“மாமன் சொன்னாங்க, அத்தை சொன்னாங்க, உறவுக்காரங்க சொன்னாங்கன்னு அவசரமா ஒரு கல்யாணத்தைப் பண்ணி பிள்ளை வாழ்க்கையை இப்படி நாமே சீரழித்து விட்டோமே” என்று நினைத்து நினைத்துத் துக்கம் தொண்டையடைத்துக் கண்கள் கசியத் தொடங்கியது சந்திரனுக்கு!
“கல்லூரியில் சேர்ந்து, ஓராண்டுகூட முடியல; அதற்குள் படிப்பைப் பாதியில் நிறுத்தி எனக்குக் கல்யாணம் பண்ணாதீங்கன்னு எவ்வளவு கெஞ்சினேன் உங்க ரெண்டு பேரிடம்?
படிக்கும் இடத்தில காதல் கீதல்னு சொல்லி ஜாதி விட்டு ஜாதி யாரையோ கூட்டிட்டு வந்து நின்னா என்ன பண்ணுவன்னு கூட இருக்கிற எல்லாரும் மொத்தமா உசுப்பி விட்டாங்க…
ஆனா, என்ன வாழ்ந்துட்டேன் நான்… திருப்பி அடித்த பந்து’ போல வந்து சேர்ந்துட்டேனே… உங்க விருப்பத்துக்குத் தானே எல்லாம் செய்தீங்க..” இது மகளின் குமுறல்.
கொஞ்சம் என்னை நிம்மதியா விடுறீங்களா? உங்களுக்குப் பாரமா இருந்தா சொல்லுங்க எங்கேயாச்சும் ஒரேடியா போயிடுறேன்” ஊமையாய்த் தேங்கிக் கிடந்த சொற்களையெல்லாம் உரக்கவே கொட்டினாள் அரசி!
ஆம், அரசி அரசியாகத்தான் வாழ ஆசைப்பட்டாள்; விட்டார்களா? பொட்டப் புள்ள, பொட்டப் புள்ள என்று குட்டிக் குட்டி சட்டுபுட்டுன்னு மணமுடித்து அனுப்பினார்கள். ஒரு வழியாக மனதைத் தேற்றிக்கொண்டு கழுத்தை நீட்டிவிட்டு கனவுகளோடு காத்திருந்த அவளிடம்…
“இங்க பார் அரசி, நானும் என்னோடு கல்லூரியில் படித்த கலையழகியும் உயிருக்குயிராக் காதலிச்சோம். எங்க காதல் எங்க எதிர்கால வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்காமல் முழுமையாகப் படிப்பையும் முடித்து ஒரு வேலையில் சேர்ந்த பின்பு தான் திருமணம் என்ற முடிவுக்கும் வந்தோம். வாழ்க்கையை அவளோட தான் வாழணும்னு ஆசைப்பட்டேன். அவளோ வேறு ஜாதி. இது தெரிஞ்ச எங்க வீட்டு ஆளுங்க நீ அவளைக் கல்யாணம் பண்ணுனா நம்ம ஜாதி ஜனம் எங்க முகத்துல விழிக்க மாட்டாங்க, விட்டுடுன்னாங்க. நான் மறுத்தேன். ஒரு கட்டத்துல இத்தனைக்கும் காரணமான அவளை உயிரோடு விடமாட்டோம்னு சொன்னாங்க.”
“எனக்கு இந்த உலகத்துல எல்லாரையும் விட அவள் தான் முக்கியம். அவள் எங்கே இருந்தாலும் வாழணும். அவள் இல்லாத ஒரு நிலைமையை என்னால நினைச்சுப் பார்க்கவே முடியல. அவளுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்பதற்குத் தான் விருப்பமில்லாமலே உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.”
“தயவு செய்து என்னைப் புரிஞ்சிக்கோ… என் மனசு உன்னை ஏத்துக்காது, ஏன்னா அது அவளிடம் இருக்கு!”
துணைவன் அகிலன் சொல்லச் சொல்ல இதயத்தில் இடி விழுந்தது போலானது இவளுக்கு! நடைபிணமாக இருவரின் நாள்கள் கடந்தன… சில நாள் நடித்தார்கள்; ஆனாலும் நீடிக்கவில்லை.
