தமிழர்களின் உள்ளம், உரை, செயல் அனைத்திலும் உறையத் தொடங்கிய தாழ்வு மனப்பான்மையை அகற்றவும், பண்டை நாட்களிலே தமிழர் தம் அறிவு பல்வேறு துறையிலும் மேலோங்கிச் சிறந்திருந்தது என்பதைத் தமிழர்கள் உணர்ந்து, தாய்மொழியைக் குறித்து ஒரு பெருமித எண்ணத்தோடு தலைநிமிர்ந்து வாழவும் உறுதுணையாக நின்றவர் பல்கலைப் புலவர் கா.சுப்பிரமணிய பிள்ளை அவர்களாவார்.
அவர் இளமையிலேயே தெளியக் கற்று தமிழுடன் ஆங்கிலத்திலும் முது கலைஞராய்த் தேர்ந்து, சட்டத்துறையிலும் பேரறிஞராய்ச் சிறப்புப் பெற்று தாகூர் சட்ட விரிவுரையாளர் என்னும் பெருமையுடன் விளங்கினார்.
இந்த நூற்றாண்டின் இடைக்காலம் வரையிலுங் கூட, தமிழ் நன்கு கற்றவரிடமும் ஒரு தவறான கருத்து நிலவியது. தமிழ் மொழி இலக்கண, இலக்கிய மேம்பாடுடைய தொன்மொழியே எனினும் சமய நூல்கள், தத்துவ நெறி விளக்கங்கள், தெய்வ வழிபாட்டுக்கான மறை மொழிகள் ஆகிய பலவும் வடமொழியிலேயே இயற்றப்பட்டுள்ளனவாகையால், அவை சமக்கிரதத்திலிருந்தே தமிழர்க்கு வாய்த்த செல்வம் என்பதும், வாழ்வை ஈடேற்றும் சமய அடிப்படை விளங்கும் மொழி எதுவாயினும் அம்மொழி (வடமொழி) தமக்கு இன்றியமையாதது என்பதும், அத்தகு வடமொழி பல்லாற்றானும் உயர்வுடைய தெய்வ மொழியே என்பதும், அதனைத் தாம் கற்காவிடினும் அதன் கருத்து அறிந்து தெளியக் கூடாவிடினும், அதனை நீக்குதல் ஆகாது என்பதும் அவர்தம் நம்பிக்கையாக வேரூன்றியிருந்தது. சைவ சமயத்தவரும், வைணவ மதத்தவரும், வேறு சில சமயக் கோட்பாடுடையவர்களும், தமது சமயச் சார்புடைய தமிழ்நூல்கள் பலவற்றைப் பெற்றிருப்பினும், அவற்றுக்கெல்லாம் மூலமாகச் சுட்டப்படும் நூல்கள் பல வடமொழியில் விளங்குவது கொண்டு அதனைப் பெரிதும் மதித்ததோடு, தமிழைப் போற்றவும் தவறி நின்றனர்.
ஆராய்ச்சித் திறன், தெளிவு, துணிவு, குறிக்கோள் ஆகியவற்றால் மறைமலை அடிகளாரை ஒத்து விளங்கிய கா.சு.பிள்ளை அவர்கள், சமயப் பற்றோடு விரவி நின்ற வடமொழி மயக்கத்தைத் தெளிவித்து அதன் ஆதிக்கத்தை அகற்றுதற்கு ஆற்றிய அறிவுப் பணி தனிச் சிறப்புடையதாகும்.
மேலைநாட்டவரின் ஆராய்ச்சிக் கருத்துகளை எல்லாம் ஒப்புநோக்கி உண்மை கண்டு, தமிழர் வாழ்வே தனித்தமிழ் மொழி வழியால் அமைந்த பெருமையுடையது எனவும், சமயத்துறையிலும் தமிழர்கள் வடமொழிக்கு முதன்மையும் உயர்வும் அளிப்பது தகாது எனவும் சான்றுகள் காட்டி அறிவுறுத்தினார்.
அவர் தம் கருத்துகளில் சில இவை :
“ஆரியர் இந்நாட்டிற்கு (இந்தியா) வருவதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் நாகரிகத்தோடு திகழ்ந்தனர் என்பது சரித்திர ஆசிரியர் முடிவு. தமிழ் நூல் முறைப்படி இடைச் சங்ககாலமாகிய தொல்காப்பியர் காலத்தில்தான் வடக்கிருந்து வந்த ஆரியரின் தொடர்பு தமிழருக்கு ஏற்பட்டதாகும். தலைச்சங்க காலத்தில் (கடல் கொண்ட நாட்டில்) தமிழ் வளர்ச்சி அடைந்தபோது ஆரியத் தொடர்பு (சிறிதும்) ஏற்படவில்லை.
“ஆரியன் கண்டாய்! தமிழன் கண்டாய் என்னும் அடியில் (அப்பர் திருத்தாண்டகம்) மொழி வேறுபாடே குறிக்கப்பட்டது என்று கொள்ளினும் ஆரிய மொழி பேசும் மக்கள் வேறு; தமிழ் மொழி பேசும் மக்கள் வேறு என்பது அதனால் பெறப்படும். உரையாசிரியர், ‘பேராசிரியர்’ ‘ஆரியர் கூறுந் தமிழ்’ நகைச்சுவைக்குக் காரணமாகும் என்றதும் காண்க.”
“இப்பொழுதுள்ள வடமொழி நான்மறைகளை வியாசர் வகுத்தமைப்பதற்கு முன்னரே தொல்காப்பியம் முழு முதல் நூலாக இலங்கிற்றென்று ஆசிரியர் நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் பாயிர உரையில் கூறிப் போந்தனர்.
“இப்பொழுதுள்ள சிறந்த வடமொழி இலக்கண நூலாகிய பாணினீயம் கி.மு. 8ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது அன்றாதலின், தொல்காப்பியம் அதற்கும் முற்பட்டது என்பது தெளிவு. ஆராய்ந்து காணுமிடத்து இப்பொழுதுள்ள பண்டை இலக்கண நூல்கள் யாவற்றிலும் பழைமையும் பெருமையும் மிக்கது தொல்காப்பியமே ஆகும்.”
“தொல்காப்பியப் பொருளதிகாரத்துள் ஆவணி(திங்கள்) முதலாக மாதங்களை எண்ணுதல் காணப்படுதலின், அப்படி எண்ணும் வழக்கம் வானநூல் ஆராய்ச்சியால் சுமார் அய்யாயிரம் ஆண்டுகட்கு முன் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று புலனாவதால் தொல்காப்பியம் அத்துணைப் பண்டைக் காலத்திலேயே தோன்றியிருக்கக் கூடும் என்று எண்ண இடமுண்டு.”
“தமக்கு முன்னிருந்த பல புலவர்களின் கருத்து
களைத் தொல்காப்பியர் தொகுத்துரைத்தாராதலின், அவர் காலத்திற்கு முன்னேயே பலவகைத் தமிழ் இலக்கியங்களும் தழைத்தோங்கியிருந்திருக்க வேண்டும். ஆதலால் அறிவு வளர்ச்சியில் எந்நாட்டினருக்கும் முன்னாகத் தமிழர் சீருஞ்சிறப்பும் அடைந்தனர் என்பது போதரும்.”
“மருத்துவ நூலும் தமிழர்க்குள் மிக்க நயம் வாய்த்திருந்தது. சித்தர் கண்ட முறையாதலின் சித்த மருத்துவம் என்றே பெயர் பெற்றுள்ள தனிமருத்துவ முறையாக இன்றும் விளங்குவது கண்கூடு.
