நம்மவர் வீட்டு அனைத்து காரியங்களிலும் அதாவது திருமணம், வளைகாப்பு, குழந்தைகளுக்கு பெயர் சூட்டல், புதுவீடு புகுதல், ஒருவர் இறந்தால் 15ம் நாள் கருமாதி, பின் ஆண்டுதோறும் திதி போன்றவைகளுக்கு பார்ப்பன புரோகிதரை அழைத்து அவன் சமஸ்கிருதத்தில் (அதாவது நம்மவருக்கு புரியாத மொழியில்) ஏதேதோ மந்திரம் என்று சொல்லி நம்மவரின் அறியாமையை பயன்படுத்தி நம்மவர்களை முட்டாளாக்கி பணம் பறித்து செல்கின்றனர். மேலும் கோயில்களிலும் சமஸ்கிருதத்தில் மந்திரம் என்று சொல்லி நம்மவரிடம் பணம் பறிக்கின்றனர். நம்மவர்களில் படிப்பறிவு இல்லாத பாமரன் மட்டுமின்றி மெத்தப் படித்த மேதாவிகள் என்போரும் (அய்யாவின் கூற்றுப்படி படித்த பாமரர்களும்) அவர்கள் செய்யும் அனைத்து காரியங்களையும் பார்ப்பன புரோகிதர் கூறும் மந்திரத்தை ஓதி செய்கின்றனர்/ஆரம்பிக்கின்றனர். அவ்வாறு மந்திரம் ஒன்று உண்டா? என்று யாரும் சிந்திப்பதில்லை.
மந்திரம் என்று எதுவுமில்லை என்று சித்தர்கள் திட்டவட்டமாக கூறுகின்றனர். அவற்றில் சில
சித்தர் சிவவாக்கியர் 220:-
வெந்தநீறு மெய்கணிந்து வேடமும்தரிக்கிறீர்
சிந்தையுள் நினைந்துமே தினம் செபிக்கு மந்திரம்
முந்த மந்திரத்திலோ மூலமந்திரத்திலோ
எந்த மந்திரத்திலோ ஈசன்வந்து இயங்குமே
180
கோயில் பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா
வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா
365
மந்திரங்கள் கற்று நீர் மயங்குகின்ற மாந்தரே
மந்திரங்கள் கற்ற நீர் மரித்தபோது சொல்விரோ
417
நூறு கோடி மந்திரம் நூறு கோடி ஆகமம்
நூறு கோடி நாளிலிருந்து ஊடாடினாலும் என்பயன்
496
நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே சுற்றி வந்து முணமுணன்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ
அகப்பேய் சித்தர் -_ 71
மந்திரம் இல்லையடி அகப்பேய்!
வாதனை இல்லையடி
தந்திரம் இல்லையடி அகப்பேய்
சமயம் அழிந்ததடி
கணபதிதாசர் 75
மித்திர குருக்கள் சொல்லைமெய்யென்று கல்லை வைத்துப் பத்திர புட்பஞ்சார்த்திப் பணிந்திடும் பாவை நீ தான்
பாம்பாட்டிச் சித்தர் 100
பூசை செய்ததாலே சுத்தபோதம் வருமோ?
பூமிவலஞ் செய்ததனாற் புண்ணியம் உண்டோ?
போதம் என்ற சொல்லுக்கு ஞானம் என்று பொருள்
குதம்பைச் சித்தர் (7)
தந்திரமான தலந்தனில் நிற்போர்க்கு
மந்திரம் ஏதுக்கடி? குதம்பாய்!
மந்திரம் ஏதுக்கடி?
கொங்கணநாயநார் 102
பூரண நிற்கும் நிலையறியான் வெகு
பொய் சொல்வான் கோடி மந்திரஞ்சொல்வான்
காரண குரு அவனுமல்லவிவன்
காரியகுரு பொருள் பறிப்பான்
சித்தர்கள் யார் என்பதைப்பற்றி சித்தர் பாடல்கள் என்ற நூலில் பதிப்பாசிரியர் அரு.ராமநாதன் அவர்கள் 11வது பக்கத்தில் கடவுளைக் காண முயல்கின்றவர்களை பக்தர்கள் என்றும் கண்டு தெளிந்தவர்களைச் சித்தர்கள் என்றும் தேவாரம் கூறுவதாக கூறுகிறார்.
எனவே ஆன்மீகவாதிகள் மேற்படி சித்தர்கள் கூற்றுப்படி மந்திரம் என்று ஒன்றும் இல்லை. பார்ப்பனர்கள் நம்மை ஏமாற்றுவதற்காக வடமொழியில் மந்திரம் என்று சொல்லி நம்மவர்களை கோயிலிலும் நம் இல்லங்களிலும் நடைபெறும் அனைத்து நல்லது கெட்டதுகளிலும் ஏமாற்றி வருகின்றனர் என்பதை அறிவார்களாக.
– ஆர்.டி. மூர்த்தி, திருச்சி – 17-