உணர்வுகளின் இரைச்சல் அதிகம் இருக்கும் இரவு நேரத் தனிமையில் அகிலனுடைய நினைவுகள் அறையில் சுழலும் மின்விசிறி போலச் சுழன்று சுழன்று அடிக்கின்றன…
அன்றொரு நாள் ஏலமலைக்குப் பயணம் போனோம். பச்சைப் பட்டுடுத்திய மலையழகிக்கு வகையாய் வகிடெடுத்தது போல் பாதை போட்டது யாரோ கலையழகி? என்று கேட்டுக்கொண்டே புது உற்சாகத்தோடு என் புது புல்லட்டை ஓட்டினேன். பல நாள் ஆசை- புதிதாக வண்டி வாங்கி அதில் நாங்கள் இப்படி மகிழ்ச்சியா போக வேண்டுமென்று…
என்னோடு இன்னும் கொஞ்சம் நெருக்கமாக அமர்ந்து என் தோள் மீது தன் கையை வைத்து “இதையெல்லாம் உன்னோடு இருந்து எப்போதும் நான் ரசிக்க வேண்டுமே? விடுவார்களா” என்று வேறு பதில் சொன்னாள் கலையழகி…
“வண்டியைக் கொஞ்சம் நிறுத்து அகிலன்” என்றாள். கொண்டை ஊசி வளைவுகளைத் தாண்டி பாதுகாப்பான ஓரிடத்தில் வண்டி நின்றது.
“அதோ பார் அகில், குரங்குகள் கிளைகளில் ஊஞ்சலாடிக் கொண்டி
ருக்கின்றன… அவை இயற்கையோடு வாழ்கின்றன… அவற்றிற்கு உணவுத் தேடல் மட்டுமே வாழ்வியல் போராட்டமாக இருக்கின்றது”.
“ஆமா கலை… மனிதர்கள் தான் ஏராளமான மனத்தடைகளை விலங்கிட்டுக்கொண்டு உண்மை விலங்குகளாக நடமாடுகிறார்கள் என்றுதானே சொல்ல வருகிறாய்…”
“ம்”
“அதோடு எனக்குள் நிறையக் கேள்விகள் இருக்கிறது அகில்…”
“எதற்கும் பயன்படாத இந்த ஜாதியைப் பிடித்துக் கொண்டு ஏன் நம் பெற்றோர்கள் நம்மை வதைக்கிறார்கள்?”
“நம்மிடம் என்ன இல்லை! படிப்பு இருக்கிறது… பண்பு இருக்கிறது… தனியாகச் சொந்தக் காலில் நிற்க வேலை இருக்கிறது… ”
“எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது… உனக்கு என்னைப் பிடித்திருக்கிறது… வேறென்ன வேண்டும் அகில்- இந்த உலகில் மகிழ்ச்சியாக நாம் வாழ … நீ தான் சொல்லேன்…”
“கலை…அன்பாலும் பண்பாலும் என்னை ஆட்கொண்டவள் நீதான் எனும் பொழுது ஜாதியைச் சொல்லி நம்மைப் பிரிக்கப் பார்த்தால் அதை எப்படி ஏற்றுக் கொண்டு ஒருவரை ஒருவர் மறந்து வாழ முடியும்? அப்படி நம்மை ஏன் வருத்திக் கொண்டு வாழ வேண்டும்?
“மனிதன் கற்பித்துக் கொள்பவை எல்லாமே மனிதனின் மகிழ்ச்சிக்காகத் தான் இருக்க வேண்டும். அதுதானே அறிவின் வளர்ச்சி?”
இருவரும் தங்களது ஆற்றாமையை மாறி மாறி கொட்டிக் கொண்டே கைகளைக் கோத்து சிறிது நேரம் கண்களை மூடி அமைதியாய் இருக்கிறார்கள். வீட்டில் தேடுவார்களே என்ற எண்ணம் விழிப்பூட்ட சட்டென வண்டியில் அமர்கிறார்கள்.
திரும்பத் திரும்ப நினைவுகள் நெருக்குகிறது அகிலனுக்கு!
என்னை என்ன செய்வார்கள் என்று சொல்லி இருந்தாலும் அதற்கு நான் கலங்கியிருக்க மாட்டேன். ஆனால், உன்னைக் கொல்வேன் என்று சொன்னார்களே… என்னைக் காதலித்த பாவத்திற்கு நீ பலியாக வேண்டுமா? என்பது தானே என்னை இப்படிச் செய்வதறியாது என் கைகளைக் கட்டிப்போட்டு விட்டது.
கண்களில் சாரை சாரையாய் வழியும் கண்ணீர் தலையணையை நனைக்கிறது…
அன்றோடு பார்த்தது தான்… வீட்டுச் சிறையிலே உன்னையும் பூட்டி விட்டார்கள்… நீ எங்கிருக்கிறாய்? எப்படி இருக்கிறாய் என்பது கூடத் தெரியவில்லையே… இது என்ன கொடுமையோ? எப்போது அழைத்தாலும் உன் அலைப்பேசி எண் அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்றே வருகிறது. நேரில் வந்தாலும் ஊருக்குப் போயிருக்கிறாள் என்று மட்டும் சொல்கிறார்கள். பைத்தியம் பிடிப்பது போல இருந்தது எனக்கு.
“தம்பி! எங்க சொந்தக்காரப் பையன், வேற ஜாதிப் பொண்ண கல்யாணம் பண்ணிட்டான்னு அநியாயமா வெட்டிப் போட்டானுங்க… அந்தச் சோகமே இன்னும் எங்களை விட்டுப் போகல… நீங்க தயவுசெய்து எங்களை விட்டுப் போங்க, வாழ விடுங்க” என்று கலையழகியின் அப்பா கதறலாய்க் கேட்கிறார். அதுவும் பெண் பிள்ளையைப் படிக்க வைத்தே தீர வேண்டும் என்று வாயைக் கட்டி வயிற்றைக் கட்டிப் படிக்க வைத்தவர்.
விளையாட்டுப் பிள்ளையாக வளர்ந்தேன்; படித்தேன்; ஒரு வேலைக்குப் போனேன்; ஒரு பெண்ணை மனதார விரும்பினேன். ஆனால் ஜாதியின் கொடுங்கரங்கள் எவ்வளவு ஆழமாக இந்தச் சமூகத்தில் வேரூன்றி இருக்கிறது என்பதை வாழ்க்கை எனக்கு அப்பொழுதுதான் புரிய வைத்தது. வைராக்கியமாகத்தானே வந்தேன்… என் வீட்டிலும் இப்படி என்னைச் செயலிழக்க வைத்து விட்டார்களே!
நான் எப்படி நிம்மதியாக வாழ்வேன்?
வாய்விட்டு இப்பொழுது புலம்பத் தொடங்கிய
வனைப் பரிவோடு பார்க்கிறாள் அரசி. அவன் நிலையிலிருந்து அவனை யோசிக்கிறாள்.
எல்லாம் புரிந்தவளாய் ஒரு திடமான முடிவுக்கு வருகிறாள்.
ஜாதியோ பணமோ சொந்த பந்தமோ வந்தா குடும்பம் நடத்தப் போகிறது? மண வாழ்க்கைக்கு அடிப்படை மகிழ்ச்சிதானே? மன நிம்மதிதானே? அதுவே இல்லாத போது எதற்காகப் போலியான வாழ்க்கை வாழ வேண்டும்?
ஜாதி வெறி பிடித்த பெற்றோர்களுக்கு இனி இளைஞர்கள் சரியான அறிவு புகட்டும் காலம் வரவேண்டும் என்ற உறுதியோடு எழுந்தாள் அரசி.
கலைஅழகியின் தோழி என்று சொல்லி இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தது அகிலனின் மனைவி அரசி என்று அறிந்தபோது கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது கலையின் பெற்றோருக்கு. கூடவே பதற்றமும் தொற்றிக் கொண்டது.
“ஏற்கனவே,வாழ வேண்டிய பையனை பிணமாய்ப் பார்த்தாச்சு. உன்னையும் அப்படி எங்களால பார்க்க முடியாதுன்னு என் பெற்றோர்கள் காலைப் பிடித்துக் கொண்டு அழுதார்கள், ஏதேனும் கலவரம் வெடிக்கும் எனப் பயந்தார்கள்… ஆனால் என்னால் அகிலனை நொடியும் மறக்க முடியவில்லை. வாழவே பிடிக்காமல் வெறுமையாக இந்த அறையில்அடைந்து கிடந்தேன்” என்றாள் கலை.
‘வாழ வேண்டியவர்கள் நீங்கள் இருவரும் தான்!” என்று பதில் சொன்னாள் அரசி.
அகிலனின் ஆழமான காதலை எடுத்துச் சொன்ன அரசியின் பக்குவப்பட்ட பேச்சில் படிப்படியாக அவர்கள் மனம் மாறத் தொடங்கியது.
“அப்படி என்றால் உன் வாழ்க்கை என்னாவது?” என்றாள் கவலையோடு கலை.
ஆம். இங்கு இருந்தாலும் அது எனக்கான வாழ்வு இல்லையே…என் வாழ்வை நான் தான் தீர்மானிக்க வேண்டும். முதலில் பாதியில் விட்ட படிப்பைத் தொடர்கிறேன் என்று சொல்லிவிட்டு ஏதோ அங்கே பிறந்து வளர்ந்தவள் போல நீண்ட நேரம் பேசி விட்டு வீடு திரும்பினாள் அரசி. கலை அழகியின் அம்மா, அரசியை தன் இன்னொரு மகளாகவே நினைத்து விட்டார்.அவள் வந்து போனதும் அந்த வீடே புது வண்ணம் பூண்டது போல் ஆனது.
