிர்தருவாய்; தன்மதியாய்
இரவிலும் ஒளி உமிழும்
எங்களுயிர்த் திங்கள் நீ!

பெரியார்
பகுத்தறிவுப் பூங்காவென்றால்
அதில் கள்ளமாடுகள்
உள்ளே நுழையாமல் பார்த்துக்கொள்ளும்
ஊதியமில்லா ஊழியன் நீ!

பெரியார்
கழனியென்றால்
அதில் விளைந்த
அறிவுப் பயிர்களை
இருள்சூழ் இல்லங்களில் சேர்த்து
அருள் செழிக்கவைக்கும்
பேருழவன் நீ!

பெரியார்
கணினியென்றால்
அதன் வழி
உலகத் தமிழரின்
உள்ளங்களையெல்லாம்
அறிவு வழியில்
அணியப்படுத்தும் இணையம் நீ!

பெரியார்
பல்கலைக் கழகமென்றால்
பெரியாரியலை பசுமரத்தாணியாய்
பைந்தமிழர் உள்ளங்களில்
பதியவைக்கும் பேராசிரியன் நீ!

பெரியார்
மலைத் தொடரென்றால்
அதில் பிறப்பெடுத்து
தமிழ் நிலத்தைக் கொழிக்கவைக்கும்
வற்றாத நதிநீர் நீ!

பெரியார்
தத்துவமென்றால்
திரிபுவாதத் திருடர்களிடமிருந்து
பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கும்
அதனைக் கொண்டு செல்லும்
அறிவார்ந்த வாரிசு நீ!

பெரியார் அறிவுச் சொத்தென்றால்
ஆன்மீகக் கறையான்களும்
அடுத்துக் கெடுக்கும் புல்லுருவிகளும்
அழித்துவிடாமல் பாதுகாத்துவரும்
ஆயுட்காலப் பெட்டகம் நீ!
பெரியார் ஆலமரமென்றால்
அதில் அமர்ந்து இளைப்பாறிவிட்டு
எத்தனையோ பறவைகள் பறந்துவிட
இயற்கைச் சீற்றங்களும்
மனிதக் கொடுமைகளும்
வந்து வந்து மிரட்டியும்
மிரளாத; மனங்குலையாத
அன்னை மடியைவிட்டு
அகலாத அக்கினிக் குஞ்சு நீ!

பெரியார் விட்டுச் சென்ற
அசையும் -_ அசையா சொத்துக்களை
அப்படியே அடைக்காத்து
பன்மடங்காய் பெருக்கி
பார் புகழ் நிறுவனங்களாய்
ஆக்கிக் காட்டிய
அய்யாவின் அச்சே!
அவர்தம் உயிர்மூச்சே!

பெரியாரில் கருவாகி
உருவான பெருமகனே!
பெரியாரில்; பெரியாரால்
நீயென்றால்,
உன்னில்; உன்னால்தானே
இயங்குகின்றோம்
இமயம் தொட்டு!

– சீர்காழி கு.நா.இராமண்ணா.

இதயத்தில் வீற்றிருக்கும் வீரமணி வாழ்க!

ஆத்திகம் பேசு வார்முன்
அறிவியல் பேசி, தீய
சாத்திரம் பேசு வார்முன்
சரித்திரம் பேசி, மூடக்
கோத்திரம் பேசு வார்முன்
கொள்கையைப் பேசி, உன்றன்
நாத்திறம் மூலம் நாட்டில்
நல்லதோர் மாற்றம் செய்தாய்!

கற்றவர் கணக்கா யர்கள்
கண்ணியம் மிக்க வர்கள்
உற்றவர் உழைப்ப வர்கள்
ஓங்கிடும் கீர்த்தி பெற்றோர்
பற்றினைத் தமிழ்பால் வைத்தப்
பண்பினில் சிறந்த வர்கள்
நற்றுணை யாக உன்னை
நம்பியே வாழு கின்றார்!

– புலவர் இரா. கூத்தரசன், பெருவளப்பூர்