நாத்திக வாழ்வுக்கு வயது 101

ஜூன் 16-30

ஒரு பழுத்த நாத்திகராய், சுயமரியாதை இயக்கத்தின் பிம்பமாய், பெரியார் பெருந்தொண்டராய் கடவுள் இல்லை! கடவுள் இல்லவே இல்லை! என்று 100 ஆண்டு வாழ்ந்து முடிந்திருக்கும் ஒரு பெரியார் தொண்டரின் வாழ்க்கையைத்தான் நீங்கள் படிக்கப் போகிறீர்கள். 95 ஆண்டுகள் ஊர்ஊராய்ச் சுற்றிய தந்தை பெரியாரின் பெருந்தொண்டர்கள் பலர் அகவை 100அய்த் தொட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 

கடவுளையே எதிரிகளாக்கிக் கொண்ட இவர்களின் ஒழுக்க வாழ்வு இன்றைய தலைமுறைக்கு சொல்லப்பட வேண்டியதல்லவா? இவர்களில் ஒருவர்தான் நாகை மாவட்டம், ஆயக்காரன்புலம் க.சுந்தரம்.
அண்மையில் ஆயக்காரன்புலத்தில் நடந்த தி.க.வட்டார மாநாட்டில் பேசிய தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள், 101 வயதைக் கடந்து வாழ்ந்து காட்டும் கடவுள் மறுப்பாளரான ஆயக்காரன் புலம் அண்ணன் க. சுந்தரம் நாத்திகக் கொள்கைக்குச் சிறந்த எடுத்துக் காட்டு.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகத்திலேயே ஒரு கடவுள் மறுப்பாளர் இரண்டாம் நூற்றாண்டில் பயணிக்கிறார், அடியெடுத்து வைக்கிறார், 101 ஆம் ஆண்டு பிறந்த நாள் காண்கிறார் என்றால், இதைவிட கடவுள் மறுப்புக் கொள்கை, பெரியார் கொள்கைக்கு வெற்றி வேறு சொல்லத் தேவையில்லை.
உலகத்தில் 100 ஆண்டுகள் வாழ்ந்தவர்கள் பலர் உண்டு. ஆனால் அறிவியல் பூர்வமான பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு, நல்ல உடல் நலத்துடன் வாழ்ந்தவர்கள் குறைவு.

இன்று 101 -வது வயதில் பயணிக்கும் அண்ணன் சுந்தரம் அவர்கள் தெளிவாக இருக்கிறார், எழுந்து நின்று ஒலிபெருக்கி முன்  தெளிவாக சிங்கம் போல் உரையாற்றினார். அதற்குக் காரணம், தந்தை பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை. யாராலும் கடவுள் இல்லை என்று சாதிக்க முடியும் என்பதற்கு இந்தியாவிற்கே அவர் எடுத்துக் காட்டாகத் திகழ்கிறார்.

அவர் அதிக நாள் வாழ்வதற்கு காரணம் உணவு அல்ல; பிராணவாயு அல்ல. தந்தை பெரியாரின் கொள்கையைச் சுவாசிக்கிறார்.

இன்றைக்கு சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து வழக்கு போட்டு இருப்பது வரை சொல்கிறார் என்றால், அவரின் மூளைத் திறன், தெளிவான சிந்தனை எப்படி இருக்கிறது பாருங்கள்! பக்தி கொண்டவன் சொல்லாததை கடவுள் மறுப்பாளர் தெளிந்த சிந்தையுடன் சொல்கிறார் பாருங்கள். 101 வயது காணும் சுந்தரம் அண்ணன் அவர்கள் நினைத்ததையே பேசுகிறார் – பேசவேண்டும் என்பதையே எண்ணுகிறார்.

நாம் இனத்தால் திராவிடர்கள், மொழியால் தமிழர்கள், என்ற நிலையுடன் இருக்க வேண்டும். திராவிடத்தால்தான் நாம் வாழ்ந்தோம் – வாழ்கிறோம் என்று குறிப்பிட்டார்.

இன்றைக்கு 101ஆவது பிறந்த நாள் காணும் அய்யா சுந்தரம் அவர்கள் தடைகள் பல கடந்து, கரடு முரடான பாதைகள் கடந்து பயணம் செய்து வந்திருக்கிறார். அவர் பல ஆண்டுகள் நல்ல உடல் நலத்துடன், உள்ள வளத்துடன் வாழவேண்டும்என்று பாராட்டினார்.இந்நிகழ்வில் ஏற்புரை ஆற்றிய  முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் க.சுந்தரம் அவர்கள் பேசியது ஒரு இலட்சியவாதியின் வீரமுழக்கமாகவே  அமைந்தது.

