மாறும் நிறங்கள்

நவம்பர் 01-15

தேசிய நெடுஞ்சாலை பரந்து விரிந்திருந்தது. ஊருக்கும் சாலைக்கும் தொடர்பில்லால் ரயில் பாதைகள் போல் சாலைகளும் ஆகிவிட்டிருந்தன. கார் அதிக வேகமும் குறைந்த வேகமுமில்லாமல் போய்க் கொண்டிருந்தது.

செல்வபுரம் என்று வலதுபுறம் அம்புக்குறி போட்டிருந்த இடத்தில்…

மெதுவா பாத்து திருப்புங்க.. கண்ணன்… என்றேன். அவருக்குக் காது காட்காதது போல் வேகமாகவே திருப்பினார். மண் சாலைக்குள் நுழைய புழுதி கிளம்பிற்று. கொஞ்ச நேர பயணத்தில் செல்வபுரம் வர… நான்கு சாலைகள் சந்திப்பும் தொடர்ந்து ஒரு கோயிலும் என்பது தவிர வேறெதும் இல்லை. முழுமையான கிராமத்தின் அடையாளத்தோடு இருந்தது.

வழியில் எங்கும் வாழைமரம், பந்தல், பாட்டு என்று திருமணத்தின் அடையாளம் ஏதுமின்றி… நான் யோசிப்பதற்குள் கண்ணன் காரை விட்டிறங்கி… அருகிருந்த கடையில் கேட்டுக் கொண்டிருந்தார்.

கடைக்காரர் தேநீர் போட்டுக் கொண்டிரந்த அழகே ரசனையாய் இருந்தது. பால், டீத்தூள், சர்க்கரை கலந்து ஆற்றி தேநீரை வானத்தில் தூக்கி எறிவதுஐ போல் எறிந்து விட்டு… மீண்டும் குவளையில் பிடித்து…

என்கொன்றும் தனக்கொன்றுமாய் வாங்கி வந்தார் கண்ணன்.

ஆளைப் பார்த்ததும் டீ போட்டுட்டுத்தான் அடுத்த விஷயத்தையே பேசறாங்க… இளைவேந்தன் பரவால்லங்க… நல்ல செல்வாக்கோடதான் இருக்கான்… பாருங்க.. இந்த டீக் கடைக்காரருக்குக்கூட அவனத் தெரியல… என்று கிண்டலாக கூறியபடியே தேநீரை நீட்டினார் கண்ணன்.

அழைப்பிதழ்ல கோயில்ல திருமணம்… வீட்டுல விருந்து அப்படிதான் கண்ணன் போட்டிருந்தது…

இன்னும் கொஞ்ச தூரம் இதே சாலைல போனா இன்னொரு சாலை சந்திப்பு வருமாம்… அங்க போயி கேட்க சொல்றாரு…

அவர் ஒரு பேச்சாளர்னு சொன்னிங்களா.. கண்ணன்… ஆமாங்க… நேத்துவரைக்கும் பேச்சிலர் பேச்சாளர்… இனி பேச்சு இலராக் கூட போகலாம்…

தமிழும் ஆங்கிலமும் கலந்து கட்டி அவர் அடிக்க… நான் சிரித்தேன்.

இளைய வேந்தனின் குரல் மனதுக்குள் ஆடிற்று. சராசரி உயரமும் அதற்கு மீறிய கருமனுமாய் இருக்கும் அவனது குரலில் மட்டும் ஏதோ ஒரு வசீகரமிருக்கும்.

இவ்வளவு இடுக்குல இருக்கற கிராமத்துல இருந்து எப்படிதான் நம்மவட கூட்டங்களுக்கு வந்துட்டு ராத்திரி நேரங்கள்ல வீடு வந்து சேர்ந்து… ரொம்ப சிரமந்தாங்க… கண்ணன்…

அடுத்த சாலை சந்திப்பு வந்தது. சந்திப்பில் ஒரு வேப்பமரம் இருந்தது. அதைச் சுற்றியிருந்த வட்டத் திண்ணையில் இருந்த வருவரிடம் விசாரிக்க…

இதே ரோட்ல நேர போயி வடக்கால திரும்புங்க… அங்கிட்டு பாட்டு பாடும் பாருங்க… அதான் அவர் வீடு… அவர் காட்டிய திசையில் போக கொஞ்ச நேரத்தில் மணமகளே மருமகளே வா வா கேட்டது.

எத்தனையோ பாட்டுக்கள் வந்தாலும் இந்த பாட்டுக்கு பதிலா போடறமாதிரி இன்னும் எந்த பாட்டும் வரல… பாத்தீங்களா… கண்ணன்…

இல்லிங்க… இந்த தீப்பிடிக்க தீப்பிடிக்க _ன்ற பாட்டு கூட போடலாம்… சினிமா பாட்டுக்கு என்னங்க குறை… ராமாயணத்த ஒரே சரில சொன்னாங்க… பாருங்க ஒரு பாட்டுல… கண்ணும் கண்ணும் நோக்கியா…

இதுக்கும் ராமாயணத்துக்கும் என்ன சம்பந்தம்…?

அதாங்க… அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்… பேச்சுப் போக்கில் இடம் தாண்டி வந்து விட்டிருந்தோம். இப்போதுஐ பாட்டுச் சப்தம் ஏதும் கேட்கவில்லை. வரிசையாய் ஒரே மாதிரியான வீடுகள் இருந்தன. சாலையோரமிருந்த குழய் கிணற்றடியில் விசாரிக்க…

இத… இந்தப் பாதையிலயும் போலாங்க… காரை அங்கேயே ஓரமாக நிறுத்திவிட்டு நடந்தோம்.

போன தலைமுறை ஆத்துலயும், குளத்துலயும் தண்ணிய பாத்தோம்… இந்த தலைமுறைக்கு பாக்கெட்லயும், பக்கெட்லயும் தண்ணி வருது… அடுத்த தலைமுறைக்கு ரேசன் கடைலதாங்க.

கொஞ்ச தூரம் நடக்க வேண்டுமாய் இருந்தது. மின்சாரம் நின்று போனதால்தான் பாட்டுச் சத்தமும் நின்னு போயிருந்தது.

வீடு ஒரு குன்றின் பின்புறம் இருந்தது. வீட்டின் பின் பகுதியை சமப்படுத்தி கல்யாணப் பந்தல் போட்டிருந்தார்கள். வீடுகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்தன.

எங்களைப் பார்த்ததும் இளையவேந்தனின் முகத்தில் ஒளிரேகை ஆடிற்று.

அய்யா… வாங்க… வாங்க… நாங்களும் இப்பத்தான்யா கோயில்ல இருந்து வந்தம்…

மணப்பெண் உடன் இல்லை. அவனுடைய அம்மாவை அழைத்து வந்து அறிமுகப்படுத்தினான். அப்பா இல்லை என்பதுஐ புரிந்தது-

அய்யா… சாப்பிடுங்க…

ஓரளவுக்குக் கூட்டமிருந்தது. சிலர் தெரிந்தவர்கள் போல் எழுந்துஐ வணக்கம் சொல்ல… நானும் கண்ணனும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்தோம்.

அருகிலேயே நின்று கொண்டு,

அய்யா… சாப்பிடுங்க… என்றபடியே இருந்தான் இளையவேந்தன்.

இல்லத்தரசிய கூப்பிடுங்க… இப்படியெல்லாம் இவரைத் தனியா விடக்கூடாதுன்னு நான் சொல்லனுமில்ல… என்றார் கண்ணன், தன் கிண்டலை விடாது.

ரொம்ப எளிமையாய் ஒற்றை மல்லிகை மாலை அணிந்து இளையவேந்தனோடு சேர்ந்து நின்று வணக்கம் சொன்னதுஐ அந்தப் பெண்.

நான் பரிசாய் சில புத்தங்கள் கொண்டு வந்திருந்தேன். கண்ணன் ஒரு கவரை நீட்ட… புகைப்படம், சுருள்படம், செல்படம் என்று சில வினாடிகள் ஓடிற்று.

இவர் என்னுடைய குருநாதர்… நான் இன்னிக்கு நாலு பேருக்கு தெரிஞ்சவனா இருக்கேன்னா அதுக்கு அய்யாதான் காரணம்…

அப்படியெல்லாம் ஒன்னுமில்லம்மா… ஒரு பேச்சாளரை திருமணம் செஞ்சிகிட்டிருக்க.. மனசு கோணாம பாத்துக்க…

நான் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் அவர்கள் இருவரும் என்னுடைய காலில் விழுந்துவிட… நான் நெகிழ்ந்துஐ போனேன்.

நல்லா இருங்க… என்றபடி அவர்களின் தோள்தொட்டு எழுப்ப அப்போதுதான் கவனித்தேன். அதுவரை அவன் தோளில் இருந்த துண்டு கையிடுக்கில் இருந்தது.

நான் யோசித்துக் கொண்டிருந்த தருணத்தில்…

இது எப்பவுமே இங்கதான் இருக்கணும்… என்றபடி அவன் தோள்மீது துண்டினை சரியாய் மடித்துப் போட்டுவிட்டு கண்ணன் அவனைக் கட்டியணைத்துக் கொள்ள…

விடைபெற்று திரும்பிக் கொண்டிருந்தோம். கண்ணன்… எனக்கு பேச மட்டும்தான் தெரியும்… உங்களுக்கு…

அதற்கு மேல் என்னைப் பேசவிடவில்லை அவர். என்ன செய்யறது… கார் ஓட்டவும் தெரிஞ்சாவனுமில்ல… என்றபடியே காரை ஒட்டினார்.

வழக்கமான கிண்டலுடன்.

– – எழில்மொழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *