தாய்ப்பாசத்திற்கு இணையில்லை என்பர். ஆனால், அதையும் விஞ்சி நிற்கிறது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டு மக்கள்மீது கொண்டுள்ள பாசம், பற்று, அக்கறை!
இது இயற்கையாய் வந்த உணர்வு. கலைஞர் குருதியில் பிறந்தவர் என்பதால், அவருக்கு இருந்த அந்த உணர்வுகள் பன்மடங்காய்ப் பெருகி, இவருக்குள் எழுச்சி கொண்டு வெளிப்படுகிறது; வினையாற்றுகிறது.
இப்படிக் கூறுவது மிகையல்ல, இம்மி அளவு கூட மிகைப்படுத்தப்படாத அப்பட்டமான உண்மை. விருப்பு, வெறுப்பு இன்றி, முதல்வராய் அவர் பொறுப்பேற்ற நாள் முதல் அவரின் செயல்பாடுகளைப் பார்த்து வரும் எவரும் இதை உளப்பூர்வமாய், உணர்வுபூர்வமாய் ஒப்புக்கொள்வர்.
வரலாறு காணா சவால்கள்
முதல்வராய் அவர் பதவியேற்ற சூழல் தமிழ்நாட்டு வரலாறு காணா கடும் சவால்களும், கொடும் இடர்களும் எதிர்கொண்டு நின்ற நிலை.
உலகத்தையே அச்சுறுத்தி நிலைகுலையச் செய்த கொரானா கொடுந்தொற்று, உச்சத்தில், உயிர் இழப்பு அச்சத்தில் நடுநடுங்கச் செய்துகொண்டிருந்த நிலை தமிழ்நாட்டில். பிணத்தை உறவினர்களே கூட நெருங்க அஞ்சிய நிலை. அடக்கம் செய்ய அஞ்சும் அவலம். மருத்துவர்களையே அஞ்சி நிலை குலையச் செய்த உயிரிழப்பு எண்ணிக்கை உச்சம்!
தமிழ்நாட்டிற்குள்ளே ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மக்களோ, வாகனங்களோ செல்ல முடியாத நிலை. இதனால் பொருள்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு. பொருளின் மூலம் பரவுமோ, உணவின் மூலம் பரவுமோ, ஆளின் மூலம் பரவுமோ என்று எதைக் கண்டாலும், எவரைக் கண்டாலும் அஞ்சி ஒதுங்கும், ஓடும் உச்சநிலை அச்சவுணர்வு அலைக்கழித்த சூழல்.
மறுபுறம் 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியின் சீர்கேடுகளின் விளைவுகள். அதிலும் குறிப்பாக ஜெயலலிதா மறைவிற்குப் பின் அமைந்த கொத்தடிமை ஆட்சியின் அவலம். குறிப்பாக நிதிநிலை, கஜானா காலி, கடன் சுமை கைகொட்டிச் சிரித்த கேலி!
இன்னொருபுறம் சித்தாந்த எதிரிகளின் பிடியில் சிக்குண்ட ஒன்றிய அரசின் ஒத்துழையாமை, அத்துமீறல், ஆதிக்கம், பழிவாங்கல், பாராமுகம், ஓரவஞ்சனை! அனைத்தும் அணிவகுத்து நின்ற அதிகார அச்சுறுத்தல்.
மற்றொருபக்கம், ஆளுமைகள் மறைந்து
விட்டார்கள்! வெற்றிடம் வெறிச்சோடி நிற்கிறது! இந்த ஸ்டாலினால் எப்படி எதிர்கொள்ள முடியும் என்று திட்டமிட்டு எதிரிகள் பரப்பிய தப்பான பிரச்சாரம் ஊக்கத்தை உருக்குலைக்கும் நிலை!
இப்படி நாற்புறமும் கடும், கொடும், சுடும், கெடும் சூழல்கள் கைகோத்துக் காத்து நிற்க, “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என்ற கெத்தான முழக்கமிடுக்குடன் முதல்வராய்ப் பதவியேற்றார்.
அடிமட்டத் தொண்டனாய்த் தொடங்கி, அடுக்கடுக்காய் உழைத்து உழைத்து உயர்ந்த அளவற்ற அரசியல் அனுபவமும், பெரியாரின் நெஞ்சுரமும், அண்ணாவின் மாண்பும், கலைஞரின் களத்துணிவும், உடன்பிறப்புகளின் உருக்குலையா உற்ற துணையுமே இவருக்கு இருந்த – இருக்கின்ற ஒரே பலம்!
தப்பான கணிப்புகளைத் தகர்த்தார்
அந்த சொந்தப் பலத்துடன் அஞ்சாது ஆட்சியைத் தொடங்கிய ஸ்டாலின் அவர்கள் ஆரவாரமின்றி, அமைதியாய், அதே நேரத்தில் அளவில்லா துணிவுடன் ஒவ்வொரு செயலையும் செய்யத் தொடங்கினார்.
அதிக அளவிலான தேர்தல் வாக்குறுதிகளை, அறவே துடைத்து காலி செய்யப்பட்ட கஜானாவைக் கொண்டு நிறைவேற்ற வேண்டிய நெருக்கடியில், பல்துறை வல்லுநர்களைப் பார்த்துப் பார்த்து தேர்வு செய்து பக்கத்தில் வைத்துக் கொண்டார். பணிகளை முன்னுரிமை அடிப்படையில் வரிசைப்படுத்தினார்.
முதலில் கொடுந்தொற்றிலிருந்து மக்களைக் காத்தல், அடுத்து அவர்களுக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளை அளித்தல், திறக்க முடியாத கல்வி நிலையங்கள், வீட்டில் முடக்கப்பட்ட மாணவர்கள், இரண்டாண்டுகளுக்கு மேலும் கல்வி தடைபடும் என்ற கணிப்புகள். செல்பேசி உதவியுடன் அச்சவாலை எதிர்கொண்டு, ஓரளவிற்கு பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் நம்பிக்கையளித்தார். ஒரு கல்வியாண்டைத் தாண்டி அப்பாதிப்பு பாதிக்காத வகையில் பார்த்துக் கொண்டார்.
நோயாளிகளை மருத்துவர்களே அணுக அஞ்சிய சூழலில், தானே கவச உடையணிந்து மருத்துவமனைகளுக்குள் சென்று கொரானா நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டினார்.
தமிழர் மருத்துவமாம் சித்த மருத்துவத்தின் பெரும் பங்களிப்போடு நோய்த்தொற்று அளவை நாளுக்கு நாள் குறைத்தார். இறப்பு எண்ணிக்கை பெருமளவு குறைந்தது; மக்கள் மத்தியில் நம்பிக்கை துளிர்த்தது.
ஆளுமை பற்றியும், வெற்றிடம் பற்றியும் வீண் வதந்திகளைப் பரப்பிய வீணர்கள் வெட்கித் தலைகுனிந்தனர். அனைத்து ஆளுமையும் ஒரு சேர உருப்பெற்று ஓங்கி உயர்ந்து நின்றார் ஸ்டாலின்.
கொடுந்தொற்றின் கடும் பாதிப்புகள் மெல்ல மெல்ல அகற்றப்பட்டு இயல்பு நிலை திரும்பியதும் நிதிநிலையைச் சீர்செய்ய முற்பட்டார். உலக அளவில் புகழ்பெற்ற பொருளியல் வல்லுநர்களைக் கருத்தாளர்களாக, வழிகாட்டிகளாக அமர்த்தி அவர்கள் வழங்கிய அறிவுரைகளைக் கருத்தில்கொண்டு, தனது மதிநுட்பத்தையும் பயன்படுத்தி உலகே வியக்கும் வண்ணம் நிதிநிலையைச் சீர்செய்தார். ஊழியர்களின் ஊதியத்திற்கே பற்றாக்குறை என்ற நிலையை மாற்றி உதவித் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கும் வழிகளைக் கண்டறிந்து கடைப்பிடித்தார்.
பெண்கள் நலத்திட்டங்கள்
மக்கள் தொகையில் சரிபாதிக்கு மேலுள்ள பெண்கள் காலங்காலமாக உரிமையற்று, உடைமையற்று, பணியாற்றும் வாய்ப்பற்று இருந்த நிலை,தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோரின் முயற்சியால் வெகுவாக மாற்றப்பட்டது. என்றாலும், அவர்களின் மேம்பாட்டிற்கும் இன்னும் கட்டாயம் செய்ய வேண்டியவை என்னென்ன என்று ஆய்ந்தறிந்து ஒவ்வொன்றாய்ச் செயல்படுத்தினார்.
பேருந்தில் பெண்களுக்குக் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தை அமல்படுத்தி ஏழை – எளிய பெண்களின் பொருளாதாரப் பற்றாக்குறை குறைய வழி செய்தார். இதன்மூலம் பெண்களுக்கு மிச்சப்பட்ட பணம் அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்குச் செலவிடப் பயன்பட்டது. இதைப் பெண்களே உள்ளம் உருக, உணர்ச்சி பொங்க நன்றி ததும்பக் குறிப்பிட்டனர். இத்திட்டம் உலக அளவில் பாராட்டப்பட்டது. இந்தியாவின் மற்ற மாநிலங்களும் செயல்படுத்த முன்வந்தன.
பெண்களுக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின்மூலம் அடித்தட்டு குடும்பப் பெண்களுக்கு மாதாமாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் மூலம் 120 லட்சம் பெண்களுக்கு மேல் மிகப்பெரும் உதவியையும். பயனையும் பெற்று வருகின்றனர். அடித்தட்டு பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் கொடுப்பதென்பது மிகப்பெரிய உதவியாகும். அந்நிலையில் இருந்து அன்றாடம் பணத்திற்கு அல்லல்படுபவர்களுக்குத்தான் அது தெரியும்.
பெண்களின் கல்வியை மேம்படுத்த கல்லூரிக்குச் செல்லும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அளிப்பது ஆயிரக்கணக்கான ஏழைப் பெண்கள் உயர்கல்வி பயில வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உதவிகளைப் பெறும் பெண்கள் உணர்வுப்பூர்வமாய், நன்றி கண்களில் கசிய, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தாயுள்ளத்தைப் பாராட்டுகின்றனர்.
தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை
பாலின உணர்திறன் கொண்ட கல்வி முறையை நிறுவுதல், பெண் குழந்தைகளின் கல்வி இடைநிற்றல் விகிதத்தைக் குறைத்தல், வளர் இளம் பெண்கள், மகளிரின் ஆரோக்கியம், ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பில் மகளிர் பங்களிப்பை அதிகரித்தல், பெண் பணியாளர்களுக்குப் பாதுகாப்பான, உகந்த பணியிடங்களை உறுதிசெய்தல், பெண்கள் நிருவகிக்கும் சிறு தொழில்கள், புதிய தொழில் முயற்சிகளுக்கு ஆதரவு அளித்தல், அதிக ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளைப் பெற டிஜிட்டல் கல்வி அறிவை ஊக்குவித்து, டிஜிட்டல் பாலின இடைவெளியைக் குறைத்தல், பயிற்சி திறன் மேம்பாடு மூலம் திறன் இடைவெளியைக் குறைத்தல், மகளிருக்கு வங்கிக் கடன் உதவி அதிகம் கிடைக்க வழிவகை செய்தல், மகளிரை அரசியல் களத்தில் பங்கேற்க ஊக்கப்படுத்துதல் ஆகியவை மாநில மகளிர் கொள்கையின் முக்கிய அம்சங்கள் ஆகும்.
காலை உணவுத் திட்டம்
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் மூலம் லட்சக்கணக்கான இளம்பிள்ளைகளின் பசியைப் போக்கி, அவர்கள் உடல்நலத்துடன், சோர்வின்றி கல்வி கற்க வழிசெய்துள்ளது. தாயினும் சாலச் சிறந்த அன்பின் வெளிப்பாடாய் உள்ள இத்திட்டம் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்குப் பெருமை சேர்த்துள்ளது.
தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம்
சொல்லொணா நிதி நெருக்கடி நிலையிலும், ஒன்றிய அரசின் உதவி கிடைக்காத நிலையிலும் தாம் அளித்த தேர்தல் வாக்குறுதியில் 90% மேல் அவர் நிறைவேற்றியுள்ளது உலக சாதனை மட்டுமல்ல; உலக அதிசயமும் ஆகும். நீட் தேர்வு ஒழிப்பு, புதிய ஓய்வூதியத் திட்டம் போன்றவற்றை நிறைவேற்றுவதில் நடைமுறைத் தடைகள் இருப்பதால்தான் தள்ளிப் போகின்றனவே தவிர வேறு காரணம் இல்லை. ஒன்றிய ஆட்சி விரைவில் மாறும், இவைகளும் கட்டாயம் நிறைவேறும் என்பதே உண்மை நிலை. இந்த இரண்டையும் சுட்டிக்காட்டி குறை சொல்லுகின்ற அரசியல் எதிர்நிலையாளர்கள் அப்போது சொல்லிழந்து வாயடைத்துப்போவர்.
வேளாண்துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை
பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாகவுள்ள வேளாண் துறையை முன்னேற்றி விவசாயிகளின் வாழ்வில் உயர்வு ஏற்பட வேளாண் துறைக்குத் தனி வரவு – செலவுத் திட்டத்தை உருவாக்கிச் செயல்படுத்தச் செய்தார். வேளாண்துறையில் அனுபவம் உள்ள ஒரு விவசாயியையே அதற்கு அமைச்சராகவும் ஆக்கினார். யாரை எங்கு அமர்த்துவது; எதை எப்படிக் கையாளுவது, தடைகளை எப்படித் தகர்ப்பது என்பவற்றை மிகச் சரியாக, நுட்பமாக, திறமையாகச் செய்து ஆளுமையின் சிகரமாக இன்று உயர்ந்து நிற்கிறார். இதனால், பல்துறை வளர்ச்சியும் உலக வல்லுநர்களே பாராட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
புயல் வெள்ளப் பாதிப்பை மீட்டெடுத்து சாதனை
சோதனை மேல் சோதனை என்ற சொல வடைக்கு ஏற்ப, ஆட்சி ஏற்ற தொடக்கம் முதலே “சோதனைமேல் சோதனை!” என்று நிலைகுலையும் அளவிற்குச் சோதனைகள், இடர்கள், தடைகள், பாதிப்புகள் தொடர்ந்து வந்தாலும் நெஞ்சுரத்தோடு நிமிர்ந்து நின்று அவற்றை எதிர்கொண்டு, தீர்வு காணும் முதல்வருக்கு சவாலாக இரண்டு பேரிடர்கள், வடக்கே ஒன்றும், தெற்கே ஒன்றுமாய் அடுத்தடுத்து வந்த நிலையில் கடும் நிதிநெருக்கடியிலும், அரசு அலுவலர்கள், அமைச்சர்கள், தொண்டு அமைப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி உயிரிழப்பு அதிகம் இன்றி மக்களைக் காத்து, அவர்களுக்கு உரிய நிவாரணத் தொகையையும் வழங்கி உதவினார்.
தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்தில் தனிக் கவனம்
தந்தை பெரியார் காலத்திலிருந்தே திராவிட இயக்கம் தாழ்த்தப்பட்டோர் நலனிலும், முன்னேற்றத்திலும் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் கலைஞர் நிறையத் திட்டங்களைச் செயல்படுத்தினார். தற்போது மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தாழ்த்தப்பட்டோருக்குத் தனிக் கவனம் செலுத்தும் மசோதா ஒன்றை அண்மையில் சட்டப் பேரவையில் நிறைவேற்றியுள்ளார். இதன்மூலம் அடித்தட்டு மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, முன்னேற்றத்திற்குப் பெரிதும் வழிவகுத்துள்ளார். தாழ்த்தப்பட்டோரின் தலைவர்கள் இதனை நன்றிப்பெருக்குடன் வரவேற்றிருப்பதே இத்திட்டத்தின் சிறப்பைக் காட்டுவதாய் உள்ளது.
அயல்நாட்டு முதலீடுகள் ஈர்ப்பு
முதலீட்டாளர்கள் மாநாட்டைக்கூட்டி, அந்நிய முதலீடுகளைப் பெருமளவில் ஈர்த்துள்ளார். அதன்மூலம் தொழில் வளர்ச்சியைத் தமிழ்நாட்டில் பெருக்கியதோடு, இளைய தலைமுறையினருக்கான வேலை வாய்ப்பையும் பெருக்கியுள்ளார். இது ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்வில் உயர்வைக் கொண்டுவரும்; அவர்களின் வருவாய் பெருகும்; அவர்களின் குடும்பங்கள், வாரிசுகள் வளர்ச்சி பெறுவர்.
இளையதமிழ் சமுதாயத்தின் திறன் வளர்த்தல்
இன்றைய பள்ளிச் சிறுவர்களின் கல்வி, அறிவியல் அறிவு, தொழில்நுட்ப அறிவு, கலை, வானியல், பொறியியல் போன்றவற்றில் உலகத்தரத்திற்கு இணையாக ஆற்றல் பெறும் வகையில் பயிற்சி அளித்தல், கிராமப்புறத்து, அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கும்படி் செய்தல் போன்ற திட்டங்களால் எதிர்கால தமிழ்நாட்டு இளைஞர்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்க வழி ஏற்பட்டுள்ளது.
வளர்ச்சி பெற்ற முதல் மாநிலம்
முதல்வர் ஸ்டாலின் அவர்களின் ஆட்சித் திறத்தால் தமிழ்நாடு பலவற்றில் முதல் மாநிலமாக உயர்ந்து நிற்கிறது. அதை எல்லாவகையிலும் முதல் வகையில் உயர்த்திக் காட்ட உறுதி பூண்டு அவர் உழைத்து வருகிறார். ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்ற உயரிய இலக்குடன் அவர் ஆட்சி செய்வதால் தமிழ்நாடு இந்தியா அளவில் முதல் மாநிலமாகவும், உலக அளவில் உயர்ந்த மாநிலமாகவும் சிறப்பு பெறும் என்பது உறுதி!
புரட்சியாளர்களின் கொள்கைப் பரப்பல்
சமுதாய ஏற்றத்தாழ்வுகளைக் களையவும், இழிவு நீக்கவும், சமத்துவம் பெறவும், கல்வி பொருளாதாரம், அதிகாரம் இவற்றை ஒடுக்கப்பட்டோர் பெறவும் பாடுபட்ட, வள்ளுவர், வள்ளலார், அயோத்தி தாசபண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், வி.பி.சிங் போன்றோருக்கு, நிலையான நினைவுச் சின்னங்கள் அமைத்து, அவர்கள் கொள்கைகளைப் பரப்பும் பணிகளைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் முதல்வர் என்ற முறையில் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் செய்து வருகிறார். இதன் வழி இளைய சமுதாயம் விழிப்பும், உணர்வும், தெளிவும் பெற்று, கல்வி, வேலைவாய்ப்புகளைப் பெற ஊக்கம் பிறந்துள்ளது.
தமிழரின் தொன்மைச் சிறப்புகளைக் காத்தலும், பரப்பலும்
இம்மண்ணில் பரந்துபட்டு வாழ்ந்த தொன்மைத் தமிழர்கள், அவர்கள் பேசிய தொன்மைத் தமிழ், அவர்களின் சிறப்பான திறன்கள், பண்பாடுகள், கலை போன்றவற்றைக் கண்டறிய அகழ்வாய்வுகள், ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றவற்றைக் கண்டறிந்து, பாதுகாத்து, அதன்வழி தமிழர், தமிழ்ச் செம்மொழியின் சிறப்பு போன்றவற்றைப் பரப்பும் பணியை மிகச் சிறப்பாகவும், தனி அக்கறையுடனும் செய்துவருகிறார்.
நூலகங்கள்: கலைஞர்
காலத்தில் சென்னைக் கோட்டூர் புரத்தில் அமைக்கப்பட்ட உலகப்புகழ் பெற்ற அண்ணா நூலகத்தைப் புனர் அமைத்ததோடு, மதுரையில் உலகத்தரத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை அமைத்து தென் மாவட்ட மக்களுக்கு அறிவு வளர்ச்சிக்கும், விழிப்பிற்கும் வித்திட்டுள்ளார். அடுத்து கோவையிலும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்க நிதி ஒதுக்கியுள்ளார்.
முதல் தர மாணவர்களை உருவாக்கல்
கிராமப்புறத்தில் ஏழைக்குடும்பத்தில் பிறந்த ஒடுக்கப்பட்ட மாணவர்களும் நல்ல கல்வியையும் பயிற்சியையும் பெற்று ஆட்சியாளர்களாய், அறிவியல் மேதைகளாய், பொறியியல் வல்லுநர்களாய் எழுத்தாளர்களாய் பேச்சாளர்களாய் உயர ‘நான் முதல்வர்’ திட்டம் மூலம் ஆவன செய்து அதற்கான பணிகள் செம்மையாய் நடக்க வழிசெய்துள்ளார். இதன்மூலம் அடித்தட்டு மக்களும் ஆளுமைத்திறன் மிக்கவர்களாய் உலக அளவில் சாதனை படைக்க வழி செய்துள்ளார்.
உடற்கல்வியும், உடல்நலமும்
இளைய சமுதாயம் நல்ல உடல் திறனும் உடல் நலமும் பெறவும், உலக அளவில் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைக்கவும் திட்டங்களைத் தீட்டி, கட்டமைப்புகளையும் பயிற்சிகளையும் கொடுத்து உலகத்தரத்திற்கு உயர்த்தியுள்ளார். அதற்கென்று தனி அமைச்சரையும் பணியமர்த்தியுள்ளார்.
சுருங்கச் சொன்னால், தாயினும் சிறந்த அன்புடன், அக்கறையுடன் ஓயாது உழைத்து தமிழக மக்களின் உயர்வுக்கும், தமிழ்நாட்டுக்கும் தமிழ்மொழிக்கும் பாடுபட்டு வருகிறார். அப்படிப்பட்ட
நம் முதல்வர் நல்ல நலத்துடன் நூறாண்டு கடந்தும் வாழ வாழ்த்துகிறோம்! n