தந்தை பெரியார் வாழ்க! தந்தை பெரியார் வாழ்க! கடவுள் இல்லை! கடவுள் இல்லவே இல்லை! கடவுள் இல்லவே இல்லை! கடவுளை கற்பித்தவன் முட்டாள்! கடவுளை கற்பித்தவன் முட்டாள்! கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்!  கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்! கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி!இப்படித்தான் தொடங்கினார் தனது ஏற்புரையை .தொடர்வது பேசும்போது, கடவுளை பரப்புனவன் இருக்கிறானே, அந்த காலத்துல தசரத மகாராஜா 60000 பொண்டாட்டி கட்டினார்னு எழுதினான். தசரத மகாராஜா 60000 மனைவிகளை கல்யாணம் பண்ணானு எழுதி வச்சான்.

60,000 பேருக்கிட்டே பேசவே முடியாது. இலங்கைக்கு போறதுக்கு இராமனுக்கு அணில் பாலம் கட்டினதுன்னு எழுதினான். அணில் பாலம் கட்டுமா? இந்த காலத்துலேயே கடல்ல பாலம் கட்டலை, அந்த காலத்துல கடல்ல இராமன் போறதுக்கு பாலம் கட்டுனான்னு. இன்னைக்கு சுப்ரீம் கோர்ட்ல நிக்குது, அன்னைக்கு கடவுளை பரப்புனவன் கதை.

அன்னைக்கு கடவுளை பரப்பினவன்,  பத்து தலை இராவணன்னு எழுதினான். பத்து தலை மனுசனுக்கு இருக்குமா? ஆக, அந்த காலத்துல பகுத்தறிவுமில்ல, பேப்பருமில்ல எதுவுமில்ல, பகவத் கீதைன்னு ஒரு நூல் இருக்குதுங்க, அதில கடவுளே சொன்னான்னு சொல்றான். பிராமண, சத்ரிய, வைஸ்ய, சூத்திரனு வர்ணம், இதை நானே படைச்சேன், அதை யாராலும் அழிக்க முடியாது.

என்னாலேயே மாற்ற முடியாது. கடவுளே ஒன்னும் செய்ய முடியாதுனு எழுதினான்.  யாரு மாத்துனா, கிருத்துவன் மாத்துனான், முஸ்லீம் மாத்துனான்… பெரியார் முடிச்சார். யாராலும் மாத்த முடியாதுன்னு கடவுள் எழுதினானே.

கடவுள் வேணாங்கிறத, கடவுளை பரப்புகிறவன்  அயோக்கியன்னு ஐயா சும்மா சொல்லலை.. ஆழமா படிச்சு சொன்னது. கடவுளை மற, மக்களை நினை பெரியார் சொன்னார், கடவுளை மறந்துட்டு மக்களை மாத்திரம் நினைச்சா போதும். எல்லோருக்கும் நன்றி, எல்லோருக்கும் நன்றி,என்று அவர் உரையை முடித்தபோது மக்கள் ஆரவாரம் செய்தனர் .

இத்தனை உறுதியோடு உறுமும் க.சுந்தரம் 1911 அக்டோபர் 28ஆம் நாள் பிறந்தவர். கடந்த 2011ல் 100 வயதை எய்தி 101லும் நாத்திக முழக்கத்தைத் தொடர்கிறார். இவரது கடும் உழைப்பு உறுதியான கொள்கை உள்ளத்தோடு இணைந்தே வளர்ந்தது. குடும்ப சூழல் காரணமாக 8அம் வகுப்போடு கல்வியை முடித்தவர்.

ஆனால் பெரியாரின் பகுத்தறிவுப் பல்கலைக் கழகத்தில் பண்படப் படித்தார். வண்டி ஓட்டுதல், ஏற்றம் இறைத்தல், வேளாண்மைத் தொழில் என இளமையிலேயே கடும் உழைப்பாளி. பின்னர் மாதம் 9 ரூபாய் ஊதியத்தில் ஆசிரியர் பணி. அதையும் விட்டு சந்தையில் வணிகராக வாழ்க்கை தொடர 22ஆம் வயதில் வேதாம்பாள் என்பாரை மணந்தார்.

