மதுரை எழுத்துப் பயிற்சிப் பட்டறை !-திருப்பத்தூர் ம.கவிதா

2024 கட்டுரைகள் நவம்பர் 16-30

எதை எழுதுவது? எப்படி எழுதுவது? அதற்கான முன் தயாரிப்புகள் எவை? எழுத்தின் நோக்கம் என்ன? தாக்கம் என்ன? தரவுகள் என்ன? புதுமையைக் கொண்டு வருவது எப்படி? என்பனவற்றை வளரிளம் எழுத்தாளர்களுக்குக் கற்பிக்க, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றமும் வாருங்கள் படைப்போம் குழுவும் இணைந்து பல்வேறு ஊர்களில் பயிற்சிப் பட்டறைகளைத் தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. அந்த வகையில் 10.8.2024 அன்று மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தோடு இணைந்து ஒருநாள் நிகழ்வாக நடத்தப்பட்டது.
‘‘நீங்கள் பணத்துக்காக எழுதுகிறீர்களா? சக மனிதன் துன்பப்படுகிறானே என்று எண்ணி அத்துன்பம் நீக்க எழுதுகிறீர்களா? என்று உங்களுக்குள் கேள்வி கேளுங்கள்” என்று எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வா.நேரு நோக்கவுரையாற்றினார்.

‘‘மாணவப் பருவம் என்பது ஒரு சேமிப்புப் பருவம். அதில் நாம் செய்யும் மனப்பாடங்களும் பிறகு செலவு செய்வதற்கு வாய்ப்பாக அமையும்’’ என்று மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர் அவ்வை அருள் உரையாற்றினார்.

‘‘வெறும் வார்த்தை ஜாலம் அல்லாமல் உற்று நோக்குதல் (Observe), உற்று நோக்கியதைப் பற்றிய தகவல்களைப் படிப்பது(Read), இரண்டையும் சேர்த்துச் சிந்திப்பது (Think) எனும் ORT திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்’’ என்று மதுரை தியாகராசர் கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் ராஜா கோவிந்தசாமி வழிகாட்டினார்.

சிறுகதை – புதினம் புனைவது எப்படி?

சோவியத் ரஷ்யாவில் பீட்டர்ஸ்பர்க் என்னும் நகரில் 4 மணி நேரம் மட்டுமே இருள் நிலவும். நள்ளிரவில் வீதிகளில் சலிப்போடு சுற்றிக் கொண்டிருந்த இளைஞரும் மாஸ்கோவிற்குச் சென்ற தன் காதலன் வராமல் மனம் வருந்திய பெண்ணும் ஒருவருக்கொருவர் எதிரில் தென்பட்டு இருவரும் அன்பு பாராட்டுகிறார்கள். ஒரு நாள் ‘‘இவர்தான் என் காதலன்; வந்து விட்டார்; உங்களுக்கு நன்றி’’ என்று சொல்லி அந்தப் பெண் கிளம்பும்போது, முன்னமே சலிப்பாக வாழ்ந்தவன் இதயம் இப்போது வெடிப்பது போல் இருந்தாலும், ‘ஒரு கணமேனும் என்னை நேசித்தாயே… ஆயுளுக்கும் அது போதும்’ என்கிறான். 1948 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் தஸ்தாயெவஸ்கி எழுதிய ‘வெண்ணிற இரவுகள்’ எனும் கதையில், தான்
விரும்பிய காதல் நிறைவேறாமல் போனாலும் எங்கிருந்தாலும் வாழ வேண்டும் என்று நினைக்கும் கருத்தமைய எழுதினார்.இன்றைக்
கும் அது சமூகத்திற்குப் பாடம் எடுக்கிறது.

கதவு திறந்திருக்கிறது என்ற ஒரே சொல் – இங்கே வழி இருக்கிறது, அந்தக் கதவை மூடுங்கள், தாறுமாறாக பேசிக் கொண்டிருப்பவர் வெளியே செல்லுங்கள், எனப் பொருள்படும். அதுவே காதலி சொன்னால் அவசரப் படாதீர்கள் என்று பல பொருள்படும். பொருள்களைத் தெரிந்து கொண்டு இடத்திற்கேற்ப பயன்படுத்துங்கள்! என்று எழுத்தாளர் முனைவர் ந.முருகேசபாண்டியன் பயிற்சியளித்தார்.

கட்டுகளை உடைப்போம்!
கட்டுரை தீட்டுவோம்!

வரலாறு நம் குடும்பத்திலே இருக்கிறது. நம் தாத்தா பாட்டிக்கு எப்போது வாக்குரிமை வந்தது? எப்போது படித்தார்கள்? என்பதே நம் வரலாறு. எதையும் தொடர்ச்சியாகச் செய்யும் போது அது நமக்குத் திரண்டு வரும். தொடர்ந்த தேடலுடன் இருங்கள். மதுரை பற்றிய 90 புத்தகங்களைச் சேகரித்து அதை எளிமையாக்கி எழுதிய நூல் தான் ‘தூங்கா நகரம்’. எல்லா உரிமைகளும் போராடித்தான் நமக்கு கிடைத்திருக்கிறது. அதைக் கூற ‘போராட்டங்களின் கதை’ என்ற நூலை எழுதினேன். மிகப்பெரிய போராட்டத்தையும் பத்திரிகைகள் வழங்கும் இடத்திற்கேற்ப சுருக்கி எழுதுவதும் கூட ஒரு பயிற்சிதான்!” என்று 18 நூல்களைக் கொடுத்த எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் தன் வாழ்க்கை விளக்கமாகவே வகுப்பெடுத்தார்.

செயற்கை நுண்ணறிவும் படைப்பிலக்கியமும்!

எந்தத் துறையில் புலமை பெற்றிருந்தாலும் அந்தத் துறையோடு செயற்கை நுண்ணறிவை அறிந்து வைத்திருந்தால் மட்டுமே தோற்க மாட்டார்கள் என்பதே எதிர்கால நிலையாகும். எழுத்துத் துறையில் ஏழு மணி நேரம் படிக்க வேண்டிய நூலின் பிழிவை ஓரிரு மணி நேரங்களில் தரும் ஆற்றல் இருப்பதால் தேர்வுக்காகத் தயாராகும் மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மூலம் அதிகம் படிக்கலாம். கம்ப்யூட்டர் என்பது முழுக்க முழுக்க வடிவமைக்கப்பட்டது. ஆனால், செயற்கை நுண்ணறிவு, நம் மூளையைப் போலவே பார்த்ததையும் கேட்டதையும் வைத்து கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் கொள்கிறது.
கதை, மொழிபெயர்ப்பு, ஓவியம் போன்றவற்றை எளிமைப்படுத்துவது மட்டுமல்லாமல், மரபு வழியாக நோய்கள் குழந்தைகளைத் தாக்காமல் இருக்க ‘டிசைனர் பேபீஸ்’ குழந்தைகளையும் இதில் உருவாக்க முடியும். இறைச்சியில் தேவையான பகுதியை மட்டும் கூட ஒரு செல்லை வைத்து வளர்க்க முடியும். அதன் மூலம் தீவனச் செலவு குறைந்து உணவுப் பஞ்சம் தீர வழி ஏற்படும்.’’ என்று எழுத்தாளர் கோ. ஒளிவண்ணன் உரையாடல் வழியில் எளிமையாக விளக்கினார்.

சிறார் இலக்கியம் படைப்பது எப்படி?

சிறுகதைகள் போலில்லாமல் சிறார் இலக்கியம் படைக்க கூடுதல் கவனம் வேண்டும். குழந்தைகளாகவே மாறி எழுத வேண்டும். கிறுக்கல்கள், ஓவியங்கள், உரையாடல்கள் என்றும், படிக்கும் வகுப்புக்கு ஏற்பவும் பிரித்துக் கொள்ள வேண்டும். எளிமை, உண்மை, அழகு, படைப்பாக்க உணர்வு, குழந்தைத் தன்மை இருக்க வேண்டும். கதை முடிவு அடுத்த தேடலுக்கான ஆரம்பமாக இருக்க வேண்டும். மதக் கதைகள், புராணக் கதைகள் போன்றவை எல்லாம் சிறார் இலக்கியம் அல்ல. ஒரு கதை இருக்க வேண்டும், அதில் புனைவு இருக்க வேண்டும், குழந்தைகள் மனத்திற்குள் அது இருக்க வேண்டும்; வண்ணப் படங்கள் இருக்க வேண்டும், அது குழந்தைகளை ஈர்க்க வேண்டும்; வன்முறைகள் இருக்கக் கூடாது. உலக சிறுவர் புத்தக நாள் ஏப்ரல் 2 ஆகும். டென்மார்க்கைச் சேர்ந்த ஆண்டர்சன் 125 மொழிகளில் சிறார் இலக்கியங்கள் படைத்திருக்கிறார்!” என்று துபாயில் தமிழ்ப் பள்ளி நடத்தி வரும் கின்னஸ் விருதாளர் முனைவர் ரோகிணி விளக்கினார்.

ஒடுக்கப்பட்டவர்களின் வலியைப் பதிவு செய்க!

கண்டுபிடிப்புகள் மனிதனுடைய துன்பத்தைப் போக்க வேண்டும். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை இவையெல்லாம் எழுத்துகளில் பதிவிடப்படவில்லை. ஒரு பெண்ணின் வலி என்ன? அவள் ஏன் அழுகிறாள்? என்று பெண் பதிவு செய்ய வேண்டும். அதோடு ஒரு சொல்லுக்கு வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பொருள் உள்ளது. அதையும் நீங்கள் கற்று பயிற்சி பெற வேண்டும்” என்று திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் வழிகாட்டுதலுரையும் பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழும் வழங்கி நிகழ்வை நிறைவு செய்தார்.

(நிகழ்வுத் தொகுப்பு)