“உடனே புறப்பட்டு வாங்க!” என்று மகள் சொன்னதும் என்னானதோ ஏதானதோ எனப் பதறி அடித்துக் கொண்டு அரசி
யின் பெற்றோர் உள்ளே நுழைகிறார்கள். பெட்டி படுக்கையோடு நின்றவளை வெறித்துப் பார்க்கிறார்கள் அகிலனின் பெற்றோர். அவர்கள் முந்திக் கொள்ளும் முன் அரசி முந்திக் கொள்கிறாள்…
“பாராட்டிச் சீராட்டி வளர்த்த மகனை வெற்று ஜாதிப் பெருமைக்காக- யாரோ நாலு பேர் திருப்திக்காக இப்படி நடைப்பிணமா வாழ வச்சிருக்கீங்களே… உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையா? உங்க வறட்டு கவுரவத்தால எங்கள்
மூன்று பேர் வாழ்வும் இப்படி வீணாவது நியாயமா?
சொந்த ஜாதியில் திருமணம் பண்ணி இப்போ நான் என்ன வாழ்ந்துட்டேன்?
ஜாதிக்கும் உயிர் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? இரத்தத்தில் எங்காவது ஜாதி உண்டா? உடல் உறுப்புக் கொடையால் எத்தனை உயிர்களை வாழ வைக்கிறாங்க, அப்போது எந்த ஜாதி உறுப்பு என்று பார்ப்பது உண்டா?
ஜாதிக்கும் மண வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?
இதையெல்லாம் புரிந்து கொள்வதற்கு இன்னும் எவ்வளவு பேரைத்தான் பலியிடக் காத்திருக்கிறீர்களோ?
அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து நீங்கள் செய்த களங்கத்தைத் துடைக்க வழி தேடுங்கள்!” என்று சரமாரியாக வெடித்தாள்;
“உன் வாழ்க்கை என்ன கதி?” மல்லி துடித்தாள்.
“இங்க பாருங்க உங்க எல்லாருக்கும் ஒன்னு சொல்றேன். நீங்க பெற்ற பிள்ளைங்க தன் புது உலகத்தில் ஆசைகளோடும் கனவுகளோடும் இதழ்
விரித்து புது மணத்தோடு பூக்குறாங்க! ஆனா, அந்த
இதழ் போன்ற மென்மை
யான மனங்களில் ஜாதி என்ற நச்சுத் தோய்ந்த நகத்தால் அவர்களின் ஆசைகள் – கனவுகள் மீது கீறல்களைப் போட்டு கசக்கி எறிஞ்சுடாதீங்க… காயப்படுத்திடாதீங்க… அந்த உறுத்தலோடும் வலியோடும் வாழும்படி காலமெல்லாம் அவர்கள் வாழ்வைச் சிதைச்சிடாதீங்க… அவர்கள் மரணத்துல உங்க ஜாதிக் கொடியை நாட்டாதீங்க! வாங்க போகலாம்!” என்று கோபமாகச் சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தாள் அரசி.
அசைவற்றுக் கேட்டுக் கொண்டிருந்தான் அகிலன்.
மகளை எண்ணி வருத்தப்பட்டுக் கொஞ்சம் கூடுதலாகக் குடித்தார் அப்பா சந்திரன்.(குடிப்பெருமை!!) அதுதான் அவரால் செய்ய முடிந்தது. அந்தக் குடிப்பழக்கம்தானே குடும்பத்திற்கான சேமிப்பையெல்லாம் குடித்துக் கொண்டது !
“என் புள்ளைக்குத் தான் இப்படி ஆயிடுச்சு, உன் பொண்ணு விரும்புகிற பையனுக்கே அவளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துடு. அவங்க எங்கேயாச்சும் போய்ச் சந்தோஷமா வாழ்ந்துக்கட்டும். பாழாப்போன ஜாதி வெறி ஒழியட்டும்”னு தன்னோட தூரத்து உறவுக்காரப் பெண்ணிடம் போனில் சொல்லிக் கொண்டிருந்த அம்மா மல்லியின் குரல் காதில் கேட்க, அரசியின் மனம் போன்ற அவளது மென்மையான இதழ்களிலும் புன்னகை தானாய்ப் படர்ந்தது.
அலமாரியில் புதிதாக வாங்கி வைத்த பெரியாரின் “ஜாதி ஒழிப்புப் புரட்சி”, “பெண் ஏன் அடிமையானாள்?” எனும் இரண்டு புத்தகங்களும் அவளைப் பார்த்துச் சிரித்தன.