அம்மா வடை சுட்டுக்கொண்டிருந்தாள் கடைக்குட்டி கணேஷ் ஆர்வமாக ஓடிவந்து வடையை ஒன்றை எடுக்க பாத்திரத்தைத் தொட்டான். அம்மா கரண்டியால் கணேஷின் கையில் ஒரு அடி அடித்து வடை அனுமார் சாமிக்கு யாரும் எச்சில் பண்ணக்கூடாது ஓடு என விரட்டினாள்.
அக்காவிடம் வந்து ஒரே ஒரு வடை வேண்டுமென அடம்பிடித்து சப்தமில்லாமல் அழுதபடி அக்காவின் மடியில் படுத்திருந்தான் கணேஷ்.
தன் தள்ளு வண்டி ஐஸ் வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டிற்குள் நுழைந்தார் அப்பா. கணேஷ் அப்பாவிடம் ஓடிவந்து அப்பா அப்பா ஒரே ஒரு வடையப்பா அம்மா கொடுக்க மாட்டீங்கராங்க நீங்க கொடுக்கச்சொல்லுங்கப்பா என்றான் தன் கண்ணீரைத் துடைத்தப்படி. போ போ அது அனுமார் கோயிலுக்கு அனுமார் சாமிக்கு அபிசேகம் செய்துட்டுத்தான் யாரும் சாப்பிடனும் அதுவரைக்கும் அதை எடுத்து யாரும் சாப்பிடக்கூடாது எனக் கண்டித்துச் சொல்லிவிட்டு துண்டை எடுத்துக் கொண்டு கிணற்றடிக்கு குளிக்கச்சென்றுவிட்டார்.
ஓட்டை போட்ட உளுந்த வடை 50அய் தயார்செய்து முடித்து வடையின் ஓட்டையில் கயிறு தினித்து அதை மாலைபோன்ற வடிவமாக்கி தேங்காய் பழத்தட்டுகளுடன் அம்மா கோவிலுக்குச்செல்லத் தயாராகிக்கொண்டிருந்தாள்.
இன்னும் அழுதபடி அக்காவின் மடியில் படுத்திருந்தான் கணேஷ்.
குளித்துமுடித்து வந்த அப்பா இன்னும் அழுதுகொண்டிருக்கும் கணேசை நோக்கி அடிக்கும் தோரணையில் ஓடிவந்தார் இன்னும் என்ன அழுகை புறப்படுங்க கோவிலுக்கு என அதட்டிக்கொண்டிருந்தார்.
அம்மா அக்கா தம்பியுடன் தங்கச்சி பாப்பாவையும் தூக்கிக்கொண்டு பூஜை சாமன்களோடு புறப்பட்டு ஐஸ் வியாபாரம் செய்யும் தங்களது பழைய துருப்பிடித்த அந்த சைக்கிளில் தங்கச்சி பாப்பாவை மட்டும் ஏற்றி வைத்துக்கொண்டு அனைவரும் அனுமன் கோவிலை நோக்கி நடக்க ஆரம்பித்து ஒரு மணி நேரத்தில் அனுமன் கோவிலை அடைந்தனர்.
அனுமன் கோவிலில் அன்று அனுமன் ஜெயந்தி என்பதால் கோவிலில் பக்தர்களிடம் கூட்டம் அதிகமாக இருந்தது.
பூஜைத்தட்டிற்கு அர்ச்சனைச்சீட்டு 5 ரூபாய்க்கும் வடை மாலை சாத்துவதால் 50 ரூபாய்க்கு தனிச் சீட்டு ஒன்றும் வாங்கிக்கொண்டு அனுமன் சன்னதிக்கு வந்து கூட்ட வரிசையில் நின்றனர்.
கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு அபிசேகத்திற்கு பூசாரியிடம் பூஜைத்தட்டுடன் 50 வடைமாலையையும் கொடுத்தனர். பூஜைத்தட்டை வாங்கிக்கொண்ட பூசாரி வடை மாலையை தூக்கிப்பார்த்தபடி ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தார். அனுமன் சிலையின் கழுத்தில் வடைமாலை போடப்பட்டிருந்தது. கண்களை மூடியபடி தரிசனம் செய்தனர் நால்வரும். பூசாரிமட்டும் விழித்தபடி இருந்தார். பூஜை முடிந்து உடைத்த தேங்காயில் அள்ளிப்போட்ட சாம்பலோடு பூஜைத்தட்டுடன் பூசாரி பங்கு வடை 25 போக மீதி வடையை அன்னதானம் செஞ்சுடுங்கோ எனச்சொல்லி தட்சனையாக 50 ரூபாயையும் வாங்கிக்கொண்டார்.
அன்னதானத்தில் பசிபோக்க வந்த பக்தகோடிகளே அங்கு அதிகமாக இருந்தனர். மொத்த பக்தர்களும் மொய்த்தனர் அந்த வடைச்சட்டியை நோக்கி. வடை தானம் பறந்தது. வடைச் சட்டி மட்டுமே மிஞ்சியது பெறும் கூட்டத்தை விட்டு வெறும் சட்டியோடு வெளி வந்தார் கணேஷின் அப்பா. அக்காவிடம் ஒரு வடைக்காக அழுதபடி படுத்திருந்தான் கணேஷ்.
வீட்டிற்கு வந்த கணேஷ் ஒரு வடைக்காக இன்னும் அழுதபடி அக்காவின் மடியில் படுத்திருந்தான் கணேஷ்.
– அணு கலைமகள், சிவகங்கை