19. சிறுபான்மையினர், உரிமைகளைப் பேணுவது-பாதுகாப்பது ஆகியவற்றின் முக்கியத்துவம், அப்படிப் பேணுவதும் பாதுகாப்பதும் அவர்கள் வாழும் நாடுகளின் சமூக – அரசியல் உறுதிப்பாட்டுக்குச் செய்யும் பங்களிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அத்தகைய சிறுபான்மையினர் சகலவித மனித உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் எவ்விதப் பாகுபாடுமின்றியும் சட்டத்தின் முன் முழு சமத்துவ அடிப்படையிலும் முழுமையாகவும் பயனுள்ள வகையிலும் அனுபவிப்பதை உறுதிசெய்ய வேண்டிய கடப்பாடு அரசுகளுக்கு இருப்பதை இம்மாநாடு உறுதியிட்டுரைக்கிறது.
தம்முள்ளும், வெளியிலும், சுதந்திரமாகவும், குறுக்கீடோ, எந்த வகையான பாகுபாடுகள் இன்றியும் தமது சொந்தக் கலாச்சாரத்தை அனுபவிக்கவும், தமது மதத்தை நம்பவும், அதைக் கடைப்பிடிக்கவும், தமது மொழியைப் பயன்படுத்தவும், சிறுபான்மையினருக்கு உரிமை உண்டு.
20. சமூகத்தின் மேம்பாட்டுக்கும் பன்முக அமைப்புக்கும், ஆதிக் குடிகள் ஆற்றியுள்ள தனித்தன்மை கொண்ட பங்களிப்பையும் அவர்களின் உள்ளார்ந்த கண்ணியத்தையும் அங்கீகரிக்கும் இம்மாநாடு அவர்களது பொருளாதார, சமூக, கலாச்சார நலவாழ்வுக்கும் நிலைகுலைக்காத மேம்பாட்டின் பயன்களை அவர்களும் துய்ப்பதற்கும் உலக சமுதாயத்துக்குள்ள கடப்பாட்டினை மீண்டும் உறுதி செய்துரைக்கிறது. சமூகத்தின் சகலதுறை நடவடிக்கைகளிலும், குறிப்பாக அவர்கள் சம்பந்தப்பட்டவற்றில், அத்தகைய மக்கள் முழுமையாகவும், தடைகளின்றியும் பங்கெடுப்பதை இவ்வரசுகள் உறுதி செய்யவேண்டும். ஆதிக் குடிகளின் உரிமைகளைப் பேணுவது பாதுகாப்பது ஆகியவற்றின் முக்கியத்துவம், வாழும் நாடுகளின் சமூக-அரசியல் உறுதிப்பாட்டுக்குச் செய்யும் பங்களிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஆதிக் குடிகளின் அனைத்து மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரங்கள் ஆகியவற்றுக்கான மதிப்பினை, பாகுபாடு ஏதுமின்றி சமத்துவ அடிப்படையில் உறுதி செய்யவும் அவர்களது தெள்ளத்தெளிவான தனி அடையாளங்கள், பண்பாடுகள், சமூக அமைப்பு ஆகியவற்றின் பன்மைப் பாங்கையும் மாண்பையும் மதிப்பதை உறுதி செய்யும் வகையில் சர்வதேசச் சட்டத்துக்கிணங்க உறுதியான நேர்மறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
22. மாற்றுத் திறனாளர்கள் பாகுபடுத்தப்படாமல் எல்லா மனித உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திரங்களையும் சமமாக அனுபவிப்பதையும் சமூக வாழ்வின் எல்லா நடவடிக்கைகளிலும் அவர்களும் தீவிரமாகப் பங்கெடுப்பதையும் உறுதி செய்ய சிறப்புக் கவனம் செலுத்தப்படுவது தேவையாய் உள்ளது.
