அன்னையாருக்கு ஆறுதல்
79வது தொடர் 2011 டிசம்பர் 1-15 இதழில் நிறுத்தப்பட்டு இதன் தொடர்ச்சியாக இப்போது இத்தொடர்மூலம் மீண்டும் எனது அய்யாவின் அடிச்சுவட்டில் பயணம் தொடருகிறது.
தந்தை அவர்கள் எப்படி மாற்றாரும் வேற்றாரும் மதித்துப் பாராட்டத்தக்கவராக, தொண்டால் உயர்ந்த தூய இமயம் என்பதற்கு _ யோகி சுத்தானந்த பாரதியார் (இவர் சென்னையின் ஒரு பகுதியில் தன் இறுதிக்காலத்தில் வாழ்ந்தவர்; திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு போன்ற எண்ணற்ற நூல்களை எழுதியவர்; பிறப்பால் பார்ப்பனர்.
அவர் ஒரு இரங்கல் எழுதி அனுப்பினார். அனைத்திலும் பெரியார் என்ற தலைப்பில் 27.12.1973 (அய்யா மறைந்த 3 நாட்களுக்குப் பிறகு விடுதலையில் வெளியிட்டோம்.
மனச்சாட்சியுள்ள மட்டும் வாழ்வார் எம்பெரியார் என்று முடியும் அருமையான கருத்து வரிகளைக் கொண்ட அக்கவிதை இதோ-:
தன்மானச் சிங்கமெனத்
தலைசிறந்தார் பெரியார்!
சாதிச் செருக்குதனைத்
தட்டழித்தார் பெரியார்!
அன்பான பொது நெறியில்
ஆசை வைத்தார் பெரியார்!
ஆருயிரின் பகுத்தறிவைப் பேசவைத்தார் பெரியார்!
ஏழையெளியவர்பால்
இரக்கமுள்ள பெரியார்
எல்லாரும் இணைந்திருக்கும்
இயற்கை மனப்பெரியார்
கோழைகளை வீறுபெற
வாழச்செய்த பெரியார்
குடியரசுக் கொடிபிடித்தே
கோதறுத்த பெரியார்!
சாதிமத வேற்றுமையைச்
சாடியவர் பெரியார்
சமரசமாம் விடுதலையை
நாடியவர் பெரியார்
ஓதரிய மேதைகளில்
ஒள்ளியவர் பெரியார்
ஒற்றுமைக்கு வழிதிறந்த
தெள்ளியவர் பெரியார்
மூடப்பழம் புரட்டை
முட்டியெறி பெரியார்
முன்னேற்றத் தடைகளை
வெட்டியெறி பெரியார்!
வேடப்புரட்டுகளை
வெளியாக்கும் பெரியார்
விஞ்ஞானப் புதுயுகத்தின்
ஒளிகாட்டும் பெரியார்
தானென்னும் செருக்கில்லாத்
தயவுடைய பெரியார்
தமிழருக்குத் தனியாட்சி
தந்த தந்தை பெரியார்
மானிடப் பண்புகளை
வகுத்துரைத்த பெரியார்
மனச்சாட்சியுள்ள மட்டும்
வாழ்வாரெம் பெரியார்
– சுத்தானந்த பாரதி
காங்கிரஸ் பேரியக்கத்திலும், பிறகு அரசியலிலிருந்து விலகி, சர்வோதய இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள். யி.றி. என்று அரசியல் வட்டார நண்பர்களால் அழைக்கப்படும் காந்திய சோஷலிசவாதி அவர்!
பீகார்காரர் _ முதலாவது குடிஅரசுத் தலைவரான பாபு ராஜேந்திர பிரசாத்துக்கு உறவுக்காரர்; விடுதலைப் போராட்ட வீரர். அண்ணல் காந்தியடி களைப் போலவே எவ்வித அரசியல் பதவியையும் விரும்பாதவர்.
அவர் 27.12.1973 வியாழன் காலை 10.30 மணிக்கு பெரியார் திடலுக்கு வந்து அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, தந்தை பெரியார் அவர்களு டன் ஏற்பட்ட சந்திப்பு அனுபவங்களை எல்லாம் மலரும் நினைவுகளாகப் பகிர்ந்து கொண்டார்.
சர்வோதய தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் 27.12.1973 (இன்று) காலை 10.30 மணி அளவில் சென்னை பெரியார் திடலில் அய்யா இல்லத்திற்கு வருகை தந்தார்
துயர வெள்ளத்தில் இருந்த அன்னை மணியம்மையாரைக் கண்டு ஆறுதல் கூறினார்.
பெரியார் அவர்கள் வாழ்நாள் முழுவதும், ஜாதி மூடநம்பிக்கைகளை முழுமூச்சாக எதிர்த்த பெருந்தலைவர்.
