துவளா தொண்டு நெஞ்சம்!- கவிஞர் கண்ணிமை

2024 கட்டுரைகள் டிசம்பர் 1-15 2024

ஒரு தலைவருக்குரிய சில தன்மைகளும் இருக்க வேண்டும் என்று – மில்லர், நாபே என்னும் அறிஞர்கள் கூறியுள்ளனர். தன்னடக்கம், செயல்படும் திறம், போராடும் குணம், பகுத்துப் பார்க்கும் அறிவு, எப்பொழுதும் மகிழ்ச்சி, விடாமுயற்சி, மிகுந்த திறமை, அறிவுக்குட்பட்ட தைரியம், அழியாத நம்பிக்கை, நேர்மை, கொள்கை உறுதி, காலத்துக்கேற்ற அரசியல் அறிவு, உண்மையைக் கடைப்பிடித்தல், ஒழுக்கமாக நடந்துகொள்ளுதல், எளிய வாழ்க்கை, தொண்டு செய்யும் ஆர்வம், – இவை தலைவருக்கு இருக்க வேண்டிய தனித் தன்மைகள்.

தலைவராக வருகிறவர்களுக்குத் தங்களிடத்தில் தன்னம்பிக்கை இருக்கவேண்டும். தன்னைப் பின்பற்றுபவர்களிடம் நம்பிக்கை, தன்னுடைய கொள்கைகள், குறிக்கோளில் நம்பிக்கை, இந்த மூன்றும் யாரிடம் இருக்கின்றனவோ அந்தத் தலைவரைத்தான் மக்கள் பின்பற்ற வேண்டும். அப்படிப்பட்டவர்கள்தாம் தகுதி வாய்ந்த தலைவரை உணர்ந்த மக்களாகவும் இருக்க முடியும்.

ஒரு குறிக்கோளில் பற்றுடையவர்களையும், அதனை ஊக்கத்தோடு பின்பற்றக்கூடியவர் களையும் கொண்ட ஒரு கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல், ஆக்கப் பணிகளில் பற்றுதல் கொண்டு முதலில் தானே ஒரு செயலைச் செய்து காட்டும் துணிவு, தன்னைப் பின்பற்றுவோருக்கு ஒழுக்கமும், நேர்மையும் எடுத்துக்காட்டத்தான் ஒழுக்கம், நேர்மை ஆகிய இரண்டையும் மதித்து நடக்கும் மாண்பு, எடுத்துக்கொண்ட செயலை இறுதி வரையில் கொண்டு செலுத்தும் திறமை, இத்தகைய இன்றியமையாத தகுதிகள் தலைவராக இருப்பவர்களுக்கு இருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்டுள்ள தகுதிகளுக்கும் செயல்படும் திறமைக்கும் ஏற்றவர் யார்? என்பதைக் கண்டறிந்து கொண்டோம். ‘‘பிறப்பதும், சாவதும் இயற்கை. ஆனால், மக்கள் பாராட்டுதலுக்குப் போற்றும்படியான வகையில் காரிய மாற்ற வேண்டும்!’’ இது தந்தை பெரியார் கூறிய பொதுத் தொண்டுக்கான இலக்கணமாகும்.

இந்த இலக்கணத்தைத் தொண்டறமாக தம் தலைமேல் போட்டுக்கொண்டு பாடாற்ற முன்வந்தவர்தான்- அய்யாவால் அடையாளம் காட்டப்பட்டவர்தான் ஆசிரியர் வீரமணி அவர்கள்.

சகிப்புத் தன்மை, சூழ்ந்த நோக்கு, ஆய்வுக் கண்கள், அரவணைக்கும் உள்ளம், யாராலும் களவாட முடியாத அனுபவம் – ஆகியவற்றின் ஒன்றிணைந்த உருவம்தான் தலைவர் வீரமணி அவர்கள். விரிந்த இதயம் அவர் தொண்டை எண்ணிப் பூரிப்படைகிறது. அவரின் நெடிய தொண்டு பொது வாழ்விற்கோர் அரிய இலக்கணமாகும்.

 

‘‘உற்ற நோய் நோன்றலும் ஊர்நலம் ஓம்பலும்
நற்றவம் என்பர் தொண்டென நவில்வர்!
தொண்டு மனப்பான்மை அந்தத் தூயனைக்
கொண்டது குழந்தைப் பருவத்திலேயே!
தமிழன் அடிமை தவிர்த்துக் குன்றென
நிமிர்தல் வேண்டும் என்று நிகழ்த்தும்
பெரியார் ஆணை ஒன்றே பெரிதெனக்
கருதிய கருத்து வீர மணியை
வீண்செயல் எதிலும் வீழ்த்த வில்லை!
அண்டிப் பிறரை அழிக்க அல்ல,
உண்டிக் கல்ல உயர்வுக் கல்ல
தொண்டுக் காகக் கல்வித் துறையிற்
சேர்ந்தோன், எம்.ஏ., தேர்விலும் தேர்ந்தோன்
நினைவின் ஆற்றல் நிறைந்த வீரமணி
படிக்கும் நேரத்திலும் பார்ப்பனர் கோட்டையை
இடிக்கும் நேரம் எட்டுப் பங்கதிகம்!
தமிழர் நமக்கும் தமிழ் மொழிக்கும்
உழைப்பதே உயர்ந்த செல்வமாய்க் கொண்ட
மாண்பார் வீரமணி!’’

என்று நம் தமிழர் தலைவர் பற்றி அன்றே நமக்கு அடையாளம் காட்டிவிட்டார் புரட்சிக்கவிஞர்.
‘‘நம் இயக்கத்திற்கு ஒரு முழு நேரத் தொண்டன் நமக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்கிற ஆசை. இப்போது அவர் தொண்டு அரை நேரம், இனி அது முழு நேரமாகிவிடலாம்’’ – என்ற தந்தை பெரியாரின் ஆசை நிறைவேறிவிட்டதல்லவா? அன்று முழுநேரத் தொண்டராகி இன்று தொண்டர் நாயகராகிவிட்டார் நம் தமிழர் தலைவர்.
‘‘மாறாத மனிதநேயம், மறையாத தன்னலமறுப்பு, இவற்றையும் கற்றுத் தந்தவர் எம் தலைவர் என்கிற போது அவருக்கு என் குரு தட்சணையாக ஆக்கி வாழ்வதைவிட எனக்குப் பெரும் மனநிறைவு வேறு எதிலும் கிடைக்காது என்று அறிந்தே என் பணியை மிகுந்த உற்சாகத்துடன் நாளும் தொடர்கிறேன்!’’
-என்று தந்தை பெரியாரின மானமீட்புப் பணியை தலைமேல் போட்டுக்கொண்டு உலகு தொழும் பெரியாரியலை ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் – தொண்டு பழம், துவளாத நெஞ்சம். அவர்தாம் எங்கள் தலைவர்! ஆம் திருவிடத்தின் தமிழர் தலைவர் வாழ்கவே !