23. எல்லாருக்கும், எவ்விதப் பாகுபாடுமின்றி, துன்புறுத்தப்படுவதிலிருந்து தப்ப வேற்றுநாடுகளில் அடைக்கலம் கோரவும், அடைக்கலம் கிடைத்தால் அதை ஏற்றுக் கொள்ளவும் தன் தாயகம் திரும்புவதற்கும் உள்ள உரிமைகளை இம்மாநாடு மீண்டும் உறுதியிட்டுரைக்கிறது… மனிதர்களைப் புலம்பெயர்ந்து செல்லவைக்கும் பலவிதமான காரணங்களில், போர் உட்பட பல சமயங்களில் நிகழ்கிற கொடூரமான மனித உரிமை மீறல்களும் அடங்கும்.
இந்த மாநாடு, உலகு தழுவிய அளவில் ஏற்படுகிற அகதிகள் பிரச்சினைகளின் சிக்கலான அம்சங்களைக் கருதியும் அய்.நா. அமைப்புத் திட்டத்துக்கிணங்கவும் இதுபற்றிய பன்னாட்டு ஆவணங்கள், பன்னாட்டு வலுவான ஒற்றுமை ஆகியவற்றுக்கிணங்கவும், சுமைகளைப் பங்கிட்டுக் கொள்ளும் சீரிய உணர்வில் உலக சமுதாயம் இத்துறையில் ஒரு முழுமையான விரிவான அணுகுமுறையை உருவாக்க வேண்டும். சம்மந்தப்பட்ட நாடுகளின் ஒத்துழைப்பு கூட்டுறவு, இவற்றுடன் இதில் அக்கறையுள்ள நிறுவனங்களின் கூட்டுறவு ஒத்துழைப்பு ஆகியவையும் இதற்குத் தேவைப்படும். அகதிகள் பற்றிய அய்.நா. உயர் ஆணையர் முடிவுகளையும் மனதில் இருத்தி அந்த அணுகுமுறை தயாரிக்கப்பட வேண்டும் அய்.நா. அமைப்புத்திட்டத்துக் கிணங்கவும், மனித நேயச் சட்டத்தின் கோட்பாடுகளுக்கிணங்கவும், எல்லாவித இயற்கை நாசங்கள், மனித நடவடிக்கைகள் விளைவான நாசங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மனித நேய உதவி கிட்ட வேண்டியதன் அவசியத்தையும் முக்கியத்தையும் இம்மாநாடு மேலும் அழுத்தமாகக் குறிப்பிடுகிறது.
24. வேலைக்காக நாடுவிட்டு நாடு போகும் புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட தற்பாதுகாப்பு வலுவற்றவர்களாக ஆக்கப்பட்டுவிட்ட குழுக்களைச் சேர்ந்த மக்களின் மனித உரிமைகளைப் பேணுவதற்கும் பாதுகாப்பதற்கும் அதிமுக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும். அவர்களுக்கு எதிரான அனைத்து வகைப் பாகுபடுத்தல்களும் ஒழிக்கப்பட வேண்டும். நடைமுறையிலுள்ள மனித உரிமை ஆவணங்கள் அதற்கேற்ப வலுப்படுத்தப்பட்டு பயனுள்ள வகையில் செயல்படுத்தப்பட வேண்டும்….
25. இந்த மாநாடு தீவிர வறுமையும் சமூகப் புறக்கணிப்பும் மனித மாண்புக்கு அத்துமீறல் என்றும் தீவிர வறுமைபற்றியும் அதன் காரணங்கள் குறித்தும் அறிய அவசர நடவடிக்கைகள் தேவை என்றும், அதில் மேம்பாடு பற்றிய சிக்கல்கள் பற்றியும் அறியப்பட வேண்டுமென்றும் எடுத்துரைக்கிறது. இவற்றின் நோக்கம் அந்த ஏழை மனிதர்களின் மனித உரிமைகளையும் பேணுதலும் தீவிர வறுமைக்கும் சமூகப் புறக்கணிப்புக்கும் முற்றுப் புள்ளிவைப்பதும் சமூக முன்னேற்றத்தின் பலன்களை அவர்களும் சுவைக்கச் செய்வதுமாய் அமைய வேண்டும். அரசுகள் அத்தகையோரும் தாம்வாழும் சமுதாயத்தில் முடிவுகள் எடுக்கும் பொறுப்புகளில் பங்குபெற வகைசெய்து, மனித உரிமைகளைப் பேணி, தீவிர வறுமைக்கு எதிராகப் போர் தொடுக்க வேண்டும்.
