பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம்
புராணத்தின் பொய்க்கதைகள் பேசாப் பொங்கல்!
புகழ்தமிழர் மரபினிமை பேசும் பொங்கல்!
முரணாக மதப்பற்றைப் பாராப் பொங்கல்!
மொழியால்நாம் தமிழரெனப் பார்க்கும் பொங்கல்!
உரங்கூட்டா வேற்றுமைகள் பேணாப் பொங்கல்!
உறவாய்த்தம் காளைகளைப் பேணும் பொங்கல்!
உறவெல்லாம் ஒன்றுகூட வாய்க்கும் பொங்கல்!
உலகாளும் ஆதவன்சீர் போற்றும் பொங்கல்!
உழக்குவிதை நிலம்விதைத்துக் கதிர்வ ளர்த்தே
உற்றபசி அற்றொடுங்க ஊட்டும் பொங்கல்!
உழவர்களின் உன்னதத்தை உரைக்கும் பொங்கல்!
உலகமுண்ண உழைப்பார்சீர் ஓதும் பொங்கல்!
உலகுயிர்த்த உயிரெல்லாம் ஒக்கு மென்றே
உரைமொழிந்த வள்ளுவத்தின் உறவே பொங்கல்!
பிளவுசெயும் சாதிமதம் புறத்தில் தள்ளிப்
பிரிவினையை வேரறுக்கப் பிறந்த பொங்கல்!
தமிழரெனப் பெயரெடுத்தோம் தமிழைப் பேசி!
சாதிமதப் பிரிவெதற்கு தமிழா யோசி!
தமிழர்களின் இல்லமெங்கும் பொங்கல் பொங்கத்
தமிழர்களின் இனவுணர்வும் நெஞ்சில் பொங்கித்
தமிழருற்ற சாதிமதத் தடைக டந்து
தழைக்கட்டும் ஒற்றுமைதான் உளம்ப டர்ந்து!
தமிழர்களின் பண்பாட்டுக் குறியீ டாகத்
தைப்பொங்கல் மணக்கட்டும் தரணி யெங்கும்!
இலையெமக்குள் பிரிவினையே என்று சொல்லி
எழுச்சிதர வந்தவொரு திருநாள் பொங்கல்!
உலையரிசி வெல்லம்நெய் ஒன்றல் போலே
ஒன்றுபட்டால் தமிழ்மணக்கும் பொங்கல் போலே!
பிழையாக இந்துமதத் திருநாள் என்றே
பெயரிடலேன் தமிழினத்தின் பெருநாள் தன்னை?
நிலையெடுப்போம் மதங்கடந்து தமிழ ரெல்லாம்!
நிறுவிடுவோம் பொங்கலெங்கள் மரபா மென்றே!♦