இன்றைய தலைமுறை இளைஞர்கள் பெரிதளவில் சமூக அக்கறையுடன் காணப்படுவதில்லை என்ற முணுமுணுப்புகள் ஒருபுறம்; இந்தக் காலத்து மாணவர்கள் வன்முறையாளர்களாக உருவாகிக் கொண்டுள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு மறுபுறம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இந்த இரண்டு வாதங்களையும் முறியடித்து, கொள்கை வழியில் வென்று நிற்கிறது தந்தை பெரியாரின் கருஞ்சட்டை மாணவர் – இளைஞர் படை!
‘நீட்’ எனும் மோசடியை ஒழிக்க, ‘நீட்’டை ஒழிப்போம்! சமூகநீதி காப்போம்!! என்ற முழக்கத்தினை முன்வைத்து 2017 ஆம் ஆண்டு மார்ச் 18 முதல் மார்ச் 21 வரை திராவிடர் கழக இளைஞரணி – திராவிட மாணவர் கழகம் மேற்கொண்ட இருசக்கர வாகனப் பரப்புரையைப் போலவே இம்முறை தமிழ்நாட்டில் 5 முனைகளில் இருந்து (கன்னியாகுமரி, இராமநாதபுரம், புதுச்சேரி, தாராபுரம், சென்னை) தொடங்கி 5 நாட்கள் (ஜூலை 11 – ஜூலை 15) தொடர் பயணம் மேற்கொண்டு அய்ந்தாம் நாள் சேலத்தை அடைவார்கள் என்ற அறிவிப்பை வழங்கினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
ஆசிரியரின் அறிவிப்பினைத் தொடர்ந்து, ஒவ்வொரு குழுவிலும் ஒரு குழுத் தலைவர், ஒரு குழு ஒருங்கிணைப்பாளர், ஒரு சொற்பொழிவாளர் என முடிவு செய்யப்பட்டனர். அய்ந்து நாட்கள் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்வதற்காகத் தோழர்கள் ஆயத்தமாகினர். கல்லூரி செல்லும் மாணவர்கள், இளநிலை முடித்திருந்த மாணவர்கள், வேலைக்குச் செல்லும் இளைஞர்கள், தொழில் செய்யும் தோழர்கள் என்று அனைவரும் கலந்த கலவையாக கொள்கைத் துணிச்சலுடன் இரு சக்கர வாகனங்கள் ஆயத்த நிலையில். (இரு பாலரும் இதில் அடக்கம்).
ஜூலை 11 அன்று காலை அய்ந்து முனைகளிலும் இருந்து புறப்பட்டது கொள்கைப் படை. சாகசத்திற்காக சாரை சாரையாகச் செல்லும் வயதினருக்கு மத்தியில் சமூகநீதிக்காக இந்தப் படையைத் தயார் செய்திருந்தார் ஆசிரியர். இதுபோன்ற குழுப் பயணங்களை மேற்கொள்ள கொள்கை மட்டும் போதுமானதா?. இல்லை என்பதே வெளிப்படையான உண்மை. கொள்கை புரிதலுடன் தலைமைக்குக் கட்டுப்படுதல் என்ற கடப்பாடு இருந்தால் ஒழிய, எவ்விதச் சிக்கலும், சச்சரவுகளும் பிரச்சனைகளுமின்றி சராசரியாக ஒரு குழு 1000 கி.மீ. பயணம் புரிவது என்பது சாத்தியமாகி இருக்காது.
பணம், பதவி, நற்பெயர் எடுத்தல் என்ற சுயநலன்கள் ஏதுமின்றி, பொதுநல நோக்கத்துக்காகத்தான் இந்த வாகனத்தின் மீது அமர்கிறோம் என்ற தெளிவான பார்வை கொண்ட படையை ஒரு தலைவர் அமைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல! காரணம், நாம் மேற்சொன்ன பணம், பதவி, புகழ் என்பவை அனைத்தும் மனிதர்கள் எளிமையாக மயங்கி விழும் இடங்கள். அந்த மயக்கத்திற்கு ஆட்படாமல் தடுத்து, சமூக நலனை முன் நிறுத்தி, தொடர்ந்து அவர்களிடம் உரையாடி, தலைமையின் கட்டளையை ஏற்று ‘நீட்’ எனும் அநீதியை ஒழிக்க எந்த எல்லைக்கும் செல்லத் தயார் என்ற முழக்கத்துடன் இன்றைய இளைஞர்களை களம் காணச் செய்தது திராவிடர் கழகம்.
ஒவ்வொரு வாகனத்திலும் கழகக்கொடி பட்டொளி வீசிப் பறக்க, நின்ற இடங்களில் எல்லாம் ‘நீட்’ ஒழிப்பு முழக்கம் முழங்க, ஊர் ஊராக பேச்சாளர்கள் ‘நீட்’டின் கொடுமையை விளக்க, துண்டறிக்கைகள் விநியோகம், புத்தக விற்பனைகள் நடக்க எனத் தமிழ்நாடு முழுவதும் ‘நீட்’ எதிர்ப்புத் தீ மீண்டும் பற்ற வைக்கப்பட்டுள்ளது.
ஓர் இலட்சியப் பயணத்தில் கொள்கை, கடப்பாடு இவற்றுடன் மற்றுமொரு அதிமுக்கியமான பண்பு இணைய வேண்டும். அதுதான் தன்னடக்கம். தங்களை முன்னிறுத்தாமல் கொள்கையை முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்யும் முறையினை மிக இயல்பாக தன்னுடைய மாணவர்களுக்கு ஆசிரியர் கடத்தியிருக்கிறார். அதன் செயல் வடிவம் தான் “உண்டியலில்” சேகரிக்கப்பட்ட தொகை. உண்டியல் குலுக்கவும் தயார்; உழைக்கவும் தயார் என்பதை ஜூலை 15 ஆம் தேதி சேலத்தில் அறுதியிட்டுக் கூறியது இப்படை!
ஆர்ப்பரிக்கும் வயது, எல்லா வகையிலும் கவனச்சிதறல் ஏற்படும் வாய்ப்பு, இவை அனைத்தையும் கடந்து வன்முறையின் மீது நாட்டம் காட்டாத, கட்டுப்பாடுமிக்க இளைஞர் கூட்டத்தினை வழி நடத்துவது வரலாற்றுச் சிறப்பு தான். ஆம்! வன்முறையைத் தூண்ட ஒரு கல் போதும்; வழி நடத்தவே தலைவர் தேவை! இதோ நம் தலைவர் தந்தை பெரியாரின் வழிகாட்டும் உரை :
“மாணவர்கள் நல்ல ஜோல்சர்கள்; நல்ல ஜெனரல்கள் அல்ல. அதாவது, மாணவர்கள் நல்ல சிப்பாய்கள்; நல்ல கமாண்டர்கள் அல்ல. ஆகவே, நல்ல சிப்பாய்களைப்போல், அவர்கள் பல கட்டுத்திட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்.
நீங்கள் உங்களை சாதாரண மனிதர்களாக நினைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கை சவுகரியங்களையும் எவ்வளவு குறைத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு குறைத்துக் கொள்ள வேண்டும்.
உங்களுக்கு மிக மிக அடக்கம் வேண்டும். நீங்கள் மிக மிக தன்னலமற்றவர்களாக இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட மாணவர்களால் தான் ஏதாவது உருப்படியான நன்மை ஏற்படும்.
பொதுத் தொண்டுக்கு வந்தவுடன், தங்களை பெரிய மேதாவியாக நினைத்துக் கொள்ளக்கூடியவர்களும், தங்கள் தகுதிக்கு மேலாக, போக போக்கியம் பெருமை, தங்களுக்குக் கிடைக்க வேண்டிய விகிதாச்சாரத்திற்கு மேலாக மதிப்பு தங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் எந்த இயக்கத்திலும் இருக்கத் தகுதியற்றவர்கள் ஆவார்கள். அப்படிப்பட்டவர்களால், பொது வாழ்க்கையில் எப்போதும், எந்தக் கொள்கையிலும் நிலைத்திருக்க முடியாது.
பொதுநலத் தொண்டர் எவருக்கும் உள்ளத்தில் அடக்கம் வேண்டும்; தான் என்கிற அகம்பாவம் கூடாது.
திராவிடர் கழகம் கடைப்பிடித்துள்ள கொள்கைகள் மிகக் கஷ்டமானவை. திராவிடர் கழகம் கூறும் பரிகாரங்கள்கூட மிகமிகக் கசப்பானவைகளாகத்தான் இருக்கும். இக்கொள்கைகள் பெரும்பாலும் மாணவர்களால் தான் ஈடேற்றப்பட வேண்டும்”. (தந்தை பெரியார் அவர்கள் 21.02.1948 அன்று திருச்சி வடமண்டல திராவிடர் மாணவர் மாநாட்டில் ஆற்றிய உரை)
மேற்சொன்ன அய்யாவின் ஒவ்வொரு வார்த்தையையும் தனது செயலாற்றல் மூலம்
இன்றைய தலைமுறைக்கு ஆசிரியர் பயிற்றுவிக்கிறார். அதன் விளைவுதான் – கொள்கை, கடப்பாடு, தன்னடக்கத்துடன் கூடிய கருஞ்சட்டை இளைஞர் படையின் இருசக்கர வாகனப் பயணமும், வெற்றியும் !