”நம்மினம் இங்கே ஒளிபெறட்டும் ”

2024 கவிதைகள் ஜனவரி 16-31, 2024

கவிக்கோ அ. அரவரசன்
தேவகோட்டை

சுறவத்தின் முதல்நாளைச் சுடரோ னுக்குத்
தொல்தமிழர் நன்றியினைச் செலுத்தும் நாளாய்
அறம்சார்ந்த வினைப்படுத்தி விழாவெ டுத்தார்!
அந்நாளே தமிழருக்குத் திருநாள் என்று
நிறைமதியர் பகுத்தறிவுத் தந்தை யார்நம்
நேர்மைதவழ் அறிவாசான் பெரியார் சொன்னார்!
முறையான மெய்யியலின் தொடக்கம் தானே
முகிழ்த்துவரும் நம்தமிழர் திருநாள் என்பேன்!

பகலென்றும் இரவென்றும் பார்த்தி டாமல்
பாடுபடும் உழவர்களின் மேன்மை போற்றி
அகப்பாட்டும் புறப்பாட்டும் சொல்லி டாத
அகவுணர்வின் நுட்பமுடன் அதனைப் போற்றி
இகழுநரும் ஏற்கின்ற வகையாய் மாற்றி
எள்முனையும் மாண்பின்சீர் குறைந்தி டாமல்
உகமுடிவாய் அறுதியிட்(டு) அமைத்துத் தந்த
ஊழிமுதல் பெருநாளே இந்நாள் என்பேன்!

அறிவாசான் வழியிந்தத் தமிழர் நாளை
அறிவீனம் இல்லாத முறையில் போற்றிச்
செறிவான நடைமிளிரும் வளமை சார்ந்த
சீரார்ந்த செயல்களினால் தமிழம் பேணிக்
குறிக்கோளை எட்டும்வகை உழைப்போம் நாளும்!
குரலுயர்த்தி அதன்பெருமை ஒலிக்கச் செய்வோம்!
நெறியென்றால் பகுத்தறிவே எனும்சால் புக்குள்
நிதமும்நம் மினமிங்கே ஒளிபெ றட்டும்! ♦