நாகரிகம்- தந்தை பெரியார்

2024 ஆகஸ்ட் 16-31 பெரியார் பேசுகிறார்

கரிகம்’ என்ற வார்த்தைக்குப் பொருளே பிடியில் சிக்காத ஒரு விஷயமாகும். ஒவ்வொருவரும் ‘நாகரிகம்’ என்பதற்கு ஒரு தனிப்பொருள் கூறி வருகிறார்கள். கண்ணோட்டம் என்கிற தலைப்பில் குறளில் நாகரிகம் என்ற வார்த்தை வள்ளுவரால் உபயோகிக்கப்பட்டிருப்பதாக ஞாபகம். அது தாட்சண்யம், அடிமை என்கிற பொருளில் உபயோகப்பட்டிருப்பதாக ஞாபகம்.
நாகரிகம் என்கிற வார்த்தைக்கு எந்தக் கருத்தை வைத்துக் கொண்டு பேசினாலும் மக்கள் சமூகம், நடை, உடை, உணவு மற்றும் எல்லா நடவடிக்கைகள், பாவனைகளிலும், பிறரிடம் பழகுவதிலும் பெரிதும் மாறுபட்டிருக்கிறது; எந்த ஆதாரத்தில் இது மாறுபட்டிருக்கிறது என்று கூறமுடியாது. எப்படியோ எல்லாம் மாறுதலில்தான் போய்க்கொண்டிருக்கிறது.

பெண்கள் நிலை

நம்முடைய பெண்கள் முன்பு பெரும்பாலும் ரவிக்கை அணிவதில்லை. அணிவதிலும் பல்வேறு மாறுபாடுகளை முறை மாற்றிக்கொண்டே வருவதைக் காண்கிறோம். மேல் நாட்டிலும் பெண்கள் தெருக்கூட்டுவது போன்ற ஆடைகளை முன்பு அணிந்து வந்தார்கள். இடை சிறுத்துக் காணும்படி, தொப்பைக் கூடு போன்ற பாவாடையுடன் கூடிய கவுன்கள் அணிந்து வந்தார்கள். பணக்காரப் பெண்கள் தங்கள் நீண்ட அங்கிகளைப் பின்னால் தூக்கிப் பிடித்துக்கொள்ள பணியாட்களை நியமித்துக்கொண்டிருந்தனர். அது அக்காலத்திய நாகரிகமாகத் தோன்றியது. இன்றோ ஆடை விஷயத்தில் மேல்நாட்டுப் பெண்கள் எல்லாம் சுருக்கிக் கொண்டுவிட்டார்கள். இதையும் நாகரிகம் என்றுதான் கருதுகிறோம்.

நாம் இவைகளைப் பற்றி எல்லாம் பேசும்பொழுதும், யோசிக்கும்பொழுதும் எந்த விதப் பற்றுதலும் இல்லாமல் அதாவது, ஜாதி, மதம், தேசம் என்பன போன்ற பற்றுகளை விட்டுவிட்டு, சுயேச்சையாக சீர்தூக்கிப் பார்த்தால்தான் நன்றாக விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். அதன் உண்மையும் அப்பொழுதுதான் விளங்கும்.

ஒரு காலத்தில் சாம்பலைப் பூசிக்கொண்டு, ‘சிவ சிவா’ என்று ஜெபிப்பதுதான் யோக்கியனாகக் காட்டிக்கொள்ளத் தேவையாகக் கருதப்பட்டது. இன்றைய கால தேச வர்த்தமானங்கள் அப்படி இருப்பவர்களைக் கண்டால், கேலி பேசச் சொல்கிறது. அப்படிப்பட்ட நடவடிக்கைகளைக் கேலி செய்கிறது.

கணவன்- மனைவி உறவு

புருஷன், பெண்சாதி என்கிற இரு சாரார்களை எடுத்துக்கொண்டாலும் முன்பு, “கல் என்றாலும் கணவன், புல் என்றாலும் புருஷன்” என்று மதித்து அடி, உதை என்று எதையும் பட்டுக்கொண்டு அடிமையாக உழைத்து, அடுப்பு ஊதுவதே கடமை என்று நடந்து வந்த பெண்ணைப் பற்றிப் பெரிதும் மதித்து வந்தார்கள். ஆனால், இன்றோ கணவனிடம் மனைவி, நான் என்ன உனக்கு வேலைக்காரியா? அடிமைப்பட்ட மாடா? ஜாக்கிரதையாக இருந்தால் சரி, இல்லாவிட்டால் சரிப்படாது எனக்கு. சமஅந்தஸ்தும் சம உரிமையும் சர்வ சுதந்திரமும் உண்டு என்று கேட்டு நண்பர்களைப் போல் நடந்துகொள்ளும் பெண்களையே நாகரிகம் வாய்ந்தவர்கள் என்று கருதுகிறோம்.

