– டாக்டர் கலைஞர்
எனக்கு, என்னுடைய ஆட்சிக்கு நான் எடுத்து வைக்கின்ற சாதனைகளுக்கு எதிர்ப்புகள் எங்கிருந்து தோன்றினாலும், அந்த நேரத்திலே மனம் சற்று சலிப்புறுமேயானால், அந்தச் சலிப்பை நீக்குகின்ற மாமருந்தாக எனக்குத் தோன்றுகின்ற இப்பெரியார் திடல், திருச்சியில் பெரியார் மாளிகை, வீரமணி அவர்களுடைய உருவம் இவர்களெல்லாம் நமக்காக இருக்கும்போது திராவிட இயக்கம் நம்மைப் பெற்றெடுத்த வீடு! திராவிட இயக்கம் நாம் தவழ்ந்து வந்திட்ட தாழ்வாரம்! திராவிட இயக்கம் நம்முடைய கைவேல்! திராவிட இயக்கம் நமக்குக் கவசம்! திராவிட இயக்கம்தான் உயிர்மூச்சு! திராவிட இயக்கத்தினுடைய முதல் போர்வாளாக, முதல் பாதுகாவலனாக, நமக்குத் திராவிடர் கழகம் இருக்கும்போது, நான் எதற்கும் அஞ்சத் தேவையில்லை என்ற உறுதியை நான் எப்பொழுதும் பெற்றிருப்பவன்.
சில நேரங்களிலே சில அபிப்பிராயப் பேதங்கள் வரலாம். அந்த அபிப்பிராயப் பேதங்கள்கூடக் கொள்கை அடிப்படையிலே வந்ததே தவிர, உறவு அடிப்படையில் வந்தது அல்ல. கொள்கை அடிப்படையில் வந்ததென்றால், இந்தக் கொள்கையை எப்படி நிலைநாட்டுவது, எப்படி நடைமுறைப்படுத்துவது என்ற அந்த வழிமுறைகளிலே வேண்டுமானால், கருத்து வேறுபாடுகள் வரலாமே தவிர அந்தக் கொள்கையே சரியா? அல்லவா? என்று என்றைக்கும் எனக்கும், நம்முடைய வீரமணியார் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு வந்ததே கிடையாது. வரவே வராது. தமிழர்கள் அதை வரவும் விடமாட்டார்கள். அந்த அளவிற்கு இன்றைக்கு இந்த இயக்கங்கள் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு புறத்திலே சமுதாயப் பணிகளை ஆற்றிக் கொண்டு இன்னொரு புறத்திலே அரசியல் பணிகளைக் கவனித்துக் கொண்டிருக்கின்ற இரண்டு இயக்கங்கள் என்றாலும், திராவிட முன்னேற்றக் கழகம் சமுதாய இயக்கமாகவும் கொள்ளப்படும். திராவிடர் கழகம் அரசியல் இயக்கமாகவும் இயங்கும். இவை இரண்டுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. இவை இரண்டினுடைய தாத்பர்யம் இவற்றின் மூலநோக்கம் திராவிடர்களை வாழ வைப்பது, திராவிடர்களை முன்னேற்றுவது, தமிழர்கள் சுயமரியாதைக் காரர்களாக என்றைக்கும் வாழ பாடுபடுவது, தன்மான சக்திகளாகத் தமிழர்கள் வாழவேண்டு மென்பதற்காகப் பாடுபடுவது என்பதுதான் இரண்டு இயக்கத்தினுடைய நோக்கங்கள் குறிக்கோள்கள். அந்தக் குறிக்கோள் நிறைவேறுமா? நடைபெறுமா? வெற்றி பெறுமா? என்று யாராவது எண்ணுவார் களேயானால், அதில் ஒரு துளிச் சந்தேகமும் இல்லை. அந்த ஒரு துளிச் சந்தே கமும் இன்றைய நிகழ்ச்சியை யாராவது உற்றுக் கவனித் தால் நிச்சயமாக நீங்கிவிடும். எனக்கு நீங்கிவிட்டது.
– (திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் ஆற்றிய உரையிலிருந்து, 11.11.2006)
Leave a Reply