28. ஒட்டுமொத்த மனித உரிமை மீறல்களை அதுவும் கூண்டோடு கைலாசமனுப்பும் இனக்கொலை, போர்க்காலக் கற்பழிப்புகள், ‘இனத்தையே சுத்தம் செய்தல்’, மந்தை மந்தையாய் மக்களைப் புலம்பெயர்ந்தோடும் அகதிகளாக்கல் போன்ற பாதகங்கள் கண்டு இம்மாநாடு மனம் பதறுகிறது. அத்தகைய அருவருப்பூட்டும் செயல்களை வன்மையாகக் கண்டிக்கும், அதே சமயம் அத்தகைய பாதகம் செய்யும் பாவியர் தண்டிக்கப்பட வேண்டும், அச்செயல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டுமென்றும் மீண்டும் அறைகூவல் விடுக்கிறது.
29. பன்னாட்டு மனித உரிமை ஆவணங்களும் சர்வதேச மனித நேயச் சட்டங்களும் விதித்துள்ள நிர்ணயிப்புகளை அலட்சியப்படுத்தி உலகின் எல்லாப் பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போதுமான, பலனுள்ள நிவாரணங்கள் கிட்டாமை குறித்தும் ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கிறது…
30. உலகின் பல பாகங்களிலும் தொடர்ந்து ஒட்டுமொத்த மீறல்கள் திட்டமிட்டு நடத்தப்படுவது குறித்தும், அனைத்து மனித உரிமைகளும் முழுமையாக அனுபவிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் சூழ்நிலைகள் உருவாக்கப்படுவது குறித்தும் இம்மாநாடு கண்டனமும் வெறுப்பும் தெரிவிக்கிறது. சித்திரவதை, மனிதத் தன்மையற்ற வகையில், கொடுமையாக அவமானகரமாக நடத்தப்படல், மனிதத் தன்மையற்ற, கொடுமையான அவமானகரமான தண்டனைகள், யதேச்சாதி காரமான-விசாரணையற்ற கொலைகள், ‘காணாமல்போதல்’ சட்டவிரோதமான கைதுகள், சகலவித இனவெறுப்பு, இனப் பாகுபாடு, நிறபேதம், வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, அந்நிய ஆதிக்கம், அந்நியர் வெறுப்பு, வறுமை, பசி, பொருளாதார-சமூக-கலாச்சார உரிமை மறுப்புகள், மத சகிப்பின்மை, பயங்கரவாதம், மாதர்களுக்கெதிரான பாகுபாடுகள், சட்டத்தின் ஆட்சியின்மை ஆகியவை இத்தகைய அத்து மீறல்களில் வரும்.
31. சர்வதேசச் சட்டத்துக்கும் அய்.நா. அமைப்புத் திட்டத்துக்கும் ஒத்துவராத, அரசுகளுக்கிடையான வணிக உறவுக்கு முட்டுக்கட்டையிடுகிறதும், மனித உரிமைகள் பற்றிய சர்வ தேசியப் பிரகடனமும், சர்வதேச மனித உரிமை ஆவணங்களும் முழங்கும் மனித உரிமைகள் (அனைவருக்கும்) கிட்டுவதைத் தடை செய்வது, குறிப்பாக, உணவு-உறையுள், மருத்துவ வசதி மற்றும் தேவையான சமூக வசதிகள் முதலிய சுகாதாரத்துக்கும் நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத் தரம் எய்துவதற்கான உரிமையைப் பாதிக்கின்ற எந்தவித நடவடிக்கையையும் ஒருதலையாக எடுக்கலாகாதென்று இம்மாநாடு அரசுகளை வேண்டுகிறது. அரசியல் கட்டாயங்களுக்கு உணவை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடாது என்றும் வலியுறுத்துகிறது.
32. மனித உரிமைப் பிரச்சினைகளை அணுகுவதில், நேரிய நோக்கும், உலகளாவிய பார்வையும், ‘சிலவற்றை கண்டு கொள்ளாமல் விடுகிற’ பாகுபாடின்மையும் முக்கியம் என்பதை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
33. சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்திலும், பொருளாதார- சமூக-கலாச்சார உரிமைகள் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கையிலும், இன்னும் பிற பல பன்னாட்டு ஆவணங்களிலும் கூறப்பட்டிருப்பதுபோல் மனித உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திரங்களையும் மதிப்பதை வலுப்படுத்துவதுதான் கல்வியின் நோக்கமாயிருப்பதற்கு உறுதியளிக்க அரசுகள் கடமைப்பட்டுள்ளன என்று இம்மாநாடு உறுதியாய்க் கூறுகிறது. மனித உரிமைக்கல்வியைக் கல்வித்திட்டத்தில் இணைப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் இம்மாநாடு அதனைச் செய்யுமாறு அரசுகளையும் வற்புறுத்துகிறது. நாடுகளுக்கிடையிலும் பல்வேறு மதங்களுக்கிடையிலும் இனங்களுக்கிடையிலும் புரிதலும் பொறுத்துக்கொள்ளுதலும், சமாதானமும் நட்புறவும் பரவ கல்வி உதவவேண்டும். இதற்கான அய்.நா. நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். எனவே, மனித உரிமை பற்றிய கல்வியும், கொள்கை – நடைமுறை இரண்டு தளத்திலுமான இது பற்றிய தகவல்களைப் பரப்புதலும், இனம், பால், மொழி மதம் என்ற எந்த வேறுபாடுமின்றி மானிடர் யாவருக்கும் மனித உரிமைகள் பேணப்படுவதிலும் மதிக்கப்படுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தேசிய அளவிலும் சர்வதேசிய அளவிலும் கல்விக் கொள்கைகள் இவற்றைப் பிரதிபலிக்க வேண்டும். ஆனால் இந்நோக்கங்கள் உடனடியாக எய்தப்பட நிதிப் பற்றாக்குறையும் நிறுவன ரீதியான பற்றாக் குறைகளும் தடையாயிருக்கும் என்பதையும் இம்மாநாடு உணர்கிறது.
36. குறிப்பாக அதிகாரமுள்ள இடங்களில்இருப்பவருக்கு அறிவுரை கூறும் பொறுப்பு மூலமும் மனித உரிமை மீறல்களுக்கு நிவாரணமளிப்பதன்மூலமும் மனித உரிமை குறித்த தகவல் பரப்புதல் மூலமும், மனித உரிமைக்கல்விப் பணி மூலமும் தேசிய நிறுவனங்கள் மனித உரிமைகள் பேணப்படவும் பாதுகாப்புப் பெறவும் ஆற்றிவரும் ஆக்கப்பூர்வமான பணிகளின் முக்கியத்துவத்தை இம்மாநாடு மீண்டும் உறுதிபடக் குறிப்பிடுகிறது.
“தேசிய நிறுவனங்களின் அந்தஸ்து பற்றிய கோட்பாடுகளுக்கு உரிய மதிப்புக்கொடுத்து இம்மாநாடு தேசிய நிறுவனங்கள் நிறுவப்படுவதையும் வலுவூட்டப்படுவதையும் ஊக்குவிக்கிறது. தேசிய அளவில் தத்தம் தேவைகளுக்கேற்ப எது தேவையோ அத்தகைய கட்டுமானத்தை அத்தகைய நிறுவனங்களுக்கு ஏற்படுத்த அரசுகளுக்கு உரிமை இருப்பதையும் மாநாடு ஒப்புக்கொள்கிறது.