முன்பு புராணத்தைப் பற்றியும், மதத்தைப் பற்றியும் பேசுவதுதான் புகழுக்குரியதாக இருந்தது. ஆனால், இன்று அவை பழங்குப்பையாக பரிகசிக்கத்தக்கதாக ஆகிவிடவில்லையா? புத்திக்கும், அறிவுக்கும் பொருத்தமில்லாத முரட்டுப் பிடிவாதத்தில் முன்பு நம்பிக்கை இருந்ததை விவாதித்துப் பேசினோம். ஆனால், இன்றைய தினம் பிரத்யட்சமாக எதையும் எடுத்துக்காட்டித் தெளிவுபடுத்துவதையும், விஞ்ஞானம் போன்றதான அறிவியக்க நூல்களைக் கற்றுணர்ந்த வல்லுநர்களையே நாம் பெரிதும் மதித்து வருகின்றோம்.

நாகரிகம் காலப்போக்கையொட்டி மாறுவதே!

நாகரிகம் என்பது நிலைமைக்கும், தேசத்திற்கும், காலப்போக்கிற்கும் தக்கவாறு விளங்குவதாகும். மாறிக்கொண்டே வருவதாகும். காலதேச வர்த்தமான பழக்கத்தையொட்டிய நாகரிகம் காணப்படுகிறது. காலப்போக்கானது எந்தத் தேக்கத்தையும் உண்டாக்குவதில்லை. ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றவும், புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தவும் செய்கிறது.

பகுத்தறிவும் சிந்தனையும்

ஒரு விஷயமானது வாய்ப்பேச்சு சாமர்த்தியத்தினால் செலாவணியாகிவிடக்கூடும். அது மெய்யோ- பொய்யோ, சரியோ- தப்போ எப்படியும் இருக்கலாம். வருங்காலத்தில் உடல் உழைப்புக் குறைந்து வரும் நிலை ஏற்பட்டே தீரும். அதுவே நாகரிகமாகக் கருதப்படும்.

நாம் ஏன் எதற்காக உழைத்து பாடுபட்டுக் கொண்டே இருக்கவேண்டும்? பகுத்தறிவு படைத்த நாம் பாடுபட்டுத்தான் ஆகவேண்டுமா? நாகரிகம் என்பது சதா உழைத்துத்தான் உண்ண வேண்டுமா? என்ற கேள்விகள் எழுந்து மக்கள் சமூகம் கஷ்டம், தியாகமின்றி நலம் பெற முயற்சிக்கலாம். இது நாகரிகமாகக் கருதப்பட்டு பயனடையக்கூடும்.

நாம் ஒரு காலத்தில் தேசம், தேசியம், தேசப்பற்று என்பதை நாகரிகமாகக் கருதி வந்திருக்கிறோம். ஆனால், இன்றோ அவைகளை எல்லாம் உதறித் தள்ளி மனித ஜீவகாருண்யம், உலக சகோதரத்துவம் (Citizen of the world) என்று கருதுவதையே பெரிதும் நாகரிகமாகக் கருத முன்வந்துவிட்டோம்.

உண்மையான நாகரிகம்

தனக்கு என்னென்ன வசதிகள், நன்மைகள், பெருமைகள் தேவையென்று கருதப்படுகிறதோ அவற்றை சமுதாயத்தில் உள்ள அனைவரும் அடையச் செய்யும் வழியில் நடப்பதே உண்மையான நாகரிகம் என்பதாகும். நாகரிகம் சமுதாயத்தின் பொதுவான முன்னேற்ற நிலை என்று கொள்க. இது, கால விஞ்ஞான அறிவுப் பெருக்கத்துக்கு ஏற்ற வகையில் முன்னேறிக் கொண்டும் மாறுபட்டுக் கொண்டும் இருப்பதாகும். மக்கள் வாழ்க்கையை இன்பமயமாகத் திகழச் செய்வதே நாகரிகம்.

(பெரியார் சுயமரியாதைப்
பிரச்சார நிறுவன வெளியீடான ‘நவமணிகள்’ எனும் நூலிலிருந்து )