சில வாரங்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் சடங்குகள் இல்லாத இந்து திருமணங்களை அங்கீகரிக்க முடியாது என்று விசாரணைக்கு வந்த வழக்கொன்றில் இரு நீதிபதிகள் – நீதிபதி பி.வி.நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் மசி – ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.
இத்தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்பதால் அதை ஏற்கவேண்டும் என்ற கட்டாயம் உள்ளது என்றாலும், வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மனித உரிமைகளுக்கும், மனித நேயத்திற்கும், பெண்ணுரிமைக்கும், பகுத்தறிவிற்கும், உலக மாற்றத்திற்கும் உகந்ததாக இல்லாத காரணத்தாலும், பல்வேறு எழு வினாக்களை இத்தீர்ப்பு உருவாக்குவதாலும், இத்தீர்ப்பு மறு சீராய்விற்கும் உரியது என்பது உண்மை. உறுதி, கட்டாயம்.
இந்த வழக்கு திருமண சாஸ்திர சடங்கு சார்ந்து உள்ளதால், மதம், சாஸ்திரம், சடங்கு போன்றவற்றால் மனித உரிமைகள் பாதிக்கப்படாமல், பறிபோகாமல் காப்பாற்றப்பட சில நியாயமான கருத்துகளை மாண்பமை நீதிபதிகளின் கவனத்திற்கும், மறுபரிசீலனைக்கும் மறுசீராய்வு மனு செய்வோர் கொண்டு செல்ல வேண்டியது கட்டாயக் கடமையாகும். அப்படி மறு சீராய்வு மனு செய்வதற்கு கீழ்க்கண்ட கருத்துகளைத் தொகுத்துக் கூறுவது, மனிநேய இயக்கத்தவரின் கட்டாயக் கடமையாகும் என்பதால் அவற்றை இங்கே சமுதாய நலன் கருதி எடுத்துக் கூறியுள்ளோம். மறுசீராய்வு மனு செய்வோருக்கு இக்கருத்துகள் மிகவும் பயன்படும் என்பதோடு பொதுமக்களுக்கும் இவை விழிப்புணர்வை உண்டாக்கும்.
இந்துக்கள் யார்?
இதற்குத் தெளிவான வரையறை உண்டா? இல்லை என்பதுதானே கசப்பான உண்மை! முரண்பட்ட கொள்கைகளைக் கொண்ட சைவர்கள், வைணர்வர்கள் இந்துக்கள் என்று ஒரு தொகுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். இவர்களுள் ஒருவர் சடங்காச்சாரங்களை இன்னொருவர் ஏற்க மாட்டார்கள். ஒருவர் சாஸ்திரத்தை இன்னொருவர் ஏற்க மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், வைணவர்களில் வடகலை, தென்கலை என்ற சடங்காச்சார மோதல் தொடர்ந்து நீடித்துவருகிறது.
ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்று கூறுகின்றவர்கள், ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு என்று கூறுகின்ற எல்லாரையும் இந்து என்ற ஒரே தொகுப்பில் உள்ளடக்கி, அவர்களுக்கு ஒரே மாதிரியான சடங்குகளை எப்படிக் கட்டாயப்படுத்த முடியும்?
ஜாதிக்கு ஜாதி சடங்குகள் மாறுமே!
செட்டியாரின் திருமணச் சடங்கு வன்னியருக்குப் பொருந்தாது; யாதவர் திருமணச் சடங்கு பிள்ளைமாருக்குப் பொருந்தாது. அப்படியிருக்க, இந்துத் திருமணச் சடங்கு என்று எதை வரையறுப்பது?
தாலியில் எத்தனைத் தாலி!
ஒரு குறிப்பிட்ட ஜாதி மக்களின் தாலி ஒருவிதமாகவும் இன்னொரு ஜாதி மக்களின் தாலி இன்னொரு விதமாகவும், மற்றொரு ஜாதியினரின் தாலி இன்னொரு விதமாகவும் இருக்கிறது.
தாலி கட்டும் முறையில் எத்தனையோ வேறுபாடுகள் உண்டு. ஒவ்வொரு ஜாதிக்கும் திருமணச் சடங்கு ஒவ்வொரு விதமாக இருக்கிறது. இதில் எந்தச் சடங்கை இந்து மதச் சடங்கு என்று நீதிமன்றம் வரையறுத்துக் கூற முடியுமா?
ஆரியர் வகுத்த திருமண முறைகள்
எண்வகைத் திருமணங்கள்
1. பைசாச, 2. ராட்சச, 3. அசுர, 4. காந்தர்வ, 5. பிரம்ம, 6. தெய்வ, 7. பிரஜாபத்திய, 8. ஆர்ஷ.
இவற்றில் தர்மசாஸ்திரங்களால் ஒப்புக்கொள்ளப்படாத முறைத் திருமணங்கள் (Unapproved forms of Marriage) 1.பைசாச, 2. ராட்சச, 3. அசுர, 4. காந்தர்வ ஆகியவை.
சாஸ்திரங்களால் ஒப்புக் கொள்ளப்பட்பவை
1. பிரம்ம, 2. தெய்வ, 3. பிரஜாபத்திய, 4. ஆர்ஷ. (Ref. The Position of Women in Hindu civilization)
1. பைசாச: இது மிகவும் தொன்மையானதும் மிகவும் கண்டிக்கத் தக்க முறையுமாகும்.
மணமகள் இதில் பெரிதும் ஏமாற்றப்படுவாள்; தனது இச்சைக்கு இணங்கச் செய்ய பெண்ணுக்கு அதிகப் போதையூட்டியோ அல்லது மணமகன் தனது உடல் வலிமையினால் அவளைக் கவர்ந்து சென்று மணம் செய்துகொள்ளும் முறை.
மந்திர தந்திரங்களாலும், மனோவசிய முறைகளாலும் பெண்ணைக் கவர்ந்து சென்று திருமணம் செய்து கொள்ளும் முறையும் மத்திய காலத்தில் ஏற்பட்டது எனத் தெரிகிறது.
2. ராட்சச முறைத் திருமணம்: இதில் யுத்தத்தில் வென்றவர் பெறும் பரிசுப் பொருள்போல-போரில் வெற்றிபெற்றவர் பெறும் பரிசுப் பொருள்போல பெண்களைக் கவர்ந்து சென்று மணம் முடித்தல், மகாபாரதத்தில் பீஷ்மர் காசிராசனைத் தோற்கடித்து அவனது மகளை(‘அம்பா’)ச் சிறையெடுத்து அவளை தனது சகோதரன் விசித்திரவீரியனுக்குத் திருமணம் முடித்து வைக்கிறார்!
3. அசுர விவாகம்: மணமகளைப் பெறுவதற்கு மணமகன் ஒரு குறிப்பிட்ட விலையைத் தருவது; பிறகு பெற்றுக் கொள்ளுவது. அசீரியர்கள் என்ற சொல்லிலிருந்து அசுரர் வந்திருக்கக்கூடும் என்றும், அசீரியர்களிடையே இம்முறை அமலில் இருந்தது என்றும் தெரியவருகிறது.
4. காந்தர்வமுறை: இது காதல் திருமணமாகும். ஒருவருக்கொருவர் காதலித்துத் திருமணம் செய்துகொள்வதாகும்.
ஒப்புக்கொள்ளப்பட்ட இதர நான்கு முறைத் திருமணங்கள்:
1. ஆர்ஷ திருமணமுறை: மணமகளின் தந்தையார் மருமகனிடமிருந்து ஒரு பசுமாட்டையும் காளைமாட்டையும் தானமாகப் பெறுவார். யாகம் செய்வதற்கும் பசும்பாலைப் பெறுவதற்கும் இது உதவுவதற்காம்!
2. தெய்வ திருமணமுறை: புரோகிதருக்கு மணமகளைத் தருவதன் மூலம் நடத்தப்பெறுவது தெய்வ முறைத் திருமணம்; தேவர்களுக்கு மணமகளை அளிப்பது என்ற தத்துவத்தில் புரோகிதருக்கு அளித்து நடத்துவது இம்முறைத் திருமணமாகும்.
