வீரமணி பத்து- செல்வ. மீனாட்சி சுந்தரம்

2024 கவிதைகள் டிசம்பர் 1-15 2024

அய்யாவின் அம்மாவின் தொண்டறத்தின் நீட்சி!
ஆசிரியர் வீரமணி அருந்திறத்தின் மாட்சி!
கொய்யாத மலர்தாங்கும் சோலைவனக் காட்சி
குளிர்பொங்கும் அருள்முகத்தின் புன்னகைப்பூ சாட்சி!
பொய்க்காத கார்ப்பொழிவாய்க் கடனாற்றும் நேர்த்தி!
புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் வளையாத சீர்த்தி!
உய்வித்த பெரியாரே உருமாற்றம் கொண்டே
உலவுகிறார் நம்மிடையே வீரமணி என்று!

ஒருபத்து வயதினிலே உயர்மேடை ஏறி
உலகத்தின் செவிப்பறையுள் விதைத்தாரே நீதி!
பருவத்தின் முன்பழுத்த மலைத்தோட்ட வாழை!
பகுத்தறிவு மணம்வீச மடல்விரித்த தாழை!
உருவத்திற் கொவ்வாத உரங்கொண்ட காளை!
உருக்கிட்டுச் செய்தாரோ உள்ளத்தை வாளாய்!
துருவத்து விண்மீனாய் ஒளிகூட்டி வந்தார்!
தொண்டாற்றுங் கழகத்தின் வழிகாட்டி யானார்!

கடலூரில் கண்டெடுத்த கழகத்தின் முத்து!
கருஞ்சட்டைப் படைகொண்ட கந்தகத்தின் வித்து!
புடமிட்ட பொன்னானார் பெரியார்சொல் கற்று
புத்துலகின் ஆசான்மேல் கொண்டார்நற் பற்று!
படர்கொடியாய்க் கழகமெனும் கொழுகொம்பைப் பற்றிப்
பயன்விளைக்கும் நிழல்மரமாய் வளர்ந்தார்விண் முட்டி!
இடர்களைந்தார் கழகத்தை இருள்சூழ்ந்த வேளை
இயக்கந்தன் உயிர்மூச்சாய்க் கொண்டுழைத்த தாலே!

விடும்கலப்பை ஏருழவோ களையகற்றும் உழவு!
விடுதலையின் கூருழவோ தலைநிறைக்கும் அறிவு!
விடுதலைத்தாள் இருள்விலக்க ஒளிபரப்பும் விளக்கு!
விடியலுக்காய் ஏங்கிநின்ற தமிழருக்குக் கிழக்கு!
விடுதொழிலை என்றதந்தை ஆணையேற்றுத் தலைமேல்
விரைவளியாய் வீரமணி விரைந்துபணி அமர்ந்தார்!
விடுதலையின் ஆசிரியப் பொறுப்புதனை ஏற்று
விரைந்ததுகாண் அறுபதாண்டு! அரியதொண்டு தொடர்க!

பிற்படுத்தப் பட்டோர்க்காய் இடமொதுக்கித் தந்து
பிழைகளைய மண்டல்குழு சார்பறிக்கை தந்தும்
கற்சிலையாய் சமைந்திருந்த ஒன்றியத்தின் ஆட்சி
கடமையாற்ற வைப்பதற்கு களம்புகுந்த மாட்சி!
விற்படையாய் வீரமணி வெகுண்டெழுந்து பாய்ந்தார்!
வேதியத்தின் வஞ்சகத்தை முறியடித்துச் சாய்த்தார்!
நற்றுணையாய் தமிழருக்கு தலைவரென வாய்த்தார்!
நம்மவர்க்கு இடமொதிக்கி நமையுயர வைத்தார்!

நுண்ணோக்கி நுட்பமறி நுழைபுலத்தால் ஆய்ந்து
நூற்றளிப்பார் நூற்கள்பல பெரியார்சொல் தேர்ந்து!
பின்னோக்கிப் பிடித்திழுக்கும் மதவெறியைக் காய்ந்து
பேணிடுவார் சமத்துவத்தைப் பெரியார்நெறி தோய்ந்து!
மண்ணூக்கும் உரமாக மக்கள்நலம் மாந்தி
வகைபிரித்து வாழ்வியலின் பொருளுரைப்பார் ஆழ்ந்து!
முன்னோக்கித் தொலைநோக்கும் பார்வையால் ஓர்ந்து
மோடிவித்தை வஞ்சகத்தின் முகம்கிழிப்பார் பாய்ந்து!

எளிமைநிறை இதயமுற்று மிகுவலிமை உற்றார்!
எடுத்தெறிந்து பேசாது நாவாடக் கற்றார்!
அளிச்சிறகின் தொடரியக்க வளிச்சிந்தை பெற்றார்!
அய்யாவின் அடிச்சுவட்டில் தடம்பதித்த நற்றாள்!
ஒளிசுரக்கும் விழிகளுற்றுக் கருணைபொழி நற்றான்!
உறவாகத் தொண்டர்களை அரவணைக்கும் நற்றாய்!
வெளிப்பரப்பாய் விரிந்தவுளம் பெரியார்சொற் பற்றால்!
வீரமணி புகழ்விரியும் கதிர்விரிக்கும் பொற்பாய்!

வளையாத பெரியார்கைச் செங்கோலாய் நிமிர்ந்து
வற்றாத தன்மானப் பெருங்கடலாய் விரிந்து
குழையாத நெஞ்சுறுதி கொண்டோங்கிச் சிறந்து
குன்றமெனக் கொள்கைதனை நெஞ்சூன்றி உயர்ந்து
கலையாத கரும்படையின் தளபதியாய் நடந்து
களைதோன்றா விளைநிலமாய் கழகத்தைப் புரந்து
பிழையாத தலைமைக்கோர் காட்டாகத் திகழ்ந்து
பிறைகாணா நிறைநிலவாய் வீரமணி ஒளிர்வார்!

தொண்டூறும் தொண்ணூறு தாண்டும்பன் னூறு!
துறைதேடிச் சோம்பாது கடலாடும் பீடு!
விண்ணூரும் வெய்யோன்பெய் வெளிச்சமழைக் கூட்டு!
விளக்காகி இருள்மடமை விலக்குமொளிக் கீற்று!
மண்தாங்கும் வேர்மரத்தின் உயிர்தாங்கற் போலே
மக்களைத்தன் தோள்தாங்கி மானங்கா வேந்தன்!
வெண்தாடி வேந்தர்சொல் வாழ்நெறியாய் ஏற்று
வீறுகொண்டு படைநடத்தும் வீரமணி வாழி!

அகமெல்லாம் பகுத்தறிவை விதைத்தாய்நீ வாழி!
அகிலமெங்கும் பெரியாரைச் சேர்த்தாய்நீ வாழி!
சிகரமெனச் சீரோங்கும் நலத்தோடு வாழி!
செயல்நிறைத்துச் செயற்கரிய செய்தாய்நீ வாழி!
புகழேந்திப் பெரியாரின் தொண்டறமாய் வாழி!
பொற்பேந்திப் பொழுதெல்லாம் மகிழ்வோடு வாழி!
முகமானாய் தமிழருக்கு மூத்தோனே வாழி!
மூச்சானாய் எங்களுக்கு! எமைக்காக்க வாழி! 