பா.தட்சிணாமூர்த்தி !
சென்னை மற்றும் பல மாவட்டத் தோழர்களில் இந்தப் பெயரை அறியாதவர்கள் இருக்க முடியாது! ஒருமுறை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள், “இயக்கத்திற்காக உயிரைக் கொடுப்பேன் என்று சிலர் சொல்வார்கள், உண்மையிலேயே உயிரைக் கொடுத்து, மீண்டு வந்தவர் பா.தட்சிணாமூர்த்தி”, என்று சொன்னார்கள்!
இயக்க மகளிர் வாழ்க்கை குறித்து ‘விடுதலை’ ஞாயிறு மலரிலும், இயக்க ஆண்கள் குறித்து ‘உண்மை’ இதழிலும் கட்டுரைகள் வருவதைத் தோழர்கள் அறிவார்கள்! அந்த வகையில் தற்போது ஆவடி மாவட்ட காப்பாளராகப் பணியாற்றி வரும் பா.தென்னரசு எனப்படும் பா.தட்சிணாமூர்த்தி அவர்கள் குறித்து, இந்த இதழில் காணலாம்!
பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை பட்டாளம் பகுதியில்! பெற்றோர்கள் வசித்தது வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உமராபாத் எனும் கிராமம். தந்தை பாலகிருஷ்ணன் – தாய் பவுனம்மாள். சிறு வயதில் இருந்தே தம் அத்தை வீட்டில் வளர்ந்தவர் பா.தட்சிணாமூர்த்தி! 1996ஆம் ஆண்டு, பெங்களூர், அலசூர் பகுதியில் நடைபெற்ற தமிழ்ச் சங்க விழாவில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேடையிலேயே அவருக்கு தென்னரசு என்ற இந்தப் பெயரைச் சூட்டினார்!
முதல் பெரியார் கூட்டம்!
மூன்று ஆண்டுகள் அத்தை வீட்டில் வசித்த இவர், உமராபாத் சென்று 8ஆம் வகுப்பு வரை படித்தார். தொடர்ந்து மேல்நிலைக் கல்விக்கு அங்கு வாய்ப்பு இல்லை. எட்டு கிலோமீட்டர் கடந்து ஆம்பூர் செல்ல வேண்டும். இந்நிலையில் 8ஆம் வகுப்பு நண்பர்களுடன் சேர்ந்து, மேல்நிலைப் பள்ளிக்காக அப்போதே போராடி இருக்கிறார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற 1947இல் பிறந்திருந்தாலும், தமிழ்நாட்டு “விடுதலை”யைச் சுவாசித்த பின்னரே, இவரது சுயமரியாதை வாழ்க்கை தொடங்கி இருக்கிறது.
ஆம்! 1962இல் தம் ஊருக்கு அருகேயுள்ள பாலூர் கிராமத்திற்குப் பெரியார் வந்துள்ளார். இதன் காரணம் கூட வித்தியாசமானது. ஆமாம்! பாலூர் கிராமத்தில் குப்புசாமி அய்யங்கார் என்கிற ஒருவர் இருந்துள்ளார். அவர்தான் அந்த ஊரில் இருந்த சீனிவாச பெருமாள் கோயிலின் அறங்காவலர். அது மட்டுமின்றி சர்க்கரை ஆலையின் இயக்குநராகவும் இருந்துள்ளார். அவர் அந்தக் கிராமத்தில் கடுமையான தீண்டாமைக் கொடுமைகளைச் செய்துள்ளார். ஒவ்வொரு தனி மனிதரின் சுயமரியாதையையும் சீண்டிப் பார்த்துள்ளார். இதையறிந்த பெரியார், அங்கு கூட்டம் நடத்தி அதனைக் கண்டித்துள்ளார்!
தந்தை தந்த தண்டனை!
இதில் பா.தட்சிணாமூர்த்தி அவர்கள் கலந்து கொண்ட போது வயது 15. இந்தக் கூட்டத்திற்கு இவரை அழைத்துச் சென்றவர் பெயர் பெருமாள். வேடிக்கையைப் பாருங்கள்! இவர் பெயர் தட்சிணாமூர்த்தி, அவர் பெயர் பெருமாள். இரண்டுமே சாமி பெயர்கள். எந்தச் சாமியையும் பெரியார் விட்டு வைத்ததில்லை! 15 வயதில் பெரியார் கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், 17ஆம் வயதில் இருந்து ‘விடுதலை‘ நாளிதழை வாசிக்கத் தொடங்குகிறார். அதுவும் தனது ஊரில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரம் இருந்த ஆம்பூர் நூலகம் சென்று படிக்கிறார்!
ஆக, இவர் நாத்திகராகவும், ‘விடுதலை‘ படிப்பவராகவும் மாறியதால், அவரின் தந்தை அவரைக் கட்டி வைத்து உதைத்திருக்கிறார். “கோவிந்தா, கோவிந்தா” என்று சொல்லவும் வற்புறுத்தி இருக்கிறார். இந்நிலையில் தொழில் நிமித்தமாக உமராபாத் கிராமத்தில் இருந்து, சென்னைக்கு இடம் பெயர்கிறார். அங்கு 1967ஆம் ஆண்டு பக்கிங்காம் கர்நாடிக் (B&C MILL) நூற்பாலையில் வேலை கிடைக்கிறது. அது வெள்ளையர்கள் நிருவாகத்தில் அப்போது இருந்தது!
தொழிலாளர் நலன்!
அந்த ஆலையில் அவர் சேர்ந்தவுடன் முதலில் செய்தது பகுத்தறிவாளர் கழகம் தொடங்கியதுதான்! பிறகு 1970ஆம் ஆண்டு தோழர்கள் இணைந்து திராவிடர் தொழிலாளர் சங்கத்தை (DWU – Dravidar Welfare Association) உருவாக்குகிறார்கள். அதனைத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பட்டாளம் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தொடங்கி வைத்துள்ளார். இந்தச் சங்கத்தில் 70 தோழர்களுக்கும் மேல் இருந்துள்ளனர்.
ஒருமுறை இந்த நூற்பாலைக்குச் சங்கராச்சாரியார் வந்துள்ளார். “ஓடிப்போன சங்கராச்சாரிக்கு இங்கு என்ன வேலை?”, என நுழைவாயிலில் பதாகை வைத்திருக்கிறார்கள். தவிர, தோழர்கள் திரண்டு அன்றைய தினம் கருப்புச் சட்டையில் போயிருக்கிறார்கள். விளைவு, அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிலாளர் நலத்திற்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும் திராவிடர் தொழிலாளர் சங்கம் தொடர்ந்து போராடி இருக்கிறது!
களை கட்டிய பிரச்சாரம்!
அந்தக் காலகட்டத்தில் சென்னை மாவட்டத் திராவிடர் கழகத் தொழிலாளரணிச் செயலாளராக தென்னரசு (பா.தட்சிணாமூர்த்தி) அவர்களும், தலைவராக அ.குணசீலன் அவர்களும் இருந்துள்ளனர். அ.குணசீலன் அவர்கள் இரயில்வே துறையில் பணியாற்றியவர். இருவரும் இணைந்து, போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு வாயிற் கூட்டங்கள் நடத்தி, புதியக் கிளைகளை உருவாக்கியுள்ளனர்!
1996ஆம் ஆண்டு முதல் வட சென்னை மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்று, 6 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியவர். வட சென்னை என்பது 72 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது. அதனால் 3 துணைத் தலைவர்கள், 3 துணைச் செயலாளர்களைப் பொறுப்பில் அமர்த்தி, இயக்க வேலை செய்தார்கள்! ஏராளமான பகுதிக் கழகங்களை உருவாக்கியதோடு, உழைப்பைக் கொடுப்பவர்கள் நன்கொடை தர வேண்டாம், ஏனைய நிருவாகிகள் தர வேண்டும் எனப் பணத்தைச் சேமித்து, இயக்கப் பிரச்சாரத்தைக் “களை” கட்ட வைத்தவர்!
வயிற்றில் நுழைந்து, முதுகைத் துளைத்த கத்தி!
சென்னையில் 100 கூட்டங்கள் நடத்த வேண்டும் என்கிற ஆசிரியரின் அறிவிப்புக்கு இணங்க, நாளொன்றுக்கு 2 கூட்டங்கள் வீதம் ஒருங்கிணைத்தவர்களில் இவர் முக்கியமானவர். அப்படிக் கூட்ட ஏற்பாடுகள் நடந்த போதுதான், அந்தக் கொடூரச் சம்பவம் நடந்தது. பெரம்பூரில் 23ஆம் கூட்டத்தை முடித்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார். வீட்டை நெருங்கிய அந்தக் கணத்தில்தான், திராவிடர் கழக தொடர் பிரச்சாரத்தை கண்டு எரிச்சலடைந்த கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அவர் வயிற்றில் குத்திய கத்தி முதுகுப் பக்கமாய் வெளிவந்தது. அவ்வளவு நீளக்கத்தி ஆழமாய்ப் பாய்ச்சப்பட்டது.!
இது நடந்தது 1996 ஆம் ஆண்டு. பிறகு மருத்துவமனையில் 3 மாதம் சிகிச்சை பெற்று, பெரியார் திடல் மருத்துவமனையில் 1 மாதம் ஓய்வெடுத்து, பின்னர் குணமாகியுள்ளது. தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் முழுப் பாதுகாப்பிலும், மேற்பார்வையிலும் இருந்து நலம் பெற்று எழுந்தார். பெரியார் திடல் மருத்துவமனையில் இருந்த போது, கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் இணையர் வெற்றிச்செல்வி அவர்கள்தான் ஒரு மாத காலமும் உணவு வழங்கிப் பராமரித்துள்ளார்!
பெரியார் மாளிகைப் பணிகள்!
பெரம்பூர் பகுதியில் வசித்தாலும், சென்னை முழுவதும் இவரைப் பார்க்கலாம். குறிப்பாக ஆசிரியர் அவர்களின் சென்னைச் சுற்றுப் பயணங்களில் கண்டிப்பாக இவர் இடம் பெற்றிருப்பார். வட சென்னை வாழ்க்கையில் இருந்து, 2001ஆம் ஆண்டு ஆவடிப் பகுதிக்கு இடம் பெயர்கிறார். தற்போது வயது 77 ஆகிறது. அங்கே சென்ற பின்பு அவர் அமைதியாக இல்லை! ஆவடியிலும் தொடர்ந்து இயக்கப்பணிகளை செய்து வருகிறார். திராவிடர் கழகத்திற்கு சொந்தமான இடத்தில், பெரியார் மாளிகை ஒன்றை எழுப்பும் முயற்சியில் தீவிரமாய்ச் செயல்பட்டார்.
தோழர்களின் கூட்டு முயற்சியில் தரைத்தளம் படிப்பகம், முதல் தளம் கூட்ட அரங்கு, இரண்டாம் தளம் வாடகை அரங்கம் என முத்தாய்ப்பாய் 3 தளங்களை உருவாக்கி இருக்கிறார்கள்! அந்த மாளிகையில் இதுவரை தென்னரசு அவர்கள் செய்து வைத்த ஜாதி மறுப்புத் திருமணங்கள் 15. மற்ற இடங்களில் செய்ததையும் சேர்த்தால் 75 கணக்காகிறது!
இயக்கமே இயக்கம்!
ஆவடி பெரியார் மாளிகையில் ‘உண்மை’ வாசகர் வட்டம் ஒன்றை உருவாக்கினார். இதன் சார்பில் தொடர்ந்து நிகழ்ச்சியைத் தோழர்கள் இணைந்து நடத்தி வருகிறார்கள். இதனை இயக்குபவராக இருந்து ஊக்கப்படுத்தி வருகிறார். இதுவரை பல்வேறு போராட்டங்களில் 13 முறை கைதாகி, அதிகபட்சம் 15 நாள்கள் சிறைவாசம் அனுபவித்துள்ளார்! 2009 முதல் முதல் 2023 வரை ஆவடி மாவட்டத் தலைவராகவும், செயலாளராகவும் பணியாற்றி தற்போது காப்பாளராக இருந்து மாவட்டப் பொறுப்பேற்றுள்ள இளைஞர்களை வழி நடத்துகிறார்.
க.பலராமன், எம்.எஸ்.மணி, சபாபதி, விசுவாசவரம், ஜக்கரியா, வி.எம்.நாராயணன், கவுதமன், எம்.பி.பாலு, எம்.கே.காளத்தி, அ. குணசீலன், மு.அ. கிரிதரன், செ.வை.சிகாமணி, குடந்தை கோவிந்தராஜன் போன்ற எண்ணிடலங்கா பெரியார் பெருந் தொண்டர்களுடன் இணைந்து
பணியாற்றிய பெருமை இவருக்குண்டு!
இணையர் பெயர் உமாராணி. இவரும் இயக்கத்திற்குப் பெரும் பங்காற்றியவர். இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள். ஜீவராணி, மீனா, சித்ரா. “சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு” என்கிற பெரியாரின் வரிகளுக்கு ஏற்ப சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள்!