கண்ணகி என்ற பெண் குழந்தை, அன்பழகன், சம்பத் என இரு ஆண் குழந்தைகள் பிறந்தன. துணைவியாரை இளம் வயதில் இழந்தாலும் பிள்ளைகளை நன்கு வளர்த்து இன்று உயர்ந்து நிற்கிறார்கள். இந்த நாத்திகரின் குடும்பம் பொருளாதாரத்திலும், சமூக செல்வாக்கிலும் உயர்ந்துள்ளது.

பெரியாரின் குடிஅரசு ஏடுதான் இவரை நாத்திகராக்கியது.

தம் இளம் வயதிலேயே சுந்தரம் பெரியாரின் கொள்கையில் கட்டுண்டார். குடிஅரசு வாசகரானார். தன் கூட்டாளிகள் அனைவரையும் இயக்கத்தில் சேர்த்தார். ஆயக்காரன்புலத்தில் பெரியார் பாசறை வலுவாய்க் காலூன்ற இவரே முழு முதற்காரணம். ஜாதியின் போலித்தனத்தைத் தோலுரித்துக் காட்ட விரும்பினார். மூடப்பழக்க வழக்கங்களை குழித்தோண்டிப் புதைப்பேன் எனச் சூளுரைத்தார்.

மனிதனுக்கு மனிதன் பேதமேது என்றார். தாழ்த்தப்பட்டோரை வாங்க, வாங்க என விளித்து மரியாதையோடு அழைப்பது, அவர்களை தனது வீட்டில் அமரவைத்து ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது, சலவைத் தொழிலாளி முதல் சவரத் தொழிலாளி வரை அவர்களிடம் செலுத்தும் அன்பும், அக்கறையும் இன்றும் ஊரில் பேசப்படுவதாகும். இவை இயற்கையாகவே இவரிடம் அமைந்த மனித நேயம். அவர் வாழ்க்கையில் அவர் செய்த புரட்சிகள் இன்றும் ஊரார் மெச்சும் நிகழ்ச்சிகளாகும்.

கோட்டாத் துணி வியாபாரம் மலிவான விலையில் தரமான துணி விற்பனை தனது வீட்டிலேயே நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். கோட்டாத்துணியை பாகுபாடின்றி எல்லோருக்கும் விற்பனை செய்ய வேண்டுமென்பது சுந்தரத்தின் விருப்பம்.

ஆனால் இவரது தந்தையார் கந்தசாமி (தேவரோ) தாழ்த்தப்பட்டோருக்கு சலுகை விலையில் கோட்டாத்துணியை அளிக்க சம்மதமில்லை. சாமி இல்லை என்கிறான், ஜாதி இல்லை என்கிறான் என்ன அபச்சாரம், அனாகரீகமாகப் பேசுகிறானே காலிப்பயல்! என்று பழமை போற்றுபவரான சுந்தரத்தின் தந்தை கடை வாசலிலேயே தாழ்த்தப்பட்டோருக்கு குறுக்கீடாக நின்று கொண்டு தன் மகனைப் பற்றிக் கோபமாகப் பேசிக்கொண்டிருந்தார்.

பக்கத்திலிருந்த பெரிய வீட்டில் சுந்தரம் உணவுண்டபின் வியாபாரம் பார்க்க புறப்படும்போது அவரது தாயார் குறுக்கே மறைத்துக்கொண்டு, அய்யோ அங்கே போகாதேடா, உன் அப்பா உன்னை வெட்டி விடுவதாக கோபமாகப் பேசிக் கொண்டிருக்கிறார் எனத் தடுத்தார்.

சுந்தரம் சத்தமாக தன் தந்தையார் காதில் விழும்படியாகவே அவரை பிடித்து தூணில் கட்டிவிட்டு வியாபாரம் செய்கிறேனா இல்லையா பார் என்று ஆவேசமுடன் கிளம்பினார்.

இது அவர் தந்தையார் காதில் விழவே இந்தப்பயல் செய்தாலும் செய்வான் என்று வாய்விட்டு முணுமுணுத்தபடியே துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு காதில் விழாததுபோல் நகர்ந்துவிட்டார்.

தன் தந்தையைரிடம் அளவு கடந்த மரியாதை கொண்டவர் சுந்தரம் என்பது ஊரார் அறிந்தது என்றாலும், தாழ்த்தப்பட்டோரும் மனிதர்கள்தான் என்பதை அந்தப் பகுதியில் உணர்த்திய தலைசிறந்த மனிதநேய பண்பாளர் ஆவார். பெரியாரின் கொள்கை வீச்சு அந்த அளவுக்கு உள்ளத்தில் வேரூன்றியதால் மனிதநேயம் உயர்ந்து நின்றது.