3. பிரம்ம திருமணமுறை: நகைகளாலும் அணிகலன்களாலும் அலங்காரம் செய்யப்பட்ட மணமகளை முறைப்படி தனியே அழைத்து ஒப்படைப்பது இம்முறை.
4. பிரஜாபத்திய முறை: பெண்களை மேற்சொன்னவாறு சடங்குகளுடன் ஒப்படைக்கும் வகையில் மதச்சடங்குகளை நடத்தும் போது இவ்விருவரும் இணை பிரியாத ஒருவர் என்று அறிவிக்கப்படுவது இம்முறையாகும்.
இந்த எட்டுவகை மணமுறைகள், இந்துத் திருமண சடங்குகளை ஏற்கின்றனவா? இந்துத் திருமணத்திற்கென்று வரையறுக்கப்பட்ட சடங்குமுறைகள் உண்டா? அதை நீதிமன்றம் உறுதிப்படுத்த இயலுமா?
ஏழு அடி எடுத்து வைத்தல்
அக்னி முன்பு 7 அடிகள் நடந்து வந்து செய்யப்படும் திருமணம்தான் செல்லும் என்பது எந்தச் சட்ட அடிப்படையில்? இந்துக்கள் என்று ஒருங்கிணைத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து ஜாதியினருக்கும் இந்தச் சடங்கு பொருந்துமா?
இந்துக்கள் எல்லோருக்கும் திருமண உரிமை உண்டா?
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவார்ந்த சாஸ்திர சட்ட கண்ணோட்டத்தோடுகூடிய ஓர் ஆழமான வினாவை கீழ்க்கண்டவாறு எழுப்பியுள்ளார்கள்.
“மனுஸ்மிருதிப்படி..மனுஸ்மிருதிப்படி திருமண முறை உயர்ஜாதியினருக்கு மட்டுமே உள்ள உரிமை. அனைவருக்கும் சம உரிமை என்பதே அதில் இல்லாதபோது- ‘சமஉரிமை’ இரண்டு பேருக்கும் மணமகன்- மணமகளுக்கு சப்தபதி மூலம் ஏற்படும் என்பதே- வேதப்படி இல்லாத ஒன்று; கருத்து முரண் ஆகும்!
ஆசிரியர் அவர்களின் கேள்விக்கு என்ன பதில்?
உயர்ஜாதி இந்துக்களுக்கு மட்டுமே திருமண உரிமை தந்து, அதற்குச் சில சடங்குகளையும் கற்பித்து, அச்சடங்குகளைச் செய்தால்தான் திருமணம் செல்லும் என்பது எப்படி ஏற்புடையதாகும்? இந்து சாஸ்திரப்படி திருமணமே செய்ய உரிமையற்றவர்களே 80% மக்கள். அப்படிப்பட்ட இந்துக்களுக்கு திருமண சடங்குகள் எப்படிப் பொருந்தும்?
திருமண மந்திரம் சட்டப்படிச் சரியா?
“ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர :
த்ருதியோ அக்னிஷ்டே பதி: துரீயஸ்தே மநுஷ்யஜா :”
(ரிக் x 85.40 – 41)
இந்த மந்திரத்தின் பொருள் :
மணமகனின் அருகிலுள்ள இந்த மணப்பெண்ணை முதலில் சோமனும், பிறகு கந்தர்வனும், அதன்பின் உத்திரனும் வைத்திருந்தனர். நான்காவதாக மனித ஜாதியில் பிறந்த இந்த மணமகனை அடைகிறாள் என்பதே இந்த மந்திரத்தின் பொருள்.
ஒருவன் மணக்கப் போகும் பெண்ணை இதற்கு முன் சிலர் வைத்திருந்தனர் என்று கூறும் மந்திரம் கூறித் திருமணம் செய்தால்தான் திருமணம் செல்லுமா? இதை உச்சநீதிமன்றம் ஏற்கிறதா? சடங்குகள்தான் திருமணத்தைத் தீர்மானிக்கின்றன என்று தீர்ப்பு எழுதும் முன் இவற்றைச்
சீர்தூக்கிப் பார்க்க வேண்டுமல்லவா?
ஒருவனுக்கு மனைவியாக வரப்போகிறவளைப் பார்த்து “இவளை ஏற்கனவே சிலர் வைத்திருந்தனர். அவளைத்தான் இந்த மணமகன் இப்போது அடைகிறான்” என்று கூறும் மந்திரம் ஓதித்தான் மணம் நடத்தப்பட வேண்டும். இல்லையென்றால் திருமணம் செல்லாது என்கிறார்கள். இதைவிட அநியாயம், அக்கிரமம் சட்ட விரோதச் செயல் வேறு இருக்க முடியுமா?
ரிக்வேத காலத்தில் திருமண முறை உண்டா?
மதம் என்று ஒன்று உருவாவதற்குமுன், கடவுள் என்ற கருத்துருவாக்கம் வருவதற்கு முன் இயற்கைச் சக்திகளை வணங்கிய காலத்தில் சொல்லப்பட்டது ரிக்வேதம்.
அந்த ரிக்வேதத்தில் ‘இந்து’ என்ற சொல்லுக்கு இடமே இல்லையே! ரிக்வேதத்தில் வரும் “புருஷசூக்தம்” என்பது இடைச்செருகல் என்று ஆய்வறிஞர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடவுள்கள் உருவாக்கப்படாத காலத்தில் நான்கு வருணம் பற்றிய கருத்து எப்படி வரமுடியும்? பிரம்மா பற்றிய கருத்துருவாக்கமே இல்லாத ரிக்வேத காலத்தில் நான்கு வருணம் எப்படி வரும்? எனவே “புருஷசூக்தம்” ஓர் இடைச்செருகல்.
எதிரிகள் நாசமாகப் போக வேண்டும்; நாங்கள் மட்டுமே வாழவேண்டும் என்ற கருத்துகளின் தொகுப்பான வேதத்தில் திருமணத்திற்குரிய சடங்குகள் எப்படி இடம் பெற்றிருக்க முடியும்? திருமண முறையே நடைமுறையில் வராத காலத்தில் எழுதப்பட்டதல்லவா ரிக்வேதம்?
தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் மிகுந்த சமூக அக்கறையுடனும், அதே நேரத்தில் நீதித்துறையின் மாண்புகளுக்கு மதிப்பளித்தும் கீழ்க்கண்ட கேள்விகளை மிக நுட்பமாக எழுப்பியுள்ளார்கள்.
“ஹிந்து திருமணச் சட்டப்படி திருமணம் என்பது புனிதமானது. புதிய குடும்பத்திற்கான அடித்தளம்; எனவே, இத்தகைய சடங்கு
கள் இல்லாது நடத்தப்படும் திருமணத்தை ஹிந்து திருமண
மாக (ஹிந்துத் திருமணத்தின் 7ஆவது பிரிவின்படி) கருதப்பட முடியாது.
திருமண சடங்குகள் இல்லாமல் வெறும் திருமண சான்றிதழ் பெற்றாலும், அது திருமண அந்தஸ்தை உறுதி செய்யாது.
திருமண சர்ச்சைகளின்போது, அச்சான்றிதழ் ஓர் ஆதாரமாகக் கருதப்படலாம்; ஆனால் சடங்கு இல்லாமல் நடத்தப்பட்ட திருமணத்திற்கு அச்சான்றிதழ் சட்ட அந்தஸ்து அளிக்காது.
ஹிந்து திருமண சட்டப்படி அதைத் திருமணமாகக் கருத முடியாது.“
-மேற்கண்ட தீர்ப்பில் பழைய ஹிந்து மத திருமணங்கள் சம்பந்தப்பட்ட ‘ரிக்’ வேதத்தை மாண்புமிகு நீதிபதிகள் அமர்வு சுட்டிக்காட்டுகிறதே, அதன்படியே சில நியாயமான கேள்விகளை முன்வைத்துத் தெளிவு பெறுவது நம் கடமையாகிறது!
1. ‘ரிக்’ வேதத்தில் எங்காவது ‘ஹிந்து’ என்ற சொல் உண்டா?
2. ரிக் வேதத்தின் புருஷ சூக்தத்தில் ஜாதி முறைப்படி உள்ளதில் பெண்களை ‘கீழுக்கும் கீழான’ நமோ சூத்திரர்கள்’ என்றுதானே
வகைப்படுத்தியுள்ளனர்?
ஆணும் பெண்ணும் சமம் என்ற கருத்துக்கு இடமில்லையே!” – என்று ஆசிரியர் வினாக்களை எழுப்பியுள்ளார்.
திருமணம் புனித பந்தம் என்றால்
மணவிலக்குக்குச் சட்டம்
அனுமதிப்பது ஏன்?
ஒரு பெண்ணை ஓர் ஆணுக்கு திருமணம் முடிந்தபின் அ;நத பந்தம் நிலையானது என்பது அரசியல் சட்டங்களுக்கே ஏற்புடையதல்லவே!
திருமண பந்தம் பிரிக்க முடியாத கட்டுறுதியானது. அது நிலையானது என்றால், கணவன்- மனைவி ஒத்துவாழ முடியாத ஓரிரு ஆண்டுகளிலே
பிரிந்து செல்ல சட்டம் அனுமதிப்பது எப்படி?
மணமுறிவு சட்டமே திருமண பந்தம் என்ற சாஸ்திரச் சடங்குக் கட்டுமானத் தடையைத் தகர்க்கும் சட்ட ஏற்பாடுதானே?
ஏழு அடி எடுத்து வைத்து திருமணம் செய்தால் அத்திருமணம் ஆயுள் முழுவதும் நிலையானது என்றால், மணமுறிவு, மணவிலக்கு, மறுமணம் என்ற சட்ட ஏற்பாடுகள் கேலிக்குரியதாக ஆகிவிடாதா? என்று தமிழர் தலைவர் எழுப்பும் கேள்வியை மனித உரிமைப் போராளிகள், காப்பாளிகள் ஆழமாகக் கருத்தில் கொண்டு, உரிய சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது கட்டாயக் கடமையாகும்.
பதிவுத் திருமணங்கள்
பொருளற்றதாக ஆகிவிடாதா?
திருமணம் என்பது சட்டப்படியான ஓர் ஏற்பாடு. சடங்குகள் என்பது கடவுள், மதம் சார்ந்த நம்பிக்கைகளில் செய்யப்பட வேண்டியது. கோயிலில் நடைபெறும் பூசைகள், ஆராதனைகள், உற்சவங்கள், அபிஷேகங்கள் என்பவை சடங்குகள் சார்ந்தவை. அவற்றிற்கு சட்டப்படியான நடைமுறைகள் கிடையாது. அவை வழக்கத்தின் அடிப்படையில் வருபவை.
ஆனால் திருமணம் என்பது ஒரு சட்ட ஏற்பாடு அதில் மணமக்களுக்கு குறிப்பிட்ட குறைந்த பட்ச வயது, விருப்பம், ஏற்பு, பிரிந்து செல்லும் உரிமை என்று பலவற்றைச் சட்டப்படியாக உள்ளடக்கியது. சட்டப்படி அது பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்படக்கூடியது. ஆனால், சடங்குகளுக்கு அப்படிப்பட்ட வரையறை ஏதும் இல்லை. அது விருப்பம் சார்ந்தது. விருப்பம் சார்ந்த சடங்கை கட்டாயம் என்று கூறுவது எப்படி
ஏற்புடையதாகும்?
சேர்ந்து வாழும் (living together) உரிமை உள்ளபோது திருமணச் சடங்குதான் திருமணத்தை உறுதி செய்யும் சடங்கு என்பதும், சடங்கு இல்லா திருமணம் செல்லத்தக்கதல்ல என்பதும் முற்றிலும் முரணானது அல்லவா?
சடங்குகள்தான் திருமணத்தை செல்லும்படிச் செய்யும் என்றால், இன்றைக்கு சட்டப்படியான பல்வேறு ஏற்பாடுகள் அர்த்தமற்றதாக
ஆகிவிடாதா?
கன்னிகாதானம் என்ற சடங்கு சட்டத்திற்கு ஏற்புடையதா?
தானம் என்பது ஒருவருக்கு உரிமையான பொருளை மற்றவர்க்குக் கொடையாக அளிப்பது. கன்னிகாதானம் என்பது பெண்ணைப் பெற்றவன் அப்பெண்ணை ஒரு பொருளாக எண்ணி ஓர் ஆடவனுக்குத் தானமாக அளிப்பது.
இந்துத் திருமணத்தைக் கன்னிகாதனம் என்றே அழைக்கின்றனர். ஆக, உயிருள்ள ஒரு பெண்ணை உயிரற்ற பொருளாகக் கருதி, அவள் விருப்பம் இல்லாமலே பெண்ணின் தந்தை ஒருவனுக்குத் தானம் கொடுக்கும் சடங்கு சரியென்று உச்சநீதிமன்றம் கருதுகிறதா?
கன்னிகாதானம் என்ற திருமணச் சடங்கை உச்சநீதிமன்றம் ஏற்கிறதா?
கன்னிகாதானம் ஏற்புடையது அல்ல, அது சட்ட விரோதம், மனித உரிமைக்கு எதிரானது என்றால், சப்தபதியும், தாலி கட்டுதலும், அக்னி சாட்சியாக, கணவன்- மனைவி பந்தத்தை விலக்க முடியாத, பிரிக்க முடியாத உறவு என்பதும் சட்ட விரோதங்கள்தானே! அப்படியென்றால் இச்சடங்குகளைச் செய்யாத திருமணம் செல்லுபடியாகாது என்பதும் ஏற்புடையது அல்ல என்று தானே பொருள்படும்?
பிரிக்க முடியாத பந்தம் என்பதுதான் எரிக்கச் செய்யும் சதியானது!
திருமணம் என்பது ஓர் ஒப்பந்தம், உடன்படிக்கை; ஆணும் பெண்ணும் சேர்ந்து விரும்பும் வரை வாழ்வதற்கான ஓர் ஏற்பாடு என்கிறது சட்டம். ஆனால் சாஸ்திரமும், சடங்கும் திருமணப் பந்தத்தைப் பிரிக்க முடியாதது என்கிறது. அத்தத்துவத்தின் உச்சம்தான் கணவன் இறந்ததும் அவனை எரிக்கும் நெருப்பில் உயிருடன் மனைவியையும் சேர்த்தே எரிக்கும் சதிச்செயலுக்கு (உடன்கட்டை ஏற்றுதலுக்கு) வழிவகுத்தது.
எனவே, எந்த பந்தமும் பிரிக்க முடியாத, வலுக்கட்டாயமாய்ப் பிணைக்கப்படுவதல்ல. அப்படிப் பிணைக்கப்பட்டால் அது மனித விருப்பத்திற்கும் உரிமைக்கும் எதிரானது. தாய், தந்தை உடன்பிறந்தோர் பந்தம் கூட சேர்ந்து வாழும் விருப்பத்தின் அடிப்படையில்தான்.
கொடுமைப்படுத்தும் கணவனோடு ஒரு பெண் விலகாது சேர்ந்தே வாழ வேண்டும் என்பது எப்படிச் சரியாகும்- அப்படி சாஸ்திரம் சொல்லும் என்றால், சடங்குகள் அதற்குத் துணை நிற்கும் என்றால் அவை ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதானே சட்டமும், நீதியுமாய் இருக்க முடியும்? மாறாக சடங்குகள் மனித உரிமையைக் காவுகொள்ள அனுமதிப்பது அநீதியின்பாற்படும் என்பது நீதியின் கண்ணோட்டத்தில் எளிதில் விளங்குமே!
எனவே, திருமணம் சட்டப் பார்வையின் பாற்பட்டதேயன்றி, சடங்குகளின் கட்டுக்குள் கட்டுப்பட்டதன்று என்பதை மறுசீராய்வு மனுவில் உணர்த்த வேண்டியது கட்டாயக் கடமையாகும். அதை நிலை நாட்ட வேண்டியதும் நீதிமன்றத்தின் மாண்பாகும்.