“விடுதலை” நமக்கு ஓர் போர்வாள்

ஆகஸ்ட் 01-15

ரஷியப் புரட்சி கண்ட மாமேதை லெனினுக்குப் போர்வாளாக இருந்தது இங்க்ரா (தீப்பொறி) நாளிதழ்.

சமுதாயப் புரட்சி கண்ட தந்தை பெரியாருக்குக் கேடயமாக இருந்தது – இன்றும் இருப்பது விடுதலை!

இங்க்ராவின் பணி முடிந்து விட்டது. ஆனால் விடுதலையின் பணி காலத்தின் தேவையாகத் தொடருகிறது – இனியும் தொடரும்!

எழுபத்தைந்து  கடந்தாலும் நமது ஆசிரியர்  -தமிழர் தலைவர் தளராத நடையோடு இன்னும் தாவித்தாவித்தான் வருகிறார். தனது நெஞ்சுக் கூட்டிற்குள் அவர் வளர்க்கும் விடுதலையும் அதற்கு விதிவிலக்கல்ல. அந்தக் காலக் கண்ணாடியும் எழுபத்து நான்கு வயது நிறைவுபெற்று எழுபத்து அய்ந்தாவது வயதில் அடியெடுத்து வைக்கிறது. இளமை மாறாத அக்கினிக் குஞ்சிற்கு இவ்வளவு வயதா? எண்ணிப் பார்க்கும்போது வியப்பாகவும் இருக்கிறது – மலைப்பாகவும் இருக்கிறது.

பழமைவாதிகளுக்குச் சவுக்கடி

விடுதலையோடு பிறந்த பல ஏடுகள் பணிமுடித்துக் கண்மூடிவிட்டன. பல ஏடுகள் பாதி வழியிலேயே பயணத்தை முடித்துக்கொண்டன. ஆனால், விடுதலை ஏடு மட்டும் இன்னும் வீறுநடை போடுகிறதே ஏன்? என்ன காரணம்? அன்றைக்கு அய்யா பெரியாருக்கு அதுவே கைத்தடி! – இன்றைக்கு முன்னோக்கிச் சுழலும் சரித்திரச் சக்கரத்தை நிறுத்தத் துடிக்கும் பழைமைவாதிகளுக்கும் வர்ணாஸ்ரமவாதிகளுக்கும் இதுவே சவுக்கடி! இப்படி விடுதலையின் பணி விரிந்துகொண்டே செல்கிறது.

யாம் எழுபத்தியேழு வயது முடித்து எழுபத்தெட்டை எட்டுகிறோம். விடுதலையின் நெடுங்கால வாசகன். அதன் தலையங்கங்கள், பெட்டிச் செய்திகளையெல்லாம் படிக்கும்போது எமக்கு இளமை திரும்பிவிடும். நரம்புகள் முறுக்கேறும். அப்போது படைக்கின்ற படைப்புகளில் என்னுடைய வார்த்தைகள் வெடித்து விழும். விடுதலைக்கு அத்தகைய அதிசய ஆற்றல் உண்டு.

ஜஸ்டிஸ் கட்சி செல்வந்தர்களின் பாசறைதான். அவர்கள் நினைத்தால் தமிழ்நாட்டையே விலைபேசமுடியும். ஆனால், அவர்களால் ஒரு ஏட்டை நடத்த முடியவில்லை.அந்த ஏடுதான் விடுதலை.

பெரியார் வாங்கினார்

வாரம் இருமுறையாக வந்த அந்த ஏட்டை சுயமரியாதை இயக்கப் பிரச்சாரத்திற்காகப் பெரியார் வாங்கினார். 1937ஆம் ஆண்டிலிருந்து பண்டிதர் எஸ்.முத்துசாமியை ஆசிரியராகக் கொண்டு ஈரோட்டிலிருந்து நாளேடாக வெளிவந்தது. விலை காலணா. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் குறிப்பிட்டதுபோல அப்போதே விடுதலை விஷமக்காரர்களுக்கு விரியன் பாம்புக்குட்டியாகத் தெரிந்திருக்கிறது. அந்த சுயமரியாதைப் பாசறையிலிருந்து தினம்தினம் ஒரு வெடிகுண்டாய்ச் செய்திகள், கட்டுரைகள் வெளிவந்தன. வர்ணாஸ்சிரமக் கோட்டைகள் கலகலத்தன. மூடநம்பிக்கைகளின் முகாம்களான சங்கர மடங்கள், ஆலயங்கள், அக்கிரகாரங்கள் எல்லாம் கதிகலங்கிப் போயின.

இன உணர்வுள்ள மக்களின் படைக்கலன்!

சுயமரியாதை இயக்கம் தொடங்கி அய்யா பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பிய அந்தக் காலத்தை நினைவில் அசைபோட்டுப் பாருங்கள். பெரும்பாலும் அய்யாவின் கூட்டங்கள் கலவரங்களில்தான் முடியும். சனாதனிகள்கூட தீவிரவாதிகளாகப் போர்க்கோலம் பூணுவார்கள். எல்லா ஏடுகளும் ஈரோட்டுப் பாசறை நோக்கி ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தும். ஆனால் அவை அனைத்தையும் சந்தித்ததும், முறியடித்ததும் விடுதலைதான்.  அந்த ஏடு பத்தோடு பதினொன்று அல்ல – அஃது இன உணர்வுள்ள மக்களின் படைக்கலன்!

அண்ணாவின் சாதனைகளுக்குத் துணை நின்ற விடுதலை

1967ஆம் ஆண்டு அண்ணாவின் தலைமையில் தமிழர் அரசு அமைந்தது. அந்த அரசை அரியணைக்கு அழைத்து வந்ததே அய்யாவின் சுயமரியாதைச் சுடரொலிதான். ஆகவேதான் தமது அரசை அய்யாவிற்குக் காணிக்கையாக்குகிறேன் என்ற அண்ணா அறிவித்தார். கேட்பதற்கு எவ்வளவு பெருமையாக – மகிழ்ச்சியாக இருக்கிறது! ஆனால், அந்தச் சாதனைக்குத் துணைநின்ற விடுதலைக்குத்தான் எத்தனை எத்தனை சோதனைகள்? எத்தனை எத்தனை வழக்குகள்? எவ்வளவு தண்டனைகள்? அவசரநிலைக் காலத்தில் அதற்கு ஏற்பட்ட அவதிகள் என்ன?

வியாபார நோக்குடைய ஏடுகளென்றால் வளைந்து கொடுத்து போற்றிப் பாசுரம் பாடித் தப்பித்துக்கொள்ளும் – நட்டத்தை ஈடுகட்டிக் கொள்ளும். ஏன் கொழுத்த லாபத்திலேயே பயணம் போகும்! ஆனால், இலட்சிய முதலீட்டோடு துவக்கப்பட்ட விடுதலைக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாதமும் யுகப் பிரவசம்தான்.

விடுதலைக்கு அண்ணா பொறுப்பாசியராக இருந்தார். அப்பொழுதெல்லாம் அவர்தான் தலையங்கம் எழுதுவார். பெரியாரின் பாராட்டுகளைப் பெறுவார். ஆனாலும், சுயமரியாதை, பகுத்தறிவுக் கருத்துகளை எப்படி இணைப்பது என்பதனை அண்ணாவிற்குப் பெரியார் பலமுறை எடுத்துக் கூறியிருக்கிறார். அண்ணாவும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

காலத்திற்கேற்ப மாறுதல்கள்

அண்ணாவைத் தொடர்ந்து குத்தூசி குருசாமி, சாமி சிதம்பரனார் போன்ற அறிஞர் பெருமக்கள் பொறுப்பாசிரியர்களாகப் பணி செய்திருக்கின்றனர். அதன் பின்னர் தமிழர் தலைவர் வீரமணி பொறுப்பேற்றார். இன்றுவரை அவருடைய அரும்பணி தொடர்கிறது. விடுதலையும் காலத்திற்கு ஏற்ப பல மாறுதல்களை சுவீகரித்துக் கொண்டு வருகிறது.

இந்துவும் – விடுதலையும்

தந்தை பெரியார் இருந்தபோது பொறுப்பாசிரியர்கள் வேறுபணிக்குச் சென்று மீளமுடியவில்லை என்றால் யார் தலையங்கம் எழுதுவது? உதவி ஆசிரியரைப் பெரியார் அழைப்பார். இந்துப் பத்திரிகைக்காரன் என்ன எழுதியிருக்கிறான் என்று படி. அதற்கு நேர்மாறாக அவனுக்குப் பதில் எழுது. அதுதான் இன்றைய தலையங்கம் என்றும் பெரியார் கூறுவாராம். இதில் என்ன வியப்பு என்றால் இன்றைக்கும் அந்த இந்துப் பத்திரிகைக்குப் பதில் எழுதும் பணியை விடுதலை தொடர்கிறது. நீதிக்கட்சிக்குத் தேவைப்பட்ட அந்தப் போர்வாள் இன்றைய நிகழ்காலத்திற்கும் தேவைப்படுகிறது.

அண்மையில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. தி.மு.கழகம் தேறாது என்றே இந்து ஏடும் அதன் டெல்லி வம்சாவளி ஆங்கிலத் தொலைக்காட்சிகளும் அலறிக் கொண்டிருந்தன. அத்துடன் அனைவரும்  தங்கள் ஆசைகளையும் அள்ளிக் கொட்டின.

முப்பது உறுப்பினர்களோடு செல்வி ஜெயலலிதா, முடிசூட டெல்லி வருகிறார் என்று அந்த ஆங்கிலத் தொலைக்காட்சிகளெல்லாம் விடியவிடிய வாய்நீளம் காட்டின.

இந்துக் கூட்டத்தின் மனப்பான்மை

வாக்குப் பதிவு முடிந்ததும், அந்தத் தொலைக்காட்சிகளுக்கு இந்து ராம் பேட்டி அளித்தார். கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் ஆறு சதவிகித அதிக வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. ஆகவே, அ.தி.மு.க.விற்கு அமோக வெற்றி-ஸ்வீப் என்று புல்லரித்துப்போய் பேட்டி அளித்தார்.

வாக்குச் சாவடிக்கு வந்த செல்வி ஜெயலலிதாவை வழிமறித்து 39 தொகுதிகளிலும் வெற்றி உங்களுக்கே என்றும் வாழ்த்தும் கூறினார்.

விடிந்தால் தெரியும் உண்மைக்கு எதற்காக இத்தனை ஆரூடங்கள்? ஆர்ப்பாட்டங்கள்? அவைகள் ஆரூடங்கள் அல்ல. அவைதான் அவர்கள் உள்ளத்தில் தேக்கி வைத்திருக்கும் ஆசைகள். இவர்களை அம்பலப்படுத்தும் பணியை  விடுதலை செய்கிறது.

டெல்லியிலும் ஜெயலலிதாவிற்கு முடிசூட்டுவது பற்றி இந்துவும் அதன் ரத்த உறவுகளான ஆங்கிலத் தொலைக்காட்சிகளும் சிந்திக்கின்றன. ஆனால் விடுதலை தமிழினத்தின் அடுத்த தலைமுறைக்கும் அரணாக விளங்குவது எப்படி என்று சிந்திக்கிறது. இந்துக்கள் இருக்கும் வரை விடுதலையும் இருக்கும். அதற்கு அப்பாலும் மிளிரும். காரணம் மலர்கள் குழந்தைகளோடு பேசும். விடுதலை மக்களோடு பேசும்.

எத்தனைக் காலம் நட்டத்தைத் தாங்குவது? விடுதலை நாளேடாக வருவதை நிறுத்திவிட்டு வார ஏடாக வெளியிட்டால் என்ன என்று ஒரு கட்டத்தில் பெரியார் சிந்தித்தார். அதனை அன்னை மணியம்மையாரே தெரிவித்திருக்கிறார். சரியான மாலுமியை அடையாளம் காட்டினார் அய்யா

ஆனால், அய்யா அவர்கள் அச்சப்பட்ட அந்தச் சோதனைக் காலத்தையெல்லாம் விடுதலை வென்றுவிட்டது. மக்கள் கடலில் நங்கூரம் பாய்ச்சி நிற்கிறது.

விடுதலை மட்டுமல்ல, அய்யா அன்றைக்கு வகுத்த கனவுத் திட்டங்களெல்லாம் இன்றைக்கு அறிவாலயங்களாக உயர்ந்து நிற்கின்றன. காரணம் கப்பலுக்குச் சரியான மாலுமியை அன்றைக்கே அய்யா அடையாளம் காட்டிச் சென்றிருக்கிறார்.

ஆசிரியர் வீரமணி ஆரம்பத்தில் அய்யாவின் மாணவர். அடுத்து அய்யாவின் படைத்தளபதி. பின்னர் அய்யாவின் நண்பர். அய்யாவின் இறுதிக் காலத்தில் அவருக்குத் தோழர். இன்றைக்கு அவரை தமிழர், தம் தலைவராகச் சமுதாயம் அங்கீகரித்திருக்கிறது. இத்தகைய சிறப்பு வேறு எவருக்குக் கிடைக்கும்?

விடுதலை என்றால் சோர்வறியாத வீரர் வீரமணி என்று அர்த்தம். வீரமணி என்றால் நடைதளராத விடுதலை என்று அர்த்தம். அவருடைய விடாமுயற்சி தந்த வெகுமதிதான் விடுதலையின் வெற்றியாகும்!

– அண்மையில் மறைந்த சோலை விடுதலை பவளவிழா மலரில் எழுதியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *