பகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவநாடி-; உயிர்நாடி ஆகும். ஜீவராசிகளில் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. இதில் மனிதன் எவ்வளவுக்கு எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கின்றானோ அவ்வளவுக்கு அவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள்.
மனிதன் எவ்வளவுக்கு எவ்வளவு பகுத்தறிவில் தெளிவு பெறுகின்றானோ அவ்வளவுக்கு அவ்வளவு பக்குவமானவன் என்பது பொருள்.
பகுத்தறிவு பெறும்படியான சாதனம் நமக்கு நீண்ட நாளாகவே தடைபடுத்தப்பட்டு வந்துள்ளது. நம்மை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனர்கள் நாம் பகுத்தறிவு வளர்ச்சியடைய ஒட்டாமல் தடை செய்து கொண்டே வந்து உள்ளார்கள்.
அறிவைத் தடை செய்யும் ஆயுதங்கள்
மக்களிடையே பகுத்தறிவைத் தடைபடுத்த கடவுள், மதம், சாஸ்திரம் முதலியவைகளைப் புகுத்தி நம்பும்படி செய்துவிட்டார்கள்.
பொதுவாக கடவுளைப் புகுத்தியவன் கடவுளுக்கு முதல் நிபந்தனையாக அறிவு கொண்டு கடவுள் பற்றி சிந்திக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன்தான் ஏற்படுத்தினான்.
கடவுள் பஞ்சேந்திரியங்களுக்கும் எட்டமுடியாத வஸ்து – அறிவுக்கு எட்டமுடியாத வஸ்து; பஞ்சேந்திரியம் என்றால் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகும். கடவுள் இந்த அய்ந்துக்கும் எட்ட மாட்டார்; இந்த அய்ந்தும் கொண்டு தேடவும் கூடாது என்பதாகும்.
கடவுள், மதம், சாஸ்திரம்
இந்த இந்திரியங்களை எல்லாம் மீறி சிந்திக்க மனது என்று ஒன்று உள்ளது. இந்த மனதுக்கும் எட்டாதவர் கடவுள் என்று இத்தனை நிபந்தனைகளைப் போட்டு கடவுளைச் சொன்னான்.
கடவுள் என்றால் ஒத்துக்கொள்ள வேண்டும். எங்கே? ஏன்? எப்படி? என்று கேட்கக் கூடாது என்று கூறிவிட்டான்.
கடவுள் போலவே மதத்தைப் பற்றியும் என்ன என்று சிந்திக்காது, மதம் எப்போது ஏற்பட்டது? யாரால் ஏற்பட்டது? என்ன ஆதாரம் என்று சிந்திக்கக்கூடாது. சிந்தித்தால் மதம் போய்விடும், எனவே, அப்படியே ஒத்துக்கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டார்கள்.
கடவுள், மதம் போல சாஸ்திரத்தைப் பற்றியும் ஆராயக்கூடாது. எவன் பகுத்தறிவு கொண்டு சாஸ்திரங்களை ஆராய்கின்றானோ அவன் நரகத்துக்குப் போவான் என்று எழுதி வைத்துள்ளனர்.
ஆதாரங்கண்டு தெளிந்த பகுத்தறிவு
எனவே, பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவது; மூடநம்பிக்கை என்பது ஆராயாமல் ஏற்றுக்கொள்வது ஆகும்.
நமது இழிநிலை, முட்டாள்தனம் மாற வேண்டுமானால் நாம் ஒன்றும் கஷ்டப்பட வேண்டியது இல்லை. பகுத்தறிவினைக் கொண்டு தாராளமாக பல தடவை நன்கு சிந்தித்தால் ஒவ்வொன்றும் தானாக நழுவிவிடும்.
நமது கொள்கை பகுத்தறிவு; பகுத்தறிவு என்றால் நாத்திகம் ஆகும். அறிவுகொண்டு சிந்திப்பதுதான் நாத்திகம் ஆகும்.
கடவுள் மனதுக்கும், வாக்குக்கும் எட்டாதது என்று கூறப்பட்டாலும் அதுதான் உலகத்தை உண்டாக்கி நம்மை எல்லாம் நடத்துகின்றது. எல்லாவிதமான சர்வசக்திகளும் உடையது என்று கூறப்படுகின்றது.
நமக்கு மட்டும் 1000 கடவுள்களா?
அப்படிப்பட்ட கடவுள் நம்மைத் தவிர்த்த மற்ற உலகத்துக்கு ஒன்றுதான். ஆனால், நமக்குத்தான் ஆயிரக்கணக்கில் கடவுள்கள்; நம்மைத் தவிர்த்த மற்ற உலகிற்கு கடவுளுக்கு உருவம் இல்லை. நமது கடவுளுக்கோ பல்லாயிரக்கணக்கான உருவங்கள்!’
மற்ற நாட்டுக் கடவுள்களுக்கு ஒன்றும் வேண்டியது இல்லை; நமது நாட்டுக் கடவுள்களுக்கு மட்டும் மனிதனுக்கு வேண்டியது எல்லாமுமே வேண்டும்!
மற்ற நாட்டுக்காரர்கள் கடவுள், யோக்கியம், நாணயம், ஒழுக்கம் உடையவன் என்று உண்டாக்கி இருக்கின்றார்கள். நமது நாட்டுக் கடவுளுக்கு இந்த ஒழுக்கம், நாணயம் யாதும் கிடையாது. மனிதனில் கீழ்த்தரமானவனுக்கு என்ன என்ன குணங்கள் இருக்குமோ அதுகள் அத்தனையும் கடவுளுக்கு ஏற்றிவிட்டிருக்கின்றார்கள்.
இப்படி, ஏராளமான பேதங்களும் நடப்புக்கு ஒவ்வாத காரியங்களும் காரியத்தில் கேடான குணங்களையும் கடவுளுக்குக் கற்பித்து இருக்கின்றார்கள்.
அப்படியே நம்புவது மூடநம்பிக்கை
இவைகளை எல்லாம் நம்புவதுதான் மூடநம்பிக்கை, நல்லவண்ணம் சிந்தித்து ஆராய்ந்து, ஏற்கின்றதை ஏற்றுக்கொண்டு மற்றதை தள்ளுவதுதான் பகுத்தறிவு!
நாம் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்த்தால் பகுத்தறிவுக்கு ஏற்ற கடவுள் இருக்கின்றதா என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் இல்லவே இல்லை!
உண்மையில் ஒரு கடவுள் இருக்குமானால் நமக்குத் தெரியாமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன? அந்தக் கடவுள் தாம் இருப்பதாக நமக்காவது ஏன் தெரியப்படுத்தக்கூடாது?
பஞ்சேந்திரியங்களுக்கும் மனதுக்கும் எட்டாமல் ஒரு கடவுள், ஏன் பயந்துகொண்டு மறைந்துகொண்டு இருக்கவேண்டும்?
சர்வசக்தி உள்ள கடவுள் என்று சொல்லி உற்பத்தி செய்துவிட்டு அது நமக்கு விளங்கும்படி செய்யாவிட்டால் அது எப்படி சர்வசக்தி உடையதாகும்?
அவர் ஒரு நல்ல கடவுள் என்று சொல்லி அவரால் ஒரு யோக்கியமான மனிதனை உற்பத்தி பண்ண முடியவில்லையானால் அது எப்படி நல்ல கடவுள் ஆகும்?
கேடுகளைத் தடுக்க முடியாதது கடவுளா?
கோயிலில் கடவுள் இருக்கின்றது; திருடன் புகுந்து நடு இரவில் பூட்டை உடைத்து பெண்டாட்டி சேலை, நகை முதலியவற்றைத் திருடிச் செல்லுகின்றான்; அதனைக் கடவுளால் தடுக்க முடியவில்லை; நாட்டில் நடக்கும்
கொலை, கொள்ளை, அக்கிரமங்கள் முதலியவற்றையும் தடுக்க இந்தக் கடவுளால் முடியவில்லை, இது எப்படி சர்வ வல்லமை உடைய கடவுள் ஆகும்?
ஒழுக்கமான கடவுள் உண்டா?
நமக்கு ஒழுக்கமான கடவுளே இல்லையே! சைவ சமயத்தில் கந்தன், முருகன், சுப்பிரமணியன் என்று ஒரு கடவுள். அவனுக்குப் போட்டியாக வைணவத்தில் இராமன் என்று ஒரு கடவுள். இப்படியாக பல கடவுள்கள் கூறப்படுகின்றன. இந்தக் கந்தனைப் பற்றிய கதையும் அசிங்கம், ஆபாசமாக இருக்கும்; இராமனைப் பற்றிய கதையும் ரொம்பவும் ஒழுக்கக்கேடாக இருக்கும். காரணம், இந்தக் கதைகள் ரொம்பக் காட்டுமிராண்டிக் காலத்தில் எழுதப்பட்டமையால் பகுத்தறிவைப் பற்றிய கவலையே இல்லை.
கடவுள் பிறப்பு ஆபாசங்கள்
விஷ்ணு விபசாரத்தனம் செய்த சாபத்தின் பலனாக இராமனாகப் பிறந்தவன்.
கந்தன் பிறப்பும் ஆபாசமே! சிவனும், பார்வதியும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக போகம் பண்ணி அசிங்கம் ஆபாசமாகப் பிறந்தவன் கந்தன்; இப்படியேதான் மற்றக் கடவுள்கள் கதைகள் எல்லாம். எந்தக் கடவுள் கதையைப் பார்த்தாலும் கடவுளுக்கு சக்தி இல்லை என்பதை மனதில் கொண்டுதான் கதை எழுதி இருப்பான் என்றே தோன்றுகிறது.
கடவுள் கதை எழுதும்போதே துஷ்டர்களை அழிக்கவே கடவுள் தோன்றினார் என்கின்றான். ஏன் கடவுள் துஷ்டனைத் தோன்றாது இருக்கச் செய்திருக்கலாமே!
அதனை விட்டு, அவனைத் தோன்றச் செய்து, போர் தொடுத்து ஏன் ஒழிக்க வேண்டும்? ஏன் அதன் காரணமாகத் தொல்லை அடைய வேண்டும்?
மக்கள் அறிவு கொண்டு சிந்தித்தல் வேண்டும். அதுவே பகுத்தறிவை வளர்க்கும். பகுத்தறிவுக்குத் தடையாக இருப்பது கடவுள், மூடநம்பிக்கை, சிந்திக்க வொட்டாத நிலை.
சிந்தனையே அறிவு ! அதுவே மனித வாழ்வை உயர்த்தும்!
( திருச்சி மாவட்டம் பெரம்பலூரில் 24.6.1965 அன்று நடைபெற்ற பகுத்தறிவுப் பிரச்சாரப் பயிற்சி முகாமில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை) – விடுதலை 5.7.1965 )