இந்த நிகழ்வுகள் உதாரணத்திற்காகத்தான். ஜாதி ஆதிக்கக்காரர்களை நேருக்குநேர் நின்று எதிர்த்து, சண்டையிட்டு சிறை சென்றது, மாரியம்மன் கோயிலில் தாழ்த்தப்பட்டோரையும் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி கருவறை நுழைவுக் கிளர்ச்சி நடத்தியது, குட்டிச்சாத்தான் என்று புரளி கிளப்பியவனைப் பிடித்து உதைத்தது என பெரியார் கொள்கையை மக்களிடம் பரப்பிட க.சுந்தரம் எடுத்த நேரடியான களப்பணிகள் பலப்பல.

அய்யா சுந்தரம் அவர்கள் 101ம் வயதிலும் அபார நினைவாற்றலோடு கூனில்லாது கொள்கைக் குன்றாக கருஞ்சட்டையோடு ஓர் போர் வீரராகவே காட்சியளிக்கிறார்.

திருத்துறைப்பூண்டி வட்டார திராவிடர் கழகத் தலைவர், நாகை மாவட்ட துணைத் தலைவர், திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் என்ற நிலைகளில் சிறப்பாக செயலாற்றினார்.

சட்ட எரிப்புப் போராட்டம் முதல், பிள்ளையார் சிலை உடைப்பு, இந்தி எதிர்ப்பு, மனுதர்ம நகல் எரிப்பு, காவிரி நீர்ப் பிரச்சனை, நீதிபதிகள் பொம்மை எரிப்பு மற்றும் கழகம் நடத்திய அனைத்து போராட்டக் களத்திலும் பங்கேற்று சிறை ஏகியவர். லக்னோவில் நடைபெற்ற பெரியார் மேளா வரை கழக நிகழ்ச்சிகள் எங்கே நடந்தாலும் பொறுப்போடு கலந்துகொண்டு கடமையாற்றியவர். தெளிந்த சிந்தனையாளர்.

ஒளிவு மறைவில்லாத அப்பழுக்கற்ற ஒழுக்கசீலர். வறிய நிலையில் வாழ்வைத் தொடங்கி, தனது உழைப்பால் கூரிய அறிவால் பெருஞ் செல்வந்தராய் ஈகை குணமும் இரக்க சுபாவமும் இயற்கையாகப் பெற்ற நல்ல மனிதராக திகழ்ந்தார்.

நூறு வயது நிரம்பிய இந்தப் பெரியார் பெருந்தொண்டரை நலம் விசாரிக்கும் போது,  எனக்கென்ன அக்கு பிக்கு இருக்கிறது. என்னை ரொம்ப சம்பாதித்தவன் என்பார்கள். இல்லை இல்லை என்னைவிட என் பேரன் அதிகம் சம்பாதிக்கிறான்.

என் பெண்டு பிள்ளைகள் நிரம்பப் படித்து உத்தியோகத்திலும், செல்வாக்கிலும் சிறந்து விளங்குகிறார்கள். என் கொள்ளுப் பேரப் பிள்ளைகள் எல்லோரையும்விட சிறப்பாக இருப்பார்கள். விளையும் பயிர் முளையில் தெரிவதைப் பாருங்கள்! என்று வயிறு குலுங்க சிரிக்கிறார்; உற்சாகமாகப் பேசுகிறார்.

நான் இறந்த பின்னும் யாருக்காவது பயன்படவேண்டும் என்று சொல்லி என் உடலை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் ஒப்படைத்துவிடுங்கள். இதை என் மரண வாக்குமூலமாக ஏற்க வேண்டும் என தனது குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார்.

உலக வரலாற்றில் எடுத்துக்கொண்டால் கடவுள் நம்பிக்கையாளர்கள் வாழ்ந்த காலத்தைவிட கடவுளை ஏற்காத நாத்திகர்கள் வாழ்ந்த காலமே அதிகம். அந்த வரலாற்றின் வரிசையில் ஆயக்காரன்புலம் பெரியார் பெருந்தொண்டர் க.-சுந்தரம் அவர்களும் ஒருவராய் இணைகிறார். நாத்திக வாழ்வு இன்னும் நீளும். பெரியாரின் கொள்கையே உலகை ஆளும்.

– முருகையன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *