பெரியார் ஒப்படைத்த பெரும்பணி

ஆகஸ்ட் 01-15

– நக்கீரன் கோபால்

பெரியார் இல்லையென்றால் இந்த இனத்திற்கு விடுதலை என்பது இல்லை. அவர் நடத்திய விடுதலை, குடிஅரசு போன்ற பத்திரிகைகள் இல்லையென்றால், எங்கள் நக்கீரன் போன்ற மக்களின் குரலாய் ஒலிக்கும் பத்திரிகை உருவாகியிருக்க முடியுமா என்பது கேள்விக்குறியதே. ஆதிக்கசக்திகளை எதிர்த்து நின்று பெரியார் தன்னுடைய பத்திரிகைகளை நடத்தியதால் ஏற்பட்ட தாக்கமும் விளைவுமே இன்று எங்கள் நக்கீரன் இலட்சக்கணக்கான வாசகர்களுடன் எளிய மக்களின் குரலாய் ஒலிக்கிறது. ஆதிக்கத்தை எதிர்த்து உறுதியாக நிற்கிறது. சவால்களையும் சங்கடங்களையும் துணிவுடன் எதிர்கொள்கிறது. பெரியார் அமைத்துத் தந்தை பாதையில் பயணத்தைத் தொடர்கிறது.

அந்தப் பாதையை இன்றைய காலத்திற்கேற்ப நவீனப்படுத்தியிருப்பவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். திராவிடர் இயக்கத்தில், ஆசிரியர் என்ற சொல் அவருக்கே உரியதாய் அமைந்துவிட்டது. அதற்கு அவர் முற்றிலும் பொருத்தமானவர், அந்தப் பெயருக்கு பெருமை சேர்த்தவர் என்பதால்தான், விடுதலை நாளிதழின் ஆசிரியராக 50 ஆண்டுகள் நிறைவுசெய்து, பொன்விழா ஆசிரியராக அனைவரின் வாழ்த்துக்களையும் பெறுகிறார்.

விடுதலை நாளேட்டின் தேவை என்ன என்பது பற்றி பெரியார் அவர்கள் குறிப்பிடும்போது, ஒழுக்கக்கேடானதும் மூடநம்பிக்கைகளை வளர்க்கக்கூடியதும், தமிழ் மக்களுக்குச் சமுதாயத்திலும் _ அரசியலிலும் உத்தியோகத் துறையிலும் கேடு அளிக்கக்கூடியதுமான காரியங்களை வெளியாக்கி, அக்கேடுகளைப் போக்குவதற்காகப் பாடுபடும் பத்திரிகை விடுதலை. அது இல்லாதிருந்தால் மேற்கண்ட துறைகளில் ஏற்படும் கேடுகளை ஏன் என்று கேட்க நாதியே இல்லாமல் போயிருக்கும் என்று சொல்லியிருக்கிறார்.

எத்தகைய உயர்ந்த சமுதாய நோக்கத்துடன் இந்த நாளேட்டை பெரியார் அவர்கள் வளர்த்தாரோ, அந்த நோக்கத்தின் அடிப்படையிலான பயணத்தைப் பல நெருக்கடிகளுக்கு நடுவிலும் இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பவர் ஆசிரியர் அவர்கள். ஒரு பத்திரிகையின் உரிமையாளர் என்ற முறையில் அதனை நடத்துவதில் எத்தனை இடர்பாடுகள் இருக்கும் என்பதை உணர்ந்தவன் என்ற முறையில் ஆசிரியர் அவர்களின் அரும்பணியை நினைத்துப் பார்க்கிறேன்.

இது இலட்சக்கணக்கில் விற்கின்ற பத்திரிகை அல்ல. இலட்சியங்களோடு நடக்கின்ற பத்திரிகை என்று விடுதலை பற்றி ஆசிரியர் பலமுறை சொல்லியிருக்கிறார். அந்த இலட்சியத்தின் அடிப்படையில் அவருடைய ஆசிரியர் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. விடுதலை நாளேட்டில் பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கத்தில், இனி விடுதலைக்கு உண்மையான பிரசுரகர்த்தாவாகவும், ஆசிரியராகவும் வீரமணி அவர்கள்தான் இருந்து வருவார். விடுதலையின் 25வது ஆண்டு துவக்கத்தில் இலட்ச ரூபாய்களை விடுதலை நடப்புக்காகச் செலவிட்டு, நஷ்டமடைந்த நிலையில், இதனை ஏற்க முன்வந்த வீரமணி அவர்களது துணிவையும், தியாகத்தையும் சுயநலமற்ற தன்மையையும் கருதி, விடுதலை வீரமணி அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

எப்படிப்பட்ட சூழலில், விடுதலையின் ஆசிரியராக வீரமணி அவர்கள் பொறுப்பேற்றுள்ளார் என்பதைப் பெரியாரே விளக்கிவிட்டார். மேலும் அவரே, உண்மையைச் சொல்கிறேன். தோழர் வீரமணி இந்த முழுநேரத் தொண்டிற்கு இசையாதிருந்தால் தினசரி விடுதலையை நிறுத்தி வாரப்பத்திரிகையாக திருச்சியில் அல்லது ஈரோட்டில் நடத்த முடிவு செய்திருந்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். பெரியாருக்கு அத்தகைய நெருக்கடியான நிலையை ஏற்படுத்தாமல் ஆசிரியர் அவர்கள் விடுதலை நாளேட்டை சிறப்பாக நடத்தத் தொடங்கி இன்றுவரை அதனை மிக அருமையான முறையிலே நடத்திவருவதை நாம் அனைவரும் காண்கிறோம்.

விடுதலையின் ஆசிரியராக வீரமணி அவர்கள் பொறுப்பேற்ற நாளிலிருந்தே அதனுடைய வடிவமைப்பு, எழுத்துவடிவம், செய்திகள் ஆகியவற்றைத் தொடர்ந்து மேம்படுத்தி வந்துள்ளார். திராவிடர் கழகத் தொண்டர்கள் பலர் தங்களுடைய வருமானத்தில் முதல் வேலையாக, விடுதலைக்கு சந்தா செலுத்தியிருக்கிறார்கள் என்பதை மூத்த பத்திரிகையாளர் அய்யா சின்னக்குத்தூசி அவர்கள் பலமுறை சொல்லியிருக்கிறார்.

அய்யா சின்னக்குத்தூசி அவர்களின் நண்பரான திருவாருர் லெனின் கோவிந்தராசன் அவர்களும் இதுபற்றி சொல்லியிருக்கிறார். திருவாரூரில் ஒரு ஜெனரல் ஸ்டோர்ஸில் வேலை பார்த்துவந்த ஹபீப் முகமது என்ற இஸ்லாமியர் தந்தை பெரியார் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட கறுப்புச் சட்டைக்காரர். திருமணமே செய்துகொள்ளாதவர். வயது முதிர்ந்த நிலையில் தனக்குக் கிடைத்த சொற்ப வருமானத்தில் ஒருவேளை உணவைத்தான் சரியாக சாப்பிடுவார். ஆனால், அந்த நிலையிலும் நாள்தோறும் காசுகொடுத்து விடுதலை பத்திரிகை வாங்கிவிடுவார். அதில் வெளியாகியிருக்கும் ஆசிரியரின் அறிக்கை, தலையங்கம், இயக்கச் செய்திகளைப் படித்துவிட்டு, அதனடிப்படையில் மற்றவர்களுடன் விவாதிப்பாராம். இன்று அவர் உயிருடன் இல்லை என்றாலும் அவரைப்போன்ற எத்தனையோ எளிய ஹபீப் முகமதுகள்தான் விடுதலையின் பெருமைமிகு வாசகர்கள்.

அவர்களுக்கு செய்திகள் சரியான முறையில் போய்ச் சேரவேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டு விடுதலையை சிறப்பாக நடத்திவருகிறார் ஆசிரியர் வீரமணி அவர்கள். இந்திராகாந்தி அம்மையார் ஆட்சியில் எமர்ஜென்சி நடைமுறைக்கு வந்தபோது, கழுத்து நெறிக்கப்பட்ட பத்திரிகைகளில் விடுதலையும் முதன்மையானது. ஆசிரியர் அவர்கள் மிசா சிறைவாசியாக, சென்னை மத்திய சிறையில் நேரடித் தாக்குதலுக்குள்ளாகி பல துன்பங்களை அனுபவித்துவந்த நேரத்தில், விடுதலை நாளேடு நாள்தோறும் தணிக்கைக்குள்ளாகி பல நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. பெரியார் என்ற வார்த்தையைக்கூட தணிக்கை செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட நேரங்களிலும் பத்திரிகையைத் தொடர்ச்சியாக வெளிவரச் செய்யும் நிலைமையை உருவாக்கியவர் ஆசிரியர் அவர்கள்.

அச்சுத் தொழிலில் காலத்திற்கேற்ற வளர்ச்சிகளையும் மாற்றங்களையும் உடனே ஏற்றுக்கொண்ட தமிழ் நாளேடு விடுதலை என்றால் அது மிகையல்ல. கணினியில் அச்சுக்கோர்க்கும் முறை வந்தபிறகுதான் லை, னை, றா போன்ற எழுத்துக்கள் பெரும்பாலான பத்திரிகைகளில் பயன்பாட்டுக்கு வந்தன. அதற்கு முன்பு ,,   போன்ற எழுத்துகள்தான். ஆனால், தமிழின் சீர்திருத்த எழுத்துகளாக பெரியார் இருந்தபோதே, தற்போது பயன்படுத்தும் எழுத்துகளை பயன்படுத்திய ஏடு, விடுதலை.

ஒரு லே_அவுட் ஆர்ட்டிஸ்ட் என்ற முறையிலும் விடுதலை என்னை மிகவும் கவர்ந்த நாளேடாகும். மிக எளிமையான முறையிலும் அதே நேரத்தில் மிகச் சீரான வகையிலும் அதன் லே_அவுட் அமைந்திருக்கும். செய்திகளைப் படிப்பதில் வாசகர்களுக்கு சிக்கலோ சலிப்போ ஏற்படாத வகையில் அமைவதே நல்ல லே_அவுட் என்பார்கள். அந்த இலக்கணத்திற்கு உட்பட்டிருப்பது விடுதலையின் லே_அவுட். அச்சு இதழாக மட்டுமின்றி, இணைய இதழாகவும் சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது விடுதலை.

விடுதலையின் வயது 78. அதன் ஆசிரியராக 50 ஆண்டுகாலம் பணியாற்றியிருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள். பெரியார் ஒப்படைத்த பெரும்பணியை அவர் எத்தனை சிறப்பாக செய்து வருகிறார் என்பதற்கு இது ஒரு சான்று.

தமிழினம் இன்னும் பல துறைகளில் உண்மையான விடுதலையைப் பெற வேண்டியிருக்கிறது. அந்த விடுதலைக்கான குரலாய், விடுதலை நாளேட்டின் கொள்கை முழக்கம் தொடரவேண்டும். அதன் ஆசிரியராக அய்யா வீரமணி அவர்கள் இன்னும் பல்லாண்டுகள் செயல்படவேண்டும் என நக்கீரன் நெஞ்சார வாழ்த்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *