திரிபுவாதிகளுக்கு பதிலடி

ஆகஸ்ட் 01-15

– பரணீதரன் கலியபெருமாள்

பார்ப்பனியத்தின் அடிமைத்தனத்தில் இருந்து தமிழன் விடுதலை பெற,  ஆண் ஆதிக்கத்திடம் இருந்து பெண் விடுதலை பெற,  மூடநம்பிக்கையில் இருந்து மனிதன் விடுதலை பெற, பல மொழி ஆதிக்கத்தில் இருந்து தமிழ் மொழி விடுதலை பெற… என்று அனைத்து விடுதலைக்கும் அயராது பணியாற்றியது… இன்றும் பணியாற்றி கொண்டிருப்பது தந்தை பெரியார் ஆரம்பித்த விடுதலை நாளிதழ்….

தமிழர்களின் மூச்சுக் காற்றான விடுதலை நிறுத்தப்படாததற்குக் காரணம் நமது மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களே! என்று அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களே அறிக்கை வாயிலாகத் தெரிவித்தார் (விடுதலை, 10.8.1962). விடுதலை நாளிதழுக்கு பல சோதனைகள் வந்த பொழுதும் அதனை கடந்து தமிழனின் தன்மானம் காத்து சாதனை படைத்து கொண்டிருப்பது ஆசிரியர் வீரமணியின் விடுதலை நாளிதழ்.

எந்த ஒரு லாப நோக்கமும் இல்லாமல் மக்கள் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு நடத்தப்படும் ஒரு பகுத்தறிவு நாளிதழ் 77 ஆண்டுகள் வீறுநடை போடுவது சாதாரண விசயமா? முதல் முதலில் இணையத்தில் வெளிவந்த தினசரி நாளிதழ் விடுதலை தான். ஒரு இணையத்தை நிர்வகிப்பது என்பது எவ்வளவு கடினம் என்பது எங்களை போன்று கணினி உலகில் இருப்பவர்களுக்கு நன்கு தெரியும். அதற்கு ஆகும் செலவு என்ன என்பதும் தெரியும். அப்படி இருக்கும் போது, எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் கட்டணமும் இல்லாமல் இலவசமாக விடுதலையை மின்னிதழில் வாசிக்கலாம் என்ற நிலை உள்ளது. இது அனைத்தும் ஆசிரியர் அவர்களின் அயராத உழைப்பினால் நமக்கு கிடைத்தது.

பார்ப்பன ஆதிக்கம் நிறைந்த பத்திரிகை உலகில் விடுதலையும் கம்பீரமாக அதன் பகுத்தறிவு பணியை அருமையாக செய்து வருகிறது… எதிரிகளும், துரோகிகளும் திராவிடர் இயக்கம் பற்றி விமர்சனம் செய்யும் போதும், தந்தை பெரியாரை திரிபு வாதம் செய்யும்போதும்…. அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து அவர்களின் செவிளில் அறைவது விடுதலையும் அதன் ஆசிரியரும் தான்…. இன்றைய சூழலில் குழந்தைகளை சீரழிக்க ஆயிரம் வார இதழ், மாத இதழ்கள் உண்டு…நிலைமை இப்படி இருக்க, பிஞ்சுகள் சிந்திக்க எதாவது ஒரு இதழ் கிடைக்காதா என்று எங்களை போன்றவர்கள் ஏங்கிய நேரத்தில் தான்…

ஆசிரியரின் முயற்சியால் ‘பெரியார் பிஞ்சு’ மாத இதழ் உருவாகியது…..இந்த இதழின் மூலம் பிஞ்சுகள், பெரியார் பற்றியும், உலக பகுத்தறிவாளர்கள் பற்றியும் அறிந்து கொள்கிறார்கள். இப்படி பெரியார் விட்டுச் சென்ற பணியினை அவரது சீடர் ஆசிரியர் வீரமணி அவர்கள் பல வழிகளிலும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப மக்களிடம் கொண்டு செல்கிறார்.

இருட்டில் இருக்கும் திராவிடர் நலம் காக்க பகுத்தறிவு மின்சாரம் பாய்ச்சுவது ‘விடுதலை’ நாளிதழ்.. அதன் பலம் ஆசிரியர் ‘வீரமணி’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *