பெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் அவர்கள் கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் 1935ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி பிறந்தார். பொருளாதாரம், அரசியல், வரலாறு, மெய்யறிவு ஆகியவற்றில் முதுநிலை பட்டம் பெற்றவர். சட்டம் பயின்று கோவையில் வழக்குரைஞராகவும் பணியாற்றியுள்ளார்.
மொழி உரிமை, வருண ஜாதி உருவாக்கம், தமிழ் வரலாற்றில் தந்தை பெரியார், பாரதியார், பாவேந்தர் பெரியார், குமரன் ஆசான், சாகு மகராஜ், ஈழத்தமிழர் உரிமைப்போர் வரலாறு, மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம், ‘Gora’s positive Atheism and Free will’, ‘Thiruvalluvar on learning, Knowledge and wisdom’ உள்ளிட்ட எண்ணற்ற ஆய்வு நூல்களை எழுதியுள்ளார்.
உலகப் புகழ் பெற்ற நூலான ரிச்சர்ட் டாக்கின்ஸ் அவர்களின் ‘THE GOD DELUSION’
எனும் நூலை, தமிழில் ‘கடவுள் ஒரு பொய்
நம்பிக்கை’ என்ற தலைப்பில் மொழி பெயர்த்
தவர். பெரியாரியத்தைப் பற்றிய அருப்புக்
கோட்டை டி.கே.கைலாசம் அறக்கட்டளைச் சொற்பொழிவுக்காக ‘பெரியார் பேருரையாளர்’ என்ற விருது இவருக்கு வழங்கப்பட்டது. தமிழ், தமிழர் உரிமைக்காகவும் சமூக நீதிக்காகவும் சமத்துவத்திற்காகவும் பல கிளர்ச்சிகளில் ஈடுபட்டவர்.
பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர், திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர். ‘விடுதலை’ நாளிதழ், ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ ஆங்கில மாத இதழ் ஆகியவற்றின் ஆசிரியர் குழுவில் தொடர்ந்து பணியாற்றியவர்.
பத்து ஆண்டு காலம் பெரியார் திடலிலேயே தங்கி, இயக்க ஏடுகளுக்குக் கட்டுரைகளை வழங்கி தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு மாணிக்கத் தூணாக ஒளி வீசினார். ‘விடுதலை’ குழுமத்திற்கு வழிகாட்டியாய்த் திகழ்ந்த அந்த நந்தா விளக்கு எதிர்பாராத விதமாக திடீரென்று 22.10.2010 அன்று பெரியார் திடலிலேயே தனது மூச்சைத் துறந்துவிட்டது. அவர் விட்டுச் சென்ற பணிகளை, செம்மையாகச் செய்வதே அவருக்கு நாம் செய்யும் மரியாதை!