இந்தியாவில் அவரைப் போன்ற ஒரு தலைவரைப் பார்க்கவே முடியாது. கொடுமைக்கு எதிராகப் பெரும் போர் தொடுத்தவர் அவர்.
1936இல் ஒருமுறை நான் ஈரோட்டில் அவரது இல்லத்தில் விருந்தினராகத் தங்கினேன். அப்போது அந்த விருந்தில் எனக்குப் பரிமாறி இருந்த புலால் உணவுகளின் வகைகள் இன்னும் என் நெஞ்சில் பசுமையாகவே படிந்திருக்கிறது. மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டு பழகும் தன்மையாளர் அவர்.
அதற்குப் பின்பும் இரண்டு மூன்றுமுறை அவரைச் சந்தித்து அளவளாவி இருக்கிறேன்.
அவருக்கு எடுக்கப்படும் நினைவுச் சின்னம் வெறும் கட்டி டங்களாக அமையாமல் அவை எல்லாம் அவரது பலனுள்ள கருத்துக்களை பயனுள்ள வகையில் பிரசாரம் செய்யும் கருவிகளாக அமையவேண்டும் என்ற கருத்தையும் கூறினார்.
அம்மாவின் பக்கத்தில் இருந்த குழந்தையைச் சுட்டிக் காட்டி அவர் விசாரித்தபோது, அது திருச்சி பெரியார் மாளிகையில் உள்ள அனாதைகள் இல்லத்தினைச் சேர்ந்தது என்று அவருக்கு விடை கூறப்பட்டது. திருச்சிக்கு வருகின்றபோது அங்குள்ள அய்யாவின் மாளிகையையும் பள்ளி நிறுவனங்களையும் கண்டிப்பாக பார்வையிடுவதாக அவர் கூறினார்.
அம்மா அவர்களுக்கு ஆறுதல் கூறும்வகையில் நீங்கள் வருந்தக்கூடாது இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அவர் எப்படி பாடுபட்டாரோ அவர்கள் எல்லாம் உங்களது குழந்தைகள்தான். நீங்கள் தனித்து விடப்படவில்லை என்று கூறி அம்மாவிடம் விடைபெற்றார்.
அய்யா அவர்கள் தூங்கும் படுக்கை, புதிய வேன் ஆகியவற்றை பார்வையிட்டார். வசதி மிகுந்த அய்யா அவர்களின் வேனைப் பார்த்தபோது வசதி மிகுந்த இந்த வேனைப் பயன்படுத்தி அவர் பொதுத்தொண்டை மேலும் நீட்டிக்க முடியாமல் போயிற்றே என்று வருந்தினார்கள்.
இறுதியாக அய்யா அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்குச் சென்று தன் இறுதி மரியாதையைத் தெரிவித்துச் சென்றார்கள்.
15 நிமிடங்கள் பெரியார் திடலில் அவர் கழித்துச் சென்றார். அப்போது அங்கு பெரியார் அவர்களின் கருத்துக்களைப் பரப்ப வெளியிடப்படும் விடுதலை, உண்மை, மாடர்ன் ரேஷனலிஸ்ட் போன்ற வெளியீடுகள் பற்றி நான் எடுத்துரைத்தேன்.
திராவிடத் தந்தையும், தமிழர்தம் தனிப்பெரும் தலைவரும், இணையற்ற சமுதாயப் புரட்சியாளரும் தமிழ் பாதுகாவலருமான பெரியாரை நேரில் கண்டு பேச, எண்ணாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள பீஜித் தீவிலிருந்து அங்குள்ள தமிழர் நலம் காக்கவும், தமிழை வளர்க்கவும் தமிழ்ப் பண்பாட்டை நிலைநிறுத்தவும் என பல ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கேட்க வந்தேன்.
ஆனால் அவரை நான் சந்திக்கும்முன்னர் தமது பயணத்தை முடித்துக்கொண்டார் எனக் கேட்டு பேரதிர்ச்சியும், ஈடுசெய்ய முடியாத ஏமாற்றமும், அடக்கிக்கொள்ள முடியாத துக்கமும் அடைந்தேன் என்று பீஜித்தீவு தமிழர் தலைவர் கே. அப்பாபிள்ளை இங்கு பெரும் துயரத்துடன் கூறினார். இப்படிப் பற்பல துறையினர் நேரில் வந்து விசாரித்தார்கள். தமிழ்நாடு காங்கிரசில் முக்கிய அங்கம் வகித்தவரும் பின்னாளில் கேரள கவர்னராகவும் ஆன பா.ரா. என்று காங்கிரஸ் வட்டாரத்தில் அழைக்கப்பட்ட பா. இராமச்சந்திரன் எம்.ஏ. அவர்கள் அப்போதைய வடஆற்காடு மாவட்டம் செய்யாறு அருகில் உள்ள கொற்கை கிராமத்தைச் சார்ந்தவர்.
அவர் வேலூர் அய்ஸ்கூலில் அன்னை மணியம்மையாருடன் உயர்நிலைப்பள்ளி அளவில் படித்தவர். அன்னையாரிடம் ஆறுதல், இரங்கல் கூற நேரில் பெரியார் திடலுக்கு வந்தவர், அய்யா அவர்கள் தனக்காக ஆசிரியருடன் தேர்தல் பிரச்சாரத்திற்கு பலமுறை வந்து உதவியவர் என்பதையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
சந்தித்து இரங்கல் தெரிவித்தவர்களில் சிலரது குரலும் தொனியும்கூட வேறுவகையாக இருந்தது என்பதையும் அன்னையாரும் அருகில் இருந்த நாங்களும் வெகுவாக உணர்ந்தோம்!
பெரியார் விட்டுச் சென்ற டிரஸ்ட், அதன் சொத்து, அதை மய்யமாக்கி இரங்கல் தெரிவித்த இரண்டொரு பெரிய மனிதர்கள் என்ற முத்திரையில் வெளிச்சத்துடன் உலா வந்த, உண்மையில் சிறிய மனிதர்களையும் பற்றித் தெரிந்துகொள்ள, உலகைப் புரிந்துகொள்ள வாய்ப்பும் ஏற்பட்டது.
அப்படி வந்தவர்களில் ஒருவர் பிரபல தொழிலதிபர். பிற மாநிலங்களில் வாரிசு இல்லாது விட்டுச் சென்ற சொத்துக்குரிய பெண்டிரிடம் சென்று ஆறுதல் கூறியோ, அல்லது வழக்காடியோ சொத்துகளைக் கபளீகரம் செய்ய முனைந்து அவற்றைத் தமதாக்கிக் கொள்ளுவதை வாடிக்கையாக்கி கொண்ட வேடிக்கை மனிதர். அவரது அனுதாபத்திற்கு நன்றி கூறி அனுப்பினார் அன்னையார்; பெரியாரிடம் பயிற்சி பெற்ற எவரும் எளிதில் ஏமாறுவார்களா? உள்நோக்கம் புரிந்து கொள்ளப்பட்டது. உஷாராகி விட்டார்கள்.
அதற்கடுத்து பெரியாரால் உயர்பதவி அடைந்தவர்; பெரியாருக்கு எப்படியோ உறவுக்காரராகவும் ஆகிவிட்ட பெரிய மனிதர். அன்னையாரிடம் வந்து பேசும்போது என்னவிருந்தாலும் நீங்கள் ஒரு விதவை; இனி நீங்கள் தனியே இருந்து இவ்வளவு பெரிய நிர்வாகத்தை எப்படி நடத்த முடியும்? எனவே மற்றவர்களை, உற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது என்று அன்னையார் முன்னிலையில் அருளுபதேசத்தை, மலைப்பிரசங்கமாகச் செய்தார். அம்மாவும் பொறுத்துக்கொண்டிருந்து விட்டு, பிறகு முகத்திற்கு நேராக, பளிச்சென்று – ஆனால் பவ்வியமாக பதில் சொன்னார்: அப்படி நீங்கள் நினைப்பதுபோல் நான் ஒரு தனிநபர் அல்ல; ஏராளமான அய்யாவின் தொண்டர்கள் தோழர்கள் – இவர்களைப் போன்றவர்கள் (அருகில் இருந்த எங்களைச் சுட்டிக்காட்டி) கருஞ்சட்டை வீரர்களின் வீடுகளில் குடும்பம் குடும்பமாக இருக்கிறார்கள். அதனால் நிச்சயமாக எல்லாம் சரியாகவே சிறப்பாக நடைபெறும் என்று கூறினார்!
விடைபெற்றுச் சென்ற அப்பெரிய மனிதரின் முகத்தில் ஈயாடவில்லை!
நான் உடனே எனது நண்பர் எழுத்தாளர் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற தலைப்பைத்தான் நினைவுபடுத்திக் கொண்டேன்.!
அவர் விடைபெற்றுச் சென்றவுடன் அன்னையார் எங்களிடம் அவரது பேச்சின் உள்நோக்கம் _ விஷம் _ விஷமம் எல்லாம் இருந்ததுபற்றி விளக்கிக் கூறி தனது வேதனையைக் கொட்டி தனது கனத்த இதயத்தை லேசாக ஆக்கிக்கொண்டார்!
வடக்கே இருந்து வந்தவரின் ஆறுதல் கூறும் முறையும் பெரியாரால் பயனடைந்தவரின் அருளுபதேசமும் எப்படி இரு துருவங்களாக இருக்கின்றன என்பது எங்களுக்கு பாடங்களாக அமைந்ததைப் புரிந்துகொண்டோம்.
– கி. வீரமணி
– நினைவுகள் நீளும்
Leave a Reply