சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…

அக்டோபர் 16-31

பொதுவாழ்வுப் போரில் சிறை சென்ற முதல் பெண்கள்

நூல் : தோழர் ஈ.வெ.ரா.நாகம்மையார்

ஆசிரியர்    :    முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

வெளியீடு    :    தென்றல் பதிப்பகம்
13/3, பீட்டர் சாலை, இராயப்பேட்டை,
சென்னை – 600 014

பக்கங்கள்    :    204   ரூ. 150/-

அன்னை நாகம்மையாரைப்பற்றிச் சுருக்கமாகத் திரு.வி.க. போல் கூறவேண்டுமானால், அவர் பெண்மைக்கு ஓர் உறையுள் – வீரத்திற்கு ஒரு வைப்பு, காந்தியத்துக்கு ஓர் ஊற்று, சமூகநீதிக்கு ஒரு தூண், சாதியத்துக்கு எதிரான வீரவாள்.

இந்திய தேசிய காங்கிரசு பிறந்த ஆண்டில் பிறந்தவர் அன்னை நாகம்மையார் என்று மட்டுமே யூகிக்க முடிகிறது. அந்த ஆண்டில் பிறந்த அவர் அந்த அனைத்திந்திய காங்கிரசின் முதல் பிரதேச காங்கிரசின் பெண் உறுப்பினர் என்று உயர்ந்தது ஒரு பெருமையே.

12 வயதில் தாம் விரும்பிய தந்தை பெரியாரையே மணப்பேன் என்று கொண்டிருந்த துணிச்சல் அவர் மறைந்த 48 வயது வரையிலும் கொஞ்சமும் குறையவில்லை. நாகம்மையாரின் 125 ஆவது பிறந்த நாள் கொண்டாட வேண்டிய காலம் இது.

****

நாகம்மையாரின் முதல் அரசியல் நடவடிக்கை விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடைய கள்ளுக்கடை மறியல் நடவடிக்கையாகும். 1921 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சி இந்திய அளவில் முதன்மை வாய்ந்த நிகழ்ச்சி. முதன் முதலில் பெண்கள் விடுதலைப் போரில் கலந்துகொண்டு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டது இந்திய வரலாற்றில் இடம்பெற்ற முதன்மையான நிகழ்வு ஆகும்.

மது விலக்குப் பிரச்சாரத்தைச் செயல்படுத்த காந்தியும், காங்கிரசுத் தலைவர்களும் ஒன்று கூடிக் கள்ளுக்கடைகளின் முன் மறியல் செய்வது எனும் முடிவு ஈரோட்டில் பெரியார் மாளிகையில்தான் எடுக்கப்பட்டது.

****

கள்ளுக்கடை மறியல் தமிழ்நாட்டில் ஈரோட்டில் மிகவும் மும்முரமாக நடைபெற்றது. ஈ.வெ.ரா.வே மறியலைத் தலைமை யேற்று நடத்தினார். இதனை எதிர்த்த அரசு 144 தடை உத்தரவைப் பிறப்பித்த போதும் மறியல் செய்தவர்கள் பொருட்படுத்தாது மறியலில் ஈடுபட்டுக் கைதாகிச் சிறை புகுந்தனர்.

1921 நவம்பரில் ஈ.வெ.ரா.வும் அவருடன் சுமார் 100 அறப் போராளிகளுடன் சிறைப்பட்டார். ஒரு மாதம் சிறைத் தண்டனை பெற்றார். இதனால் ஊரெங்கும் அமளி. நாடெங்கும் பரபரப்பும் கலவரமும் தொற்றிக் கொண்டன.

நாகம்மையாரும், ஈ.வெ.ரா.வின் தங்கை கண்ணம்மாளும் பல பெண்களுடன் மறியலுக்குப் புறப்பட்டனர். இவர்களுடன் பல பெண்மணிகளும் தொடர்ந்தனர். மறியல் செய்பவர்கள் ஒரு நாளில் ஆயிரக்கணக்கில் பெருகினர். நாகம்மையாரும், அவருடன் சென்றவர்களும் சிறைப்படுத்தப்பட்டால் ஈரோட்டின் நிலைமை மிக்க மோசமாகி 10,000 பேர்களுக்குச் சிறை வேண்டியிருக்குமென்று அரசு அலுவலர்கள் கருதிச் சென்னை அரசுக்குத் தந்தி அனுப்பித் தடையுத்தரவை நீக்கினர். அவ்வேளையில் அரசு 144 தடை ஆணைக்கு மதிப்பளித்து ரத்து ஆனது இது ஒன்றுதான். இந்நிகழ்வுக்குப் பின் தமிழகம் எங்கும் கள்ளுக்கடை மறியல் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கி விட்டது.

****

பெரியார் வாழ்க்கை வரலாற்றை வரைவோர் நாகம்மை யாரைப்பற்றிக் கூறுகையில், அகில இந்தியக் காங்கிரசு உறுப்பினரானார் என்று ஒரு வரியில் குறிப்பிட்டுச் சென்றுவிடுவர். அதன் முதன்மையைச் சிறப்பை எடுத்துக் கூறுவதில்லை.

1933 ஆம் ஆண்டில் கொச்சியில் வெளியிடப் பெற்ற Who’s Who என்னும் நூலில் ‘‘She was a member of the All India Congress Committee’’ (அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர்) என்று மட்டுமே குறிப்பிடப்பட்டது.(Who’s who in Madras 1933, The Pearls Publisher’s Cochin) 5.12.1923 சுதேசமித்திரன் (புதன்கிழமை) பக்கம் 5 இல் வெளியிடப்பட்ட செய்தி இது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் முதல் பெண்மணி ஸ்ரீமதி ஈ.வெ.ரா. நாகம்மாள்.

1907 இல் சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிறகு 4.12.1923 செவ்வாய்க் கிழமை திருச்சி தெப்பக்குளம் முனிசிபல் சத்திரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் முதலாவது கமிட்டியில் ஸ்ரீமதி ஈ.வெ.ரா. நாகம்மாள் அவர்களை,

சேலம் டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு அவர்களின் மனைவியார் ஸ்ரீமதி ருக்மணி அம்மாள் அவர்கள் பிரேரேபிக்க, ஸ்ரீமதி ஈ.வெ.ரா. நாகம்மாள் அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே காங்கிரஸ் கமிட்டிக்கு முதல் பெண்மணி. இந்தச் சிறப்பைப் பெற்றவர் நாகம்மையார் என்பது பெருமை மிக்க நிகழ்வு காங்கிரசுக்கும், தமிழ்நாட்டிற்கும்.

****

நேற்று காலை (20.5.1924) ஸ்ரீமான்கள் ராமசாமி நாயக்கர், எம்பெருமாள் நாயுடு, தாணுமாலைப் பிள்ளை, கோவிந்தன் சாணார் ஆகியவர்களின் மனைவிகள் மேலண்டை கோபுர வாசலையடுத்த ரஸ்தாவில் சென்று ஸத்யாக்ரஹம் செய்தனர். ஸ்ரீமான் சர்மா என்ற இன்ஸ்பெக்டர் சாணாரின் மனைவியை மட்டும் போகவிடாமல், மற்றவர்களைப் போகவிட்டார். ஏனெனில், அம்மாது தீயர் வகுப்பு ஸ்திரீயென்றார். ஸ்ரீமான் நாயக்கர் மனைவியும், மற்ற ஸ்திரீகளும் இன்ஸ்பெக்டருடன் வாதித்தார்கள்…. ஒரு மணிநேரம் போல், ஸ்திரீத் தொண்டர்கள் ஸத்யாக்ரஹம் செய்ய, ஆண் தொண்டர்கள் பிறகு வந்து அவர்களை அனுப்பி விட்டனர். – (சுதேசமித்திரன், 22.5.1924)

கொச்சி மே 22

கனத்த மழை பெய்து கொண்டிருந்தும் தொண்டர்கள் தங்களிடத்தை விட்டு அசையாமல் ஸத்தியாக்ரஹம் செய்கின்றனர். ஸ்திரீத் தொண்டர்கள் மற்றவர்களுடன் சமபந்தி போஜனம் செய்துவருகின்றனர். இன்னும் அதிகமாகத் தொண்டர்கள் வேண்டுமென்று கமிட்டியார் கேட்கின்றனர். (சுதேசமித்திரன், 22.5.1924)

ஸ்ரீமான் நாயக்கரின் மனைவி நேற்றும் பிடிவாதமாக ஸ்ரீமான் சாணாரின் மனைவியைத் தடுக்கப்பட்ட ரஸ்தாவில் அழைத்துச் செல்ல எத்தனித்தபோது, ஒரு பிராமணர் கோபத்துடன் அம்மாதிரி உத்தரவை மீறக்கூடாது என்று கண்டித்தார். கனத்த மழை பெய்தும் ஸ்திரீகள் தங்களிடத்தை விட்டு அசையாமல் சத்தியாக்கிரகம் செய்தனர். – (சுதேசமித்திரன், 23.5.1924)

********

ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர் மனைவி மற்ற ஸ்திரீகளோடு பிரச்சார வேலையும் பண வசூலும் செய்து வருகிறார். சாது எம்.பி. நாயரின் மனைவியும் அவருடன் வேலை செய்கிறார். பாடிக்கொண்டும், ராட்டினம் சுற்றிக்கொண்டும் இந்த இரண்டு தொண்டர்களும் போக்குவரத்துக்குத் தடையாயிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அய்ந்து ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டனர். அபராதம் கொடுக்க மறுத்து கோர்ட்டு கலையும் வரை காவலில் இருந்தார். விசாரணைக்கு முந்தி எட்டு நாள்கள் ரிமாண்டில் வைக்கப்பட்டிருந்தார். (சுதேசமித்திரன், 5.8.1924)

இந்தியாவில் முதன் முறையாக விடுதலைப் போராட்டத்தில் துணிவுடன் இறங்கியவர்கள் தந்தை பெரியாரின் வாழ் விணையரும், தங்கையுமான பெரியார் இல்லத்து  இரண்டு பெண்களே. இதனைப் பிற்காலத்தில் பெருந்தலைவர் காமராசர் நினைவு கூர்ந்துள்ளார்.

நாகம்மையார், கண்ணம்மையாரின் இப்பெருமைமிகு செயலைக் குறித்துப் பெரியார் மறைவிற்குப்பின் காண்டீபம் பத்திரிகையில் பெரியாரை நினைவு கூர்ந்து எழுதுகையில் (24.12.1973), தமிழ்நாட்டில் இவ்விரு பெண்கள்தான் முதன்முதலில் சிறை சென்றவர்கள். பெரிய குடும்பத்தினர் சிறை சென்றனர் என்று ஈரோடு நகரமே மலைத்தது என்று பெருந்தலைவர் காமராசர் குறிப்பிட்டுள்ளார்.

*****

ஆரம்ப காலத்தில் சுயமரியாதைக்கு எதிர்ப்பு அதிகம். வைதீகர்களின் எதிர்ப்பு ஒருபுறம், காங்கிரஸ்காரரின் எதிர்ப்பு மற்றொருபுறம், வைதீகப் பார்ப்பனர்களுடைய எதிர்ப்பு வேறொரு பக்கம். ஈ.வெ.ரா.வையும், அன்னை நாகம்மை யாரையும் மனிதநேயமற்ற முறையில் திட்டிக் கடிதங்கள் பல வரும். இருவரையும் பொதுக்கூட்டங்களில் கொலை செய்யப் போவதாகப் பல கடிதங்கள் வரும். இவற்றிற்கெல்லாம் பெரியார் அஞ்சுவதில்லை. துணிச்சல்காரர் அவர் அஞ்சுவதில்லை என்று கூறலாம்.

ஆனால், அன்னையாரோ அவரைவிட அதிகத் துணிவுடையவராய் விளங்கினார் என்று கூறவேண்டும். ஏனென்றால், அவரும் சிறிதும் அஞ்சியதில்லை. அய்யாவுடன் தொடர்வதில் பின்வாங்கி ஒதுங்கியதில்லை. பொதுக்கூட்டங் களுக்குத் தாராளமாகச் சென்று வருவார். சுயமரியாதை இயக்கம் வெற்றி பெற்றதற்கும், அதில் பெண்கள் ஏராளமாகத் தாராளமாகப் பங்கேற்றுக் கலந்துகொள்வதற்கும் அன்னையாரே காரணமாவார்.

தந்தை பெரியாருடன் சுயமரியாதை இயக்கம் தொடங்கியதிலிருந்து அவருடன் மேலைச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, 1938 களில் பிரிந்து சென்று இராஜாஜியின் அமைச்சரவையில் அமைச்சராகவும் ஆன எஸ். இராமனாதன் அவர்கள் எழுதிய இதனைப் படித்தால் சுயமரியாதை இயக்கத்திற்கு அன்னையாரின் பங்கு, ஆதரவு எவ்வளவு? என்பதைத் தெரிந்திருக்கலாம். அன்னையாரின் ஒத்துழைப்பு இல்லையென்றால், சுயமரியாதை இயக்கம் வளர்ந்திருக்கவியலாது என்று கூறுவோமேயானால், இதை யாரும் மிகைபடவோ, வலிந்து கூறுவதாகவோ கருதிவிடக் கூடாது. இது உண்மையான நிலையேயாகும்.

அவர் தமது கணவரின் எல்லா முயற்சிகளிலும் மிகுந்த உற்சாகத்துடன் ஒத்துழைத்ததே சுயமரியாதை இயக்கத்தின் வெற்றிக்குக் காரணமாகும். மூடக் கொள்கைகளினின்று மக்களை விடுவிக்கும் பொருட்டு அவர், தமிழ்நாடு, கேரளம், மலாய் ஆகிய இடங்களில் உள்ள எல்லா ஜில்லாக்களிலும் சுற்றுப்பயணம் செய்திருக் கிறார். அவர் ஒரு பிரசங்கியல்ல; ஆனால், அவர் பிரசன்னமாயிருக்கும் ஒவ்வொரு கூட்டத்திலும் பெண்கள் தீவிரமாகக் கலந்துகொள்ளுவார்கள். அவர் எல்லோ ரையும் அன்புடன் உபசரிப்பார். அவருக்கு மக்கட்பேறு இல்லை; ஆனால், பொதுஜன நன்மைக்காக வேலை செய்து எல்லா இளைஞர்களையும், பெண்களையும் தம் சொந்தப் பிள்ளைகளாகப் பாவித்து வந்தார். அவர் தம் சிறந்த கொள்கைகளுக்காக வேலை செய்தவர்களுக்கெல்லாம் ஒரு தாயாக இருந்தார். அவர்களுடைய சவுக்கியங்களை அவர் தாமே நேராகக் கவனித்து வந்தார். சமூகப் போராட்டத்தில் வீட்டை இழந்தவர்களுக்கு அவர் அபயம் அளித்தார்.

அன்னையார்  பள்ளிக் கல்வியோ, கல்லூரிக் கல்வியோ பெறாதவராக இருந்தாலும், மேடையேறிப் பேசும் ஆற்றலற்றவராயிருந்தாலும், பத்திரிகை படியாதவராயிருந்தாலும் நல்ல விஷய ஞானம் உள்ளவர். காங்கிரசில் இருந்த காலத்திலும், அதன் கொள்கைகள் குறித்துத் தனித்து ஒவ்வொருவரிடமும் நன்றாய் விவாதிக்கும் திறமையுடையவரா யிருந்தார். சுயமரியாதை இயக்கம் தொடங்கிய பிறகும் அக் கொள்கைகளைப் பற்றி விவாதமிடும் படித்த பெண் மக்களுடனும், படியாத பெண் மக்களுடனும் தாராளமாக விவாதிக்கும் ஆற்றல் பெற்றிருந்தார். அவர்கள் எழுப்பும் வினாக்களுக்கு ஆணித்தரமாகப் பதில் சொல்லுவார். பதில் சொல்லுவதோடு திக்குமுக்காடும்படியான எதிர்க்கேள்வி களும் கேட்பார். விவாதிப்போர் எவரும் அன்னையாரிடம் விவாதித்தால் தோல்வியே அடைவர். இவரிடம் எதிர்த்து விவாதம் செய்தவர் இறுதியில் இவருடைய கொள்கையை ஒப்புக்கொண்டு விடுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *