டெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்!

ஆகஸ்ட் 16-31

டெல்லியில் உள்ள பாலகிருஷ்ண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி என்கிற பண்டிகையின் போது தீண்டாதவர்கள் என்கிறவர்களை எல்லாம் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தமிழ்நாடு பத்திரிகையில் காணப்படுகிறது.  புராணங்களின் படி கிருஷ்ணன் என்பதாக ஒரு சுவாமியோ, ஆசாமியோ இருந்ததாக நாம் ஒப்புக் கொள்வதானால் அது ஒரே சாமியாகத்தான் இருந்திருக்கலாமே தவிர, டெல்லிக்கு ஒரு கிருஷ்ணனும், தமிழ்நாட்டுக்கு ஒரு கிருஷ்ணனும், இருந்திருக்க முடியாது.

அப்படியிருக்க, டெல்லி கிருஷ்ணன் தீண்டாதவர்கள் கோவிலுக்குள் போனால் ஓடிப்போகாமல் கோவிலுக்குள்ளாகவே தைரியமாக உயிருடன் இருக்கும்போது, நமது தமிழ்நாட்டு கோவில்களில் உள்ள கிருஷ்ணன் மாத்திரம் தீண்டாதவர்கள் உள்ளே போனால் கோவிலை விட்டு ஓடிப்போவதோ, அல்லது ஒரே அடியாக செத்துப்போவதோ ஆனால், இந்த மாதிரி கிருஷ்ணனை வைத்துப் பூஜை செய்வதால் நமக்கு என்ன பலன் அவரால் உண்டாகக் கூடும்.  ஒரு மனிதன் உள்ளே வந்தால் தாக்குப் பிடிக்காத கிருஷ்ணன் யாருக்கு என்ன செய்ய முடியும்? ஆதலால் நாம் தமிழ்நாட்டுக் கிருஷ்ணனைத் தூக்கி விட்டு இனிமேல் டெல்லி கிருஷ்ணனைத் தான் தருவித்துக் கொள்ள வேண்டுமேயல்லாமல், இந்த மாதிரி சக்தியில்லாத, கிட்டப் போனால் ஓடிப் போகிற கிருஷ்ணன் இனி நமக்கு அரை நிமிஷங்கூட கண்டிப்பாய் உதவவே உதவாது.

(தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் சித்திரபுத்திரன் என்ற புனை பெயரில் எழுதிய கட்டுரை) குடிஅரசு 28.8.1927

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *