காங்கிரஸ் நேரடியாகத் தேர்தலில் பங்கேற்காத காலம். சமூகச் சீர்திருத்தம், ஜாதி – தீண்டாமை ஒழிப்பு, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் போன்ற கொள்கைகளில் காங்கிரஸ் உறுதியாக இருக்கும் என நினைத்து, 1919ஆம் ஆண்டில் ஈரோட்டில் தான் வகித்த நகர மன்றத் தலைவர் உட்பட பல பதவிகளையும் உதறித் தள்ளிவிட்டு காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டார் பெரியார்.
காங்கிரஸ் – சுயமரியாதை இயக்கம் – நீதிக்கட்சி – திராவிடர் கழகம் என எந்த நிலையிலும் அவரது முதன்மையான கொள்கை – குறிக்கோள் ஜாதி பேதமற்ற மானுட சமுதாயத்தைப் படைப்பதாகவே இருந்தது.
காங்கிரசில் இணைந்த தொடக்க காலத்திலேயே திருச்செங்கோட்டில் பேசிய பெரியார்,
“மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது! கண்ணில் படக்கூடாது! கோயிலுக்குள் போகக்கூடாது!
குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது! என்கின்றவை போன்ற கொள்கைத் தாண்டவம் ஆடும் ஒரு நாட்டை பூகம்பத்தால் அழிக்காமலோ எரிமலையின் நெருப்புக் குழம்பால் மூழ்கச் செய்யாமலோ பூமிப் பிளவில் அழியச் செய்யாமலோ சண்டமாருதத்தால் துகளாக்காமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகும் கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான் என்றும், சர்வ தயாபரன் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் இம்மாதிரி கொடுமைப்படுத்தி, தாழ்த்தப்பட்ட ஒரு மாபெரும் மக்கள் சமூகம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையோடும், சாந்தத்தோடும், அஹிம்சா தர்மத்தோடும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்கள்? இம்மாதிரியான மக்கள் இன்னும் ஒரு நாட்டில் இருந்து கொண்டு உயிர் வாழ்வதை விட, அவர்கள் இம்முயற்சியில் உயிர் துறப்பதை உண்மையிலேயே தப்பு என்று யாராவது நினைக்கின்றீர்களா?” என்று கேட்டார்.
1925ஆம் ஆண்டு காரைக்குடியில் காங்கிரஸ் நடத்திய இராமநாதபுரம் மாவட்ட அரசியல் மாநாட்டில் பேசிய பெரியார், “நமது நாட்டில் தீண்டாமை, பார்க்காமை, பேசாமை, கிட்ட வராமை ஆகிய இவை ஒருவரையாவது விட்டவை அல்ல. ஒருவர் தனக்குக் கீழ் இருப்பவரை தீண்டாதவர், பார்க்காதவர் என்று சொல்வது, அதே நபர் தனக்கு மேல் உள்ளவருக்கு, தான் தீண்டத்தகாதவராகவும், பார்க்கக்கூடாதவர் ஆகவும் இருப்பது மாத்திரமல்லாமல் இவர்கள் இத்தனை பேரும் சேர்ந்து நம்மை ஆளுகிற ஜாதியாய் இருக்கிற அய்ரோப்பியருக்குத் தீண்டத்தகாதவராகவும் கிட்ட வரக்கூடாதவர் ஆகவும் இருந்து வருவதையும் நாம் காண்கிறோம்.
இந்த முறையில் தீண்டாமை என்பதை ஒழிப்பது என்று சொல்வது பஞ்சமர்களை மாத்திரம் முன்னேற்ற வேண்டும் என்பதல்லாமல் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இழிவையும் கொடுமையையும் நீக்க வேண்டும் என்பதுதான் தீண்டாமை விலக்கின் தத்துவமாகும்!” என்றார். அதனால்தான் அவர் காங்கிரசுக்குள்ளேயே கலகக்காரராக காட்சியளித்தார்.
1922ஆம் ஆண்டு தொடங்கி 1925 வரை திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம்
என வரிசையாக நடைபெற்ற 28,29,30 மற்றும் 31ஆவது தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாடுகளில் வகுப்புவாரி உரிமை கோரும் தீர்மானத்தை நிறை
வேற்ற இடைவிடாது உரிமைக் குரல் எழுப்பினார்.
1925ஆம் ஆண்டு நவம்பர் 21,22 தேதிகளில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநாட்டிற்குத் தலைமை வகித்த திரு.வி.க, பெரியார் கொண்டுவரும் வகுப்புரிமைத் தீர்மானத்தை நிறைவேற்றித் தருவதாக
முதல்நாள் ஒப்புதல் அளித்து விட்டு மறுநாள் பார்ப்பனர்களின் மிரட்டலுக்குப் பயந்து தீர்மானம் நிறைவேற்ற மறுத்ததைக் கண்டு வெகுண்டார்.
காங்கிரசின் நிதியில் வ.வே.சு அய்யரால் சேரன்மாதேவியில் நடத்தப்பட்டு வந்த குருகுலத்தில் மாணவர்களிடையே பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார்
பேதம் தலைவிரித்தாடியதை அறிந்து கடும் கோபம் கொண்டிருந்த பெரியாருக்கு இந்தச் செயல்
பெரிதும் ஆத்திரத்தை மூட்டியது.
“காங்கிரசால் பார்ப்பனரல்லாத மக்களுக்கு துளியளவும் நன்மை கிடைக்காது. இனி காங்கிரசை ஒழிப்பதே எனது வேலை!” என்று சொல்லி காங்கிரசை விட்டே வெளியேறினார் பெரியார். காங்கிரசை விட்டு பெரியார் வெளியேறிய அந்த நாளே சுயமரியாதை இயக்கம் தோன்றிய நாள்!
சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த பெரியார், “மனித சமூகத்தில் உள்ள குருட்டுப்பழக்க வழக்கங்களையும் மூடநம்பிக்கைகளையும் விளக்கமறியா சடங்குகளையும் அவற்றிற்காகச் செய்யப்படும் சடங்குகளையும் ஒழித்தல், ஜாதி – மதம் – வகுப்பு ஆகியவற்றின் பெயரால் உள்ள பேதங்களையும், சமூகத் துறையிலும் பொருளாதாரத் துறையிலும் இருந்து வரும் உயர்வு தாழ்வுகளையும் அகற்றி, மக்கள் யாவரும் ஒரே சமூகமாகவும் சகோதரத்துவமாகவும் சமமாக வாழும்படி செய்தல், பகுத்தறிவுக்கும் சுயமரியாதைக்கும் கட்டுப்பட்டு நடக்கும்படி மக்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சியை உண்டாக்குதல்!” இதுவே சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை – குறிக்கோள் என்று குறிப்பிட்டார்.
1925ஆம் ஆண்டு காங்கிரசில் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான வகுப்புரிமைத் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாமல் காங்கிரசை விட்டே வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார் பெரியார்!
இடஒதுக்கீடு தொடர்பான ஒரு தீர்மானத்தைக் கூட நிறைவேற்ற முடியாமல் அன்று காங்கிரஸ் பார்ப்பன பனியா கும்பலின் ஆதிக்கப் பிடியில் சிக்குண்டு கிடந்தது. இதோ இப்போது சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா தொடங்கி இருக்கிறது.
அதே காங்கிரசின் தேர்தல் அறிக்கை இன்று இட ஒதுக்கீட்டிற்கான உச்சவரம்பை நீக்க சட்டம் கொண்டு வருவோம்! என்று சொல்லியிருக்கிறது என்றால் எவ்வளவு பெரிய மாற்றம்? இந்த மாற்றம் நிகழ்வதற்கான சுயமரியாதை இயக்கக் களங்கள் எத்தனை? எத்தனை? கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவைச் சென்னையிலே தொடங்கி வைத்திருக்கிறார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். வைக்கம் போராட்ட நூற்றாண்டைத் தொடர்ந்து சுயமரியாதை இயக்க நூற்றாண்டு! நம் வாழ்நாளில் கிடைத்தற்கரிய வாய்ப்புகள்! தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கும் சுயமரியாதைக் காற்று சூறாவளியாய்ச் சுழன்றடிக்கச் செய்வோம்!
வெல்க திராவிடம்!