“நீதிகளைச் சுருக்கமான மொழிகளில் திட்பமாகக் கூறுஞ் சிறப்பு தமிழருக்கே உரியது. நீதி கூறும் மொழிகளுக்கு ‘முதுமொழி’ என்ற பெயர் தொல்காப்பியத்துள் அளிக்கப்பட்டது.”
“கணிதத்தில் தமிழ் வணிகர் மிகப் பேர் பெற்று விளங்கினர். ‘எண்ணும் எழுத்தும்’- ‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப’ என்னும் தொடர்களில் எண்ணே முதலில் நிற்றல் காண்க. தமிழில் இலக்கண நூல்கள் தனியே செவ்வையாக அமைந்துள்ளன. இயல், இசை, கூத்து என்ற முத்தமிழுக்கும் அகத்தியர் இலக்கணம் செய்ததாகக் கூறுவதுண்டு.”
உணவிலும், உடையிலும், கட்டடத் தொழிலிலும், ஓவியம், சிற்பம், இசை, கூத்து, செய்யுள், இலக்கணம் முதலான பல்வேறு துறைகளிலும் ஆரியர் தொடர்பு ஏற்படும் முன்னமேயே தமிழர் மேன்மையுற்று வாழ்ந்தனர் என்பதைப் பல்கலைப் புலவர் நிலைநிறுத்தினார். வடமொழி நூல்கள் தமிழரிடையே பெற்ற செல்வாக்கு நியாயமற்றது என்பதையும், வடமொழிக் கலப்பு முறையற்றது என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
தமிழ் நூல்களிலுள்ள வடமொழிச் சொற்களை ஆய்ந்து கொண்டு போனால், இற்றை நாளிலும் கம்பர் காலத்தில் வடசொற்கள் குறைவாகவும், சங்க காலத்தில் அதிலும் மிகக் குறைவாகவும் காணப்படும். திருவள்ளுவர் நூலில் உள்ள சுமார் பன்னீராயிரம் சொற்களுள் அய்ம்பதுக்கு மேற்பட்ட வடமொழிச் சொற்கள் இல்லை என்ப. அவைதாமும் தமிழிலிருந்து வடமொழிக்குப் போயினவோ என்னும் அய்யப்பாட்டிற்கு இடந்தருவன. பண்டைக் காலத்தில் (சங்க காலம்) ஆரியக் கலப்பு மிகவும் குறைவாய் இருந்தது. அதற்கு முற்பட்ட காலத்தில், ஆரியக் கலப்பு அறவே இல்லாதிருந்திருக்கவேண்டும்.
கடைச்சங்க காலத்திலே, தமிழ் மக்கள் வடநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட பிற தெய்வ வழிபாட்டையும் கைக்கொண்டனர். வடநாட்டினர் கூட்டுறவால் நாற்குலப் பிரிவு (வருணாசிரமம்) தலைகாட்டிற்று. ஆரியக் குருமார்கள் தங்கள் மறைகளை (வேதங்களை)த் தமிழ் மக்கள் நம்பும்படி செய்து பார்ப்பனர் என்னும் பெயரையும் மேற்கொண்டனர். சமயச் சார்பான வடசொற்கள் தென்னாட்டில் மிகுதியும் வழங்கலாயின. தமிழர்கள் மணத்தைக் கந்தருவ மணத்தோடு ஒப்பிட்டுக் கூறும் வழக்கமும், வெவ்வேறு வகைத்தாய மணச் சடங்குகள் நிகழ்த்தும் வழக்கமும் ஆரியக் கலப்பின் பயன்களாமென்க.
நாமெல்லாம் இந்துக்கள்- இந்து மதத்தினர் என்னும் தவறான எண்ணமும், இந்து சமயத்தின் மூலாதார மொழி வடமொழியே என்னுங் கருத்துமே தமிழர்கள்மீது சமக்கிரதம் ஆட்சி நடத்துதற்குக் காரணமாக நின்றன. அந்தப் பொய்மையைக் களைய அவர் விளக்கிய உண்மைகள் பல.
இந்து மதம்(ஹிந்து) என்ற பெயர் தமிழிலாவது வடமொழியிலாவது உள்ள பண்டை நூல்களில் இல்லை. உலகத்தில் மதங்களுக்குப் பெயர், வழிபடும் தெய்வத்தை வைத்தாவது, சமயத் தலைவன் (வழிகாட்டி) பெயரை வைத்தாவது பிரமாண(சான்று)நூல்களைப் பொறுத்தாவது அமைவதேயன்றி- மக்களினத்தின் பெயரால் அமைவதில்லை. வழிபடும் கடவுள் சிவமாயின், அம்மதம் சைவமெனப்படும். தெய்வத்தின் பெயர் விட்ணு (திருமால்) ஆயின் அம்மதம் வைணவம் எனப்படும். கிறித்துவம், புத்தம், சமணம் ஆகிய மதங்கள் சமயத் தலைவர்கள் பெயரால் ஏற்பட்டவை. சொராஸ்டிரர் மதமும், கன்பூசியசு மதமும் அத்தகையனவே. வைதிகம் சுமார்த்தம் என்னும் மதங்கள், வேதம், ஸ்மிருதி முதலிய பிரமாண நூல்களின் பெயர் பெற்றன. ‘இந்து’ என்ற சொல் கடவுள், ஆசிரியன் (வழிகாட்டி), சான்று நூல் (பிரமாண நூல்) என்பவற்றுள் எதன் பெயரையும் பெற்றதாகத் தெரியவில்லை.
‘சிந்து’ நதிக்கரையில் இருந்தவர்களைச் சிந்து, ‘ஹிந்து’ என்று பாரசீகரும் கிரேக்கரும் பெயரிட்டு அழைத்தனர். அந்தப் பெயரிலிருந்தே “இந்தியா” என்ற பெயரும் ஏற்பட்டது.
இந்தியாவின் பழைய மக்களை, அய்ரோப்பியர் ‘இந்துக்கள்’ என்று அழைத்தனர். ‘இந்துக்கள்’ என்று குறிப்பிடப்பட்டவர்களுக்குள் பல மதங்கள் இருப்பதை அறியாத மேலை நாட்டினர் இந்துக்கள் எல்லோருக்கும் ஒரே மதம் இருப்பதாக எண்ணி ‘இந்து மதம்’ என்ற பெயரைத் தோற்றுவித்தனர். ‘ஆங்கில மதம்,’ ‘சப்பானிய மதம்’, ‘அமெரிக்க மதம்’ என்று மதங்கள் இருக்குமாயின் ’இந்து மதம்’ என்ற ஒரு மதமும் உண்டெனலாம். அவை இலவா தல் போல ’இந்து’ என்றொரு மதமும் இல்லை.
இக்காலத்தில் வடமொழி வேதத்தைப் பிரமாணமாகக் கொண்ட வைதீகர்கள், தங்கள் மதமே இந்து மதம் என்றும், அதுவே இந்தியாவிலுள்ள எல்லா மக்களுக்கும் உரிய மதம் என்றும் நிலைநாட்ட முன்வந்துள்ளனர். வேதத்தையும் ஸ்மிருதியையும் சான்றாகக் கொண்ட மதமே இந்து மதம் என்றால், அஃது இந்தியாவிலுள்ள பல மதங்களில் ஒரு மதமாகுமேயன்றி அஃது இந்தியர் எல்லார்க்கும் உரிய பொது மதமாகாது.
இந்தியாவில் தோன்றிய புத்தம், சமணம், வைதிகம், சுமார்த்தம், சைவம், வைணவம் முதலிய எல்லாச் சமயங்களையும் இந்துமதம் என்று கூறுதல் பொருந்தாது. இந்தியாவில் உள்ள பல சமயத்தவரையும் கிறித்துவர், முஸ்லிம்கள் உட்பட, இந்தியர்கள் என்று அழைப்பதே பொருந்தும்.”
அதற்கு மேலும் அவர் கூறிய விளக்கம், சமய உண்மைகள் வடமொழி வாயிலாகவே உணர்த்தப்பட்டன. என்றெண்ணிக் கிடந்த தமிழரைத் தெளிய வைப்பதாகும்.
வடமொழி வேதத்தின் வேறான சிறந்த பிரமாணங்களையுடைய, தமிழ் நூல்களையுடைய சைவ, வைணவ சமயங்களை இந்துமதம் என்று கூறுதல் அறிவுக்குப் பொருந்துவதில்லை.
வேத வாக்கியங்களுக்குச் சைவத்திற்கும் வைணவத்திற்கும் ஏற்ற முறையில் பொருள் கொள்ளுதல், பைபிளுக்கும் திருக்குரானுக்கும், சைவ, வைணவப் பொருள் கொள்ளுதல் போலாகும், வேதத்திலும் உபநிடதங்களிலும் சிற்சில இடங்களில் சைவ, வைணவக் கருத்துகள் காணப்படுதல் பற்றி அவற்றைப் பிரமாணமாகச் (சான்றாக) சைவர்களும் வைணவர்களும் கொள்ளுதல் பொருத்த மின்றாம்.
தமிழ்ச் சைவ, வைணவ சமயங்கள் அடிப்படையில் ஒத்த கருத்துடையன. அது தொல்காப்பியம், திருக்குறள், பரிபாடல் முதலிய சங்க நூலாராய்ச்சியாலும் தேவார, திருவாசக, திருவாய் மொழி, திருமொழி ஆராய்ச்சிகளாலும் நன்கு புலனாகும்.
தமிழ்நாட்டிலுள்ள சைவ, வைணவக் கோயில்களெல்லாம் தமிழருக்கே உரியனவாம். வைதீகர்கள்(வடமொழிச் சார்பால்) கோயில் வழிபாட்டின் பகுதிகளுக்கு வைதீகத் தொடர்பும் பொருளும் கூறுதல் வழக்கம்.
இனிக் கோயில்களில் உள்ள (தமிழ்நெறி உடன்படாத) ஆரியச் சார்புகள் யாவை எனில் தமிழ்க் குருக்கள் தம்மை ஆரியராய் (மேல் ஜாதியாய்) எண்ணிக் கொள்வதும், வருண(ஜாதி) வரம்புகள் பற்றி இன்னின்னார் இன்னின்ன இடத்தில் நிற்க வேண்டும் என்பதும், தாழ்த்தப்பட்டவர்க்கு இடம்(அக்காலத்தில்) அளிக்காமையும், பரிசாரகம் முதலிய தொண்டுகள் சுமார்த்தரால் செய்யப்படுவதும், வடமொழி வேத பாராயணம் முதலியவையும் வேதச் சார்பான ஓமச் சடங்குமாம் என அறிக. மேலும் அவர் கூறுவது இது: “தமிழர் கோயில்களில் சமய ஆசாரியர்கள் தமிழிலேயே பாடி இறைவனை வணங்கியது போலத் தமிழிலேயே பூசனை, துதிகள் எல்லாம் நடைபெறலாயின. கோயிற் பணத்தைப் பிறமொழிப் பாராயணத்துக்கும், பிறமொழியில் பூசனை முறைகள் கற்பிப்பதற்கும் செலவு செய்தல் கூடாது.”
இவ்வாறு தமிழர்களிற் பெரும்பாலோர் கொண்டி
ருந்த சமய நம்பிக்கையோடு ஒட்டி, உறவாடி, வேர் விட்டுத் தழைத்து நின்ற சமக்கிரதத்தின் ஆதிக்கத் தளையை அறுத்தெறிந்தார் பல்கலைப் புலவர். கா.சு. பிள்ளை எனில்- அவர்தம் தமிழர் சமயக் கொள்கை தந்த விழிப்புணர்வு மங்கலாமோ?